திரைக்கு வராத சிவாஜி பாடல்கள்

படம்
காலத்தை வென்றும் திரைக்கு வராத  சிவாஜியின் ரகசியப் பாடல்கள்! ​"நடிகர் திலகம் திரைப்படங்களில் இருந்து, நம் காதுகளை வருடிச் சென்றும் திரைக்கு வர மறுத்த முத்துக்கள் சில உள்ளன என்றால் நம்புவீர்களா?" ​ 'போனால் போகட்டும் போடா' முதல் 'வசந்த மாளிகை' வரை... அவர் பாடி நடித்த ஒவ்வொரு பாடலும் இன்றும் நம் நெஞ்சங்களில் ஒலித்துக்கொண்டிருக்கிறது." ​"ஆனால், உங்களுக்குத் தெரியுமா? அவரது திரைப்படங்களுக்காக மிகச் சிறந்த இசையமைப்பாளர்களான விஸ்வநாதன்-ராமமூர்த்தி, கே.வி. மகாதேவன், இளையராஜா போன்ற ஜாம்பவான்கள் பதிவு செய்த சில பாடல்கள்... அவை ரசிகர்களின் நாடித்துடிப்பை அறிந்தும்... வானொலியில் சூப்பர் ஹிட்டாக ஒலித்தும்... திரையில் இடம்பெறவே இல்லை!" ​"ஒரு பிரம்மாண்டப் படத்தின் நீளம், கதைக்களத்தின் உணர்வுபூர்வமான தேவை, எதிர்பாராத பட்ஜெட் சிக்கல்கள் அல்லது ஒரு பாட்டுக்குப் பதிலாக அதைவிடச் சிறப்பான ஒரு பாட்டைக் கொண்டு வர வேண்டும் என்ற இயக்குநரின் தொலைநோக்குப் பார்வை... இப்படிப் பல காரணங்களால், இந்த அரிய பாடல்கள் திரைப்படங்களின் இறுதிக் காட்சியில் கத்தரிக்கப்பட்டன." ...

.சிவாஜி நடிப்பின் நுணுக்கங்கள்

தமிழ் சினிமாவுல நடிப்புக்குன்னே ஒரு யூனிவர்சிட்டி இருந்தா, அது  சிவாஜி கணேசன் தான்! அவர் ஒரு கேரக்டரா வாழ்ந்துட்டுப் போனது இருக்கே... அது உலகத்துல எந்த ஆக்டரும் பண்ணாத ஒரு விஷயம்.
​அவர், தனக்குப் பிடிச்ச ஸ்டைலை மட்டும் வெச்சுக்காம, ஒவ்வொரு கதை மாந்தரோட குணம், உணர்வு எல்லாத்துக்கும் ஏத்த மாதிரி, தன்னோட உடம்பு மொழி , குரல்ல, நடை, பாவனைன்னு எல்லாத்தையும் ரொம்ப நுணுக்கமா மாத்தி நடிச்சார்.
​அவர் நடிப்புக்கு சாட்சி எதுன்னு கேட்டா... அவர் தன்னோட கை, கால், வாய் அசைவு, டான்ஸ், நடை, சிரிப்பு, மேக்கப்னு எல்லாத்துலயும் காட்டின அக்கறையும், உழைப்பும்தான்! முக்கியமா , உலக அளவுல வேற எந்த நடிகரும், தன்னோட கை, கால்கள்ல இவ்வளவு துல்லியமான வித்தியாசங்களைக் காட்டினதே இல்லை!

