1985 ஆம் வருஷம் ..
வருட தொடக்கத்திலேயே K.பாலாஜி நல்ல ஆரம்பத்தைதான் தொடங்கி வைத்தார்.கர்னல் ஜான் ஆபிரஹாம் கேரக்டரை செய்வதற்கு என்று பிறந்த ஒரே நடிகர்.பந்தம்
கௌரவத்தை கொடுத்து 100 நாளும் ஓடி நல்ல பெயருடன் வாழ்ந்தது.அடுத்து...
சிவாஜியின் 250 வது படம் நாம் இருவர் வந்தது.ரொம்ப எதிர்பார்த்த படம்.AVM தயாரிப்பு.பிரபு நடிக்கிறார்.ரசிகர்களையே திருப்தி செய்யவில்லை அந்த படம் என்பதுதான் உண்மை.ஆனால் இதற்கு அடுத்ததாக அதிகம் எதிர்பார்க்காத படிக்காத பண்ணையார் ரசிகர்களுக்கு நல்ல ரசிப்பை கொடுத்தது.பெரிய ஹிட் என்று சொல்ல முடியாது.
அடுத்து மறுபடியும் சிவாஜி பிரபு கூட்டணியில் நீதியின் நிழல் நேர்மை என தொடர்ந்து
வெளியாயின.இரண்டும்
எதிர்பார்க்கப்பட்ட படங்கள்.இதில் நீதியின் நிழல் சிவாஜிபுரொடொக்சன் தயாரிப்பு.பெரிய ஹிட் ஆகாமல் ஆவரேஜ் என்ற அளவில் போய் விட்டது.
இந்த நிலையில் ,
நடிகர்திலகத்தின் அடுத்த படம் என்ன ?
1985 ஆம் வருடம் வந்த எல்லாப் படங்களுக்கும் பட பூஜை விளம்பரம்,படம் தொடங்கப்பட்ட செய்திகள் நாளிதழில் வெளியானது.
ஒவ்வொரு சிவாஜி படமும் ரிலீசாகும் போது அடுத்த படம் என்ன என்பது ரசிகர்களுக்கு தெரிந்து விடும்.
மே மாதம் ரிலீசான நேர்மை படத்தின் போது அடுத்து வெளியாகும் படம் என்ன என்பது தெரியாமல்தான் தான் இருந்தது.ஜூன் மாதமோ ஜுலை மாதமோ தான் அடுத்த படத்தின் விளம்பரத்தை பார்க்க முடிந்தது.இசை இளையராஜா
இயக்கம் பாரதிராஜா என்ற அறிவிப்புடன் ..
பாரதிராஜா சிவாஜிக்கு மாலை போடும் புகைப்படத்தோடு வெளியான விளம்பரம்.அடுத்து ஆடியோ கேசட் விளம்பரம்.
அதற்கு அடுத்து ஆகஸ்ட் 15 அன்று படம் வெளியாவதாக விளம்பரம்.சிவாஜி கையில் அரிவாள் பிடித்துக்கொண்டும்,ராதா இருப்பதாக விளம்பரம்.
கோவை வெளியீட்டு தியேட்டர்கள் வெளியிட்டு விளம்பரம் வந்தது.பொள்ளாச்சி தியேட்டர் விபரம் மிஸ்ஸிங் அதில்.
படத்தை பற்றி அதிக எதிர்பார்ப்பு இல்லை...
ஆகஸ்ட் 15 அன்று கோவை தர்சனாவில் வெளியானது.
பொள்ளாச்சியில் வெளியாகவில்லை.படம் வெளியான பின்பு இதன் ரிசல்ட்டை அறிந்துகொள்ள முடியவில்லை.கோவை சென்று படம் பார்த்துவிட்டு வந்த சிலரும் படத்தின் உண்மையான போக்கை சொல்லத் திணறினார்கள் என்பது உண்மை.முதல் இரண்டு நாட்களும் படம் பற்றிய விமர்சனங்கள் உறுதித்தன்மையுடன் சொல்லப்படவில்லை.மிக தீவிரமான ரசிகர்கள் சிலர் கூட படத்தின் வேகம் சோதித்ததாக கூட கூறினார்கள்.தியேட்டர்கள் எல்லாம் நிரம்பி வழியவில்லை.
