நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து பாதியுடன் நின்று போன படங்கள் மற்றும் வெளிவராத படங்களை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
ஏழு ஜென்மங்கள்..
ஏழு ஜென்மங்கள் என்ற பெயரில் ஒரு படம் தயாரிக்கும் திட்டம் ஆரம்பமானது. இந்தப் படத்தின் கதாசிரியர் ஏ எஸ் பிரகாசம்.இயக்குனராக திருநாகசந்தர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். முதல் ஜென்மத்தில் காதலர்களாக இருந்து தம்பதிகளாக மாறி ஏழு ஜென்மத்திலும் வெவ்வேறு இடங்களில் பிறந்து இணைவது தான் கதை .இதில் சிவாஜிக்கு ஒவ்வொரு ஜென்மத்திலும் ஒவ்வொரு ஒப்பனை. ஏ எஸ் பிரகாசம் கூறிய இந்த கதை சிவாஜிக்கும் மிகவும் பிடித்திருந்தது .நடிப்பதற்கு சம்மதம் தெரிவித்தார். எம் எஸ் விஸ்வநாதன் இசையில் கண்ணதாசன் எழுதிய பாடல் ஒன்றும் இந்த படத்திற்காக ஒலிப்பதிவு செய்யப்பட்டது .
பூஜை போடப்பட்டு பட வேலைகளும் ஆரம்பிக்க தொடங்கிவிட்டன. இதன் தயாரிப்பாளருக்கு எதிர்பார்த்த இடத்தில் இருந்து பணம் வராததால் படம் அதோடு நின்று போனது. ஏழு ஜென்மங்கள் ஏழு விதமான ஒப்பனைகள் என்று விதவிதமாக நடிக்கலாமே என்று இருந்த சிவாஜிக்கு இந்தப் படம் நின்று போனதில் ஒரு வருத்தம்.
சாவித்திரி தயாரித்து நடித்த பிராப்தம் படத்தின் கதையும் இந்தப் படத்தின் கதையைப் போன்று இருந்ததாலும் இந்தப் படம் தயாரிக்கப்படவில்லை என்ற ஒரு கருத்தும் உள்ளது.
அன்புள்ளஅத்தான் ...
V.N.புரொடக்ஷன் என்ற பட நிறுவனம் சிவாஜி சாவித்திரி ராகினி நடித்த அன்புள்ள அத்தான் என்ற படத்தை தயாரித்தது. முக்கோண காதலை மையமாக வைத்து கதை பின்னப்பட்டது .ராகினி முதன்முதலாக சிவாஜியின் ஜோடியாக இந்த படத்தில் நடித்தார்.எம் ஆர் ராதா மனோரமா படத்தில் இருந்தனர்.
வெகு சிறப்பாக பூஜை போடப்பட்டு படமும் பாதி வளர்ந்த நிலையில் தயாரிப்பாளரின் பைனான்ஸ் பிரச்சனையால் இந்த படம் பாதி அளவு வளர்ந்து நின்று போனது .இந்த படம் நின்று போனதில் ராகினிக்குத்தான் பெரிய வருத்தம். சிவாஜியுடன் முதன் முதலாக ஜோடியாக நடிக்க வாய்ப்பு அமைந்து அது இப்படி நடந்து விட்டதே என்று அவர் வருத்தப்பட்டார். இந்தப் படத்தின் இயக்குனராக
டி ஜானகிராமன் இருந்தார்.அன்புள்ள அத்தான் படத்திற்காக கண்ணதாசன் எழுதிய பாடல் ஒன்று எம் எஸ் விஸ்வநாதன் இசையில் ஒலிப்பதிவும் செய்யப்பட்டது.
இந்தப் படம் வெளிவந்திருந்தால் கேரள சகோதரிகளான லலிதா பத்மினி ராகினி ஆகிய மூவரும் சிவாஜியுடன் நடித்தவர்கள் என்ற சிறப்பை பெற்றிருப்பார்கள்.
ஜீவ பூமி.
சாண்டில்யன் எழுதிய ஒரு பிரபலமான நாவல் ஜீவ பூமி.
