திருவிளையாடல் படத்துலே கடைசி எபிசோட்லே
விறகுவெட்டியா நடிச்ச சிவாஜி ஒரு வசனம் பேசுவார் .
ஒரு விறகை எரிச்சா சந்தனவாசனை ,
இன்னொரு விறகை எரிச்சா
சாம்பிராணி வாசனை,
அடுத்த விறகை எரிச்சா ஜவ்வாது வாசனை வரும்பார்.
இப்ப எதுக்கு இந்த வசனத்தை நான் சொல்றேன்னு நீங்க நினைக்கலாம்.
1968 ஆம் வருஷம் வந்த சிவாஜி படங்களை நெனச்சா இந்த வசனம் தான் ஞாபகத்துக்கு வருது.
ஒரு படம் புராணக்கதையை சொன்னது.
அடுத்த படம் சரித்திரத்தை கொண்டது.
மூணாவது படம் குடும்ப சென்டிமென்ட்.
அடுத்ததை பாத்தா அது கலையை பத்தி.
அடுத்தது ஒரு மனுசனோட வைராக்யத்தை பத்தி.
அடுத்ததா இந்த சமூகத்தோட அவலத்தை பத்தி.
கடைசியா ஒரு பெரிய மனுசனோட வாழ்க்கை பதிவையும் சொன்ன படம்.
வேற வேற ஊருக்கு போற பஸ்ஸோட வழித்தடம் மாதிரி வேற வேற ரூட்டுலே போற கதையமைப்பை கொண்ட படங்கள்.புது ஊரு புது அனுபவம் மாதிரி எல்லாமே வேற வேற வெரைட்டி மீல்ஸ் படங்கள்.ஒவ்வொரு சாப்பாடு,ஒவ்வொரு ருசி.
ரசிச்சி ரசிச்சு சாப்பிட வெச்சார் சிவாஜி.
1967 லே கடைசி படமா ஊட்டிலே போயி ஜில்லுன்னு ஊட்டி வரை உறவு படத்துலே நடிச்சுட்டு
1968 லே நெத்திலே நாமம்,பூணூல் போட்டுட்டு வைஷ்ணவரா திருமால் பெருமைலே வந்து நின்னார் சிவாஜி.அதுக்கு முன்னாலே வந்த ஊட்டிவரை உறவுலே 'சிக்குன்னு பாத்த சிவாஜி'யா இது.ஒரு படத்துக்குள்ளே உடம்பை கொஞ்சம் பெரிசாக்கிட்டாரோன்னு நெனக்க வைக்கும்..கூடவே பல வேஷங்களை போட்டு மிரள வெச்சிருப்பார்.
திருவிளையாடல் படம் சைவர்களுக்குன்னா ,திருமால் பெருமை வைஷ்ணவர்களுக்கு.
ரெண்டுமே சிவாஜியாலே கம்ப்ளீட் ஆயிடுச்சு.
அவசரத்துக்கு தேட சிவாஜி இருக்கார்.கவலை பட வேண்டியதில்லே.ஒரே படத்துலே மூணு நாலு கதைகள் வேற.16.2.68 லே வெளியான படம் திருமால் பெருமை .
அப்படியே அடுத்ததா அந்த வைஷ்ணவ மேக்கப் டிரஸ்ஸெல்லாம் கழட்டிட்டு ராஜா டிரஸ் மேக்கப் போட்டுட்டு அரிச்சந்திரனா வந்து நின்னார் சிவாஜி.ராஜாவா இருந்து வெட்டியான் கேரக்டர் வரைக்கும் பண்ணியிருப்பார் சிவாஜி இதுலே.
11.4.68 லே வந்துச்சு இந்த படம்.என்னோட வாழ்க்கையையே மாத்துன நாடகம் ஹரிச்சந்திரான்னு சொன்னார் காந்தி.இப்படி ஒரு பெருமையா ,சத்தியம்னா என்னான்னு சொன்ன ஒரு படத்தை அதிக மக்கள் அதிக தடவை பாத்து தாறுமாறா ஓட வெச்சிருக்கணும் இல்லே.
என்னத்தை சொல்றது.
100 நாள் ஓடலே.100 சதவீத தரச் சான்றிதழ் படத்துக்கு ஒரு எடுத்துக்காட்டுதான் இந்த படம்.
