ஜூலை 21,2001..
இந்த நாள் அன்றைய மாலை 7 மணி வரை தமிழகத்துக்கு ஒரு சாதாரண நாள் தான்.அதன் பின் பெரும் கருத்த போர்வை ஒன்று சோகத்தை சுமந்து தமிழகத்தை மூடும் என்று யாரும் நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள்.
நேரிலே நீ பார்த்ததுண்டா வீரசிவாஜி என்ற பாடல் விடுதலையில் இடம் பெற்றது.அது நடிகர்திலகத்துக்காக எழுதப்பட்ட வரிகள் தான்.
இது வரை பார்க்காத, பார்க்க முடியாமல் இருந்த சிவாஜியை இப்போதாவது ஒரு முறை பார்த்துவிடலாம் என்று லட்சக்கணக்கானவர்கள் சிவாஜியின் அன்னை இல்லம் வந்தார்கள்.
இது நடிகர்திலகம் மரணம் குறித்த செய்தி வெளிவந்த பின்பு.
செவாலியே சிவாஜிகணேசன் சாலை அடுத்த இரண்டு நாட்களும் பூகம்பம் போல் அதிர்ந்து கொண்டிருந்தது..
இது என்ன அடங்கிப்போகும் கூட்டமா ?அவர் ஐந்து வருட அரசியல் ஆட்சியை, அதிகாரத்தை ஆண்டவரில்லை.ஆண்டது 50 வருட கலையாட்சி.மறக்குமா நெஞ்சம்.நூற்றுக்கணக்கான உருவ சித்திரங்களாய் ,ஓடும் பிலிம் சுருள்களாய் தமிழன் நெஞ்சில் என்றும் உலா வந்து கொண்டிருக்கும் கலைப் பேராசான் நடிகர்திலகம்.
இழுத்த இழுப்புக்கெல்லாம் வருபவரா சிவாஜிகணேசன்.
ஒரு தகவலும் சொல்லாமல் வந்தார் பந்துலு.ஒரு படப்பிடிப்பில் சிவாஜியை பாத்து சொன்னாராம். நாளை கர்ணன் பட பூஜை .நீங்கள்தான் கதாநாயகன் ,வேறு ஒன்றும் சொல்லாமல் புறப்பட்டு விட்டாராம்.என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார் அவர் என கோபப்பட்டார் சிவாஜி. அடுத்த நாள் காலை முழு ஒப்பனையுடன் கர்ணனாக நின்றார் சிவாஜி. பூஜைக்கு முன்பே.
கலையை வைத்து இழுக்கலாம் சிவாஜியை என்பதற்கு இது ஓர் உதாரணம்.
அதே பந்துலு முரடன் முத்துவை 100 வது படமாக அறிவிக்க சிவாஜியை கேட்ட போது நவராத்திரி காவியம் ,அது நாகராஜனின் கலைத்திறமை அதை விட முடியாது என்றது உலகறிந்த விஷயம் .நாகராஜனை ஜெயிக்க வைத்தார் சிவாஜி.
சிவாஜியின் இறுதி ஊர்வலம் சொன்னது சிவாஜி யாரென்பதை. எல்லா நடிகர் நடிகைகளின் மரணத்துக்கும் வருகிறார்கள் .போகிறார்கள்.
வாசலோடு வழியனுப்பி விடுகிறார்கள் .மொத்த திரையுலகமும் பல மைல் தூரம் நடந்து வந்து அஞ்சலி செய்தது சிவாஜி என்ற கலைஞனுக்காக மட்டுமல்ல,சிவாஜி என்ற நல்ல மனிதருக்காகவும் தான்.
சிவாஜி நடித்த எல்லாப் படங்களின் வீடியோ கேசட்டுகளும் என்னிடம் இருக்கின்றன. அதுதான் என்னுடைய நூலகம் என்று சொன்ன ரசிகர்கள் இருக்கிறார்கள்.அந்த படங்களை பார்ப்பது மட்டுமே என்னுடைய பொழுதுபோக்கு.என் சந்தோச நிமிடங்கள் என்று தான் இன்னும் நிறைய பேர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
சிவாஜியின் இறுதி ஊர்வலத்தில் பஞ்ச் டயலாக் ஒன்று பரபரப்பாக பேசப்பட்டது.இருந்த ஒரே நடிகனையும் கொன்னுட்டீங்களேடா ,பாவிகளா.ஊர்வலத்தில் ரசிகர் கத்திச் சொன்னது இது. உண்மையாக சொல்லப்பட்ட பஞ்ச் டயலாக் இது.