பிரபல நடிகர் ஸ்ரீராம் தனது சொந்த பட நிறுவனத்தின் சார்பில் சிவாஜியை வைத்து இந்தப் படத்தை தயாரிக்க ஆரம்பித்தார். எம் ஆர் ராதா T.S.பாலையா சரோஜாதேவி V.K.ராமசாமி உட்பட பல நடிகர்கள் இதில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள் .
இந்தப் படத்தின் புகைப்படங்கள் நிறைய வெளிவந்துள்ளன. அதை வைத்துப் பார்க்கும்போது படம் கண்டிப்பாக பாதி வளர்ந்து இருக்கும். என்ன காரணத்தாலோ இந்த படம் வெளிவரவில்லை. ஜீவ பூமி வட இந்திய சரித்திரத்தை மையமாகக் கொண்ட கதையாகும். இந்தப் படம் வெளிவந்திருந்தால் சிவாஜியின் இன்னொரு விதமான நடிப்பை நாம் பார்த்து ரசித்திருக்கலாம்.
சுவீகாரம்.
உத்ரா ஃபிலிம்ஸ் தயாரிக்கும் சுவிகாரம் திரைப்படத்தில் சிவாஜி கணேசன் பாலையா தங்கவேலு ராகினி ஆகியோர் நடிப்பதாக பேப்பரிலும் விளம்பரம் வந்தது .
இந்த பட கூட்டணியை பார்த்தால் வித்தியாசமாக இருக்கும்.கதை வசனம் TS பாலைய்யா.பாலையா கதை வசனம் கூட எழுதுவாரா என்று ஆச்சரியமாக இருந்தது இந்த விளம்பரத்தை பார்க்கையில்.
இசை தட்சிணாமூர்த்தி
டைரக்ஷன் V.S.நாராயணன்.
ஏற்கெனவே அன்புள்ள அத்தான் படத்தில் ஜோடியாக ராகினி நடிப்பதாக இருந்து அந்த படம் வெளிவராத நிலையில் இப் படமும் நின்று போனது.ராகினிக்கு இரு படங்களில் வாய்ப்பு கிடைத்தும் இரண்டு வெளிவராத படங்களாகவே அமைந்துவிட்டன.
வசந்தி ...
இது ஏ எல் எஸ் ப்ரொடொக்ஷன் தயாரிப்பதாக விளம்பரம் செய்யப்பட்ட படம்.
சிவாஜி கணேசன் ,
எஸ் எஸ் ராஜேந்திரன் விஜயகுமாரி ,சௌகார் ஜானகி ,விகே ராமசாமி ஆகியோர் நடிப்பில் வெளிவர இருப்பதாக விளம்பரம் செய்யப்பட்ட படம். இந்த படத்தின் இயக்குனர்
பா நீலகண்டன்.இசை கேவி மகாதேவன்.படம் தயாரிப்பில் இருப்பதாக விளம்பரத்தையும் செய்து விட்டார்கள். இந்தப் படமும் சிவாஜியின் வெளிவராத படம்.
சாணக்யா..
பத்மினி பிக்சர்ஸ் சார்பில்
பி ஆர் பந்துலு தயாரிக்கப்பட இருந்த படம்.
மிகப் பிரமாண்டமான முறையில் தயாரிக்கப்பட இருப்பதாக அறிவிப்பு செய்யப்பட்டது. இந்தப் படத்தின் விளம்பரத்தில் ஆயிரக்கணக்கான நடிகர்கள் நடிக்கும் படம் என்று விளம்பரம் செய்யப்பட்டது .வண்ணத்தில் உருவாக இருந்த படம். அனேகமாக கர்ணனுக்கு முன்பாக தயாரிக்கப்பட இருந்ததாக தெரிகின்றது.
இந்தப் படம் வெளிவந்து இருந்தால் சிவாஜியின் திரையுலக வாழ்க்கையில் மேலும் ஒரு வைரக்கல் ஆக இருந்திருக்கும்.
வானவில்.
வீணைS. பாலச்சந்தரின் இயக்கத்தில் நடிகர் திலகம் நடிப்பதாக விளம்பரம் செய்யப்பட்ட படம் வானவில் .
சிவாஜியின் ஜோடியாக சரோஜாதேவி. பல நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் ,வேகமாக வளர்ந்து வருகிறது என்று விளம்பரம் எல்லாம் கொடுக்கப்பட்டது.ஆனால் படம் நின்று போனது.
