நடிகர்திலகம் சிவாஜியின் அன்னை இல்லம் பற்றிய விபரங்களும் ,அது பற்றிய வரலாறும் பெரும்பாலானவர்களுக்கு தெரியும்.சீரும் சிறப்புமான வரலாற்றை தாங்கிய அந்த அன்னை இல்லத்தின் அமைப்பு எப்படி அமைந்துள்ளது என்பது பற்றிய யாருக்கும் தெரியாத தகவல்களை இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
அதற்கு முன்பு சுருக்கமாக சில விஷயங்கள் :
1952 மே மாதம் 1ஆம் தேதி தனது திருமணத்தை முடித்து கமலா அம்மாளுடன் சங்கலியாண்டபுரம் வீட்டில் சிறிது நாள் வாழ்ந்து ,நடிப்புத் தொழிலுக்காக மதராஸ் வந்தார். சிவாஜி அவர்கள் மனைவியுடன் கோடம்பாக்கம் யுனைடெட் குடியிருப்பு பகுதியில் வாடகை வீட்டில் குடியேறினார் முதன்முதலாக.
பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்த உடன் ராயப்பேட்டையில் சிவாஜி பிலிம்ஸ் அலுவலகம் இருக்கும் வீட்டில் குடியேறினார். சிவாஜி கணேசன் மூத்தமகள் சாந்தி இந்த வீட்டில் தான் பிறந்தார் .
அடுத்து இரண்டு வருடங்களில் பெசன்ட் சாலையின் பின்புறம் இருக்கும் சண்முகம் முதலி தெருவில் குடியேறினார். சிவாஜி அவர்கள் அந்த வீட்டை கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் அவர்களிடம் இருந்து வாங்கினார்.
அதற்குப் பின்பு சென்னை மாநகரத்தில் ஏன் தமிழ்நாட்டில் அன்னை இல்லம் என்னும் பெயருடைய நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குடும்பத்தார் குடியிருக்கும் வீடு என்றால் அறியாதவர்களே கிடையாது .
தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்திய பட உலகில் பிரபலமான நடிகர்கள் அனைவரும் வந்து சிறப்பு செய்த இல்லம் அன்னை இல்லம் ஆகும்.
மேல்படிப்புக்காக இங்கிலாந்து சென்ற சிவாஜியின் தம்பி
VC. சண்முகம் 1959 ஆம் ஆண்டு லண்டனில் இருந்து திரும்பினார்.
அந்த சமயம் சிலர் போக் சாலையில் மாளிகை போலே ஒரு வீடு ஒன்று இருப்பதை கூறினார்கள். சண்முகம் சென்று பார்த்தார். அவருக்கு பிடித்துப் போனது.
ஒன்றரை ஏக்கர் 24 கிரவுண்ட் பரப்பளவு நிலத்தில் அந்த வீட்டை சுமார் 2 லட்ச ரூபாய்க்கு விலை பேசி முடித்தார் சண்முகம்.
சென்னை மாநகரத்தில் வரலாற்று சிறப்புமிக்க வீடுகள் என்ற பட்டியலில் எண் 37 அன்னை இல்லமும் ஒன்று . தன்னுடைய அண்ணன் சிவாஜி கணேசன் பெருமையுடன் வாழ்வதற்காக
அந்த வீட்டை வாங்கினார் சண்முகம்.
அரண்மனை போன்ற அந்த வீட்டில் சில மாற்றங்களையும் மராமத்து வேலைகளையும் செய்யும் பணிகளை துவக்கினார் சண்முகம் .அந்த வீட்டில் செய்ய வேண்டிய சீரமைப்பு பணிகளை ஒரு வருட காலமாக மேற்பார்வையிட்டார் சண்முகம்.குடும்பத்துடன் வாழ குடியேற வேண்டிய நல்ல நாளை தேர்ந்தெடுத்தார்.
1960 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் நாள் சிவாஜி அவர்கள் தன்னை பெற்ற பெற்றோர்கள், மனைவி கமலா, தன் பிள்ளைகள் சாந்தி ராம்குமார், பிரபு, இரண்டு வயது நிரம்பிய தேன்மொழி இவர்களோடு அன்னை இல்ல மாளிகையில் குடியேறினார்.