நேர்மை , நீதியின் நிழல் படங்களுக்கெல்லாம் முதல்நாள் கூட்டம் இரண்டு தியேட்டர் கூட்டமாக இருந்தது.நேர்மை படத்திற்கு மதியம் வரை படப்பெட்டி வராமல் ரசிகர்கள் டென்ஷன் ஆனார்கள்.மதியம் வரை பெரிய கூட்டம் தியேட்டரிலேயே
இருந்தது.முதல் மரியாதைக்கு அப்படியெல்லாம் இல்லை.
என்னடா இது! சிவாஜி படம் வெளியாகி மூன்று நான்கு நாட்கள் ஆன பின்பும் சரியான
ரிசல்ட் தெரியவில்லையே என சங்கடம் வேறு.
இப்போது இருப்பது போலே சமூக வலைதளங்கள் எல்லாம் அப்போது இல்லையே.பத்திரிக்கை விமர்சனங்களும் ஒரு வாரம் வரை எதும் வெளியாவில்லை.
பார்த்த மக்கள் வெளியில்போய் சொல்லி அது நன்றாக இருந்தால் பரவிபரவி தெரியவேண்டிய காலகட்டம் .
பொள்ளாச்சியில் வெளியாகி இருந்தால் நாம் பார்த்து மனதை ஒப்பேற்றிக் கொண்டிருக்கலாம் .
பொள்ளாச்சியில் வேறு வெளியாகவில்லை. 5 நாள் 6 நாள் 7 நாள் என கடந்து அந்த படத்தின் மெய் மறக்க வைக்கும் விமர்சனங்கள் ஒவ்வொன்றாக வெளிவர தொடங்கின.
இதில் வேடிக்கை என்னவென்றால், இந்தப் படத்தின் விமர்சனங்களை பொறுத்தவரை ஆரம்பத்தில்
படம் பார்த்தவர்கள் நிறைய பேருக்கு அந்தப் படத்தின் உண்மையான விமர்சனத்தை சொல்ல தெரியவில்லை என்பதுதான்.
முதல் வார முடிவில் விமர்சனங்கள் விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கின.
பாடல்கள் ஒவ்வொரு தெருக்களிலும் ,ஒவ்வொரு வீட்டிலும் காற்றாய் புறப்பட்டது.
இரண்டாவது வார முடிவில்
படத்தின் ரிசல்ட் பெரிய அளவில் பேசப்பட்டது.சினிமா பேசப்பட்டால் முதல்மரியாதை பேசப்பட்டது.
படத்தின் அமோக வெற்றி ரிசல்ட் வந்து ,இரண்டு வாரம் கழித்து பொள்ளாச்சி ATSC தியேட்டரில் வெளியானது.அதுவும் திடிரென்றுதான் போட்டார்கள்.முதல் நாள் மாலை நேரத்திற்கு மேல்தான் போஸ்டர் ஒட்டினார்கள்.
காலை காட்சிக்கு வந்தால்
பத்துமணி வரை கூட்டம் பெரிய அளவில் இல்லை.வந்தவர்களில் நிறைய பேர் அன்று காலை தான் போஸ்டர் விளம்பரம் பார்த்து வந்தவர்கள் .
படம் பார்க்கும் போது அதிக ஆர்ப்பாட்டம் எல்லாம் இல்லை.இப்படி ஒரு அமைதியான சூழலில் சிவாஜியின் எந்த படமும் பார்த்ததில்லை. சிவாஜி அறிமுகம் ஆகும்போது பலத்த கைதட்டல். அதற்குப்பின் படம் முழுவதும் இரண்டு மூன்று இடங்களில் சில கைதட்டல்கள் அவ்வளவே.
