1960 ஆம் வருசம் வெளியான சிவாஜி படம் விடிவெள்ளி.
இந்த படத்தை ரிலீஸ் பண்ணுன தேதி ஒரு ஆச்சர்யமான விஷயம்.ஏன்னா இந்த படம் வெளிவந்தது வருசத்தோட கடைசி நாள். அதாவது வெளியான தேதி 31.12.1960.வருச கடைசி நாள்லே பெரும்பாலும் எந்த படத்தையும ரிலீஸ் பண்ண மாட்டாங்க. அந்த ரிலீஸ் தேதியிலயும் ஒரு புதுமை படைச்ச படம் தான் விடிவெள்ளி.
ஸ்ரீதர் டைரக்சன் செஞ்ச முதல் சிவாஜி படம் இது. இந்த படத்தோட சூட்டிங் சென்னைலே நடந்திருந்தாலும் படத்தோட ரெண்டு பாடல்களுக்கான வெளிப்புற காட்சிகள் எல்லாம் பொள்ளாச்சிலே எடுத்திருப்பாங்க. பொள்ளாச்சிலே ஷுட்டிங் எடுக்க என்ன காரணம் .அது பத்தின விபரங்களை இந்த பதிவுலே பாக்கலாம்.
1960 கால கட்டத்துலே எல்லாம் சிவாஜி ரொம்ப பிசியா இருந்த காலம். வெளியூர் சூட்டிங் எல்லாம் ரொம்ப கஷ்டம்.ஏன்னா ஒரு நாள்லேயே ரெண்டு மூணு பட சூட்டிங்லே நடிக்க வேண்டிய நிலையிலே சிவாஜி இருந்தாரு.அவுட்டோர் போனா பல படங்கள் சூட்டிங் பாதிப்பு ஆகும்.இந்த ஒரு காரணதுக்காகத்தானே மலைக்கள்ளன் படத்துலே கூட சிவாஜி நடிக்கலே.
இப்படி சிவாஜி பிசியா இருந்த கால கட்டத்துலே விடிவெள்ளி படத்துக்கு மட்டும் எப்படி பொள்ளாச்சி வந்து நடிச்சார்?
இப்ப சில விஷயங்களை சொல்லணும். பொள்ளாச்சிக்கும் சிவாஜிக்கும் நெருங்குன பந்தம் இருக்கு. ஆனா இந்த பந்தம் எல்லாம் ஆரம்பத்துலே இல்லே. சொல்லப்போனா சிவாஜிக்கும் பொள்ளாச்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லே. சிவாஜியோட பூர்வீகமோ வளர்ந்த ஊரோ கிடையாது.
இப்படி பொள்ளாச்சியோட இருந்த உறவு எப்படி பின்னாலே நெருங்குன உறவா மாறுச்சு?
இதுக்கு ஒரு முக்கியமான பதில் வேட்டைலே இருந்த ஆர்வம் தான் . அந்த கால கட்டத்துலே ஒரு சந்தர்ப்பத்துலே வேட்டைக்காரன் புதூர் முத்து மாணிக்கத்தோட தொடர்பு கிடைச்சது சிவாஜிக்கு. அவரோட நெருங்கி பழக காரணம் அவர் ஒரு வேட்டைக்காரர் என்பதாலே. அந்த வேட்டை சுற்றுலாதான் ரெண்டு பேரையும் நெருக்கம் ஆக்குச்சு.அந்த நெருக்கம் முத்து மாணிக்கத்தை பட தொழில்லே இறங்க ஆர்வத்தை கொடுத்துச்சு.
அப்படி முத்து மாணிக்கம் சிவாஜியோட சேந்து பிரபுராம் பிக்சர்ஸ் பேனரை உருவாக்கி தயாரிச்ச படம் தான் விடிவெள்ளி.சிவாஜி மகன்கள் ராம்குமார் பிரபு ரெண்டு பேரோட பேரை வெச்சு உருவானது.