​சிவாஜி , ஒரு கேரக்டரோட ஸ்டேட்டஸ், மனநிலை, சிச்சுவேஷன் இதைப் பொறுத்து, தன்னோட உடல் மொழியை எப்படிப் பயன்படுத்தினார்னு விரிவா பார்க்கலாம் வாங்க!
பகுதி 1: கை கால்கள்ல அவர் கொடுத்த நடிப்பு மேஜிக்! 
இதுலே  கைகளைக் கொண்டு அவர் கொடுத்த நடிப்பை முதல்லே பாக்கலாம்.
​ஒரு கேரக்டர் பெரிய அந்தஸ்துல இருக்கா, இல்லையான்னு அவர் கைகளைப் பயன்படுத்துறதைப் பார்த்தாலே தெரிஞ்சுரும்!
​பெரிய இடத்து கேரக்டர்கள்:
​சமுதாயத்துல பெரிய அந்தஸ்துல இருக்குற கேரக்டர்னா, ரெண்டு கைகளையும் அதிகம் யூஸ் பண்ணாம சும்மா வெச்சுட்டு நடிப்பாரு.
​எக்ஸாம்பிளுக்கு, 'வசந்த மாளிகை' படத்துல ஜமீன்தாரா வருவாரு. 'கலைமகள் கைப் பொருளே' பாட்டுல, வாணிஸ்ரீக்கு பக்கத்துல நிக்கிறப்போ, வலது கையோ இடது கையோ ஸ்டைலா வெச்சுக்காம, ரெண்டு கைகளையும் சாதாரணமாகக் கட்டிட்டு நிப்பாரு. அதுவே ஒரு பெரிய கம்பீரமா இருக்கும்.

​மரியாதை மற்றும் எச்சரிக்கை பாவனை:
​மத்தவங்க மரியாதை குடுக்குறதை ஏத்துக்கிற மாதிரி நடிக்கும் போது, வலது கையால நெஞ்சுக்குள்ள (இதயம் இருக்கிற இடத்துல) வெச்சுட்டு, தலையைச் சாய்ச்சு வணக்கம் சொல்லுவாரு.

​யாருக்காவது எச்சரிக்கை விடுற சீன்ல, வலது கையால வயிறு சேர்ற இடத்துல வெச்சுட்டுப் பேசுவாரு.

​நெகட்டிவ் கேரக்டர்ஸ்ன்னா (இடது கைதான் ஹீரோ!):
​பெரும்பாலும், ஒரு கேரக்டர்ல ஏதாவது தப்பு செஞ்சிருந்தா, இல்லன்னா நெகட்டிவ் கேரக்டர்னா இடது கையைத்தான் அதிகமா யூஸ் பண்ணி நடிப்பாரு!
​'ஞானஒளி' படத்துல ஆண்டனி கேரக்டர் ஒரு கொலைப் பழிக்கு ஆளான பாத்திரம். இந்தப் படத்துல ஆரம்பத்துல இருந்தே இடது கைதான் பிரதானம். கொலை செய்றது, கடைசியில போலீஸ் அதிகாரியைச் சிலுவையால அடிக்கக் கையைத் தூக்குறது எல்லாமே இடது கைதான். ஒரு காட்சிலே கூட  வலது கையைப் மாத்தி யூஸ் பண்ணியிருக்க மாட்டார்.
'விடிவெள்ளி' படத்துல நல்லவரா இருந்தாலும், தங்கச்சிக்காகத் திருடுனதுனால, தப்பு செஞ்ச கேரக்டர்ங்கறதால இடது கையைத்தான் அதிகமா யூஸ் பண்ணி நடிச்சிருப்பார்.

​'உத்தமபுத்திரன்' படத்துல விக்ரமன் கேரக்டர்ல, 'யாரடி நீ மோகினி' பாட்டுல டான்ஸ் பண்றப்போ, ஹெலனோட கைதட்டி ஆடுறப்போ கூட இடது கையால வலது கையில தட்டி ஆடுவாரு.

​2. இப்போ கால்களை அவர் யூஸ் பண்ணின முறையை பாக்கலாம்..
​ராஜா, வீரன் மாதிரி கம்பீரமான பாத்திரங்கள்ல நடிக்கும் போது, வீரத்துக்கு அடையாளமா இடது காலை முன்னாடி வெச்சு உட்காருறது, எழுந்திருக்குறது, நடக்க ஆரம்பிக்கிறதுனு எல்லாமே செய்வார்.
​'வீரபாண்டிய கட்டபொம்மன்', 'கர்ணன்', 'ராஜராஜ சோழன்' படங்கள்லாம் இதற்கு பெஸ்ட் எக்ஸாம்பிள்.

​டாக்டர், கவிஞர், பெரிய பணக்காரர் மாதிரி அறிவு சார்ந்த, உயர்ந்த பாத்திரங்கள்ல வலது காலை முன்னாடி வெச்சு உட்காருறது, எழுந்திருக்குறது, நடக்க ஆரம்பிக்கிறதுனு நடிச்சிருக்காரு.
​'மகாகவி காளிதாஸ்', 'சரஸ்வதி சபதம்', 'உயர்ந்த மனிதன்'னு பட்டியல் நீளும்! ஹாலிவுட்நடிகர்கள் கூட  இதெல்லாம் பண்ணலை..