உடல்நலக் கோளாறுகளுக்காக அடிக்கடி மருத்துவமனை சென்று வந்தார் சிவாஜி .மரணம் அடையும் முன்பு சிவாஜி அப்பல்லோவில் அனுமதி என்ற செய்தியை வெளியிட்டது நாளிதழ்.அந்த செய்தியை பார்த்த போது தெரியவில்லை. இப்போது சிவாஜியுடன் காலனும் சென்றுள்ளான் என்பது.அப்போல்லோ மருத்துவமனை அந்த செய்தியை அறிவித்த போது அதிர்ந்து போனது தமிழகம்.இதே போன்று ஒரு சிரமமான சூழ்நிலை தான் அதற்கு பத்து வருடங்களுக்கு முன்பு கோவை கே.ஜி. மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட போது இருந்தது.ஊரெல்லாம் பர பரபரப்பு.சிவாஜி எழுந்து வந்து பால்கனியில் நின்று கையசைத்து தன் நலத்தை காட்டினார். அதே போலத்தான் அப்போல்லாவிலும் அப்படி ஒரு நிகழ்வு நடக்காதா என்ற எண்ணம் வரத்தான் செய்தது.
1959ல் ஆசிய ஆப்பிரிக்கா பட விழாவில் ,சிறந்த நடிகர் சிவாஜிகணேசன் என தேர்வுக் குழுவினர் அறிவித்த போது ,அதை கேட்டதும் நடிகர்திலகம் மயங்கி சரிந்தாராம்.அது சந்தோச மயக்கம். இந்திய தேசம் தன் பதக்க பெருமையில் ஒரு சிறப்பை சேர்த்துக் கொண்டது சிவாஜியால் கிடைத்த விருதால்.
சிவாஜியின் மரணச் செய்தி சொன்னது ...சிவாஜி எனும் விருதே போய்விட்டதே ..
உங்களால் மட்டும் எப்படி ஒரு நாள் கூட காலதாமதம் இல்லாமல் படப்பிடிப்புக்கு வர முடிகிறது என்று நடிகர்திலகத்திடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் சொன்ன பதில் :நான் எப்போது அப்படி வர முடியாமல் போகுமோ அன்று நான் இறந்திருப்பேன் .
தமிழகம் முழுதும் வெளியூர்களில் இருந்து வந்த ரசிகர்கள் அந்த இரண்டு நாட்களும் தகனத்துக்கு போகும் வரை அன்னை இல்லத்தைச் சுற்றியே வந்து கொண்டிருந்தார்கள்.சிலருடைய பேச்சுகள் இப்படியிருந்தன.
சிவாஜியின் நடையழகை காண இலங்கை பிரதமர் ஜெயவர்த்தனா ஏர்போர்ட்டில் காத்திருந்தார்.ஆன்மீகவாதி புட்டபர்த்தி சாய்பாபா பார்த்து ரசித்தார்.அதோ அன்னை இல்ல வாசலில் உறங்கி கொண்டிருக்காறாரே தலைவர்.எழுந்து வர மாட்டாரா?
இதைத்தானே ஆச்சி மனோரமாவும் உரத்து கதறினார்.
பல மணி நேரம் சென்னை மாநகரம் அதிர ,குலுங்க சிவாஜியின் இறுதி ஊர்வலம் நடந்தது.அமைதியாக எந்வித அசம்பாவிதமும் இன்றி நடந்தது மகா கலைஞனின் இறுதி யாத்திரை.
நடிகர்திலகத்தின் பொன்மேனி தகன மேடைக்கு கொண்டு போகும் வரை தொலைக்காட்சி காட்டியது.திட மனம் கொண்டவர்களை கூட அந்த எரிமேடைக்கு உடல் சென்ற காட்சி இதயங்களை நொறுக்கத்தான் செய்தது.
அவன் ஒரு சரித்திரம் படத்தில் இடம் பெற்ற முதல் பாடலின் வரிகள் இது :
தாயினும் பெரிது தாயகம் என்றான்
தனையே இந்த மண்ணுக்கு தந்தான்
அவன் ஒரு சரித்திரம்
அவன் ஒரு சரித்திரம்
கதைநாயகனுக்கு பொருந்தினாலும் கதாநாயகன் சிவாஜிக்கான வரிகள் இவை.
திரையுலகுக்கு வருவதற்கு முன்பே திறமையான நடிகன் என்று பெயர் வாங்கித்தான் கணேசன் வந்தார். முதல் படம் வந்தபோது இவனல்லவோ நடிகன் என பெயர் பெற்றார். கடைசி படம் வரை ராஜாதிராஜனாகவே வலம் வந்தவர். சிவாஜி மறைந்த போது பொற்கால ஆட்சியும் முற்றுப்பெற்றது.
மறைந்து இவ்வளவு ஆண்டுகள் ஆன பின்பும் புகழ் குன்றா மன்னவன் சிவாஜியே!
செந்தில்வேல் சிவராஜ்..
கருத்துகள்
கருத்துரையிடுக