2023 ஆம் ஆண்டில் திருப்பூர் மணீஸ் திரையரங்கில் முதல் மரியாதை 100 நாள் ஓடியதை அடுத்து
மறு வெளியீடு கண்ட வசந்த மாளிகை திரைப்படமும் 100 நாள் ஓடி சாதனை படைத்தது ..
இது பற்றிய சிறப்பு தகவல்கள் இந்த பதிவில்..
ஒரு படம் தயாரிப்பதிலேயே மிகுந்த சிரமங்கள் இருக்கும் இந்த காலகட்டத்தில் படத்தை வெளியிடுவது என்பதில் அதைவிட சிரமங்கள் உள்ளது .
பிரபல முன்னணி ஹீரோக்களின் படங்களைத் தவிர மற்ற படங்கள் நல்ல படங்களாக இருந்தாலும் ஓடுவது என்பது பெரிய சவாலாகவே இருக்கின்றது இந்த காலத்தில். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு பழைய திரைப்படம்அதுவும் 50 ஆண்டுகளுக்கு முன் வெளிவந்த ஒரு பழைய திரைப்படம் வெளியாவது பெரிய சவாலான விஷயம் தான். இது போன்ற சூழ்நிலையில் அந்தப் படம் 100 நாள் ஓடியது என்பது மிகப்பெரிய விஷயமாகும்.
இப்படிப்பட்ட ஒரு சாதனையை தான் வசந்த மாளிகை திரைப்படம் செய்துள்ளது. அதுவும் மூன்றாவது முறையாக வெளியீடு செய்யப்பட்டு அதுவும் தமிழகத்தின் ஒரு சாதாரண திரையரங்கில் 100 நாள் ஓடியது என்பதை என்னவென்று சொல்வது.
மேற்கூறிய இந்த விவரிப்புகளுக்கு எல்லாம் ஒரே ஒரு பெயர் தான் இந்த சாதனையை செய்ய வைத்தது என்றுசொன்னால் அது மிகையில்லை. அப்படிப்பட்ட அந்தப் பெயர் "சிவாஜி கணேசன்".
வசந்த மாளிகை காதல் படங்களின் தாஜ்மஹால்.
சமூகத்தின் அனைத்து ரசனையாளர்களையும் தன்னுள் தக்க வைத்துக் கொண்ட படம் வசந்த மாளிகை .
அரங்கம் நிரம்பி வழிய தியேட்டருக்கு பார்வையாளர்கள் தேவை என்ற முடிவெடுக்கப்பட்டால் அப்போது வசந்த மாளிகை படத்தை திரையிட்டு கொள்ளலாம் .
எல்லா படங்களையும் போல இந்தப் படத்தையும் அதே கேமரா பிலிம் சுருளில் தான் படம் பிடித்தார்கள்.சிவாஜியின் நடிப்பால் அது விநியோகஸ்தர்களின் தங்க சுரங்கமாக மாறிவிட்டது .
இப்படிப்பட்ட பல சிறப்பு அம்சங்களை பெற்ற இந்த வசந்தமாளிகை திரைப்படம்
கடந்த ஜூலை மாதம் 21ஆம் தேதி மூன்றாவது முறையாக தமிழகம் எங்கும் 100க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியான படம் வசந்த மாளிகை .
ஏற்கனவே இந்த படத்தை டிஜிட்டல் மயமாக்கி இரண்டு முறை தமிழகத்தில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களிடையே ஆதரவைப் பெற்றது. இந்த நிலையில் இந்த படத்தை மூன்றாவது முறையாக மீண்டும் டிஜிட்டல் முறையில் தமிழகத்தில் 100 தியேட்டர்களில் ஜூலை 21ம் தேதி வெளியிடப்பட்டது.
நாளை முதல் என்ற விளம்பரத்தை பார்த்த உடனே ரசிகர்களிடத்தில் இந்தப் படத்தின் சூடு பரவ ஆரம்பித்து விட்டது.எப்போது இந்த படம் திரையிடப்பட்டாலும் அப்போதெல்லாம் பல முறை பார்க்கப்படும் படமாகவே இந்த வசந்த மாளிகை உள்ளது. இந்த படத்தை ஒரு தடவை தான் பார்த்துள்ளேன் என்று கூறும் ரசிகர்களை காண்பது அரிது.
1972-ம் ஆண்டு வெளியான இந்தப் படம், இன்று வரை டாப் 10 காதல் படங்களின் வரிசையில் முதலிடம் பிடித்த படம் ஆகும்.
1972 ஆம் ஆண்டில் முதன்முதலில் வெளியான வசந்த மாளிகை அப்போதே வெள்ளி விழா கண்டபடமாகும்.
பழைய படங்களை டிஜிட்டல் முறையில் மாற்றத் தொடங்கிய பின்பு மார்ச் 8 2013 அன்று வெளியிடப்பட்டது.அப்போது இதனுடைய டிஜிட்டல் பதிப்பு நன்றாக இல்லாததால் ரசிகர்களுக்கு கோபத்தை வரவழைத்தது. அதனால் பெரிய வரவேற்பு ரசிகர்கள் தரவில்லை. ஆனாலும் கூட இந்த படம் ஆல்பட் திரையரங்கில் அப்போது 40 நாட்கள் மேல் ஓடியது.
