நடிகர் திலகத்தின் டிஜிட்டல் வெளியீட்டு திரைப்படங்கள் ..
முதல் வெளியீட்டிலும் மறு வெளியீட்டிலும்...
பழைய தமிழ் படங்களை புதிய டிஜிட்டல் முறையில் மெருகேற்றி வெளியிடும் முறை 2012 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கியது என்று சொல்லலாம். அப்படி டிஜிட்டல் வெளியிட்டில் வெளிவந்த முதல் தமிழ் திரைப்படம் கர்ணன் ஆகும். இந்தப் படம் அதிக லாபத்தை விநியோகஸ்தருக்கு சம்பாதித்து கொடுத்தது. இந்த படத்தின் வெற்றியைப் பார்த்து பல தமிழ் படங்கள் டிஜிட்டல் முறையில் மெருகேற்றி வெளிவர தொடங்கின.டிஜிட்டல் படங்களுக்கு அடித்தளமாகவும் முன்னோடியாகவும் அமைந்தது கர்ணன் திரைப்படம் ..
கர்ணன் ,
பாசமலர் ,
வீரபாண்டிய கட்டபொம்மன், ராஜபார்ட் ரங்கதுரை ,
சிவகாமியின் செல்வன்,
ராஜா,
வியட்நாம் வீடு,
திருவிளையாடல்,
வசந்த மாளிகை,
அவன் தான் மனிதன்,
முதல் மரியாதை
ஆகிய படங்கள் புதிய படங்களை விட நல்ல வசூலை அள்ளிக் கொடுத்தது...
கர்ணன்..
கர்ணன் 1964 ஆம் ஆண்டு வெளியான படம் ஆகும். படம் வெளியான சமயத்தில் நான்கு திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடி வெற்றி கண்ட படம் கர்ணன்.
முதன் முதலாக டிஜிட்டல் செய்யப்பட்டு மறு வெளியீடு செய்யப்பட்ட திரைப்படம் கர்ணன் ஆகும். மார்ச் 16 2012 ஆம் ஆண்டு திரையரங்குகளில் டிஜிட்டலில் வெளியான திரைப்படம் கர்ணன் .
டிஜிட்டலில் வெளியான கர்ணன் படைத்த சாதனைகள் இதோ...
பழைய படங்கள் டிஜிட்டலில் வெளியானபோது டிரைலர் காண்பிக்கப்பட்ட முதல் திரைப்படம் இதுதான் .300 தியேட்டர்களுக்கு மேல் ட்ரைலர் காட்டப்பட்டது.
இரண்டே வாரத்தில் கோவை மாவட்டத்தில் மட்டும் 60 லட்சம் ரூபாய்களை வசூல் செய்தது கர்ணன்.
5 மாதங்களில் 300 திரையரங்குகளுக்கு மேல் திரையிடப்பட்ட ஒரு பழைய படம் கர்ணன் மட்டுமே.
திருப்பூரில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் மாறி மாறி வெளியான படம் கர்ணன் .
டிஜிட்டலில் வெளியான பழைய படங்களில் கர்ணன் படமானது 24 திரையரங்குகளில் 25 நாட்களும்,
பத்து திரையரங்குகளில் 50 நாட்களும்,
மூன்று திரையரங்குகளில் 70 நாட்களும் ,இரண்டு திரையரங்கில் நூறு நாட்களுக்கும் மேலும், ஒரு திரையரங்கில் 150 நாட்களுக்கும் மேலும் இப்படி ஏகப்பட்ட சாதனைகளை செய்த ஒரே பழைய திரைப்படம் கர்ணன் மட்டுமே ...
கர்ணனின் இந்த இமாலய வெற்றியை தொடர்ந்து நடிகர் திலகத்தின் பல படங்கள் டிஜிட்டல் செய்யப்பட்டு மறு வெளியீடு செய்யப்பட்டன ..