சிவாஜியின் அண்ணன் தங்கவேலு மனைவி பட்டம்மாள் மகன் மனோகர் மற்றும் மகள் கனிமொழியுடன் அன்னை இல்லத்தில் குடியேறினார்.
சிவாஜியின் நிழலான தம்பி சண்முகம் மனைவி சகுந்தலா கைக்குழந்தை முரளிதரனோடு அன்னை இல்லத்தில் குடியேறினார் .
அதுபோல சிவாஜியின் உடன்பிறவா சகோதரரும் சங்கிலியாண்டபுரத்தில் தாய் ராஜாமணி அம்மாளுக்கு கஷ்ட காலத்தில் பெரிய உதவி செய்த பெரியண்ணா, அவருடைய மனைவி மாரியம்மாள் மகள் மற்றும் கைக்குழந்தை பரணிதரனோடு குடியேறினார்கள்.
சிவாஜி அவர்கள் அரண்மனை போன்ற ஒரு மாளிகையை வாங்கி அதில் தன்னுடைய பெற்றோர் ,உடன்பிறந்தவர்கள் உறவினர் என அனைவரையும் அவரவர் குடும்பத்தோடு தன்னோடு சேர்ந்து வாழ்ந்து கொள்ள அந்த மாளிகை போல பெரிய மனதுடன் அவர்களுக்கு இடம் அளித்தார்.
அன்னை இல்லத்தின் அமைப்பு :
இந்த அன்னை இல்லத்தில் தரைத்தளத்தில் ஆறு அறைகளும் ,முதல் தளத்தில் ஏழு அறைகளையும் உள்ளடக்கிய பெரிய மாளிகையாகும். அன்னைஇல்லத்தின் முன்புறம் மிகப்பெரிய போர்டிகோ, முன்புறம் பெரிய புல் தரை இருக்கும்.இந்த இடம் விருந்துகள் நடத்துவதற்கு ஏற்றவாறு அமைந்துள்ளது .
மிக நீளமான வராந்தா, அதில் அதிகமாக தந்தங்களுடைய யானை உருவங்கள் அலங்காரப் பொருட்களாக உள்ளன. சிவாஜி அவர்களின் இயற்பெயர் கணேச மூர்த்தி என்பதாலும் அவருக்கு மிகவும் பிடித்த விலங்காக யானை விளங்கியதாலும் சிவாஜி கணேசனின் தாயார் கூறிய யோசனைப்படி இவை வைக்கப்பட்டன.
அதைத் தாண்டிய பின்பு நீளமான நடைபாதை ,அதில் இரு பக்கமும் விருந்தினர்கள் அமர நாற்காலிகள் போடப்பட்டுள்ளன. அதன் தென்கிழக்கு மூலையில் சிவாஜி கணேசன் வேட்டையாடிய ஒரு புலியின் உடல் பதப்படுத்தி வைக்கப்பட்டு இருக்கும் .
இந்த அறைக்கு பெயர் புலி அறை ( TIGER HALL )என்பதாகும் .
நடைபாதை தாண்டிய பின்பு பெரிய வரவேற்பறை இருக்கும்.அங்கு பெரிய மனிதர்கள் அமரத்தக்க வகையில் மெத்தையுடன் கூடிய பெரிய பெரிய சோபாக்கள் போடப்பட்டுள்ளன நடு நாயகமாக மிகப்பெரிய யானை தந்தங்களை வைத்து அலங்கரிக்கப்பட்ட சிவாஜி அவர்களின் படம் உள்ளது. அந்த வரவேற்பறை அருகில் சிவாஜிகணேசன் தான் வேட்டையாடிய புலிகளோடு இருக்கும் படங்கள், தம்பி சண்முகத்தின் படம் ,அரபு ஷேக் வேடத்தில் இருக்கும் நடிகர் திலகத்தின் படம், இளைய திலகம் பிரபு தன் தந்தையோடும் நடிகர் திலகம் மனைவி கமலாவோடும் இருக்கும் படங்களும் மாற்றப்பட்டு இருக்கும் .