இதற்கடுத்து 21 ஜூன் 2019 அன்று பிரமாதமான டிஜிட்டல் பதிப்பில் இந்தப் படம்
வெளியிடப்பட்டது.தமிழகத்தின் எல்லா ஊர்களிலும் இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தார்கள்.ஒவ்வொரு ஊரிலும் ரசிகர்களின் அலப்பறை பட்டாசை கிளப்பியது. சென்னை திண்டுக்கல் உள்ளிட்ட மற்ற ஊர்களில் எல்லாம் கட் அவுட்டுகள் பேனர்கள் வைத்து பாலாபிஷேகம் மலர் அலங்காரங்கள் என்று இந்தப் படத்தை ரசிகர்கள் வேறு லெவலுக்கு கொண்டு சென்றார்கள்.
மேலும் அது 100 நாட்களை நிறைவு செய்தது .
ஒரு பழைய படம் மீண்டும் ரிலீஸ் ஆகி நடிகர் திலகத்தின் கர்ணனுக்கு அடுத்து இரண்டாவது முறையாக 100 நாள் ஓடியது என்ற சிறப்பையும் பெற்றது.
இந்தப் படம் டிஜிட்டல் வெளியீட்டில் மட்டுமல்ல எப்போது திரையிடப்பட்டாலும் பண வசூல் மழையில் வினியோகஸ்தர்கள் திளைப்பார்கள் .
இதனால் இந்தப் படம் அடிக்கடி ரிலீஸ் செய்யப்படுகிறது.
இப்படிப்பட்ட ஒரு பிரபல்யம் இந்த படத்துக்கு இருப்பதால் இந்தப் படம் மீண்டும் கடந்த ஜூலை 21 ஆம் தேதி 100 தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டது.
தமிழகமெங்கும் திரையிடப்பட்ட திரையரங்குகளில் நல்ல வசூல் செய்தது இந்த திரைப்படம். எல்லாவற்றுக்கும் உச்சமாக திருப்பூர் மணீஸ் திரையரங்கில் இந்த படம் 100 நாட்களைக் கடந்து நிறைவு செய்தது.
இது ஒரு சாதாரண சாதனை அல்ல.
ஏனெனில் 50 வருடங்களுக்கு முன் வந்த ஒரு பழைய திரைப்படம்
மூன்று முறை டிஜிட்டலில் வெளியிடப்பட்டு அதில் இரண்டு முறையும் நூறு நாட்கள் ஓடியது என்ற மாபெரும் சாதனையை படைத்தது.
அதிலும் கூட தமிழகத்தில் உள்ள பெரிய மாநகரங்களில் கூட அல்ல
திருப்பூர் நகரில் இந்த படம் 100 நாள் ஓடி சாதனை செய்தது என்பதுதான் மிகப்பெரிய விஷயம் .
இதே மணீஷ் திரையரங்கில் இன்னொரு சாதனையும் இதற்கு முன்பு நிகழ்த்தப்பட்டுள்ளது
உலக திரைப்பட வரலாற்றில் தமிழகத்தில் மறுவெளியிட்டில் 38 ஆண்டுகளுக்கு வந்து நடிகர்திலகம் சிவாஜி கணேசர் அவர்களின்
முதல் மரியாதை
திரை காவியம்
மார்ச் - 2023 முதல்
ஜூலை-7 - 7 - 2023 வரை தொடர்ந்து
107 -நாட்கள் வெற்றிகரமாக. ஓடியது என்பது தான்.ஆக
இந்த ஆண்டிலேயே இரண்டு 100 நாள் படங்களை கொடுத்தார் நடிகர் திலகம். கடந்த பல வருடங்களில் யாருமே செய்யாத சாதனை இதுவாகும்.
இப்போது வெளிவரும் படங்கள் எப்படி ஓடி கொண்டிருக்கின்றன என்பது எல்லோருக்கும் தெரியும்.
இப்படிப்பட்ட காலகட்டத்திலும் நடிகர் திலகத்தின் முதல் மரியாதை வசந்த மாளிகை ஆகிய திரைப்படங்கள் ஒரே வருடத்தில் வெளியாகி இரண்டும் 100 நாள் ஓடி இருக்கின்றன அதுவும் திருப்பூர் நகரத்தில்.
இன்னும் ஒரு 50 வருடங்கள் கழித்து சினிமா தியேட்டர்கள் இருக்குமானால் ஒரு பழைய படத்தை திரையிட்டு வருமானம் பார்க்கலாம் என்று யாருக்காவது எண்ணம் வருமானால் அவர்களின் சாய்சாக வசந்த மாளிகை படம் இருக்கும் .
உலகில் ஒருதிரைப்படம் மூன்று முறை வெளியாகி மூன்றுமுறையும் 100 நாள் ஓடி வெற்றி சாதனை படைத்த ஒரே ஒரு படம் வசந்த மாளிகை ஒன்றே.
செந்தில்வேல் சிவராஜ் ..
கருத்துகள்
கருத்துரையிடுக