நடிகர்திலகம் 1952 லே நடிக்க வந்தார்.எத்தனையோ கேரக்டர்கள் பண்ணிட்டாரு.ஆனா அவரோட மனசுக்குள்ளே தணியாத ஆசையா அவர் நெனச்ச மாதிரி ஒரு படம் பண்ண முடியலேங்கற எண்ணமும் ஓடிட்டேதான் இருந்துச்சு. ஒரு வருசம் ரெண்டு வருசம் இல்லே. 12 வருசம் நெனச்சுட்டு இருந்தார்.அதுக்குண்டான வாய்ப்பே வரலை.சிவாஜியோட பிஸி சுழ்நிலையாலே அப்படி ஒரு கதை ரெடி பண்ணுங்கன்னு சிவாஜியும் சொல்லலே.தானா அமையும்னு காத்திருந்தார்.இப்படி எந்த மாதிரியான படத்துக்கு சிவாஜி காத்திருந்தார்னு சொல்லறதுக்கு முன்னாலே பழைய விஷயம் ஒண்ணை சொல்லணும்.
சிவாஜி சினிமாக்கு வர்றதுக்கு முன்னாலயே நாடகங்கள்லே நடிச்சுட்டு இருந்த காலங்கள்லே அவர் பாத்த நாடகம் டம்பாச்சாரி.
இந்த நாடகத்துலே சாமி அய்யர் என்ற நடிகர் ஒன்பதுக்கும் அதிகமான வேஷங்கள்லே நடிச்சிருந்தார்.ஒரே நாடகத்துலே இவ்வளவு வேஷமான்னு சிவாஜிக்கு ஆச்சர்யம் .அதுவும் மேடை நாடகத்துலயே.சிவாஜி ரொம்பவே இம்ப்ரஸ் ஆயிட்டார் நாடகத்தை பாத்து.
அது மனசுக்குள்ளே ஒரு ஆசையா நின்னுடுச்சு.
அதுக்கு பின்னாலே சினிமாக்கு வந்து 100 படம் தொடப் போற நேரம்.
இடையிலே கட்டபொம்மன் படத்துலே எல்லாம் நடிச்சு உலக அளவுலே சிறந்த நடிகர்னெல்லாம் பேர் எடுத்துட்டார். உத்தம புத்திரன் மனோகரா பாவமன்னிப்பு பாசமலர் கப்பலோட்டிய தமிழன் உள்பட நிறைய வித்தியாசம் வித்தியாசமா நடிச்சு சிவாஜியாலே நடிக்க முடியாத வேசம் இல்லே ,பண்ணாத வேசமும் இல்லேன்னேல்லாம் பேர் எடுத்துட்டார். இப்படி எத்தனையோ படம் பண்ணியிருந்தாலும் ஒரே படத்துலே பல விதமான வேஷம் போட்டு நடிக்கற மாதிரி ஒரு படம் அமையலேன்னு ஒரு ஏக்கம் இருந்துச்சு.பலே பாண்டியா படத்துலே கூட மூணு வேஷம் போட்டு நடிச்சிருந்தார்.
1964 ஆம் வருசம்.AP.நாகராஜன் வந்தார்.நாகராஜனோட சிவாஜி அந்த நேரத்துலே கொஞ்சம் மனஸ்தாபமா இருந்த நேரம்.அவ்வளவா பேச்சு இல்லே.நாகராஜன் ஒரு கதை பண்ணி வெச்சிருந்தார். அந்த கதையிலே சிவாஜியை தவிர வேற யாரும் நடிக்க முடியாது.இது நாகராஜனோட எண்ணமும் தான். அப்படியொரு சப்ஜெக்ட்.சிவாஜிகிட்டே இந்த கதையை சொல்லி எப்படியாச்சும் சிவாஜியை நடிக்க வெச்சுடணும்ங்கற முடிவுலே இருந்தார். சிவாஜியோட ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் டைரக்டா போய் பேச முடியாது. அப்போ தன்னோட ஆரம்ப கால நண்பரா இருந்த விகே.ராமசாமிகிட்டே இது பத்தி சொன்னார்.விகேஆர் கூட ஏன் நீங்களே டைரக்டா கேட்டுப் பாக்க வேண்டியதுதானேன்னும் கேட்டிருக்கார். தான் சிரம படறதாகவும் தனக்கு ஹெல்ப் பண்ணவும் கேட்டார்.