வரவேற்பறையில் வலது பக்க தென்மேற்கு மூலையில் சிவாஜி அவர்களின் தாயார் ராஜாமணி அம்மாளின் அறை உள்ளது. அங்கு நடிகர் திலகத்தின் மார்பளவுச் சிலை , காசியில் நீராடும் படங்கள் வைக்கப்பட்டுள்ளன. அந்த அறையில் ராஜாமணி அம்மாவின் மிகப்பெரிய புகைப்படம் ,மூத்த மகன் திரு ஞான சம்பந்த மூர்த்தியின் படம் ,திரு சண்முகத்தின் படம் மற்றும் திருமதி கமலா அம்மாவின் படங்கள் வைக்கப்பட்டு இருக்கின்றன.
தென்வடக்கு மேல்புறத்தில்
திரு சண்முகம் தனது மனைவி சகுந்தலாவுடன் இருக்கும் படம் உள்ளது .மற்றொரு பக்கத்தில் நடிகர் திலகம் திருமதி விஜயலட்சுமி பண்டிட் அவர்களுடன் இருக்கும் படமும் உள்ளது .
பம்பாய் தொலைக்காட்சிக்காக வீரசிவாஜியாக நடிகர் திலகம் நடித்த போது படப்பிடிப்பு தளத்தில் மனைவி கமலா அம்மாவுடன் எடுத்த படம் இடம்பெற்றுள்ளது. அறையின் வடக்கு திசை மேல் புறத்தில் நடிகர் திலகத்தின் தாய் தந்தை படம் உள்ளது.
அந்த அறையின் தென்கிழக்கு மேல்பக்கத்தில் ராஜாமணி அம்மாள் ,திருமதி மாரியம்மாள், திருமதி கமலா, திருமதி பட்டம்மாள் ,திருமதி சகுந்தலா இவர்களோடு எடுத்த படங்களும் இடம் பெற்றுள்ளன.
அந்தப் பெரிய வரவேற்பறையின் தென்மேற்கு மூலையில் சிவாஜிகணேசனின் மூத்த மகனான ராம்குமாரின் அறை உள்ளது. வடமேற்கு மூலையில் சிவாஜி அவர்களின் தம்பி மனைவி திருமதி சகுந்தலாவின் அறை உள்ளது .இந்த இரு அறைகளுக்கும் புலி அறையிலிருந்து (Tiger Hall )செல்லத்தக்க வழியில் வழிகள் உள்ளன. தற்போது உபயோகத்தில் இல்லை.
அதற்கு அடுத்து பர்மா தேக்கு மரத்தால் செய்யப்பட்ட மிகப்பெரிய மாடிப்படி ஒன்று சிவாஜி அறைக்கு செல்லும் வகையில் அமைக்கப்பட்டு இருந்தது. தான் நடித்துக் கொண்டிருக்கும் பாத்திரத்திற்கு ஏற்றாற் போல அந்த மாடிப்படிகளில் ஏறி இறங்கி செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தாராம் சிவாஜி கணேசன். அவர் இறந்து சில மாதங்களில் துரதிருஷ்டவசமாக தேக்கினால் ஆன அந்த மாடிப்படிகள் மட்டும் மின்சார கசிவால் எரிந்து போயின .அதன் மதிப்பு ரூபாய் 50 லட்சம்.
வரவேற்பறையின் தென்பகுதியில் பெரிய பூஜையறை உள்ளது .அதற்கு நேர் எதிர்ப்புறத்தில் விருந்தினர்கள் உணவருந்தும் மிகப்பெரிய குளிரூட்டப்பட்ட அறை ஒன்று உள்ளது. அதில் 20 நபர்கள் அமர்ந்து உணவருந்தும் வகையில் தேக்கு மரத்தாலும் யானை தந்தத்தாலும் ஆன மிகப்பெரிய மேஜையும் அதற்குரிய நாற்காலிகளும் உள்ளன.
பெரிய வரவேற்பறையை தாண்டியவுடன் ஒரு சிறிய நடைபாதை .அதில் சிவாஜியின் தங்கை திருமதி பத்மாவதியின் அறை இருந்தது. தற்போது அந்த அறை உபயோகப்படுத்தப்படாமல் உள்ளது. அதை தாண்டி சென்றால் வலது பக்கத்தில் 20 நபர்கள் அமர்ந்து உணவருந்தும் அறையும், அடுப்பங்கரை மற்றும் பெண்கள் உணவருந்த ஓர் இடமும் உள்ளன. பெண்கள் சாப்பிடும் இடத்துக்கு வலது பக்கம் கிழக்கு மேற்காக உணவு சமைக்கும் பெரிய கூடம் ஒன்று உள்ளது.
