காமராஜர் இறந்த பின்னால சிவாஜி இந்திரா காங்கிரஸில் சேர்ந்தார் .அதனால பல பிரச்சனைகள் சிவாஜிக்கும் சிவாஜி படங்களுக்கும் ஏற்பட்டுச்சு.அது பத்தின விவரங்களை இந்த பதிவுலே நாம முழுசா பாக்கலாம் .
1973 ஆம் வருசம் நவம்பர் 16 ம் நாள் சசிகபூர் சர்மிளாதாகூர் நடிப்புலே உருவான இந்தி படம்
'ஆ கலே லக் ஜா '.பிரமாதமான பாட்டுகள் அமைஞ்ச இந்த படம் வெளியான எல்லா தியேட்டர்களிலும் வசூலை வாரி குவிச்சது.பீட்டர் பைராவின் ஒளிப்பதிவில் காஷ்மீரின் அழகான காட்சிகள் கண்ணுக்கு விருந்தா இருந்தது..
இந்த படத்தை தமிழ்லே தயாரிக்க பிரபல தெலுங்கு பட நிறுவனமான ஜெகபதி ஆர்ட் பிக்சர் முடிவு செஞ்சது.
இந்த பட நிறுவனம் ஏற்கெனவே சிவாஜியை வெச்சு எங்கள் தங்க ராஜா படத்தை தயாரிச்சு இருந்தது.
மூணு வருசம் கழிச்சு மறுபடியும் சிவாஜியை வெச்சு படம் எடுக்க நெனச்சப்போ ஆ கலே லக் ஜா பட வெற்றியை பாத்து அந்த இந்தி படத்தை தமிழ்லே எடுக்கலாம்னு முடிவு செஞ்சது.
சிவாஜி மஞ்சுளா ஜோடியா நடிக்க பாலாஜி ஒருகுணச்சித்திர வேஷத்துலே நடிச்சார்.அந்த படம்தான் உத்தமன்.கேவி மகாதேவன் அருமையா பாட்டுகளை போட்டிருந்தார். பாட்டெல்லாம் செம ஹிட்.
25.6.1976 அன்னைக்கு வெளியான இந்த படம் நல்லா அமைஞ்சிருந்தும் ,
ரொம்ப பெரிய வெற்றி அடைய வேண்டிய திரைப்படம் ஒரு சராசரி வெற்றியைத்தான் அடைஞ்சது.
சிவாஜி படங்கள் வெளியான தியேட்டர் எல்லாம் திருவிழா நடக்கற மாதிரி இருக்கும்.ரசிகர்கள் அலப்பறை எல்லாம் பெரிய அளவுலே நடக்கும்.தியேட்டர் அலங்காரங்கள் பந்தல் பேனர் மாலைகள் வரவேற்பு எல்லாம் அமர்க்களமா இருக்கும் .ஆனா உத்தமன் பட ரிலிசுலே இதெல்லாம் கம்மியாத்தான் இருந்துச்சு.
பல தியேட்டர்லே 60 நாளை தாண்டி ஓடுன இந்த படம் மதுரை நியூசினிமா தியேட்டர்லே 100 நாள் ஓடுச்சு.
காமராஜர் மறைவுக்கு பின்னாலே வந்த சிவாஜி படங்கள்லே முதல் வெற்றிப்படமா இது அமைஞ்சது.
தமிழ்நாட்டுலே பெரிய வெற்றி அடைய வேண்டிய இந்த படம் அரசியல் பிரச்சினைகளாலே தடுமாறி நார்மலான வெற்றிப்படமா அமைஞ்சது.
ஆனா இலங்கையிலே இன்னொரு வசந்தமாளிகையா ஓட்டத்திலும் வசூலிலும் இருந்தது.இலங்கையில் பத்துக்கும் மேற்பட்ட ஊர்கள்லே 50 நாளுக்கு மேல் ஓடியது.
மூணு இடத்துலே 100 நாள் தாண்டி ஓடியது.
இரண்டு தியேட்டர்லே வெள்ளிவிழா ஓடுன படமா அமைஞ்சது.
