1956ல் அமரதீபம் பெண்ணின் பெருமை ராஜா ராணி ரங்கூன் ராதா நல்ல வீடு நான் பெற்ற செல்வம் நானே ராஜா வாழ்விலே ஒரு நாள் தெனாலிராமன் ஆகிய 9 படங்களில் சிவாஜி நடித்தார்.
அமர தீபம்.
வீனஸ் பிக்சர்ஸ் தயாரித்த அமரதீபம் மிகப்பெரிய வெற்றிப் படம் .இதன் கதை வசனத்தை ஸ்ரீதர் எழுதினார் T.பிரகாஷ்ராவ் டைரக்ட் செய்தார். சிவாஜியுடன் பத்மினியும் சாவித்திரியும் இணைந்து நடித்தனர் .கதை நடிப்பு இசை எல்லாமே சிறப்பாக இருந்ததால் இந்த படம் 100 நாட்களுக்கு மேல் ஓடியது அமர தீபத்தை பின்னர் சிவாஜி கணேசன் ஹிந்தியில் அமர்தீப் என்ற பெயரில் சொந்தமாக தயாரித்தார் .அதில் தேவானந்த் பத்மினி வைஜெயந்திமாலா ஆகியோர் நடித்தார்கள் .
ஜெமினி கணேசனுடன் முதல் படம் ..
பெண்ணின் பெருமையில் சிவாஜியும் ஜெமினி கணேசனும் இணைந்து நடித்தார்கள். இருவரும் சேர்ந்து நடித்த முதல் படம். ஜெமினி கணேசன் அண்ணன் .சிவாஜி தம்பி.
மன நோயாளியாக இருந்து குணமடையும் குணச்சித்திர வேடம் ஜெமினிக்கு. சிவாஜிக்கு வில்லன் வேடம் .சாவித்திரி தான் கதாநாயகி. ஜெமினி கணேசனுக்கு நடிப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருந்தன .
சிவாஜி முரட்டு தம்பியாக வில்லன் வேடத்தில் கொடி கட்டி பறந்தார்.
ராஜா ராணி படத்தில் சிவாஜியும் பத்மனியும் இணைந்து நடித்தார்கள். கதை வசனம்
மு கருணாநிதி .இதில் சேரன் செங்குட்டுவன் சாக்ரடீஸ் ஆகிய இரண்டு ஓரங்க நாடகங்கள் இடம்பெற்றன .சேரன் செங்குட்டுவன் நாடகத்தில் கவிதை நடையில் கருணாநிதி எழுதிய நீண்ட வசனத்தை ஒரே மூச்சில் பேசி நடித்தார் சிவாஜி .ஒரே ஷாட்டில் அந்த காட்சி படமாக்கப்பட்டது .
சிவாஜி சாக்ரடீஸ் வேடத்தில் சாக்ரடீஸ் ஆகவே வாழ்ந்து காட்டினார் சிவாஜி.
ரங்கூன் ராதா மேகலா பிக்சர்ஸ் தயாரிப்பு .அண்ணாவின் கதைக்கு கருணாநிதி வசனம் எழுதினார் .இதில் சிவாஜியும் பானுமதியும் போட்டி போட்டு அற்புதமாக நடித்தார்கள் .படத்தின் கதாநாயகன் சிவாஜி தான் என்றாலும் வில்லன் போன்ற கதாபாத்திரம் .சிரமமான வேடத்தை சிறப்பாக நடித்து பாராட்டு பெற்றார்.
அந்த ஆண்டின் சிறந்த நடிகராக சிவாஜியும் சிறந்த நடிகை விருதை பானுமதியும் ரங்கூன் ராதா மூலமாக பெற்றார்கள் .
அடுத்து நகைச்சுவை நடிப்பிலும் சிவாஜிக்கு உள்ள வல்லமையை தெனாலிராமன் புலப்படுத்தியது. இது தெனாலிராமன் கதை வரலாற்று படமாகும். சிவாஜியின் அற்புதமான நடிப்பில் தெனாலிராமன் படம் அமைந்தது.
படத்தின் இறுதியில் அவர் முதியவராக வேடம் போட்டு நடித்த நடிப்பில் சிவாஜியையே காண முடியாது. தெனாலிராமன் தமிழ் சினிமாவின் ஒரு அற்புத படைப்பு.