படத்தோட ஒரு இணை தயாரிப்பாளரா முத்து மாணிக்கம் இருந்ததும்,சிவாஜியும் அந்த கால கட்டத்துலே வேட்டை மேலே இருந்த ஆர்வமும் விடிவெள்ளி படத்தோட வெளிப்புற காட்சிகளை பொள்ளாச்சிலே எடுத்துடலாம்னு பிளான் பண்ணி பொள்ளாச்சிலே எடுத்தாங்க.சூட்டிங் இல்லாத நேரத்துலே ,ஓய்வா இருக்கற நேரத்துலே வேட்டைக்கு போகலாம்னு சிவாஜிக்கு இருந்த ஆர்வமும் ஒரு காரணம்.
விடிவெள்ளி படத்தோட ஆரம்ப காட்சிகள் சென்னைலே சில இடங்கள்லே நடத்தப்பட்டது.அதுலே ஒரு இட நல்லி சில்க்ஸ் துணிக்கடையும் ஒண்ணு. சிவாஜிக்கு சரோஜாதேவி டிரெஸ் எடுத்து கொடுக்கற காட்சிகள் எல்லா சென்னை நல்லி சில்க்ஸ்லே தான் எடுத்தாங்க.
நல்லி சில்க்ஸ்க்கும் சிவாஜிக்கும் கூட ஒரு நெருங்குன பந்தம் இருக்கு. பராசக்தி படம் ரிலிசான முதல்நாள் திரைப்படத்துக்கு வரவேற்பு எப்படி இருக்குன்னு தெரிஞ்சுக்க சிவாஜி முதல் நாள் காட்சி பாத்துட்டு இருக்கறார். ஒரு பையன் இடைவேளை நேரத்துலே சிவாஜியை பாத்து அடையாளம் தெரிஞ்சிகிட்டு சிவாஜிக்கு கை கொடுத்து பாராட்டறார் .சினிமாவுக்காக தியேட்டர்லேயே சிவாஜி வாங்குன முதல் பாராட்டு அதுதான். அந்த சின்ன பையன் தான் நல்லி குப்புச்சாமி. பின்னாட்கள்லே சிவாஜி குடும்பத்துக்கு சேலை துணிகள் சப்ளை பண்ணியது நல்லி சில்க்ஸ்தான்.நல்லி குப்புசாமி செட்டியை ஒரு தடவை சிவாஜி சந்திச்சப்போ , நான் வாங்கற சம்பளத்துலே பாதி உங்க கடைக்கே போயிடுதுன்னு தமாசா சொன்னார்.
விடிவெள்ளி படத்தின் மேலும் சில காட்சிகள் சென்னை
மவுண்ட் ரோட்டில் உள்ள உடுப்பி ஹோட்டல்லேயும் படமாக்குனாங்க.சிவாஜி TR.ராமசந்திரன் காமெடி காட்சிகளை இந்த ஹோட்டல்லே எடுத்தாங்க.
TR ராமச்சந்திரன் பத்மினி ப்ரியதர்னி காரில் போவது போல காட்சி பீச் ரோட்டில் உள்ள ஹோட்டல் ஓஷியானிக் அருகில் படம் பிடிக்கப்பட்டன.
இப்படி..
விடிவெள்ளி பட சூட்டிங் சென்னைலே சில இடத்திலயூம் ஸ்டுடியோவிலயும் பல காட்சிகளை எடுத்தாங்க.
இந்த காட்சிகளை ஒளிப்பதிவு செய்தவர் வின்சென்ட்.
படத்தோட பாடல்களுக்கான வெளிப்புற படப்பிடிப்பை எங்க வெச்சுக்கலானு முடிவு செயய்யறப்போதான் முடிவா பொள்ளாச்சி கிராம பகுதிகள்லே பண்ணலாம்னு முடிவு செஞ்சாங்க. படத்தோட வெளிப்புற படப்பிடிப்பு பொள்ளாச்சி வேட்டைக்காரன் புதூர் சேத்துமடை பகுதிகள்லே நடத்துனாங்க.