இலங்கை சென்ட்ரல் தியேட்டர்லே 175 நாள் ஓடுன உத்தமன் திரைப்படம் ஆறு லட்சத்து இருபத்து நான்காயிரத்து எழுநூத்து முப்பத்தெட்டு ரூபாய் வசூல் செஞ்சது.இலங்கையில் வெளியான அனைத்து தமிழ் படங்களோட வசூலையும் இந்த படம் முறியடிச்சது.
உத்தமன் திரைப்படம் சென்னை சாந்தி கிரவுண் புவனேஷ்வரி சேலம் ஜெயா நெல்லை பூர்ணகலா நாகர்கோவில் ராஜேஷ் கோவை ராஜா ஈரோடு சென்ட்ரல் பாண்டிச்சேரி அண்ணா தூத்துக்குடி காரனேசன் ஊட்டி ATC ஆகிய தியேட்டர்களில் 60 நாளை தாண்டி ஓடியது.
சிவாஜியோட அந்த கால கட்டத்துலே வந்த அரசியல் பிரச்சினைகளாலே இமாலய வெற்றி அடைய வேண்டிய இந்த உத்தமன் திரைப்படம் ஒரு சராசரி வெற்றியைத்தான் அடைஞ்சது.
இந்த தளர்வுக்கு காரணம் காமராஜர் மறைஞ்ச பின்னாலே காமராஜரோட ஸ்தாபன காங்கிரசுலே இருந்து இந்திரா காங்கிரசுலே சிவாஜி சேந்துட்டார் அப்படிங்கற ஒரே ஒரு காரணம் தான் .சிவாஜி எப்படி இந்திரா காங்கிரஸ்லே சேரலாம் ,ஸ்தாபன காங்கிரஸ்லேயே இருந்திருக்கணும்னு தொண்டர்கள் நெனச்சதுதான் காரணம்.சிவாஜி திமுகவுலே இருந்து வெளியேறினப்போ சந்திச்ச பிரச்னைகளை விட ஸ்தாபன காங்கிரஸ்லே இருந்து வெளியேறுனப்போ வந்த பிரச்சினைகள் தான் அதிகமா இருந்துச்சு.
காமராஜருக்கு அடுத்து ஸ்தாபன காங்கிரஸ்லே சொல்லி கொள்ளும்படியான தலைவர்கள் இல்லை. சிவாஜிக்கு எதிரான அடுத்த கட்ட தலைவர்கள் தான் அதிகம் இருந்தாங்க.சிவாஜி செஞ்சதுதான் சரின்னு காலம் நிரூபித்தது. யாரெல்லாம் சிவாஜி செஞ்சதை தப்புன்னு சொன்னாங்களோ அத்தனை பேரும் பின்னாலே காங்கிரசிலே தான் சேந்தாங்க.
சிவாஜி இந்திரா காங்கிரஸ்லே சேந்த பின்னாலே அவர் நடிச்சு வெளிவந்த படங்கள் பெரிய பாதிப்புக்கு உள்ளாச்சு.
K.பாலாஜி அப்ப தயாரிச்ச படம் உனக்காக நான். வழக்கமா தன்னோட படத்தை ஜனவரி 26 க்குத்தான் பாலாஜி ரிலீஸ் செய்வார். உனக்காக நான் படத்தையும் ஜனவரி 26 க்கு ரிலீஸ் செய்யறதா விளம்பரமும் செஞ்சுட்டார்.1975 டிசம்பர்லே வெளியான பாட்டும் பரதமும் படத்துக்கு பெரிய எதிர்ப்பு வந்துச்சு. தியேட்டர்லே கறுப்பு கொடி எல்லாம் கட்டி பலத்த எதிர்ப்பை காட்டுனாங்க.இந்த பதிவுலே சொல்ல முடியாத பல எதிர்ப்புகள் எல்லாம் நடந்தது.
இதனாலே பாலாஜி உனக்காக நான் படத்தை ஜனவரி 26 லே இருந்து மாத்தி பிப்ரவரி 12 ம் தேதி படத்தை வெளியிட்டார்.
