நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நட்பு வட்டம் ரொம்ப பெரியது .
தமிழ்நாட்டில் சிவாஜிக்கு நண்பர்கள் இல்லாத ஊரே கிடையாது. எல்லா ஊர்களிலும் நிறைய பிரபலங்கள் , விஐபிகள் சிவாஜி கணேசனுடன் நட்பு வைத்துக் கொண்டிருந்தார்கள் .
அதனால நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் நட்பு வட்டத்தை தமிழ்நாடு அளவில் பேச வேண்டும் என்றால் அது ஒரு நீண்ட பட்டியலாக இருக்கும் .
இந்திய அளவில் சிவாஜியுடன் நெருக்கமாக இருந்த நண்பர்களைப் பற்றி இந்தப் பதிவில் நாம் பார்க்கலாம்.
சிவாஜி கணேசனும் இந்தி நடிகர் தேவானந்தும்..
தமிழில் வெற்றியடைந்த அமரதீபம் திரைப்படம் ஹிந்தியில் அமர்தீப்' என சிவாஜி புரொடக்சன் தயாரித்தது. அந்த படத்தின் நாயகன் நடிகர் தேவானந்த் .தொழில் ரீதியாக ஆரம்பித்த பழக்கம் இறுதி வரை மாறாத நட்பாக மாறியது.
சிவாஜி கணேசனும் லதா மங்கேஸ்கரும்..
அமர்தீப் படத்தில் பாடல் பாட வந்தவர்கள்
லதா மங்கேஷ்கர் மற்றும் அவருடைய சகோதரி ஆஷா போஸ்லே. இந்த படத்தின் மூலம் இருவரும் சிவாஜி கணேசனுக்கு அறிமுகம் ஆனார்கள். இறுதிவரை சிவாஜி நட்பு வட்டத்தில் மிகப் பிரபலமானவர்களாக லதா மங்கேஷ்கர் குடும்பம் இருந்தது.
சிவாஜி கணேனும்
சுனில் தத்தும் ..
1959ல் வெளியான பாகப்பிரிவினை ஹிந்தியில் காந்தன் என்ற பெயரில் உருவானது. இயக்கியவர் பீம்சிங் .சுனில்தத் சிவாஜி வேடத்தில் இந்தியில் நடித்தார்.இதில் நடித்த போது சுனில்தத் சிவாஜியிடம் கையை மடக்கி சற்றும் மாறாமல் படம் முழுவதும் எப்படி நடித்தீர்கள் என்று கேட்டிருக்கிறார்.சிவாஜி சொன்ன பதில் அவருக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது.இப்படத்தால் ஏற்பட்ட
இவர்களுடைய நட்பு இறுதிவரை தொடர்ந்தது.
அந்தப் படத்தில் நடித்த நடிகை லலிதா பவாரும் சிவாஜியோடும் அவருடைய குடும்பத்தோடும் நெருங்கி பழகி வந்தார்.
இந்த படத்தில் வில்லனாக நடித்த நடிகர் பிரான் சிவாஜி கணேசன் நட்புடன் பழகி வந்தார்.
சிவாஜி கணேசனும் நடிகர் அசோக் குமாரும்...
1961-ல் வெளிவிழா கண்ட பாசமலர் படத்தை ஹிந்தியில் 1962ல் ராக்கி என்ற பெயரில் சிவாஜி கணேசன் தயாரித்தார் .
இந்தப் படத்தின் நாயகனாக நடித்த நடிகர் அசோக்குமார் நடிகை வகிதா ரஹ்மான் இந்த படத்தின் தொடக்க விழாவுக்கு சென்ற நாளிலிருந்து சிவாஜி கணேசனுக்கு அறிமுகமான இவர்கள் அவர்களின் தங்களின் நட்பை தொடர்ந்து காத்து வந்தார்கள்.
சிவாஜி கணேசன் திலீப்குமார்...