​பிராமண கேரக்டர்கள்ல நடிக்கும் போது, ரெண்டு கால்களையும் சமமா வெச்சு, ஊர்ந்து போற மாதிரி நடப்பாரு.
​'வியட்நாம் வீடு', 'பரீட்சைக்கு நேரமாச்சு' 'ஆனந்தக் கண்ணீர்' 'படங்கள்ல இதைப் பார்க்கலாம்.
பகுதி 2: பாட்டு, இசை, டான்ஸ்ல அவரோட பெர்பார்மென்ஸ்!
​3. பாட்டுக்கு வாய் அசைச்ச விதம்:
​சிவாஜி பாட்டுக்கு வாய் அசைக்கிறது இருக்கே... அது அவர் பாடுற மாதிரியே நமக்கு ஃபீல் ஆகும். ஏன்னா, அவர் நாடக கம்பெனிகள்ல இருக்கும் போதே, பாட்டு பாடுற கலையை கத்துத் தேர்ந்து வெச்சிருந்தார்.

​சுருதி விலகாத நடிப்பு: பின்னணிக் குரல் பாடுறவங்களோட பாட்டுகளை, அவர் அதே சுருதியில வாய்விட்டுப் பாடிட்டே நடிச்சார். அதனாலதான், அவர் பாடுற மாதிரியே மக்களுக்குத் தோணுச்சு.

​டி.எம்.எஸ் : சிவாஜிக்காகப் பாடினதுல டி.எம். சௌந்தரராஜன்  குரல் அவருக்கு செம ஃபிட்டாயிடுச்சு. டி.எம்.எஸ்ஸும், சிவாஜி மாதிரி தமிழ் வார்த்தைகளைச் சரியா உச்சரிக்கிறதுல திறமைசாலி! 
லண்டன்லே உலக பாடகர்களோட குரலை ஆய்வு செஞ்சாங்க.
அப்படி  ஒரு ரிசர்ச் பண்ணப்போ, டி.எம்.எஸ் குரல் ஒரு ஆணுக்கே உரிய கம்பீரமான குரல்னு முடிவு பண்ணாங்களாம். இந்த கௌரவம் சிவாஜிக்காகப் பாடினதுனாலதான் அவருக்குக் கிடைச்சதுன்னு சொல்லலாம்.
எப்படின்னா ஆரம்பத்துலே TMS பாகவதர் மாதிரி தான் பாடுனாரு. அந்த குரல்லே பெண்மைத்தனம் இருந்தது. சிவாஜிக்காக அடி வயித்துலே இருந்து பாடி பாடி அது கம்பீர சிம்ம குரலா மாறிடுச்சு.

​'வணங்காமுடி' படத்துல, நம்பியார் தங்கவேலுவை  பாடச் சொல்லி அறையிறப்போ, அவரோட  அந்தச் செயலைக் கண்டிக்கிற மாதிரி ஃபேஸ் எக்ஸ்பிரஷன் கொடுத்து, 'ஓங்காரமாய் விளங்கும் நாதம்' பாட்டுக்கு அற்புதமா வாய் அசைப்பார். நீங்க அந்த வீடியோவை மியூட் பண்ணிட்டுப் பார்த்தீங்கன்னா, நம்பியாரைத் திட்டுற மாதிரியே இருக்கும்! இது ஒரு அபூர்வமான விஷயம்.

​'கௌரவம்' படத்துல, 'நீயும் நானுமா' பாட்டைப் பல தடவை கேட்டுட்டுதான் நடிச்சாராம். "சௌந்தர்ராஜன்  ஒவ்வொரு வரிக்கும் வேற வேற தொனியில பாடியிருக்கார். அதுக்குக் குறையாம நான் நடிக்கணும்"னு சொல்லிட்டு நடிச்சாராம்!