தியேட்டருக்கு போனா ஏதாவது கலவரம் நடக்குமோன்னு நிறைய ரசிகர்கள் தியேட்டருக்கு வர்றதை தவிர்த்துட்டாங்க.வழக்கமான கூட்டம் இல்லை.
ஒரு தியேட்டர்லே 60 அடி உயரத்துக்கு கறுப்புத் துணியாலே அலங்கார வளைவு அமைச்சு சொல்ல முடியாத வாசகத்தை எழுதி தங்களோட பலமான எதிர்ப்பை காட்டுனாங்க.
தமிழ்நாட்டுலே எந்த தியேட்டரிலும் ஆரவாரம் இல்லை. வரவேற்பு இல்லை. மக்கள் கூட்டம் சுமாரா இருந்தது.
காமராஜர் மரணம் ஏற்படுத்துன பாதிப்பு ,இந்திரா கொண்டு வந்த மிசா கொடுமைன்னு மொத்த தமிழகமும் இந்திரா மேலே இருந்த வெறுப்புலே இருந்த வேளையிலே சிவாஜி எடுத்த இந்திரா ஆதரவு நிலை தான் அவருக்கும் அவர் படங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துச்சு.
ரசிகர்களோட மன நிலையை சொல்ல இந்த விஷயம்.
நடிகர் சசிகுமார் மாதிரியே நடிகர் ஸ்ரீகாந்தும் சிவாஜி மன்றங்களை திறந்து வெச்சிருக்கார்.சிவாஜி மட்டும் தான் தனக்கு குருவா இருக்க முடியும்ணு அரசியல்லே பயணம் செஞ்சவர் ஸ்ரீகாந்த்.
சிவாஜி இந்திரா காங்கிரஸ்லே சேந்துட்டார்னு தெரிஞ்சதுமே ,
'காமராசரின் தொண்டன் என சொன்ன சிவாஜி இந்திரா காங்கிரசுலே சேந்தது காமராஜர் கொள்கைகளை கேலி செஞ்சுட்டார்.நான் இறந்த பின்னாலே என்னோட பொணம் கூட போக் ரோட்டு வழியா போகாதுன்னு காட்டமா கருத்து தெரிவிச்சார் ஸ்ரீகாந்த்.
சிவாஜியோட நடிப்புக்குன்னு தனி ரசிகர் கூட்டம் இருந்தாலும் ,காமராஜருக்கு தொண்டன் சிவாஜிக்கு ரசிகன்னும் ஒரு கணிசமான கூட்டமும் இருந்தது. அந்த கூட்டத்தாலே செய்யப்பட்ட பிரச்சினைகள் தான் சிவாஜி படத்துக்கு ஏற்பட்ட எதிர்ப்புகள்.
சிவாஜி இந்திரா காங்கிரசுலே இணைஞ்சது தவறுன்னு ஸ்தாபன காங்கிரஸ் தொண்டர்கள் நெனச்சுட்டு இருந்த நேரத்துலேதான் இந்திரா காங்கிரசுலே ஸ்தாபன காங்கிரஸை சேந்த ஒரு பிரிவினரை இணைக்கறதுக்கு நெடுமாறன் மகாதேவன் மும்முரமா முயற்சி செஞ்சுட்டு இருந்தாங்க.சிவாஜி எடுத்த இந்திரா ஆதரவு நிலைப்பாடு அவங்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துச்சு.ஸ்தாபன காங்கிரசுலே சிவாஜி இருந்தப்போ சிவாஜிக்கு எதிர்ப்பா இருந்த இவங்க இந்திரா காங்கிரஸ் இணைப்பு விழாவுலே சிவாஜியை முன்னிலைப்படுத்த ஆதரவு கொடுத்தாங்க.1976 பிப்ரவரி 15 ம் தேதி சென்னை மெரீனா கடற்கரையில் இந்திரா காங்கிரசோடு ஸ்தாபன காங்கிரஸ் தலைவர்கள் இணையும் இணைப்பு விழா நடத்த முடிவு செய்யப்பட்டது.
