அந்த காலத்திலேயே அசத்திய சிவாஜியின் மேக்கப் கலைகள்.
ஒரே மாதிரி முக தோற்றத்தில் நடிப்பை தருவது ரசிகனுக்கு ஒரு நடிகன் செய்யும் கைம்மாறு அல்ல.இன்றைய கால கட்டங்களில் எந்த நடிகனும் எப்படி வேண்டுமானாலும் தன்னை மாற்றிக் கொள்ளலாம்.அந்த அளவுக்கு மேக்கப் கலைகளும் தொழில் நுட்பங்களும் வளர்ந்துள்ளன.நடிகர்திலகம் இருந்த காலகட்டத்தில் முக தோற்றதை மாற்றும் மேக்கப் ,
மற்றும் வித்தியாசமான முக தோற்ற மேக்கப் போடுவது என்பது மிகவும் கடினமான ஒன்று.இதற்கு காரணம் ,இது போன்ற மேக்கப்பிற்காக பல வீரியம் கொண்ட ரசாயன கலைவைகள் மற்றும் பசை ஆகியவை பயன்படுத்தபட்டதுதான்.இந்த வகை மேக்கப் எல்லா ஒப்பனையாளர்களும் செய்யவும் முடியாது.அதற்கென்று சிலரே இருந்தார்கள்.மேக்கப் போடுவதை காட்டிலும் அதை கலைப்பது மிகவும் கடினமான ஒன்றாகவும் இருந்தது.
முகத்தோல் கிழியும் ,வலி கொடுக்கும் ,நேரமாகும் என்பதெல்லாம் இந்த மேக்கப் கலையில் இருந்த சிரமங்கள்.
அதனால்தான் பெரிய நடிகர்களே பெரும்பாலும் இந்த வகை மேக்கப் போடுவதை விரும்புவதில்லை. எதற்கு வீணான ரிஸ்க் என்று வித்தியாசமான முகத்தோற்றமா, மாறுவேடமா ...
ஒட்டு தாடியை, இல்லை முகத்தில் ஒரு சிறு கரும்புள்ளி போல் மச்சம் அல்லது தழும்பு வைத்துக் கொள்ளலாம் என்று இந்த அளவில் நிறுத்திக் கொண்டார்கள்.
இப்படி சிரமங்கள் இருந்த அந்தக் காலத்தில் நடிகர் திலகம் மேக்கப் போட்டு அசத்திய சில படங்களின் தகவல்களை சினிமா ரசிகர்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
நடிகர் திலகம் நடித்து 1960 இல் வெளிவந்த படம் குழந்தைகள் கண்ட குடியரசு. இந்தப் படத்தில் விஞ்ஞானி வேடத்தில் சிவாஜி கணேசன் கௌரவ வேடத்தில் தான் நடித்திருப்பார். அது கௌரவ வேடம் என்றாலும் அந்த விஞ்ஞானி வேடத்திற்கு சிவாஜி கொடுத்த உழைப்பு இருக்கின்றதே அது பல படங்களுக்கு சமமாகும். இப்போது பார்த்தாலும் அசர வைக்கும் இந்த திரைப்படம். சிவாஜி தன் முகத்தோற்றத்தையே முற்றிலும் மாற்றி மேக்கப் போட்டு அசத்தி இருப்பார். நீண்ட தாடி,நீண்ட மூக்கு ,குழி விழுந்த கண்கள், கரிய உருவம் என்று இன்று பார்ப்போரை கூட மிரளச்செய்யும் ஒப்பனையாகும் இந்த முகத் தோற்றம்.சரி முகத்தில் மட்டும் தான் இந்த மாற்றமா என்றால் இல்லை. மிகக் குள்ளமான உருவம் ,கூன் விழுந்த முதுகு
இன்று உடம்பின் சகல அவயங்களையும் மாற்றிக் காட்டி இருப்பார் நடிகர் திலகம்.
படத்தில் சிவாஜி வரும் காட்சிகளை எல்லாம் பார்த்தோம் என்றால் இது நடிகர் திலகம் சிவாஜி கணேசனா இன்று ஆச்சரியத்தில் மூழ்காதவர்கள் யாரும் இருக்க முடியாது .மிக மிகக் கடினமான மேக்கப் உத்திகளால் சிவாஜியை மாற்றிக் காட்டிய படம் இது.