ஆலயமணி படத்தை இந்தியில் ஆத்மி என்னும் பெயரில் வீரப்பா தயாரித்தார். நடிகர் திலீப்குமார் நடித்தார். படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் சமயத்தில் திலீப் குமாரை பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகளில் ஒன்று.. ஆலயமணியில் சிவாஜி கணேசன் நடித்த பாத்திரத்தை ஏற்று நடிப்பது பற்றி என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
என கேட்க..
கதை கேட்கும் போது சாதாரணமாக இருந்தது ஆனால் கதையின் ஆழமும் அதில் நாம் காட்ட வேண்டிய நடிப்பும் மிக ஆழமானது என உணர்ந்தேன். சிவாஜி கணேசன் ஒரு சாதாரணமானவர் அல்ல. அவர் நடிப்பில் ஒரு புல்டோசர் .அவர் நடித்த பாத்திரங்களை ஏற்று நடிக்கும் முன்பாக 10 முறை யோசிக்க வேண்டும் என்று கூறினார். திலீப் குமாரும் நடிகர் திலகத்தோடு மிக நெருக்கமான நட்பு கொண்டிருந்தார்.
சிவாஜி கணேசனும் நடிகர் பிருதிவி ராஜ்கபூரும் ..
1959ல் பம்பாயில் வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தை சிவாஜி கணேசன் அரங்கேற்றம் செய்தார் .அந்த நாடகத்தை காண இந்தி திரையுலகமே திரண்டு வந்தது.ஒருமுறை நாடகத்தை காண பிரிதிவி ராஜ்குமார் மற்றும் அவருடைய மகன்கள் பேரன்கள் என அனைவரும் வருகை தந்தார்கள் .அந்த சமயம் பிருதிவி ராஜ்குமாருடன் அறிமுகமான சிவாஜி கணேசன் அவரை தன்னுடைய வீட்டிற்கு சிறப்பு விருந்தினராக வரும்படி அழைப்பு விடுத்தார் அவருடைய அழைப்பை ஏற்று அன்னை இல்லம் வந்தார்.அன்னை இல்லத்தில் தனி அறை ஒதுக்கப்பட்டு அதில் பிரிதிவி ராஜ்குமார் தங்கு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரித்வி ராஜ்குமார் சிவாஜியின் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார்.
சிவாஜி கணேசனும் நடிகர் சஞ்சீவ் குமாரும்...
இந்தி திரைப்பட உலகில் நடிகர் திலகம் சிவாஜியுடன் மிகவும் நெருக்கமாக இருந்தவர் நடிகர் சஞ்சீவ் குமார் .சாந்தி படத்தை இந்தியில் கௌரி என்னும் பெயரில் சிவாஜி பிலிம்ஸ் தயாரித்த போது எஸ் எஸ் ராஜேந்திரன் வேடத்தில் நடித்தவர் சஞ்சீவ் குமார் .1960-70களில் சிவாஜி கணேசன் நடித்து வெற்றியடைந்த பல படங்களை இந்தியில் எடுக்கும் போது பெரும்பாலும் கதாநாயனாக நடித்தவர் இவர். நவராத்திரி இந்தியில் தயாரிக்கப்பட்ட போது நாயகனாக நடித்தார்.படத்தின் பெயர் 'நயாதின் நாய்ராத்'
அதுபோல ராமன் எத்தனை ராமனடி ,ஞான ஒளி, அவன் தான் மனிதன் போன்ற படங்கள் முறையே ' ராம் தேரா கித்னே ராம்'
சந்தார், தேவ்தா போன்ற படங்களில் நடிகர் சஞ்சீவ்குமார் நடித்தார்.1971ல் நடிகர் சஞ்சீவ் குமாருக்கு இந்திய அரசால் பாரத் பட்டம் வழங்கப்பட்ட போது சிவாஜி கணேசன் தனது அன்னை இல்லத்தில் பெரிய பாராட்டு விழா நடத்தி கௌரவம் செய்தார் .தமிழ் திரைப்பட இயக்குனர்கள் பலர் கலந்து கொண்டார்கள் அதில்.
