அந்தக்கால பட உலகத்துலே வில்லாதி வில்லன்களாகவும் ,பிரபல கதாநாயகர்களாகவும் காமெடி மேதைகளாகவும் விளங்குன பழைய நாடக நடிகர்களில் நூற்றுக்கு 99 பேர் அவங்களோட நாடக நாட்கள்லே 'அயன் ஸ்திரீ பார்ட் ' வேஷம் போட்டவங்க தான் .இந்த அயன் ஸ்திரீ பார்ட்ங்கற வார்த்தை இந்த கால இளைய சமுதாயத்துக்கு புதுசா தெரியலாம். நாடகத்துலே பெண் வேஷம் போட்டு நடிக்கற ஆண் நடிகர்களைத்தான் இப்படி சொல்வாங்க.
அந்தகாலத்துலே நாடகத்துலே நடிக்க பெண் நடிகைகள் கிடைக்கறது கஷ்டம் .அதனாலே ஆண் நடிகர்களே பெண் வேஷத்தை பொட்டு நடிச்சாங்க. இப்படி நடிச்சவங்களைத்தான் ',ஸ்திரீ அயன் பார்ட்டு'ன்னு சொல்வாங்க.
சினிமா உலகத்துலே பெரிய நடிப்பு மேதையான நடிகர்திலகம் சிவாஜி கூட அயன் ஸ்திரீ பார்ட் போட்டவர்தான்.சினிமா பீல்டுக்கு வந்து பல வருஷங்கள் ஆன பின்னாலயும் ,அயன் ஸ்தீரி பார்ட் வேஷம் அதிகமா போட்டு நடிச்சதாலே என்னவோ அவரோட அங்க அசைவுகள்லே பெண்மையின் சாயல் கலந்து இருந்துச்சு.இது ஒரு அலாதியான கவர்ச்சியை கொடுக்கற மாதிரி இருக்கும்.
பெரிய உச்சத்துக்கு போன கதாநாயகர்கள்லே அதிகமா பெண் வேஷம் போட்ட நாடக நடிகர் சிவாஜிதான்.
சிவாஜி நாடகங்கள்லே பெண் வேஷம் போட்டு நடிச்சதை பாத்த நிறைய பேர் இவங்க உண்மையிலேயே பெண் தானோன்னு நெனச்சவங்க அதிகம்.
முதன் முதலா பெண் வேஷம் போட்டு சிவாஜி நடிச்ச வேஷம்ன்னா அது பால ருக்மணி வேஷம்தான்.இந்த வேஷம் போட்டு சிவாஜி நடிச்சப்போ ஒரு வேடிக்கை நடந்தது.கிருஷ்ணர் ருக்மணியை அடிச்சு கொண்டு போற மாதிரி பெண் வேஷம் போட்ட சிவாஜியையும் கடத்திட்டு போக சிலர் முயற்சி செஞ்ச சம்பவம் எல்லாம் நடந்திருக்கு.
சிவாஜி ராமாயணம் மயில் ராவணன் ,அபிமன்யு ,பதிபக்தி,
மகாபாரதம்,கண்டிராஜா ,
மனோகரா,ரத்னாவளி,
நூர்ஜஹான் உள்பட பல நாடகங்கள்லே பெண்வேஷம் போட்டு நடிச்சிருக்கார்.இதுலே நூர்ஜஹான் வேஷத்துக்கு நிறைய ரசிகர்கள் இருந்திருக்காங்க.மனோகரா பத்மாவதியா நடிச்செல்லாம் கலக்கி இருக்கார்.
பெண் வேஷமே அதிகமா போட்டு நடிச்சதாலே தலைமுடியை முழங்கால் வரை தொங்கற வரை வளர்த்து வெச்சிருந்தார்
இதை கரு நாக கூந்தல்னு சொல்வாங்க,அது மாதிரி வளர்த்து வெச்சிருந்தார்.
கதா நாயகன் ஓடிப் பிடிக்கற காட்சிகள்லே இந்த கூந்தலை இழுத்து பிடிச்சா பெண் வேஷம் போட்ட சிவாஜிதான் கீழேவிழுவாரே ஒழிய இழுக்கறவரோட கையோடு அந்த கூந்தல் வராது.
இது மாதிரி பெண் வேஷம் போட்டு சிவாஜி நடிச்சப்போ ஒரு சமயம் சிவாஜியை நிஜமான பெண் அப்பிடின்னு நினைச்சு அவரை கடத்திட்டு போக ஒரு இளைஞர்கூட்டம் திட்டம் போட்டடாங்களாம்.அதுலே இருந்து சிவாஜி எப்படி தப்பிச்சார்,எந்த ஊர்லே நாடகம் நடந்தப்போ இது நடந்துச்சுன்னு இப்ப பாக்கலாம்.