அடுத்த மேக்கப் கலையின் உச்சம் நான் வணங்கும் தெய்வம் .இந்தப் படத்தில் விஞ்ஞானி ஒருவர் தான் கண்டுபிடித்த மருந்தை கதாநாயகனுக்கு தர அதனால் அந்தக் கதாநாயகனின் உருவத் தோற்றமும் முகத்தோற்றமும் முற்றிலும் விகாரமாக அசுரனை போல் மாறிவிடும்.
மிக நீண்ட பற்கள், அகலத் திறந்த விழிகள், மிகவும் விகாரமான முகத் தோற்றத்துடன் சிவாஜி நடித்த நடிப்பு மிகவும் அசுரத்தனமாக இருக்கும். காடுகளில் சுற்றித் திரியும் சிவாஜி மலைப்பாம்பை சட்டை செய்யாமல் நடந்து செல்வது ,கரடியை காலால் உதைப்பது, வேங்கையுடன் சண்டை போடுவது என்று காட்சிகள் படு மிரட்டலாக இருக்கும். படு வித்தியாசமான மேக்கப் போட்டு சிவாஜி நடித்த படங்களில் இதுவும் ஒன்று.
நடிகர் திலகத்தின் நூறாவது படமாக நவராத்திரி திரைப்படத்தில் இடம்பெற்ற 9 வகை வேடங்களில் அந்த குஷ்டரோகி கதாபாத்திரத்தின் மேக்கப்பை பார்த்து நாம் வியக்காமல் இருக்க முடியாது.இந்தப் படத்தில் நடிகர் திலகம் நடித்த 9 வேடங்களில் அதிக சிரத்தை எடுத்து செய்யப்பட்ட மேக்கப் இந்த வேடத்துக்கு தான். பார்த்தாலே அருவருப்பு தரக்கூடிய உணர்ச்சியை நமக்குள் ஏற்படுத்த கூடிய வகையில்
இந்த மேக்கப் அமைந்திருக்கும்.முகத்தில் மட்டுமல்ல கை கால்கள்
என அந்த குஷ்ட ரோக மேக்கப்பை சிவாஜி செய்திருப்பார்.
தலை முடியை பஞ்சு பஞ்சாக வைத்துக் கொண்டு, முகத்தில் சில வடுக்களை கருப்பு மையினால் தடவிக் கொண்டு இந்த கேரக்டரை சிவாஜி தன் நடிப்பின் மூலம் செய்திருக்கலாம். ஆனால் அப்படியெல்லாம் சிவாஜி செய்யாமல் கஷ்டப்பட்டு ஒப்பனை செய்த வேடம் இது.
அர்ப்பணிப்புக்கு பெயர் போன நடிகர் திலகத்தின் சிறந்த ஒப்பனைகளில் இதுவும் ஒன்று.
1967-இல் வெளிவந்த சிவாஜியின் திரைப்படம் திருவருட்செல்வர். தமிழ் சினிமாவின் மேக்கப் கலைகளை சொல்லும் போது எல்லோராலும் சொல்லப்படும் ஒரு திரைப்படம் தான் திருவருட்செல்வர். இந்த முக தோற்றத்திற்காகவே ,
மேக்கப்புக்காக பல மணி நேரங்கள் ஆகின்றது என்பதற்காக சிவாஜி அவர்கள் அதிகாலையிலேயே வந்து படப்பிடிப்பு குழுவினர் வருவதற்கு முன்பாகவே ஒப்பனை செய்து கொண்டு படப்பிடிப்பில் தயாராக இருப்பாராம். இந்த மேக்கப் போட்டதை விட அதை கலைக்க சிவாஜி பட்ட சிரமங்கள் தான் அதிகம்.ஒப்பனையை கலைத்த பின்பும் அதன் எரிச்சல் மற்றும் வலி நீண்ட நேரம் இருக்குமாம்.
முகத்தில் அந்த சுருக்கங்கள் ,வயதான தோற்றத்தை காண்பிக்க வேண்டிய அந்த தோல் வடிவம் என்பதற்காகவும் மேலும் இது மேக்கப் என்று பார்ப்போர் மனதில் ஒரு எண்ணமே வரக் கூடாது ,இயற்கையாகவே இருப்பது போன்ற தோற்றத்தை திரையில் சிவாஜி காண்பிக்க வேண்டி அவர் பட்ட சிரமங்கள் சாதாரணமானது அல்ல.