சிவாஜியும் ராஜேந்திர குமாரும்.
சிவந்தமண் திரைப்படம் இந்தி தமிழில் எடுத்தபோது இந்தி பதிப்பில் நடித்த ராஜேந்திரகுமார் தமிழில் நடித்துக் கொண்டு இருந்த சிவாஜியுடன் மிக நெருங்கி பழகும் வாய்ப்பு கிடைத்தது.
நடிகர் மெஹ்மூத் ராக்கி தர்த்தி போன்ற படங்களில் நடித்ததில் இருந்து சிவாஜிடம் அன்பாக நெருக்கமாக பழகி வந்த நண்பராக மாறினார்.
சிவாஜி கணேசனும் நடிகர் அமிதாப்பச்சனும் ..
சிவாஜியும் அமிதாப்பச்சனும் ஒரு படத்தில் கூட இணைந்து நடிக்கவில்லை என்றாலும் அமிதாப் பச்சன் நடிகர் திலகத்தின் மீது மிகுந்த மரியாதை கொண்டிருந்தார். சிவாஜியை எங்கு பார்த்தாலும் அவருடைய காலில் விழுந்து வணங்கி ஆசீர்வாதம் பெறுவார். ஒரு முறை விமான நிலையத்தில் சிவாஜியை அமிதாப்பச்சன் சந்தித்தபோது அது பொது இடம் என்று பாராமல் சிவாஜியின் காலில் விழுந்து வணங்கினார்.
இப்படி இந்தி பட திரையுலகில் சிவாஜி நட்பு வட்டத்தை பேச ஆரம்பித்தால் அது இன்னும் நீளமாக இருக்கும். இதில் ஒரு மிக முக்கிய குறிப்பிட்ட பிரபலமானவர்களை பற்றி குறிப்பிட்டுள்ளேன்.
நடிகர் திலகத்துடன் நட்பு கொண்டிருந்த தெலுங்கு பட பிரபலங்களைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
தெலுங்கு பட உலகில் சிவாஜிக்கு மிகவும் நெருங்கிய நண்பராக விளங்கியவர் நடிகர் நாகேஸ்வரராவ். 1953 ல் நடிகை அஞ்சலிதேவி தயாரித்த பரதேசி தெலுங்கு பூங்கோதை என்ற இரு படங்களிலும் நாகேஸ்வரராவ் நாயகனாகவும் சிவாஜி கணேசன் துணை நாயகனாகவும் நடித்த அந்தக் காலத்தில் இருந்து இருவரும் இணைபிரியாத நண்பர்களாக இருந்தார்கள் .சிவாஜி கணேசன் நடித்த பெரிய வெற்றி அடைந்த படங்களின் தெலுங்கு மொழி படங்களில் நாகேஸ்வரராவ் நடித்தார். அதுபோல நாகேஸ்வரரா நடித்த வெற்றி அடைந்த பல படங்கள் தமிழில் எடுக்கப்பட்ட போது நடித்தவர் சிவாஜி கணேசன்.
உதாரணமாக நவராத்திரி தமிழ்,
பிரேம் நகர் தெலுங்கு போன்ற படங்களை குறிப்பிடலாம்.
நடிகர் திலகமும் NT.ராமராவும்.
தெலுங்கு பட உலகில் மிகப் பெரும் ஆளுமையாக விளங்கியவர் என்டி ராமராவ். இவர் சிவாஜியோடு தெனாலிராமன் 1956 சம்பூர்ண ராமாயணம் 1958 கர்ணன் 1964 சாணக்கிய சந்திரகுப்தா 1977 போன்ற முக்கியமான படங்களில் நடித்தார்.
கர்ணன் படத்தில் கிருஷ்ணர் வேடத்தில் NT ராமராவை போட சொன்னதே சிவாஜி அவர்கள் தான் .
சிவாஜியும் நடிகர் மோகன் பாபுவும் ..