கிழக்கும் மேற்கும்.
முற்றிலும் மாறுபட்ட கதையமைப்பில் நடிகர் திலகம் இரு வேடங்களில் நடிப்பதாக தயாரிப்பதாக இருந்த படம் கிழக்கும் மேற்கும் .படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வந்த நிலையில் படம் அப்படியே நின்று விட்டது. சிவாஜி அருமையான நடிப்பை நாம் காண முடியாமல் செய்து விட்டது .
டம்பாச்சாரி.
வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது நடிகர்திலகம் நடிக்கும் துர்கா பிலிம்சின் டம்பாச்சாரி திரைப்படம். இப்படி ஒரு விளம்பரம் பத்திரிக்கையில் அன்று வெளிவந்தது. இதில் நடிப்பதாக இருந்தவர்கள் சிவாஜி கணேசன் தங்கவேலு எம் என் ராஜம் சௌகார் ஜானகி மற்றும் பலர் ..
இசை எம் முத்து
இயக்கம் ஜி விஸ்வநாதன்
அதிகம் கேள்விப்படாத பெயர்களாக இருக்கின்றன.
வேகமாக வளர்ந்து வந்த படம் ஏன் நின்று போனது என்று தெரியவில்லை.
பட்டதாரி.
பீம்சிங் இயக்கத்தில் வெளிவருவதாக நாளிதழ்களில் அறிவிப்பு செய்யப்பட்டது பட்டதாரி திரைப்படம். தயாரிப்பும் பீம்சிங்கின் புத்தா பிக்சர்ஸ் .
சிவாஜியுடன் சாவித்திரி நடிப்பதாக அறிவிப்பு செய்யப்பட்ட படம்.
படத்திற்காக போட்டோ சூட்டெல்லாம் நடத்தப்பட்டது. இந்தப் படமும் வெளி வரவில்லை .
ஞாயிறும் திங்களும்.
சிவாஜிகணேசன் தேவிகா வி.கே. ராமசாமி மனோரமா ஆகியோர் நடிப்பில் பாதி படத்துக்கு மேல் வளர்ந்த படம் .
இந்த படத்துக்கு இன்னொரு விசேஷம் என்னவென்றால்
கே பி சுந்தராம்பாள் பங்கேற்ற படம். இந்தப் படத்தின் புகைப்படக் காட்சிகள் பேப்பர்களில் நிறைய வெளிவந்தன. இயக்கம் சடகோபன் என்பவர் அதிகம் கேள்விப்படாத பெயர். பாடல் கண்ணதாசன் இசையமைப்பு விஸ்வநாதன் ராமமூர்த்தி.
இதுவும் வெளி வராத படம்.
பூம்புகார்..
தயாராகிறது தமிழ் விருந்து மொழிகள் குல முதல்வியாம் தமிழன்னைக்கு சூட்டும் முத்தாரம் .
புலி -வில் -கயல்
கொடி கொண்டோர் புகழ் பொறித்திடும் சிலப்பதிகாரம் பூம்புகார் ...
சிவாஜி கணேசன் கருணாநிதி கிருஷ்ணன் பஞ்சு இந்த மூவருடன் ஏவிஎம் தரும் எழிலோவியம் .
இப்படி ஒரு விளம்பரம் அன்று வெளிவந்தது. எஸ்எஸ் ராஜேந்திரன் நடிப்பில் வெளிவந்த பூம்புகார் திரைப்படத்துக்கு முன்பு வந்த அறிவிப்பாக இருக்கலாம்.
புலித்தேவன்.
சிவாஜி பிச்சர் தயாரிக்கும் புரட்சி வீரன் புலித்தேவன்.
இயக்கம் ஏ ராஜாராமன்.
இந்தப் பட விளம்பரத்தில் தீபாவளி வெளியீடு என்று அறிவிப்பு செய்துள்ளார்கள். அதனால் படம் பாதி வளர்ந்த நிலையில் தான் இப்படி ஒரு அறிவிப்பு வெளியிட்டு இருக்க முடியும். ஆனால் ஏனோ இந்த படம் வெளிவரவில்லை. அநேகமாக வீரபாண்டிய கட்டபொம்மன் படத்துக்கு பிறகு இந்த படம் தயாரிக்கப்பட இருந்திருக்கலாம்.