ஒரு சமயம் 'மயில் ராவணன்'ங்கற நாடகம் சிங்க நல்லூர்லே நடந்துட்டு இருந்துச்சு.அந்த நாடகத்துலே சிவாஜி செஞ்ச கேரக்டர் சந்திரசேனா.இந்த கேரக்டர்லே சிவாஜி அமர்க்களப்படுத்தினார்.
பாத்துட்டு இருந்த ஆடியன்ஸ் தரப்புலே இருந்து இந்த சந்திரசேனா கேரக்டருக்கு ஏக ரெஸ்பான்ஸ்.முதல் நாள் நாடகம் நடந்தப்பவே ,சந்திரசேனாவோட நடிப்பை பாத்து ,ரெண்டாவது வரிசைலே நான்கு முஸ்லீம்கள் உக்காந்து ,அடிக்கடி கை தட்டி உற்சாகம் பண்ணிட்டே இருந்தாங்க.அந்த நடிப்பை பாத்து பாராட்டவும் செஞ்சாங்க.
சிவாஜிக்கு ரொம்ப பெருமையாக கூடஇருந்தது. அப்போ சிவாஜிங்கற பேர் இல்லே. கணேசன் தான்.மறுநாளும் அந்த நாலு பேரும் அதே நாடகத்தை பாத்து பாராட்டுனாங்க.
நம்ம நடிப்பு ரசிகர்களை திரும்ப திரும்ப வரவழைக்குதுன்னு கணேசனுக்கும் ரொம்ப பெருமையா இருந்துச்சு.நடிப்புலே இன்னும் மெருகு கூட்டி நடிச்சார். மூணாவது நாளும் அதே மாதிரியே அந்த நாலு பேர் வந்தாங்க. வழக்கம்போலே அவங்க நடந்துகிட்டாங்க.
சிவாஜியும் இது பத்தி நாடக முதலாளிகிட்டே சொன்னார். இதைகேட்ட அவருக்கு மனசுலே ஒரு பயம் வந்துச்சு.
அவர் ஏதோ சந்தேகப்பட்டார். இருந்தாலும் ஒரு உண்மை என்னான்னு தெரிஞ்சுக்க ஒரு எச்சரிக்கையாக இருக்க வேண்டி
அந்த நாடகத்துலே யாரும் பாக்காத ஒரு ஆளை ,ஒரு ஒற்றன் மாதிரி அனுப்பி வெச்சார் முதலாளி.அந்த நாலுபேரும் என்ன பேசிக்கறாங்கன்னு தெரிஞ்சுக்க ஐடியா பண்ணிட்டார்.
வேவு பார்துட்டு வந்த அவர் சொன்ன செய்தி ரொம்ப திடுக்கிட வைச்சது.
மறுநாள் நாடகம் நடக்கும் போது அவங்க கணேசனை அதே பெண்ணுடையிலேயே தட்டிட்டு போகப் போறதா பிளான் போட்டு இருக்காங்கன்னு சொன்ன விஷயம் அது.
நாடக முதலாளி ஒரு ஐடியா பண்ணினார்.அந்த நாடக கம்பெனிலே ஜனார்த்தனம்னு ஒருத்தர் இருந்தார்.ஆஜானுபாகுவா ,
பீமனை போல இருந்தார் அவர்.அவர்கிட்டே விஷயத்தை சொன்னாங்க.
நாடகம் ஆரம்பமாச்சு.கணேசன் மேடையிலே தோன்ற வேண்டிய சமயம் பாத்து அந்த நாலு பேரும் உள்ள வந்தாங்க.ஜனார்த்தனம் கை ஜாடை காட்டி அவங்களை பின்புறம் கூட்டிட்டு போனார்.அங்க இன்னும் பலபேர் இருந்தாங்க.அவங்க கிட்டே மிரட்டி விஷயத்தை கேக்க உண்மை தெரிஞ்சது.எல்லாருமா சேந்து அடி பின்னி எடுத்துட்டாங்க.
நாடகத்துலே பெண் வேஷம் போட்டு நடிக்கறவங்களுக்கு பல விதமான தொல்லைகள் வரும். இதையெல்லாம் சமாளிச்சு தான் நாடக நடிகர்கள் பொழப்பு ஓடிட்டு இருந்துச்சு அந்த காலத்துலே.
ஆனா இப்படி பல பிரச்சினைகள் பெண் வேஷம் போட்டு நடிக்கறப்ப இருந்தாலும் ,பெண் வேஷம் போட்டு நடிக்கறப்போ தான் நடிப்புலே சில நெளிவுகள் சுளிவுகளை தெரிஞ்சுக்க முடியும். அது நடிப்புலே பல பரிமாணத்தை காட்டற அனுபவத்தை கொடுக்குது. இதுதான் நாடகத்துலே நடிச்ச பெரிய நடிகர்களோட கருத்தாவும் இருக்குது.
கருத்துகள்
கருத்துரையிடுக