சிவாஜியுடன் தமிழில் பல படங்களில் இணைந்து நடித்திருக்கிறார் நடிகர் மோகன் பாபு. சிவாஜி தயாரித்த சொந்தப் படமான அண்ணன் ஒரு கோவில் படத்திலும் நடித்திருக்கிறார் மோகன் பாபு. இவரும் சிவாஜியுடன் மிக நெருக்கமான நட்பு கொண்டிருந்தார்.
சிவாஜி கணேசனும் நடிகர் கிருஷ்ணாவும்.
நடிகர் கிருஷ்ணா தன்னுடைய சொந்த படங்களில் சிவாஜியை நடிக்க வைத்திருக்கிறார். இவரும் சிவாஜியுடன் மிக நெருக்கமான நட்பு கொண்டிருந்தார். தமிழில் 100 நாள் ஓடி வெற்றியடைந்த படமான விஸ்வரூபம் படத்தை நடிகர் கிருஷ்ணா தயாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது .
இதுபோல பல பிரபலமான தெலுங்கு குணச்சித்திர நடிகர்கள் தயாரிப்பாளர்கள் பெரும்பாலானவர்கள் சிவாஜியுடன் நட்பு கொண்டிருந்தார்கள்.
சிவாஜி கணேசனும் கன்னட நடிகர் ராஜ்குமார்.
கன்னடத் திரைப்பட உலகில் சிவாஜி கணேசனை தனது குருவாக மூத்த சகோதரனாக உயிர் நண்பராக கருதியவர் நடிகர் ராஜ்குமார்.
இவர் நடித்த பல படங்களில் நடிகர் திலகம் தமிழில் நடித்திருக்கிறார். சிவாஜி நடித்த பல படங்களில் கன்னடத்தில் உருவாக்கப்பட்ட போது அதில் ராஜ்குமார் நடித்திருக்கிறார்.
குறிப்பாக நடிகர் ராஜ்குமார் நடித்த சங்கர் குரு என்ற திரைப்படம் தமிழில் திரிசூலம் என்ற பெயரில் சிவாஜி நடித்தார்.
சந்தன கடத்தல் வீரப்பன் இவரை கடத்தி விடுதலை செய்யப்பட்ட பின்பு மரியாதை நிமித்தமாக தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்க தமிழ்நாட்டுக்கு வந்த போது, முதலில் நடிகர் திலகத்தின் வீட்டுக்கு சென்று அவரைப் பார்த்த பின்பே மற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் திலகமும் மலையாள நடிகர் பிரேம் நசீரும்.
மலையாளத்தில் தச்சோளி அம்பு என்ற படம் தயாரிக்கப்பட்டபோது நடிகர் பிரேம் நசீர் நடிகர் திலகத்தை ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க அழைத்தார். அவரின் அன்பு வேண்டுகோளுக்காக அந்தப் படத்தில் நடித்தார் சிவாஜி.சிவாஜியோடு நெருங்கிய நட்பு கொண்டிருந்தார் இவர்.
செம்மீன் படத்தில் நடித்த நடிகர் மதுவும் நடிகர் திலகத்தோடு மிக நெருங்கிய நட்பு கொண்டிருந்தார் .நட்புக்காகவே பாரதவிலாஸ் படத்தில் ஒரே ஒரு காட்சி வந்து போனார் நடிகர் மது.
நடிகர் திலகமும் நடிகர் மோகன்லாலும்.இவருடைய
மாமனார் திரு கே பாலாஜி. அதனால் மோகன்லாலை தன்னுடைய மருமகன் என மிகப் பிரியம் வைத்து பழகி வந்தார் சிவாஜி .இருவரும் இணைந்து நடித்த ஒரே ஒரு படம் யாத்ரா மொழி. சிவாஜி மீது மிகுந்த பிரியமும் பாசமும் கொண்டிருந்தார் மோகன்லால்.
மலையாள பட உலகில் மிகப் பிரபலமாக விளங்கிய அப்பச்சன் ,சுகுமாரன் நாயர் என்றும் இன்னும் பல பேர் சிவாஜியின் நட்பு வட்டத்தில் இருந்திருக்கிறார்கள்.