​பாடகருக்கேத்த மாதிரி:
​'சுமதி என் சுந்தரி' படத்துல எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடுறப்போ, "தம்பி பாலு, நீ உங்க ஸ்டைல்ல நிதானமாப் பாடு. நான் அதுக்கு ஏத்த மாதிரி நடிக்கிறேன்"னு சொல்லிட்டு நடிச்சாராம்.

இந்த மாதிரி விஷயம் முன்னாலேயே நடந்திருக்கு.​'கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி' படத்துல சந்திரபாபுவோட வித்தியாசமான குரலுக்கு ஏத்த மாதிரி தன்னோட வாய் அசைவை காட்டி நடிச்சிருப்பார்.

​4. வாத்தியங்களை வாசிச்ச மாதிரி நடிச்ச விதம்:
​சிவாஜி தான் வாத்தியங்கள் வாசிக்கிற மாதிரி வர்ற காட்சிகள்லே , தானே வாசிக்கிற மாதிரியே நடிப்பாரு! நடிக்கிறதுக்கு முன்னாடி, அந்த வாத்தியத்தை எப்படி வாசிக்கணும்னு அதுல இருக்குற நுணுக்கங்கள் எல்லாத்தையும் கேட்டுத் தெரிஞ்சுட்டுதான் நடிப்பாராம்!

​'தில்லானா மோகனாம்பாள்'ல நாதஸ்வரம்:
​நாதஸ்வர வித்வானா நடிக்கும் போது, உண்மையா வாசிச்ச மதுரை சேதுராமன் பொன்னுசாமி சகோதரர்களை பக்கத்துல உக்காரவெச்சு, நல்லா கவனிச்சுட்டுத்தான் நடிச்சார்.
​'நலம்தானா நலம்தானா' பாட்டுக்குப் புருவத்தை அசைச்சு, கண்ணால நாயகிக்குப் பதில் சொல்வாரு. நடுவுல தொடையைத் தாளத்துக்கு ஏத்த மாதிரி அசைப்பாரு.
​நாயகி 'கண் பட்டதால் உந்தன் மேனியிலே'ன்னு பாடுறப்போ, ரெண்டு கண்ணுலேயும் கண்ணீரை வரவெச்சு, அது கன்னத்துல வழிஞ்சு, அப்புறம் நிறுத்திட்டு வாசிக்கிற மாதிரி நடிப்பாரு! செம நடிப்பு  அது!

​'திருவிளையாடல்'ல 
​'பாட்டும் நானே பாவமும் நானே' பாட்டுல, பாடுற மாதிரி, மிருதங்கம் வாசிக்கிற மாதிரி, வீணை, புல்லாங்குழல் வாசிக்கிற மாதிரி, ஜதி சொல்ற மாதிரி... இசை ஞானம் உள்ள ஒரு மேதை மாதிரியே நடிச்சிருப்பார்.வீணை வாசிக்கறவர் பாடறவரை கவனிக்கறதும் ,புல்லாங்குழல் வாசிப்பவர் மிருதங்கம் வாசிக்கறவரை கவனிக்கறதுமா நடிப்புலே பெரிய வேலை செஞ்சிருப்பார்.

​5. டான்ஸ் ஆடுறதுலயும் கிங்!
​சிவாஜி டான்ஸ் ஆடுறதையும் நடிப்போட ஒரு முக்கியமான பகுதியாத்தான் பார்த்தார். அவருக்கு நாடகத்துல கத்துக்கிட்ட நாட்டியப் பயிற்சி இருந்தது.

உத்தம புத்திரன் யாரடி நீ மோகினி பாட்டு சூட்டிங் நடக்குது. சிவாஜி வெள்ளை வேட்டி சட்டை போட்டு நெத்திலே திருநீறு பூசிட்டு வர்றார்.அப்போ சிவாஜிக்கு ஹெவியான காய்ச்சல் வேற.ஹெலன் சிவாஜியை பாத்தாலும் கால் மேல் கால் போட்டு சேர்லே உக்காந்து புகை பிடிச்சுட்டு இருக்கறார்.டான்ஸ் முடிஞ்சதும், "உங்களுக்கு டான்ஸ் ஆடத் தெரியுமா?"ன்னு ஹெலன் கேட்டப்போ, "ஓரளவுக்குத் தெரியும்"னு சிவாஜி சொல்ல, ஹெலன் சிவாஜி கால்கள்ல விழுந்து கும்பிட்டாங்களாம்!