சிவாஜியின் மாஸ்டர் பீஸ் மேக்கப்புகளில் இது ஒன்று .
1969 ஆம் வருடம் வந்த சிவாஜியின் மூன்று வேட படம் தெய்வமகன் .இந்த படத்தில் சிவாஜியின் ஒரு பக்க கன்னம் தான் கோரமாக இருக்கும்.மற்றபடி முக அமைப்பு இயல்பான ஒன்றுதான். அந்த ஒரு பக்க கோர மேக்கப்புக்கே பெரிய சிரமங்கள் பட வேண்டி இருந்தது. சிவாஜி இந்த மேக்கப்புக்கு பட்ட கஷ்டங்களை விட அவருக்கு இந்த மேக்கப் போட்டு அவரை இந்த அளவுக்கு நாம் சித்திரவதை செய்து விட்டோமே என்று இயக்குனர்.
ஏசி திருலோக சந்தர் பல பேட்டிகளில் சொல்லி இருப்பதை வைத்தே இது எவ்வளவு கஷ்டத்தை கொடுத்த மேக்கப் என்று நாம் புரிந்து கொள்ளலாம். கடினமான ரசாயனம் கலந்த கலவையை பசை போல் தயார் செய்து அதை முகத்தில் ஒட்டி மேக்கப் போட்டு சிவாஜி தயார் ஆவதற்கே கூடுதல் நேரமாகும்.படப்பிடிப்பு முடிந்ததும் அதை ரசாயன கலைவையால் பிரித்து எடுக்கும் போது முகத்தில் உள்ள தோல் எல்லாம் அந்த பசையோடு சேர்ந்து கிழிந்து வரும்.கூடவே எரிச்சலையும் தரும்.ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாது நடிப்பு ஒன்றே தனது உயிர் மூச்சு என வாழ்ந்தவர் சிவாஜி.
சிவாஜியின் தொழில் சிரத்தைக்கு இது ஒரு எடுத்துக் காட்டு.
1956 இல் வெளிவந்த சிவாஜியின் திரைப்படம் தெனாலிராமன். தெனாலிராமன் ஆக நடித்த சிவாஜி இந்தப் படம் முழுவதும் ஒரே முகத்தோற்றத்தில் தான் வருவார். அது ஒரு சாதாரண முகத்தோற்றம் தான்.
ஆனால் படத்தின் இறுதியில் சிறிது நேரமே வரும் ஒரு முஸ்லிம் வயோதிக வேடத்திற்கு தான் படு வித்தியாசமான மேக்கப்பை செய்திருப்பார்.அசல் வயோதிக முஸ்லிம் வேடத்தையே அதில் நாம் காண முடியும்.அந்த முக தோற்றம் அதற்கு பொருந்தக் கூடிய உடல் வாகு என்று உருவத்தை மட்டும் காட்டிக் கொள்ளாமல் அந்த தோற்றத்துக்குரிய நடை பாவனைகள் அங்க அசைவுகள் என்று படத்தில் சிறிது நேரமே வரக்கூடிய அந்த வேடத்திற்கு கூட அதிக மெனக்கெடல்களை சிவாஜி செய்திருப்பார்.இந்த வேடத்திற்கு சிவாஜி செய்த ஒப்பனை தான் திரைப்படங்களில் சிவாஜி செய்த ஒப்பனைகளில் முதன் முதலாக மாறுதலாக செய்யப்பட்ட ஒப்பனைகளுக்கு பிள்ளையார் சுழியாக அமைந்தது எனலாம்.
பலே பாண்டியா திரைப்படத்தில் சிவாஜி செய்த அந்த விஞ்ஞானி வேடம் ஒரு கடினமான மேக்கப் என்றெல்லாம் சொல்ல முடியாது. இந்த விஞ்ஞானி கேரக்டரின் ஹேர் ஸ்டைல், உடல் மொழி முகத்தோற்றம், நடை,முக பாவனைகளில் சிவாஜி செய்த அந்த விஞ்ஞானி வேடமானது முற்றிலும் வேறுபாடானது.
அந்தக் கேரக்டரின் படு வித்தியாசம் ,முற்றிலும் வேறுபாடான சிவாஜி நடிப்பு மற்றும் அந்த குரல் மாற்ற பேச்சு.