விடிவெள்ளி படத்தை வேட்டைக்காரன் புதூர் முத்து மாணிக்கம் , சிவாஜியின் தம்பி சண்முகம் அண்ணன் தங்கவேல் ஆகிய மூவரும் சேர்ந்து தயாரிச்ச படம்.
இந்த படத்தை அந்தந்த இடங்கள்லே பெர்பெக்டா எடுத்துக் காட்டணும்னு ஸ்ரீதர் முத்துமாணிக்கம் சண்முகம் பிளான் பண்ணுனாங்க.அதுக்கான காரணம் இதுதான்:
ஆங்கில படம் உருவாக்கப் படறப்போ ,உதாரணமா ரோமாபுரியை வெச்சு ஒரு கதையை எடுக்கறாங்கன்னா ,அதே மாதிரி செட்டிங்ஸ்ஸை ஹாலிவுட்லேயே போட்டு அசலா எடுக்க கூடிய தொழில் நுட்ப வசதி இருந்தாலும் ,இயற்கையா இருக்கணும்
அப்படிங்கறதுக்காக ரோமாபுரிக்கே போய் சம்பந்தப்பட்ட இடங்கள்லே காட்சிகளை
படம் பிடிக்கறது உண்டு. செட் போட்டுஎடுக்க பத்து லட்சம் செலவாகும்னா அவுட்டோர் போனா கூடுதலா கூட அகலாம். ஆனாலும் அந்த நேச்சுராலிட்டி வரணும்ங்கறதுக்காக சில டைரக்கடர்கள் இப்படி எடுக்கறது உண்டு.
இப்படிப்பட்டஅனுபவத்தை நம்ம தமிழ் சினிமா ரசிகர்களும் அனுபவிக்கணும்னு பட யூனிட் முடிவு செஞ்சு களமிறங்கி வேலை செஞ்ச படம் தான் விடிவெள்ளி.
பொள்ளாச்சி பகுதிக்கு சிவாஜி சரோஜாதேவி TR.ராமசந்திரன் பத்மினி ப்ரியதர்ஷிணி டைரக்டர் ஸ்ரீதர் ஒளிப்பதிவாவர் வின்சென்ட் சிவாஜி தம்பி சண்முகம் உள்பட பட யூனிட்டே வந்து இறங்குச்சு.
லொக்கேசன் பார்க்க மாட்டுவண்டிலே எல்லாம் சவாரி செஞ்சு சூட்டிங்குக்காக இடம் செலக்சன் பண்ணினார் ஸ்ரீதர்.
படத்துலே ரொம்ப ஸ்பீடா பர பரப்பா போற ஒரு பாட்டு கொடுத்துப்பார் பார் உண்மை அன்பு பாட்டு.இந்த பாட்டை வேட்டைக்காரன் புதூர் காளியாபுரம் சேத்துமடை பகுதிகள்லே எடுத்தாங்க.
இன்னொரு பாட்டான இடை கையிரண்டில் பாட்டையும் ஆனைமலை ஆறு,சேத்துமடை வனப் பகுதிகள்லே எடுத்தாங்க.
கிரேன் ஷாட் ,டிராலி ஷாட்கள்லே ஒளிப்பதிவாளர் வின்சென்ட் பிளாக் அண்ட் ஒயிட் பிலிம்லேயே அழகா படம் பிடிச்சார்.வித்தியாச வித்தியாசமான கோணங்கள்லே காட்சிகளை படம் பிடிச்சு தள்ளினார் ஸ்ரீதர். ரெண்டு தென்னை மரத்துக்கு இடையிலே பரண் மாதிரி கட்டி
அந்த பரண்லே காமிராவை வெச்சும் காட்சிகளை எடுத்தாங்க.
மக்களோட ரசனைக்கும் நல்ல தீனி போட்ட பாட்டுகளா அமைஞ்சது.
விடிவெள்ளி 100 நாள் ஓடி வெற்றிப்படமா அமைஞ்சது.
செந்தில்வேல் சிவராஜ் ...
கருத்துகள்
கருத்துரையிடுக