இந்த கேரக்டர்கள்லே இருந்து ஒரே தாவு.நல்லா சிக்குன்னு சின்ன பையனாட்டம் வந்து ஜெயலலிதாவை லவ் பண்ணி கல்யாணம் பண்ற கதையிலே நடிச்சு பெரிய காமெடி ரவுசு பண்ணியிருப்பார் கலாட்டா கல்யாணம் படத்துலே.பெரிசா ரவுண்ட் கட்டி எல்லாம் அடிக்க வேண்டிய வேலையெல்லாம் இல்லே.எல்லா தமாஷ் ஆளுகளை சேத்துக்கிடடு அவங்களோட இவரும் கலந்து ரஸ்க்கை பன்னு மாதிரி சாப்பிட்டு வயித்தை தட்டி ஏப்பம் விடற மாதிரி அசால்ட்டா பின்னி ,பண்ணியிருப்பார்.
கை சுண்டற சுண்டுலே 100 நாள் ஓடி தள்ளி கல்லா நிறைய கட்டுச்சு கலாட்டா கல்யாணம்.12.4.68 லே வெளியாச்சு இந்த படம். ஒரு நாள் முன்னதான் ஹரிச்சந்திரா வெளியாச்சு.
அதே கட்டுடல் ,ஏக ஸ்டைல்களோட சிவாஜியோட அடுத்த படம் வந்துச்சு. என் தம்பி .7.6.68 லே ரிலீஸ் ஆச்சு.
உருவத்துலே மாற்றமில்லே.கதை களம் நடிப்புன்னு பக்கா வெரைட்டியா மாஸ் காட்டுன படம் என் தம்பி.ரொம்ப ரசிகர்களுக்கு புடிச்ச ஒரு பேவரைட் மூவின்னு இதை சொல்லலாம்.
சிவாஜி ஒரு சீரியஸ் ஹீரோப்பான்னு சொன்னவங்களுக்கு பதில் சொல்ற மாதிரி வந்த படம் இதுக்கு முன்னாலே வந்த கலாட்டா கல்யாணம்.காமெடி ஹீரோவாவும் சிவாஜி பின்றாரேன்னு சொல்ல வெச்சுச்சு.சிவாஜி படங்கள்லே சண்டையை எதிர் பார்க்க முடியாதுப்பான்னு சொன்னாங்க. அதுக்கு பதில் சொல்ற மாதிரி வந்த படம் இந்த என் தம்பி.செம கலக்கல் ஹீரோவா பண்ணியிருப்பார் சிவாஜி.ஒரே டைப் சண்டை இல்லாமே பல விதமான சண்டை காட்சிலே என் தம்பி ஒரு கலக்கல் படமா இருந்தது.
இந்த என்தம்பி சிவாஜி எப்படி சிக்கல் சண்முக சுந்தரமா மாறினார்னு நெனச்சா ஆச்சர்யமா இருக்கு.வருஷ ஆரம்பத்துலே இருந்து வந்த படங்களை பாருங்க. சிவாஜி எப்படி டிராவல் பண்ணியிருக்கார்னு புரியும்.நாதஸ்வர வித்வான் வேஷமா ?மீசையை மழிச்சு மொழு மொழுன்னு இருந்தா போதும். வேணும்னா எக்ஸ்டிராவா ஒரு குங்கும பொட்டு வெச்சுட்டா போதும்.தமிழ் சினிமாலே நாதஸ்வர வித்வான் வேஷம்னா இப்படித்தான்.
தில்லானா சிக்கலாரை மட்டும் உலக உசரத்துலே பாக்க வெக்குது .ஏன் ?
அதுக்கு ஒரே பதில். நாதஸ்வர இசை வாசிச்ச சேதுராமன் பொன்னுச்சாமி சொன்ன பதில்தான் சரியா இருக்கும்."நாங்க நகல் சிவாஜி அசல்"..அது போதும்.தில்லானா மோகனாம்பாள் வந்தது 27.7.68லே.
முதல்லே புராணபடம் ,
அடுத்தது சரித்திரம் ,அப்புறம் காமெடி அது பின்னாலே ஒரு கலக்கல் அடுத்து இந்த தில்லானா.விதவிதமா ரகம் ரகமா செஞ்சிருக்கார் சிவாஜி இந்த 68 லே..