அடுத்து பாவமன்னிப்பு திரைப்படத்தில் சிவாஜியின் அந்த திராவக வீச்சு முகத்தோற்றம் .
தெய்வமகன் திரைப்படம் போலவே இதுவும் ஒரு கடினமான பணி. நிஜமாகவே திராவக வீச்சில் சிதைந்து போன ஒரு முகம் போலவே
இந்த வேடத்திற்கு மேக்கப் போடப்பட்டு இருக்கும்.
மருதநாட்டு வீரன் திரைப்படத்தில் சீன மனிதர்களைப் போன்ற அந்த மேக்கப்பை என்னவென்று சொல்வது .அட்சுர சுத்தமாக சீன மனிதரைப் போன்று காட்சியளிக்கும் இந்த நடிகர் திலகத்தின் முகத் தோற்றம் எத்தனை வியப்பை தருகிறது.மேலே கூறப்பட்ட முக ஒப்பனைகள் எல்லாம் மிகவும் கடினமானது என்றால் இந்த மேக்கப் ஆனது அந்த அளவுக்கு கடினமான ஒன்று இல்லை என்றாலும் ஆனால் அந்த முகத்தோற்றம் அந்த முகத்தில் காட்டிய அவருடைய முகபாவனை, இடுங்கிய கண்கள், தாடி மீசை போன்றவை மிக மிக அட்டகாசம் என்று சொல்ல வேண்டும். எந்தவிதமான முகம் ஒப்பனைக்கும் பொருந்தக்கூடிய முகத்தைப் பெற்றவர் நடிகர் திலகம் என்பதற்கு இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும்.
காத்தவராயன் படத்தில் வரும் அந்த வயதான கிழவர் வேடமும், வளையல் வியாபாரி வேடமும் படு வித்தியாசமான மேக்கப் கலைக்கு உதாரணம் .
வெறும் மேக்கப்பை மட்டும் போட்டுக் கொண்டு சாதாரணமான நடிப்பை கொடுத்திருக்க மாட்டார் நடிகர் திலகம். அந்தந்த பாத்திரங்களுக்கு உரிய நடை உடை பாவனைகள் முக பாவனைகளையும் கலந்து கொடுத்தே நம்மை அசர அடிப்பார் .
இந்த வரிசையில் பாபு படத்தில் வரும் அந்த வயதான பாத்திரத்தையும் யாராலும் மறக்க முடியாது. தளர்ந்த நடை காசநோய் இருமல் தாடி மீசை கிழிந்த உடைகளுடன் அந்த வயதான வேடத்திற்கு நியாயம் செய்திருப்பார்.
ராஜா ராணி படத்தில் வரும் சாக்ரடீஸ் வேடத்தை தான் இந்த வரிசையில் சொல்லாமல் இருக்க முடியுமா ?சாக்ரடீஸ் என்று சொன்னாலே தமிழர்களுக்கு சிவாஜியின் இந்த வேடம் தானே நினைவுக்கு வருகின்றது.
ரத்தத் திலகம் படத்தில் இடம்பெற்ற அந்த கடைசி காட்சியில் வழக்கமான முகத் தோற்றத்துடன், முகத்தில் சில கோடுகளை மைகளால் தீட்டி இருப்பார் .இந்த ஒப்பனை சிவாஜியை முற்றிலுமாக மாற்றிக் காண்பிக்கும் .
இந்தத் தோற்றம் படு மிரட்டலாக இருக்கும் .
இன்னும் பல வித்தியாசமான நடிகர்திலகத்தின் முக ஒப்பனைகள் :
தங்கமலை ரகசியத்தில் அந்த காட்டுவாசியாக வரும் டார்ஜான் வேடம்,
அன்னையின் ஆணை திரைப்படத்தில் வரும் சிம்ம கர்ஜனை புரிந்த சாம்ராட் அசோகன் வேடம்,
பாசமலர் திரைப்படத்தில் அவர் வரும் இறுதி காட்சிகள் வேடம்,
எங்க ஊர் ராஜா திரைப்படத்தில் சிவாஜி அந்த வயதான ஒப்பனை,
ராஜராஜ சோழன் படத்தில் போர்க்களத்தில் சாமியாராக வரும் வேட ஒப்பனை என்று இப்படியே அடுக்கிக் கொண்டே போகலாம் அவர் செய்த வேடங்களை.