​சேர்ல உட்கார்ந்து டான்ஸ்: 'கௌரவம்' படத்துல 'அதிசய உலகம்' பாட்டுல, சேர்ல உட்கார்ந்தபடியே, வாயில பைப் வெச்சுட்டு டான்ஸ் ஆடுவாரு. டான்ஸ்னா கால்லதான் ஆடணும்ங்கிற நிலையையே மாத்தினாருன்னு சொல்லலாம்!

​உடல்நலக் குறைவிலும் டான்ஸ்: 'என் ஆச ராசாவே' படத்துல கரகாட்டம் ஆடுறப்போ, அவருக்கு ஹார்ட் சர்ஜரி ஆகி, பேஸ்மேக்கர் பொருத்தியிருந்தாங்க. இந்த பாட்டு சூட்டிங் சிவாஜி தோட்டத்துலே நடக்குது.
சூட்டிங் இடையிலே சிவாஜி வீட்டுக்குள்ள போயி கண் கலங்கி உக்காந்து இருக்கறார்.சிவாஜி மருமகள் திருமதி புனிதவதி பிரபு ,ஏம்ப்பா 'களைப்பாஇருக்குதான்னு' கேட்டிருக்கிறார்.
 "எப்படி ஆடணும்னு மனசுல இருக்கு, ஆனா கால்கள் ஒத்துழைக்க மாட்டேங்குது"ன்னு சொன்னவர், கொஞ்ச நேரம் கழிச்சு, மனசுல இருந்த நாட்டிய அசைவுகளை அப்படியே வெச்சு  ஆடி முடிச்சார்.

பகுதி 3: நடை, சிரிப்பு, ஒப்பனை – நுணுக்கத்தின் உச்சம்!
​6. நடை :
​அவர் ஏற்ற கேரக்டருக்கு ஏத்த மாதிரி நடையை மாத்தி நடிக்கிறதுல அவர் சாமர்த்தியசாலி.

​கட்டபொம்மன் நடை: 'வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்துல விசாரணைக்கு வரும்போது, ரெண்டு காலுக்கும் நாலு அடி கேப் விட்டுட்டு கெத்தா நடப்பாரு. தூக்கு மேடைக்குப் போகும்போது, மக்களைப் பார்த்து வணக்கம் ஏத்துக்கிட்டே, ரெண்டு அடி கேப் விட்டு நடப்பாரு. மக்கள் கால்ல விழுந்து கும்பிடும்போது, ஒரு அடி கேப் மட்டும் விட்டு நடப்பாரு. ஆனா, இடுப்புக்கு மேலே மட்டும் தண்டனையைப் பத்தி எந்தப் பயமும் இல்லங்கற  மாதிரி கம்பீரத்தை காட்டி நடிச்சிருப்பார் !

​உள்ளம் நொந்த நடை: 'வியட்நாம் வீடு' படத்துல ஆபரேஷனுக்குப் போற பத்மநாபன், "திரும்பி வருவோமா, வர மாட்டோமா?"ங்கிற பயத்துல, மனைவி நிர்க்கதியா ஆகிடுவாளோன்னு கலங்கி, கால்கள் தள்ளாடுன மாதிரி, ரெண்டு கால்களையும் சமமா வெச்சு தளர்ந்து நடந்து வருவாரு.

​பணக்காரரின் வேகமான நடை: 'தெய்வமகன்' படத்துல, மனைவி பண்டரிபாய் கார்ல இருந்து தள்ளாடி வீட்டுக்குள்ள வர்றதைப் பார்த்துட்டு, மாடியில இருந்து வர்ற ஷங்கர், கோட்டு பட்டனை மாட்டுனபடி, கோடீஸ்வரருக்கே உரிய மிடுக்குல, படிக்கட்டோட எண்ணிக்கையை மனசுல கணக்குப் போட்டு, அவசரமா ஓடி வராம, வேகமா நடந்து வந்து மனைவியைத் தாங்கிப் பிடிக்கும் அந்த நடை இருக்கே... அது அற்புதம்!