ஒரு நாள் ராஜா..
சிவி ராஜேந்திரன் இயக்கத்தில் சிவாஜி நடித்துக் கொண்டிருந்த காலத்தில் விகே ராமசாமி தனக்கு ஒரு படம் செய்த தருமாறு சிவாஜியை கேட்டுக்கொண்டார். அதன்படி தயாராக இருந்த படம் ஒரு நாள் ராஜா. படு வித்தியாசமான கதை களத்துடன் இந்தப் படம் தயாரிப்பதாக இருந்தது. இயக்கம் C.V.ராஜேந்திரன்.
இசை எம் எஸ் விஸ்வநாதன்.
அறிவிப்போடு இந்த படம் நின்று போனது .
மாடி வீட்டு ஏழை.
இது 1981 ஆம் வருடம் வெளிவந்த மாடி வீட்டு திரைப்படம் அல்ல.பல வருடங்களுக்கு முன்பே மாடி வீட்டு ஏழை என்ற படம் தயாராவதாக அறிவிப்பு செய்யப்பட்டது .
வானம்பாடி பிச்சர்ஸின் முதல் தயாரிப்பு மாடி வீட்டு ஏழை.
இயக்குனர் ஏ காசிலிங்கம் கதை வசனம் கருணாநிதி. இந்த படம் விளம்பர அறிவிப்பு செய்யப்பட்டதோடு சரி.
1981 இல் வெளிவந்த மாடி வீட்டு ஏழை படத்தின் கதை வசனமும் கருணாநிதி தான். ஆனால் முன்பு தயாரிக்கப்பட இருந்த அந்தப் படத்தின் கதையா என்று தெரியவில்லை.
கங்கையின் சங்கமம்.
நடிகர் திலகம் நடிப்பதாக அறிவிப்பு செய்யப்பட்ட படம் கங்கையின் சங்கமம்.
கதை வசனம் வியட்நாம் வீடு சுந்தரம்
இசை எம் எஸ் விஸ்வநாதன் டைரக்ஷன் வெற்றிச் செல்வன்.
அறிவுப்போடு நின்று போன படங்களில் இதுவும் ஒன்று .
அன்னைபூமி
வஸ்தாத் வீரபாகு வந்தே மாதரம் வீரபாகுவாக மாறினான். அவனை தேசியவாதியாக மாற்றியது யார் ?கல்லூரி மாணவன் ஆனந்த் புரட்சிக்காரராக மாறினான் !அவனை தீவிரவாதியாக மாற்றியது யார்? காலத்துக்கு ஏற்ற புரட்சி படைப்பு
அன்னை பூமி திரைப்பட விளம்பரத்தில் இடம் பெற்ற வாசகங்கள் இவை.
நடிகர்திலகம் இரு வேடங்களில் நடிப்பதாக அறிவிப்பு செய்யப்பட்ட படம்.
இயக்கம் எஸ்பி முத்துராமன்
இதன் தயாரிப்பாளர்
விசி குகநாதன் .
ஆதி பகவன்.
விக்ராந்த் சினி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் திரைப்படம் ஆதி பகவன்.
கதை திரைக்கதை ஜிஎம் குமார்.
இவர் அறுவடை நாள் படத்தின் இயக்குனர் ஆவார்.
வசனம் ஆர்பி விஸ்வம் .
இசை இளையராஜா.
இயக்கம் திலகர் மருது இவர் திரைப்படக் கல்லூரி மாணவர் ஆவார்.
இந்தப் படத்தின் பூஜை போடப்பட்டு படப்பிடிப்பும் நடைபெற்றது.
ஆனால் அதற்கு மேல் தொடராமல் போய்விட்டது.
இதுவும் நின்று போன படங்களில் ஒன்று.
பூப்போல மனசு.