சிவாஜி சம்மதிக்கலேன்னா என்ன பண்றதுன்னு நாகராஜனுக்கு தயக்கம்.அதனாலேதான் விகேஆர் சொன்னா சிவாஜி கேப்பார்னு அவர் கிட்டே பேசினார் நாகராஜன்.
விகேஆரும் அவரோட நிலைமையை பாத்து சூட்டிங் நடக்கறப்போ வந்து பாருங்கன்னும் சொல்லிட்டார்.
ஒரு சூட்டிங்லே இருந்த சிவாஜியை பாக்கலாம்ணு நாகராஜன் வந்தார்.சிவாஜி இதை பாத்துட்டு அவர் இங்க என்ன பண்றார்னு விகேஆர்கிட்டே கேட்டார்.வேற எதுக்கு,உங்களை பாக்கத்தான் வந்திருக்கார். ஏதோ படம் பண்ணணுமாம்.அது விசயமா பாக்க வந்திருக்கார்னு விகேஆர் சொன்னார்.விகேஆர் தான் வரச் சொல்லியிருப்பார்னு சிவாஜிக்கு புரிஞ்சு போச்சு.
உடனே சிவாஜி விகேஆர் கிட்டே ,ஏற்கெனவே நீங்க பட்டது பத்தாதான்னு கேட்டார்.விகேஆரும் சில விஷயங்களை பேசி,அவர் ஒரு கதை வெச்சிருக்காராம்.கதையை வேணா கேளுங்க. அதுக்கு பின்னாலே உங்க முடிவுன்னு சொல்லிட்டார்.
விகேஆர் சொன்னதுக்காக சிவாஜி நாகராஜனை கூப்பிட்டு கதை கேட்டார். அவர் சொன்ன கதையிலே ஹீரோவுக்கு ஒன்பது வேஷம்.சாதாரணமா கதை கேக்க ஆரம்பிச்சார் சிவாஜி... கதை போக போக அதுலே ரொம்ப இம்ப்ரஸ் ஆயிட்டார். அடடா ,இந்த மாதிரி ஒரு கதைக்காகத்தானே இத்தனை நாளும் காத்துட்டு இருந்தேன்ங்கற மாதிரி எண்ணம் ஓடுச்சு.
சிவாஜிக்கு அந்த கதை ரொம்ப பிடிச்சு போச்சு. ஆனா சிவாஜி அப்ப இருந்த பிசி சூழ்நிலையாலே உடனடியா கால்ஷீட் தர முடியாத நிலைமை.தன்னோட நிலைமையையும் நாகராஜனுக்கு சொன்னார்.நாகராஜனுக்கும் தெரியும். உடனே அவர் ஐடியா கொடுத்தார். சிவாஜியை பாத்து, இப்ப நான்சொன்ன கதை முழுதும் நைட்லே நடக்கற மாதிரி கதை. இதனாலே நீங்க பகல் கால்ஷீட் ஏதும் தர வேணாம்.நைட் கால்ஷீட் மட்டும் கேப்லே பண்ணி கொடுங்கன்னும் சொன்னார். சிவாஜியும் சம்மதிச்சு நாகராஜனுக்கு அந்த படத்தை நடீச்சு கொடுத்தார். அந்த படம்தான் நவராத்திரி.தன்னோட பல வருச கனவும் ,ஆசையும் அந்த படத்துலே நடந்ததை நெனச்சு சிவாஜிக்கும் சந்தோசம்.இந்த படம் முடிஞ்சப்போ சிவாஜி 99 படத்துலே நடிச்சு முடிச்சிருந்தார்.அது வரைக்கும் யாரும் பண்ணாத சினிமாவா நவராத்திரி இருந்ததாலே அந்த படத்தை சிவாஜியோட 100 வது படமா வெளியிடலாம்னு நாகராஜன் சிவாஜிகிட்டே அனுமதி கேட்டார்.சிவாஜியும் சம்மதம் சொல்லிட்டார்.இதுக்கு அப்புறம் தான் அப்போ சிவாஜியோட பெஸ்ட் பிரண்டா இருந்த பந்துலு சிவாஜி நடிச்சு தான் தயாரிச்ச முரடன் முத்து படத்தை 100 வது படமா வெளியிடலாம்னு சிவாஜிகிட்டே சொல்ல,சிவாஜி நாகராஜனோட நவராத்திரி பட விஷயத்தை சொன்னார்.பந்துலுவுக்கு எதுவும் எறலே. தன்னோட படம்தான் 100 வது படமா வரணும்னு ஒரே முடிவா இருந்தார்.