வயசு குறைஞ்ச ஜமீன்தாரா ஆரம்பத்துலே ,அப்புறம் தாடி மீசை நரைச்ச வயசான ஆளு போலே ஒரு கேரக்டர் .
மகனா ஸ்மார்ட்டா சாக்லேட் பாய் மாதிரி இன்னொரு சிவாஜின்னு ,நடிகர்திலகம் டைம் டிராவல் மெஷின்லே வந்து செஞ்சிருப்பாரோன்னு நெனக்க வெச்சது அடுத்த படம் வந்தப்போ .அதுதான் எங்க ஊர் ராஜா .21.10.68 லே வந்துச்சு.
இந்த வருஷம் இதுக்கு முன்னாலே வந்த படங்களுக்கும் இந்த படத்துக்கும் ரொம்பவே வித்தியாசம் இருக்கு.அதே சமயம் ஒரு படத்துலே வர்ற மேனரிசம் இன்னொரு படத்துலே கொஞ்சம் கூட இருக்காது.
15.11.68 லே வந்த படம் லட்சுமி கல்யாணம்.இந்த கேரக்டரை போய் சிவாஜி செய்றதா ?ஒண்ணும் புதுசா இல்லையேன்னுதான் கதையை கேட்டா யோசிக்க வைக்கும். ஆனா சிவாஜி இந்த படத்தை பத்தி சொன்னதைத்தான் பதிலா சொல்லணும். இவ்வளவு ரசிப்பை நான் எதிர்பார்க்கவில்லைன்னு சொல்லியிருக்கார்.
இதைத்தான் சொல்லணும்.
அவ்வளவு ரசிக்க வெச்ச படம்.நடிச்ச எல்லாருமே சிக்ஸர் போர்னு அடிச்ச படம்.ரொம்ப ஸ்மார்ட்டான சிவாஜியை இதுலே பாக்கலாம்.இது Something diffetent னு சொல்ல முடியாத படமா இருக்கலாம்.ஆனா Something specialனு சொல்லலாம்.
1968 வது வருஷ கடைசி படம்.இது சிவாஜியே வேண்டாம்னு சொன்ன கேரக்டர் .அந்த கேரக்டரைத்தான் உயர்ந்த மனிதன் ஆக்கினார் சிவாஜி.
எத்தனை வித விதமான வேஷம் வகை வகையா செஞ்சு சிவாஜி ரொம்ப ஸ்பீடா 125 படத்துலே நடிச்சு முடிச்சார் .தமிழ்லே முதன் முதல்லா செஞ்ச நடிகர்...
நடிகர்திலகம் தான்.அந்த ரெக்கார்டும் இந்த 68 ஆம் வருஷம் தான் நடந்துச்சு.
படத்துலே குளோஸ் பிரெண்டா நடிச்ச அசோகன் சிவாஜியோட நிஜமா பேச மாட்டார்.சிவாஜியோட முதல் பட டைரக்டர்கள் கிருஷ்ணன் பஞ்சு ..இதுலே பஞ்சு சிவாஜியோட பேச மாட்டார்.
AVM கூட இடையிலே சங்கடம் இருந்துச்சு.இதெல்லாம் இருந்தும் ஒரு காவியமா மாத்தியிருப்பார் சிவாஜி .
இந்த 1968 ஆம் வருஷம் வந்த படங்களை பாத்தா சிவாஜி ரொம்பவே வித்தியாசமா மாறுபட்ட படங்களை கொடுத்திருப்பார்.
மொத்தம் 8 படங்கள் வந்துச்சு.
இதுலே கலாட்டா கல்யாணம் என்தம்பி தில்லானா மோகனாம்பாள் எங்க ஊர் ராஜா உயர்ந்த மனிதன் படங்கள் 100 நாள் ஓடுன படங்கள்.மத்த மூணு படங்களும் 60 நாளும் அதற்கு மேலும் ஓடிய படங்கள்.கலையுலகத்துக்கு ஒரு நடிகனோட காணிக்கையா
செஞ்ச படங்களாகவும் இருக்குது .வியாபார ரீதியாகவும் வெற்றி அடைஞ்ச படங்களாகவும் அமைஞ்சிருந்தது.
செந்தில்வேல் சிவராஜ்
கருத்துகள்
கருத்துரையிடுக