​துன்பத்திலும் கெத்து நடை: 'தங்கப்பதக்கம்' படத்துல, மனைவி இறந்து போன சேதி கேட்டவுடனே, கம்பீரத்தை விடாமலும், அதே சமயம் அந்தத் துக்கத்தோட பாதிப்பைக் காட்டுற மாதிரி, கொஞ்சம் தடுமாற்றமான நடையில கலந்து நடிச்சிருப்பார்.

​7. சிவாஜியின் சிரிப்பு:
​பொதுவா வில்லன் கேரக்டர்ஸ்தான் விதவிதமாச் சிரிப்பாங்க. ஆனா, சிவாஜி கணேசன் மட்டும்தான் ஹீரோவாப் பல படங்கள்ல, கேரக்டருக்கு ஏத்த மாதிரி தன்னோட கம்பீரமான சிரிப்பைக் காட்டி மெருகூட்டினார்.

​'தங்கப்பதக்கம்' படத்துல, தன்னோட மகன் செஞ்ச குற்றத்தை மேஜர் சுந்தர்ராஜன் ஏத்துக்கிட்டதை அறிஞ்சதும், சுந்தர்ராஜனைப் பார்த்து, பல்லைக் கடித்துக்கொண்டு, வாயைச் சிறிதாகத் திறந்து, 'ஸ்ஸ்ஸ்'ன்னு சிரிப்பார். மாயாண்டி ஏன் குற்றத்தை ஒத்துக்கிட்டான்னு தெரிஞ்சுகிட்ட உணர்வை அந்தக் சிரிப்புல காட்டுவார்.

​8.சிவாஜியின்  மேக்கப் நுணுக்கம் :
​நாடக உலகிலேயே தனக்குத்தானே மேக்கப் போட்டுக்குற திறமையை சிவாஜி வளர்த்துக்கிட்டார். மேக்கப் ஆர்டிஸ்ட் 20% வேலை முடிச்சதும், மீதி 80% மேக்கப்பை சிவாஜியே  போட்டுக்குவாரு.

​'வீரபாண்டிய கட்டபொம்மன்' படத்துல, கட்டபொம்மன் அவரோட இனத்துக்கான அடையாளமா காதுகள்ல வளையங்களும், காது மடல்களோட மேல் பகுதியில கொப்புள்களும் போட்டு நடிச்சிருப்பாரு.

​'பாவமன்னிப்பு' படத்துல இஸ்லாமிய இளைஞரா நடிக்கும் போது, இஸ்லாமியர்கள் தொழுகை செய்றதால நெத்தியில வர்ற தழும்பை, தானே மேக்கப் போட்டு நடிச்சார்னு அந்தப் படத்தோட இயக்குனர் சொன்னார்.

​'தெய்வமகன்' படத்துல, தந்தை ஷங்கர் கேரக்டர்ல, கோரமா இருக்குற இடது பக்கம் தெளிவாத் தெரியணும்னு, இடது பக்கப் புருவம் ரொம்ப அடர்த்தியா இருக்கும். ஆனா, இன்னொரு மகன் விஜய்க்குப் புருவம் சாதாரணமா இருக்கும்.
​இப்படி, அவர் ஏத்துக்கிட்ட கேரக்டருக்கு ஏத்த மாதிரி, தன்னோட மேக்கப்பைக்கூட ரொம்ப நுணுக்கமாச் செஞ்சுட்டு நடிக்கிறதுதான் சிவாஜி கணேசனோட தனித்துவமே!
​நண்பர்களே, சிவாஜி கணேசன் வெறும் ஸ்கிரிப்டைப் படிச்சு நடிச்சவரில்லை. அவர் அந்தப் பாத்திரத்தோட கை, கால், நடை, சிரிப்பு, பாட்டுனு எல்லாத்துலயும் தன்னை ஊடுருவ வெச்சு வாழ்ந்துட்டுப் போனவர். அவர் ஒரு யுகம்! அவர் ஒரு சகாப்தம்!
​இந்தக் கட்டுரையில விடுபட்ட வேற ஏதாவது ஒரு நுணுக்கமான விஷயம் உங்களுக்குத் தெரிஞ்சா, கமெண்ட்ல சொல்லுங்க!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

சிவாஜியின் சிறந்த 10 படங்கள்

சிவாஜியின் 100 நாள் படங்கள் ..வருட வரிசையாக ..

ஒரே கதை படங்கள் வேற