நவராத்திரி எப்பேர்ப்பட்ட படம். தன்னோட ஆசை நிறைவேறுன படம்,எப்படிப்பட்ட உழைப்பு ,தமிழ் சினிமாவுலேயே யாரும் செய்யாத முயற்சியா அமைஞ்ச இந்த படத்தை ஒதுக்க யார் தான் ஒத்துகுவாங்க. அதில்லாமே மொதல்லயே முடிவான விஷயம் இது. இப்ப போய் மாத்தினா நல்லா இருக்குமா ?
சிவாஜி சம்மதிக்கலே .
நவராத்திரிதான் 100 படமா அறிவிப்பு செஞ்சு வெளியாச்சு.
இந்த மனக்கசப்புலே பிரிஞ்சு போனவர்தான் பந்துலு.
இப்படி நவராத்திரி படத்துக்கு பின்னாலே இப்படி ஒரு பிரச்சினையும் இருக்கு.
எது எப்படி இருந்தாலும் சிவாஜியோட பல வருச ஆசையையும் ,கனவையும் நிறைவேத்துன படம் நவராத்திரி.நவராத்திரி திரைப்படம் ரிலீசாகி ,அதே நாள்லே ஒரு மணிநேரம் கழிச்சு வெளியான படம் பந்துலுவோட முரடன் முத்து.
நவராத்திரி முதல் நாள் பட விளம்பரத்துலே சிவாஜியின் 100 வது படம்னு எந்த குறிப்பும் இல்லாமே வெளியாச்சு.
நாகராஜன் நவராத்திரி படத்தை எடுக்கறப்போ அவருக்கு நிறைய பணக்கஷ்டம் இருந்துச்சு. இந்த படத்துக்கு பாட்டு எழுதுன கண்ணதாசன் நாகராஜன் நிலைமை தெரிஞ்சு அட்வான்ஸ் பணம் கூட வாங்காமே பாட்டுகளை எழுதிக் கொடுத்தார்.படம் வரட்டும் ,அப்புறம் தாங்கன்னு சொல்லிட்டார் கண்ணதாசன்.
படம் ரிலீசாகி நல்லா போய்ட்டு இருந்த பின்னாலே கண்ணதாசனுக்கு பேசுன பணத்துக்கு மேலே கொடுத்தார் நாகராஜன்.
1964 லே வெளியான நவராத்திரி படத்தை இந்தியில் எடுக்க நினைச்சார் சஞ்சீவ்குமார்.நவராத்திரி படத்தை பார்த்தார்.சிவாஜியின் நடிப்புலே பாதிகூட என்னாலே செய்ய முடியாதுன்னு நவராத்திரி திரைப்பட விழாவில் வெளிப்படையாகவே சொன்னார் சஞ்சீவ்குமார்.
சிவாஜிக்கு பிரான்ஸ் அரசாங்கம் செவாலியே விருது கொடுக்கறதுக்கு முன்னாலே சிவாஜி நடிச்ச பல படங்களை போட்டு பாத்தாங்க. அதுலே நவராத்திரியும் ஒண்ணு. படம் பாத்த விருது குழுவை சேந்தவங்க அந்த ஒன்பது வேஷத்தையும் செஞ்சது ஒரே நடிகர்தான்ங்கறதை நம்பலையாம்.கம்யூட்டர் எல்லாம் வெச்சு பெரிய ஆராய்ச்சி பண்ணுணாங்களாம்.அதுக்கு காரணம் அவரோட நடிப்புதான் .
சிவாஜியோட 9 வேஷத்துக்கும் ஈடு கொடுத்து நடிச்ச சாவித்திரியோட நடிப்பையும் பாராட்டாதவங்க இருக்க முடியாது. சத்தியவான் சாவித்திரி கூத்து நாடகத்துலே நடிக்கறதுக்கு சாவித்திரிக்கு எந்த அனுபவமும் அதுக்கு முன்னாலே அமைஞ்சது இல்லே. அதுக்கு தான் யோசிச்சாங்களாம் .சிவாஜி கூட அதுலே எப்படி நடிக்கறதுன்னு சாவித்திரிக்கு நடிச்சுகாட்டியிருக்கார். ,அதை பாத்து தெரிஞ்சுகிட்டு நடிச்சாராம் சாவித்திரி.
செந்தில்வேல் சிவராஜ்..
கருத்துகள்
கருத்துரையிடுக