அடுத்து நல்ல வீடு T.S.பாலையா எம்எல் பதி ஆகியோர் சேர்ந்து தயாரித்த படம். இதில் ஒரு அதிசயம் ஆர் எஸ் மனோகர் கதாநாயகன் சிவாஜி வில்லன் .அதிகம் பேரை கவராது போன இந்த படம் ஒரு தோல்வி படம் என்று சொல்லலாம்.
வாழ்விலே ஒரு நாள். இது
ஏ. காசிலிங்கம் இயக்கிய படம்.இப்படத்தில் சிவாஜி கணேசன் , ஜி . வரலட்சுமி , ஸ்ரீராம் , ராஜசுலோச்சனா ஆகியோர் நடித்துள்ளனர் .
ஏவிபி ஆசைத்தம்பியின் கசப்பும் இனிப்பும் நாவலை அடிப்படையாகக் கொண்டு ,தயாரிக்கப்பட்டது.
ஆர் ஆர் சந்திரன் தயாரித்து அவர் ஒளிப்பதிவு செய்து டைரக்ட் செய்த படம் நானே ராஜா .இது சுமாராக போன படமாக அமைந்தது.ராமாயணத்தை சரித்திர கதையாக மாற்றி எழுதியிருந்தார் கண்ணதாசன் .ராவணன் போன்ற கதாபாத்திரத்தில் சிவாஜி நடித்தார். ஸ்ரீ ரஞ்சனி தான் கதாநாயகி .நல்ல வீடு நானே ராஜா ஆகிய படங்களை பார்த்தவர்கள் சிவாஜி இனிமேல் இது போன்ற படங்களில்ல நடிப்பதை தவிர்ப்பது நல்லது என்றார்கள் .
1957 ஆம் ஆண்டு..
1957ஆம் ஆண்டில் மக்களைப் பெற்ற மகராசி வணங்காமுடி புதையல் மணமகன் தேவை தங்கமலை ரகசியம் ராணி லலிதாங்கி அம்பிகாபதி பாக்யவதி ஆகிய எட்டு படங்களில் சிவாஜி நடித்தார்.
இதில் மக்களைப் பெற்ற மகராசி ஒரு முக்கிய சாதனை நிகழ்த்திய படமாகும். விகே ராமசாமி ஏ பி நாகராஜனும் சேர்ந்து ஆரம்பித்த ஸ்ரீ லட்சுமி பிக்சர்ஸ் பட நிறுவனம் இந்த படத்தை தயாரித்தது. கதை வசனம் ஏபி நாகராஜன் இசை கே வி மகாதேவன்.
மணப்பாறை மாடு கட்டி மாயவரம் ஏறு பூட்டி என்று பாடியபடி கட்டுக்குடுமியுடன் சிவாஜி அறிமுகமான முதல் காட்சி ரசிகர்களின் கைதட்டலை பெற்றது .கொங்கு நாட்டு கோவை வட்டார தமிழில் அவர் பேசிய வசனத்தை கேட்டு அனைவரும் வியப்படைந்தனர் .காரணம் அதற்கு முன்பு எல்லா நடிகர்களும் எல்லா படங்களிலும் ஒரே மாதிரியாகத்தான் வசனம் பேசி நடித்தார்கள். தமிழ்நாட்டில் மட்டுமல்ல அகில இந்தியாவிலும் வித்தியாசமாக வட்டார மொழியில் பேசி நடித்த முதல் நடிகர் சிவாஜி தான்.
இதில் சிவாஜிக்கு ஜோடி பானுமதி .மற்றும் வி.கே.ராமசாமி கண்ணாம்பா எம் என் ராஜம் எம் என் நம்பியார் சாரங்கபாணி ஆக எல்லோரும் பாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்தார்கள்.
சிவாஜி நடிப்புக்காவே 100 நாட்களை கடந்து ஓடிய வெற்றிப் படம் மக்களைப் பெற்ற மகராசி.
அடுத்து வணங்காமுடி .