இந்த விழாவுக்காக நெடுமாறன் அணியினர் சிவாஜியை சந்திச்சு ஆலோசனை பண்ணுனாங்க.விழாவுக்கான செலவுகள்லே பெரும் பகுதியை சிவாஜி கொடுத்தார்.
சிவாஜிக்கு மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை கொடுக்க இந்திரா விரும்புனார்.
சிவாஜி தனக்கு எந்த பதவியும் வேண்டாம் , தான் ஒரு தொண்டனாகவே இருந்து கொள்கிறேன் என்று சொல்லிவிட்டார். சிவாஜியோட ஆதரவு யாருக்கு இருக்குதோ அவங்கதான் தலைவர் பதவிக்கு வர முடியும்ங்கற நிலைமை இருந்தது.அப்போ சிவாஜியோட நண்பரா தன்னை காட்டிக் கொண்ட மூப்பனாரை இந்திராவுக்கு பரிந்துரை செய்து அவரை தலைவர் ஆக்கினார் சிவாஜி.
1977 லே இந்திரா தமிழ்நாட்டுக்கு சுற்றுப்பயணம் செஞ்சார்.மிசா சட்டத்தால் பாதிக்கப்பட்டு மிகுந்த கோபத்தில் இருந்தார்கள் திமுகவினர் அந்த கால கட்டத்தில்...
மதுரையில் இந்திராவை திமுகவினர் கல்லெறிந்து தாக்கினார்கள் .
மதுரையில் இருந்து ரயிலில் சென்னை வர புறப்பட்டார் இந்திரா.வழியெங்கும் எதிர்ப்புகள்.சென்னையில் சிவாஜிக்கு வந்தது செய்தி.கையில் துப்பாக்கியுடன் ரயில் நிலையம் வந்தார் சிவாஜி.
சிவாஜியே நேரில் வந்து விட்டதாலும் ,கையில் வேறு துப்பாக்கியுடன் வந்து கொண்டிருந்தாலும் கலவரக்காரர்கள் பயந்து பின் வாங்கினார்கள்
ரயிலை விட்டு இறங்கிய இந்திராவின் கரம் பிடித்து துப்பாக்கியுடன் பாதுகாப்பாக இந்திராவை கொண்டு சேர்த்தார்.
இந்த நிகழ்வுக்கு பின் தமிழக காங்கிரஸ் விவகாரங்களில் சிவாஜியை கலந்து ஆலோசிக்காமல் இந்திரா காந்தி எந்த முடிவும் எடுத்ததில்லை...
சிவாஜியின் அரசியல் களம் இப்படியிருக்க...
26.1.1977 ல் பாலாஜி தயாரித்த தீபம் படம் வெளியானது. இந்த படத்துக்கு பத்து நாள் முன்பு பொங்கலுக்கு அவன் ஒரு சரித்திரம் படம் வெளியாகி இருந்தது. சிவாஜியின் அழகான நடிப்பில் அவன் ஒரு சரித்திரம் படமும் நார்மலான ஓட்டமாகவே இருந்தது.தீபம் படமும் வெளியான போதும் சரி இதே நிலைமைதான்.
சிவாஜி படங்களுக்கு அரசியலால் ஏற்பட்ட பிரச்சினைகள் தீபம் படத்தின் முதல் வாரத்தோடு திருஷ்டி கழிந்துபோனது.பட ஓட்டம் கூடியது.. வசூல் திரண்டது..மீண்டும் விஸ்வரூபம் எடுத்தார் சிவாஜி.
ஓடிப்போனவர்கள் வந்தார்கள். தியேட்டர்கள் எல்லாம் மீண்டும் ஆரவாரிக்க ஆரம்பித்தன.
படம் வெளியான அனைத்து தியேட்டர்களிலும் திருவிழா போல் கூட்டம்கூடியது.தனிக்காட்டு ராஜாவாக வலம் வந்தார் சிவாஜி.
கருத்துகள்
கருத்துரையிடுக