நடிகர்திலகத்தின் டிஜிட்டல் மறுவெளியீடு திரைப்படம் பாசமலர் .1961 ஆம் ஆண்டு முதல் முதலாக வெளியீடு செய்யப்பட்டது .இந்தப் படம் அப்போது வெள்ளி விழா ஓடி மாபெரும் பாச சரித்திர சாதனை படமானது.மீண்டும் இந்த படம் டிஜிட்டல் செய்யப்பட்டு 2013 ஆம் ஆண்டு மறுவெளியீடு செய்யப்பட்டது ...
ஒரு கருப்பு வெள்ளை திரைப்படம் டிஜிட்டலில் மறு வெளியீடு செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும் .
1965 ஆம் ஆண்டு வெளிவந்த நடிகர் திலகத்தின் வெள்ளி விழா படம் திருவிளையாடல். இந்தப் படமும் டிஜிட்டல் செய்யப்பட்டு மறு வெளியீடு செய்யப்பட்டது. பழைய படங்களில் டிஜிட்டல் செய்யப்பட்டு தெள்ளத் தெளிவாக பிரிண்ட் அமைந்த படம் திருவிளையாடல்.
படம் டிஜிட்டலில் தயாராகியும்,நல்ல வரவேற்பு இருந்தும், படத்தின் நெகட்டிவ் உரிமை பிரச்சினைகளும் ,ஏரியா உரிமைப் பிரச்சினைகளும் படம் வெளியாவதில் சிக்கல்களை ஏற்படுத்தின. இந்தப் பிரச்சனைகளால் பல ஊர்களில் திருவிளையாடல் திரைப்படம் திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டது.தமிழ்நாட்டின் சில முக்கிய நகரங்களில் வெளியானது திருவிளையாடல் டிஜிட்டல் திரைப்படம்.
1959 ஆம் வருடம் வெளியான நடிகர் திலகத்தின் மாபெரும் வெற்றி விழா திரைப்படம் வீரபாண்டிய கட்டபொம்மன்.
27 திரைகளில் 100 நாட்கள் ஓடிய மாபெரும் வெற்றித் திரைப்படம் வீரபாண்டிய கட்டபொம்மன்.இப்படிப்பட்ட வெற்றியை பெற்ற இப் படம் டிஜிட்டலில் 2015 ல் வெளியிடப்பட்டது.இந்தப் படம் டிஜிட்டலில் திரையரங்குகளில் வெளியிட முனைந்த போது புதிய படங்களுக்கே தியேட்டர்கள் கிடைக்காத நிலை அப்போது இருந்தது. பல முயற்சிகளுக்கு பின்னர் இந்த படம் திரையிடப்பட்டது .கர்ணன் படத்தை போலவே இந்த படமும் மாபெரும் வெற்றி பெற வேண்டியது. சரியான திட்டமிடல் இல்லை என்றதாலும் போதிய விளம்பரங்கள் இல்லை என்றதாலும் ,படத்தை வெளியிட்டு அதை எப்படி பிரமோஷன் செய்வது போன்ற பல பிரச்சனைகளில் சில தவறுகள் இருந்ததாலும் மாபெரும் வெற்றி பெற்று இருக்க வேண்டிய இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு பெறவில்லை.
1974 ஆம் ஆண்டு வெளியான நடிகர் திலகத்தின் படம் சிவகாமியின் செல்வன்.
இந்தப் படம் கடந்த 2016 ஆம் ஆண்டு டிஜிட்டல் செய்யப்பட்டு மறுபடியும் வெளியிடப்பட்டு சென்னை சீனிவாசா தியேட்டரில் 100 நாட்கள் ஓடி சாதனை செய்தது ..நடிகர்திலகத்தின் திரைப்படங்களுக்கு எப்போதும் வரவேற்பு உண்டு என்பதை நிரூபித்தது இது...
1973 ஆம் ஆண்டு வெளியான ராஜபார்ட் ரங்கதுரை படமும் டிஜிட்டலில் மறு வெளியீடு செய்யப்பட்டது.