கத்திச்சண்டை காட்சிகள் சிவாஜிக்கு
சரியாக அமையாது என்ற குறையை வணங்காமுடி போக்கியது. இதில் சிவாஜியின் ஜோடி சாவித்திரி.இந்த திரைப்படத்துக்கு சென்னை சித்ரா திரையுங்கில் 80 அடி உயரத்துக்கு கட் அவுட் வைக்கப்பட்டு அது பெரிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது. இது கற்பனையில் உருவாக்கப்பட்ட சரித்திர கதை. படத்தின் வெற்றிக்கு பாடல்களும் காரணம்.சிவாஜியின் அட்டகாசமான நடிப்பில் வணங்காமுடி மிகப்பெரிய வெற்றி அடைந்தது.
சிவாஜியும் பத்மினியும் காதல் காட்சிகளில் நெருக்கமாக நடித்த படம் புதையல் .வெகு இயல்பான காட்சிகளும் வெகு இயல்பான நடிப்பும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு புதுமையாக இருந்தது.
இன்றுவரை பிரபலமான விண்ணோடும் முகிலோடும் என்ற பாடல் இடம் பெற்ற திரைப்படம் இது. இந்தப் படமும் ஒரு வெற்றி படமாக அமைந்தது.
அடுத்து ஆங்கில படம் ஒன்றைத் தழுவி பானுமதி தயாரித்த மணமகன் தேவையில் மீசை இல்லாமல் தோன்றிய சிவாஜி மேல்நாட்டு நடிகர்களைப் போல வெகு இயல்பாக நடித்திருந்தார். ஆனால் இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.
அடுத்து பி.ஆர். பந்துலு சொந்தமாக தயாரித்து டைரக்ஷன் செய்த படம் தங்கமலை ரகசியம். இதில்
காட்டுவாசியாக நடித்த சிவாஜி படத்தின் பெரும்பகுதியில் வசனம் பேசாமல் நடித்தார். இந்தப் படத்தில் சிவாஜியின் ஜோடி ஜமுனா .இதில் இடம்பெற்ற அமுதை பொழியும் நிலவே என்ற பாடல் காலத்தை வென்று இன்றும் வாழ்கின்றது.
அம்பிகாபதி...
எம்கே தியாகராஜ பாகவதர்,
எம் ஆர் சந்தான லட்சுமி நடித்து எல்லீஸ் R. டங்கன் இயக்கிய அம்பிகாபதி. 1937 இல் வெளிவந்து மகத்தான வெற்றி பெற்றது .அதற்கு 20 ஆண்டுகளுக்குப் பிறகு அதே கதையை ஏ எல் சீனிவாசன் படமாக தயாரித்தார். சிவாஜி கணேசன் அம்பிகாபதி ஆக பானுமதி அமராவதி ஆக நடித்தார்கள் .இதில் ஒரு அதிசயம் என்னவென்றால் பாகவதரின் அம்பிகாபதிக்கு இசையமைத்த அதே ஜி. இராமநாதன் சிவாஜியின் அம்பிகாபதிக்கும் இசையமைத்தார். பழைய அம்பிகாபதியில் நடித்த N.S.கிருஷ்ணன் டி ஏ மதுரம்
ஜோடியும் புதிய அம்பிகாபதியில் இடம் பெற்றார்கள்.
பாகவதர் போலவே டி எம் சௌந்தரராஜன் இனிமையாக அருமையாக பாடினார். இவ்வளவு சிறப்புகள் இருந்தும் படம் சுமாராகத்தான் போனது .காரணம் தலைமுறை இடைவெளி.
இந்தப் படம் தயாராகிக் கொண்டிருந்தபோது கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் காலமாகிவிட்டார். அவருக்கு சிலை அமைப்பது போல படத்தில் ஒரு காட்சி அமைத்திருந்தார்கள்.
அடுத்ததாக ராணி லலிதாங்கி ரசிகர்களின் பொறுமையை சோதித்த படம் என்றாலும் இறுதியில் இடம் பெற்ற சிவாஜியின் நடனம் தில்லை நடராஜர் ஆடிய தாண்டவம் இப்படித்தான் இருந்திருக்குமோ என்று நினைக்க வைத்தது.
செந்தில்வேல் சிவராஜ்
கருத்துகள்
கருத்துரையிடுக