ஒளிப்பதிவாளர் P.N. சுந்தரம் திறமையான ஒளிப்பதிவாளர். சிவாஜியின் பல படங்களில் பிரமாதமாக வேலை செய்தவர். இவர் நடிகர் திலகத்தை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்ற ஆசையில் சிவாஜியிடம் கால் ஷீட் கேட்க
சிவாஜி கொடுத்த கால்ஷீட்டில் P.N.சுந்தரம் இயக்குவதாக அறிவிப்பு செய்யப்பட்ட படம்தான் பூ போல மனசு .ரகுவரன் ரேகா ஆகியோரும் நடித்தார்கள். பல புகைப்படங்களும் பத்திரிகைகளில் வெளிவந்தன. பாதி படம் வளர்ந்த நிலையில் தான் இந்த படம் நின்று போனது.
பெண்பாவம் பொல்லாது.
சிவாஜி சாவித்திரி ராஜசுலோசனா நடிப்பில் படப்பிடிப்பும் நடைபெற்று நின்று போன படங்களில் ஒன்றுதான் பெண் பாவம் பொல்லாதது.
பாக்யசக்கரம்.
பாக்ய சக்கரம் படத்தின் நடிகர்கள் சிவாஜி கணேசன் எம்கே தியாகராஜ பாகவதர் என் எஸ் கிருஷ்ணன் தங்கவேலு எம் என் ராஜம் மற்றும் பலர்.
இயக்கம் வி.எஸ். ராகவன் .
பாகவதரும் சிவாஜியும் இணைந்து நடித்து இந்தப் படமாவது வெளிவருமா என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தனர். இந்தப் படமும் அறிவிப்போடு நின்று போனது.
நடமாடும் தெய்வம்.
ஜெயலட்சுமி பிக்சர் தயாரிக்கும் நடமாடும் தெய்வம்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு பல நாட்கள் நடைபெற்று பின் நின்று போனது. சிவாஜியுடன் சாவித்திரி தங்கவேலு இருக்கும் புகைப்படங்கள் எல்லாம் பத்திரிகைகளில் வெளிவந்தன. இந்தப் படத்தின் இயக்குனர் சுப்பாராவ் .
படப்பிடிப்பு நடைபெற்று வளர்ந்து கொண்டிருந்த நிலையில் நின்று போன படம் இது.
ஜெயித்துக் காட்டுகிறேன்.
நானா வம்புக்கு வரமாட்டேன் அதுதான் பண்பாடு அது தானாக வந்தால் விடமாட்டேன் அப்புறம் உன் பாடு சிங்கத்தமிழன் சீறி வருகிறான்
இப்படிப்பட்ட வாசகங்களுடன் வெளியானது ஜெயித்துக் காட்டுகிறேன் பட விளம்பரம் .
கதை திரைக்கதை இயக்கம் விசி குகநாதன் .
சிவாஜி நடிப்பதாக அறிவிப்பு செய்யப்பட்டு வெளிவராத படம் இது.
அன்புமகள்
அவரது நடையழகு
அவரது நடிப்பின் கலையழகு
சிம்ம குரலோனின் குணச்சித்திர நடிப்பை நீங்கள் ஆசை தீர ரசிப்பதற்காக
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிக்கும் அன்பு மகள்.
அன்பு மகள் படத்திற்கு வெளியிடப்பட்ட விளம்பரம் இது. சிவாஜியுடன் ஜெய்சங்கர் ராதாரவி பாண்டியன் ஜனகராஜ் வெண்ணி ஆடை மூர்த்தி பல்லவி ஆகியோர் நடிப்பதாக விளம்பரம் செய்யப்பட்டது .
இந்தப் படத்தின் தயாரிப்பாளர் கே ஜி குற்றாலிங்கம்.
கதை வசனம் வியட்நாம் வீடு சுந்தரம்.
இயக்கம் கே விஜயன்.
சிவாஜியின் வெளிவராத படங்களில் இதுவும் ஒன்று.
மக்கள் அன்பன் .
பிரமாண்டமாக தயாரிப்பதாக அறிவிப்பு செய்யப்பட்ட படம் மக்கள் அன்பன்.
சிவாஜியுடன் கார்த்திக் ராதா ஜெய்சங்கர் ஜனகராஜ் மற்றும் பலர் நடிப்பதாக இருந்த படம்.
இந்தப் படத்தின் பூஜையும் போடப்பட்டு முதல் நாள் படப்பிடிப்பும் நடந்தது.
இந்தப் படமும் வெளிவரவில்லை.
செந்தில் வேல் சிவராஜ்
கருத்துகள்
கருத்துரையிடுக