அன்றும் நூறு நாட்கள் ஓடி வெற்றி கண்ட படம் இது .
கடந்த 2017 இல் டிஜிட்டலில் வெளியிடப்பட்டு நல்ல வசூல் செய்தது இந்த படம். இந்தப் படம் நாகர்கோவிலில் 65 நாட்களுக்கு செல்லும் மதுரை மீனாட்சி திரையரங்கில் நூறு நாட்களும் ஓடி சாதனை படைத்தது.
1970 ஆம் ஆண்டு வெளியான கருப்பு வெள்ளை திரைப்படம் வியட்நாம் வீடு .
இந்தப் படமும் டிஜிட்டல் செய்யப்பட்டு 2022 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
டிஜிட்டல் மெருகூட்டப்பட்டு வெளியான இரண்டாவது கருப்பு வெள்ளை திரைப்படம் வியட்நாம் வீடு .முதல் படம் பாசமலர் ...
1972ல் வெளியான மாபெரும் காதல் காவியம் வசந்த மாளிகை.
இந்தப் படம் டிஜிட்டிலில் வரும் 21 ஆம் தேதி நடிகர்திலகத்தின் நினைவு நாளை முன்னிட்டு தமிழகமெங்கும் ரிலீஸ் செய்யப்படுகிறது .இந்த டிஜிட்டல் முறையிலேயே மாபெரும் சாதனை செய்த படம் வசந்த மாளிகை. ஆம் மூன்றாவது முறையாக இந்த டிஜிட்டல் வெளியீடு செய்யப்படுகின்றது .இதற்கு முன்பு 2013 ஆம் ஆண்டு 2020 ஆம் ஆண்டு வசந்தமாளிகை டிஜிட்டல் மெருகூட்டப்பட்டு தமிழகம் எங்கும் வெளியிடப்பட்டது. வசந்த மாளிகை இரண்டாவது முறை வெளியீடுசெய்தபோது 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.
1972 ஆம் ஆண்டு வெளியான நடிகர்திலகத்தின் திரைப்படம் ராஜா.2018 ஆம் ஆண்டு மறுபடியும் இந்த படம் டிஜிட்டல் மெருகூட்டப்பட்டு திரையரங்குகளில் திரையிடப்பட்டது. 1972 ஆம் ஆண்டு வெளியான நடிகர் திலகத்தின் இரு படங்கள் டிஜிட்டல் செய்யப்பட்டு மறுபடியும் வெளியீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அந்தப் படங்கள் ராஜா, வசந்த மாளிகை
நடிகர் திலகத்தின் 175வது வெற்றி திரைக்காவியம் அவன் தான் மனிதன். இந்தப் படமும் 2022 ஆம் ஆண்டு டிஜிட்டல் செய்யப்பட்டு மறு வெளியீடு செய்யப்பட்டது.
1985 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் முதல் மரியாதை. அன்று வெள்ளி விழா ஓடி சாதனை படைத்த படம் முதல் மரியாதை .தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படமாக எல்லோராலும் சொல்லப்படுவது முதல் மரியாதை. இந்தத் திரைப்படம் 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் டிஜிட்டல் மெருகூட்டப்பட்டு திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. யாரும் எதிர்பாராத வண்ணமாக, வியக்கும் வண்ணமாக திருப்பூர் மணீஸ் தியேட்டரில் 105 நாட்கள் ஓடி சாதனை படைத்தது முதல் மரியாதை .
டிஜிட்டிலில் மறு வெளியீடு செய்யப்பட்ட திரைப்படங்கள் நடிகர் திலகத்தின் படங்களே அதிகம் .இவையெல்லாம் நடிகர் திலகத்தின் பழைய திரைப்படங்களுக்கு இருக்கும் வரவேற்பை காட்டுகின்றது.
டிஜிட்டல் சாதனை நாயகன் சிவாஜி என்று கூறுவது பொருத்தமாக இருக்கும் ...
செந்தில் வேல் சிவராஜ்
கருத்துகள்
கருத்துரையிடுக