உணவருந்தும் இடத்துக்கு நேர் எதிர்ப்புறம் ராம்குமாரின் மூத்த மகனும் நடிகருமான திரு துஷ்யந்த் தன்னுடைய குடும்பத்துடன் உள்ளார் .
அதற்கு அடுத்த அறையில் இளையதிலகம் பிரபுவின் அலுவலக அறை உள்ளது .மாடியில் நடிகர்திலகத்தின் அறையில் தற்போது இளைய திலகம் பிரபுவும் ,அதற்கு அடுத்த அறையில் நடிகர் விக்ரம் பிரபுவும் தங்களுடைய குடும்பத்துடன் உள்ளார்கள். அதற்கு அடுத்த அறைகளில் ராம்குமாரின் இளைய மகன்கள் தங்கி உள்ளார்கள்.
ஆரம்பத்தில் கீழே வெளியே ஓர் நீச்சல் குளம் குழந்தைகள் நீந்தி மகிழ கட்டப்பட்டு இருந்தது .பின்னாட்களில் அது மூடப்பட்டது. அதற்கு பின்னால் பெரிய பலா மற்றும் மாமரங்கள் கிளைகளை பரப்பி நிழல் தரும் காட்சியை காணலாம் .
அங்கு காவல் நாய்கள் பெரிய வலை பின்னப்பட்ட பகுதியில் இருக்கின்றன.
அதற்கு எதிர்ப்புறம் வலது பக்கத்தில் பணியாட்கள் குடியிருக்கும் வீடுகள் உள்ளன .மாளிகையில் இடது புறமும் வலது புறமும் அகலமான பாதை அமைக்கப்பட்டுள்ளன. இடது பக்கத்தில் ஒரு சின்ன திரையரங்கம் இருந்தது.குடும்பத்தார் திரைப்படங்களை போட்டு பார்த்துக் கொள்ள வசதியாக அமைக்கப்பட்டது. அது பின் நாட்களில் எடுக்கப்பட்டு விட்டது.
சிவாஜி அவர்களுக்கு தான் கல்வி கற்காதவன் என்ற மனக்குறை இருந்ததால் மாளிகையில் உச்சியில் ஒரு சிறுவன் புத்தகம் வாசிப்பது போல ஒரு சிலை அமைக்கப்பட்டு இருக்கும் .இதே போன்ற சிலை அவருடைய தஞ்சை சூரக்கோட்டை தோட்டத்தின் வாசலிலும் வைக்கப்பட்டுள்ளது.
சிவாஜி அவர்களின் அன்னை இல்ல வீட்டில் முதலில் குடியிருந்தவர் சர் சார்ஜ் டவுன்ஷெட் போக் .அவருடைய பெயரில் தான் போக் சாலை என பெயர் இருந்தது.
இவர் மெட்ராஸ் நகராட்சி ஆணையராகவும், மெட்ராஸ் மாகாண தலைமைச் செயலாளராகவும் ,ஒரிசா மாநிலத்தின் ஆளுநராகவும் பணியாற்றியவர்.
அவருக்குப் பின்பு சர் குமார வெங்கட் ரெட்டி என்பவர் குடியிருந்தார். இவர் மாநில மேல்
சபை உறுப்பினராகவும், மெட்ராஸ் மாகாணத்தின் கவர்னராகவும் ,அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றியவர் .
அதன் பின்பு அந்த வீடு கும்பகோணம் உலகம் மார்க் பட்டணம் பொடி நிறுவனத்தின் முதலாளிக்கு உரிமையானது .அவரிடம் இருந்து தான் சிவாஜியின் தம்பி இந்த வீட்டை வாங்கினார் .அதை சீரமைத்து அன்னை இல்லம் என பெயர் வைத்து சிவாஜி அவர்களின் குடும்பம் குடியேறியது .
கருத்துகள்
கருத்துரையிடுக