படத்தின் இடைவேளையில் தியேட்டரின் முன் பக்கம் முன் வந்து பார்த்தால் சுமார் 50 பேர் இருக்கலாம்.மீண்டும் படம் தொடங்கி வெளியே வந்தோம். மதியக்காட்சி என்பதால் கூட்டம் குறைவாகவே இருக்கும் என்று நினைத்தால் தியேட்டர் வாசல் வரை நிரம்பி வழிந்தது கூட்டம்.
அன்றைய வார ஞாயிறு காட்சிகளில் இருந்து தியேட்டரில் பெருங்கூட்டம் நிரம்பி வழிந்து கொண்டே இருந்தது.
முதல் வார ஞாயிறு மாலைக் காட்சிக்கு வந்த கூட்டத்தால் அந்த ரோட்டின் வழியாக செல்லும் பஸ்கள் எல்லாம் தியேட்டரில் இருந்த கூட்டத்தால் டிராபிக் ஜாமால் திணறியது.
பொள்ளாச்சியில் எட்டு தியேட்டர்கள் .வாராவாரம் இரண்டு அல்லது முன்று புது படங்கள் வெளியாகும் . அதனால் எவ்வளவு பெரிய ஹிட் படமாக இருந்தாலும் ஒரு மாதம் ஓடினால் அது ஹிட்டான படம்என்று அர்த்தம்.அப்போது ரஜினி கமல் பெரிய ஹீரோக்களாக வலம் வரத் தொடங்கி இருந்த காலம் .பெரிய ஹிட்டான படங்கள் என்றால் 50 நாட்கள் தான். முதல் மரியாதை படம் வெளியாகி இரண்டு வாரம் கழித்து வெளியிடப்பட்டு 55 நாட்கள் ஓடியது.
முதல் மரியாதை படத்தை பொறுத்தமட்டில் சிவாஜி ரசிகர்கள்அல்லாது பொதுமக்கள் தெரிவித்த கருத்து விமர்சனங்களால் படம் மிகவும் பாப்புலரானது என்பதுதான் உண்மை.எந்த படம் என்றாலும் இதுதான் அளவுகோல் என்றாலும், இந்த படத்திற்கு ஒரு படி கூடுதலாக அமைந்தது என்பது நிதர்சனமான உண்மை.
முதல் மரியாதை திரைப்படம் கோவை தர்ஷனாவில் 177 நாட்கள் ஓடிய போது அதை
பத்திரிக்கையில் விளம்பரம் செய்தார்கள் .அதன்பின்பு எவ்வளவு நாட்கள் ஓடியது என்று தெரியவில்லை ..
அப்போது டி ராஜேந்தரின் ஒரு படம் வெளியாக இருந்த நிலையில் ,அந்தப் படத்தை பாபா காம்ப்ளக்ஸ் வெளியிடக் கூடாது இன்று ஒரு அதிமுக கட்சி பிரபலம் ஒருவர் மிரட்டியதாகவும், அதற்காகவே பாபா காம்ப்ளக்ஸ் நிர்வாகம் முதல் மரியாதை படத்தை எடுத்துவிட்டு டி ராஜேந்தர் படத்தை வெளியிட்டதாகவும் ஒரு தகவல் பேசப்படுவது உண்டு. முதல் மரியாதை படம் எடுக்கப்பட்ட கடைசி தினத்திலும் ,மிகப்பெரிய கூட்டத்துடன் காட்சிகள் நடைபெற்று வந்தது ...
கோவையில் 200 நாட்களுக்கு மேல் ஓடி இருக்க வேண்டிய படம் முதல் மரியாதை ...
செந்தில்வேல் சிவராஜ்
கருத்துகள்
கருத்துரையிடுக