சிவாஜியை பற்றி சொல்ல ஆரம்பித்தால் அது வரிசையாக வந்து கொண்டே இருக்கும்.
உலகிலேயே அதிக ஒப்பனைகளில் முகம் காட்டி அசர வைத்த நடிகன் ஒருவன் உண்டு என்றால் அது நடிகர் திலகம் மட்டுமே.
அவ்வளவு ஏன்? நிஜமாகவே தன் அன்னையிடமே சாமியார் கோலத்தில் மாறுவேடத்தில் சென்று யாசகம் பெற்று உணவு உண்டவர் அல்லவா இந்த ஒப்பனைகளின் அரசன்.பெற்ற தாயே அப்போது கண்டு பிடிக்க முடியவில்லையே அவரது தோற்றத்தை கண்டு.
இதையும் சொல்லலாம்:
அதிக சிரத்தை இல்லாத வாரி சீவிய தலைமுடி ,மீசை இல்லாத , பளிச்சென முகம் காட்டிய ரங்கோன் ராதா சிவாஜி ,
பாலும் பழமும் பெப்பர் அண்ட் சால்ட் ஹேர் ஸ்டைல் லுக்கிங் இல் வரும் டாக்டர் ரவி,
செக்கிழுக்கும் சிதம்பரனாராக அந்தக் கப்பலோட்டிய தமிழனின் முதுமை வேடம்,
பார் மகளே பார் படத்தில் வரும்
குறுந்தாடி சிவாஜி,
ஆலயமணியின் நலிந்த நொடிந்த தாடி மீசை சிவாஜி ,
ராஜ தீர வீர அதிக ஆபரணங்களை அணிந்து நடித்த கர்ணன்,
பாரதியின் கம்பீரத்தை நம் கண் முன் நிறுத்திய கை கொடுத்த தெய்வம் சிவாஜி,
நவராத்திரியின் எட்டு வேட ஒப்பனைகள்,
திருவிளையாடலில் பல வித அவதார ஒப்பனைகள்,
மகாகவி காளிதாஸ் சரஸ்வதி சபதம் கந்தன் கருணை,
திருமால் பெருமை ,
ஹரிச்சந்திரா, சிக்கலார், விஜய ரகுநாத சேதுபதி, சாமுண்டி கிராமணி, ராமன் எத்தனை ராமனடி வீரசிவாஜி,
பத்மநாபயர், ஞான ஒளி ஆண்டனி, பட்டிக்காடா பட்டணமா மூக்கையா சேர்வை ,
ராஜராஜ சோழன், பாரிஸ்டர் ரஜினிகாந்துக்கு அந்த ஒரேயொரு ஹேர்ஸ்டைல் ,எங்கள் தங்க ராஜா பைரவன், ராஜபார்ட் ரங்கதுரையில் ஹாம்லெட் ,திருப்பூர் குமரன், பகத்சிங் என பல வேடங்கள்,
எஸ்பி சௌத்ரி, என் மகன் ஏட்டு ராமையா ,அன்பைத் தேடி புத்தர், பாட்டும் பரதத்தில் அந்த பரதநாட்டிய கலைஞர் வேடம், நாம் பிறந்த மண் சிவாஜி, திரிசூலம் சிவாஜி, சிவாஜி செய்த எமன் வேடம், கல்தூண் பரமேஸ்வர கவுண்டர், கண் டாக்டர் துவாரக நாத் ,ஹிட்லர் உமாநாத், வா கண்ணா வா சிவாஜி, வித்தியாசமான தாதா தீனதயாளன் ,வசந்தத்தில் ஒரு நாள் சிவாஜி, தீர்ப்பு நீதிபதி பரிச்சைக்கு நேரமாச்சு வெள்ளை ரோஜா சிரஞ்சீவி வாழ்க்கை சரித்திர நாயகன் சிம்ம சொப்பனம் எழுதாத சட்டங்கள் தாவணிக் கனவுகள் வம்ச விளக்கு பந்தம் ராஜரிஷி
என்று எத்தனை சிவாஜிகளை சொல்வது?
செந்தில்வேல் சிவராஜ்
கருத்துகள்
கருத்துரையிடுக