தொழிலதிபர்களும் சிவாஜி கணேசனும்..
ரிலையன்ஸ் குடும்பத்தின் நிறுவனர் திருபாய் அம்பானி சிவாஜிகணேசன் நெருங்கிய நண்பராக இருந்தார் .அம்பானியின் வேண்டுகோளை ஏற்று டெல்லி சென்றால் அவருடைய விருந்தினர் மாளிகையில் தங்குவதை வழக்கமாக வைத்திருந்தார் சிவாஜி.
அதேபோல தமிழக மற்றும் வட இந்திய தொழிலதிபர்களில் டிவிஎஸ் குடும்பத்தைச் சேர்ந்த ரத்தினமய்யங்கார் ,இந்தியா சிமெண்ட் அதிபர் நாராயணசாமி ,சக்தி குழுமத்தின் நிறுவனர் பொள்ளாச்சி மகாலிங்கம் ,வேலூர் விஜயரங்க முதலியார் ,சொக்கலால் அரிராம் சேட், கோவை லட்சுமி குடும்பத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி ,தூத்துக்குடி கே எஸ் கே எஸ் கணபதி நாடார் , எம் ஏ எம் ராமசாமி ,எம்.ஏ சிதம்பரம் ,தினத்தந்தி அதிபர் ஆதித்தனார், ஹிந்து பத்திரிக்கை குடும்பத்தைச் சேர்ந்த எஸ் ரங்கராஜன் ,இந்தியன் எக்ஸ்பிரஸ் அதிபர் பி டி கோயங்கா குடும்பம், கோவை ஜிடி நாயுடு குடும்பம் ,TEN SPORTS புகாதீர் அப்துல் ரகுமான் போன்றவர்கள் சிவாஜி கணேசன் நண்பர்களாக விளங்கினார்கள்
சிவாஜியோடு மிகவும் நெருங்கிய நட்பில் இருந்த தமிழ்நாட்டு பிரபலங்கள் சிலரை மட்டும் குறிப்பிடுகிறேன்.
சிவாஜியோடு மிகவும் நெருங்கிய நண்பராக 40 ஆண்டுகளுக்கு மேலாக விளங்கியவர் வேட்டைக்காரன் புதூர் முத்துமாணிக்கம். இவர்கள் பின்னாளில் சம்பந்திகளாக ஆனார்கள் .
சென்னை கமலா தியேட்டர் உரிமையானர் VN.சிதம்பரம் ,
ராமநாதபுரம் மாவட்டம் சிவகங்கை அரசர் கௌரி வல்லப சண்முகராஜா, சண்முக ராஜேஸ்வர சேதுபதி, திருநெல்வேலி மாவட்டம் எட்டயபுரத்து மன்னர் குடும்பம்,
புதுக்கோட்டை அரசர் குடும்பம்,
திருநெல்வேலி சிங்கம்பட்டி மன்னர் தீர்த்தபதி முருகதாஸ், ஊத்துக்குளி ஜமீன்தார் அகத்தூர் முத்து ராமசாமி காளிங்கராயர்,
புரவிபாளையம் ஜமீன்தர் கோபண்ண மன்றாடியார் ,
ஆந்திர மாநில இலங்கப்பூர் அரசர்கள் கறுசிம்மராஜா , ஜெயசிம்ம ராஜா ,மொன காலா அரசர் நரேந்திரநாத் ரெட்டி,
என்று என்று சிவாஜியின் நட்பு வட்டாரத்தில் அடங்கிய நண்பர்களின் பட்டியல் நீளமானதாக உள்ளது.
சிவாஜி ஒருமுறை சந்தித்து பேசி விட்டால் அவர்களை நண்பர்களாக மாற்றி விடும் குணம் சிவாஜியுடன் இருந்தது. அந்த குணம் தான் சிவாஜிக்கு இவ்வளவு பெரிய நட்பு வட்டாரத்தை உருவாக்கியது என்று கூறலாம்.
கருத்துகள்
கருத்துரையிடுக