ஏசி திருலோகசந்தர் இயக்கத்தில் நடிகர் திலகம் நடித்து வெளிவந்த படங்கள்:
1.தங்கை.
திருலோகசந்தர் சிவாஜியை வச்சு டைரக்ஷன் பண்ணுன முதல்படம் இது.குடும்ப படம் சரித்திர புராண படங்கள்ல விருப்பப்பட்டு நடிச்சுகிட்டு இருந்த சிவாஜிய இதுல ஒரு ஆக்ஷன் ஹீரோவா அறிமுகம் செஞ்சாரு திருலோகசந்தர்.சிவாஜி ஆக்ஷன் காட்சிகள்ல தன்னோட ஸ்டைல் நடிப்பையும் காட்டி அசத்த வெச்சாரு.இந்தப் படம் நல்லா வசூல் செஞ்சு பாலாஜிக்கு ரொம்ப திருப்திய கொடுத்துருச்சு. 19.5.67 வெளியான படம் தங்கை.
2. இரு மலர்கள்.
திருலோக சந்தரோட ஸ்பெஷாலிட்டியே ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் சம்பந்தம் இல்லாமல் எடுக்கிறது தான்.
முதல் படத்துல ஆக்சன் ஹீரோவ காட்டுன சிவாஜிய இதில் அப்படியே மாத்தி இருப்பார்.வழக்கமான முக்கோண காதல் கதை படமா இருந்தாலும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமலேயே படத்தை ரொம்ப ரசிச்சு ரசிச்சு பாக்க வெச்சிருப்பார் திருலோக சந்தர்.சிவாஜி அந்தகால கட்டத்துல இளைச்சு போய் ரொம்ப ஹேண்ட்சம்மா இருப்பார்.இரு மலர்கள் படத்தோட ஊட்டி வரை உறவும் ஒரே நாள்ல ரிலீசாச்சு.ரெண்டும் 100 நாள் ஓடி சாதனை செஞ்ச படங்கள்.
இருமலர்கள் 1.11.67லே வெளியாச்சு.
3. என் தம்பி.
சிவாஜிய வெச்சு பாலாஜி தயாரிச்ச ரெண்டாவது படம்.திருலோகசந்தர் சிவாஜிய வச்சு டைரக்ஷன் பண்ணுண மூணாவது படம்.பொதுவாகவே எந்த நடிகரோட சொந்த விஷயத்தை, சிறப்பை ஒரு படத்துல பாட்டாகவோ காட்சியாகவோ வெச்சா அது ரசிகர்கள் இடத்துல ரொம்ப பேமஸ் ஆகும். அப்படி இந்த படத்துல அமைஞ்ச பாட்டுத்தான் சீர்காழி பாடுன நான் பொறந்தது தஞ்சாவூரு சூரக் கோட்டையிலே பாட்டு.இந்த பாட்டுக்கு தியேட்டர்ல எப்பவுமே நல்ல ரெஸ்பான்ஸ் .மூணாவது படத்துலேயே சிவாஜியோட ரொம்ப நெருக்கமாயிட்டாரு திருலோக சந்தர்.என் தம்பி அதிகம் செலவழிக்காம ,ரொம்ப குறுகிய காலத்துல படம் புடிச்சு அதிக பணத்தையும் அதிக பேரையும் வாங்கிக் கொடுத்த படம்.7.6.68 லே வெளியான படம் இது.இந்தப் படமும் 100 நாள் ஓடி வெற்றி கண்ட படம்.
4.அன்பளிப்பு.
மேல சொன்ன மூணு படங்கள் அளவுக்கு அன்பளிப்பு பெரிய பிரபலம் அடையலே அப்பீடீன்னாலும் அதுல சொல்லாத சில நல்ல சமூகத்துக்கு தேவையான நல்ல விஷயங்கள் இதுல இருக்கு.விவசாயத்தோட சிறப்பை பத்தி சொன்ன படம் இது.சிவாஜி இதுல நல்லா இளமையா இருப்பாரு.ஆனா சரோஜாதேவி கொஞ்சம் உடம்பு வந்து முதிர் சாயல்ல இருப்பாரு.
அன்பளிப்பு திரைக்கதைய கொஞ்சம் கவனம் குடுத்து பண்ணி இருந்தா படம் ரொம்ப டாப்புல வந்துருக்கும்.
பின்னால வந்த ரஜினியோட அண்ணாமலை இந்த படத்துல இருந்து உருவி எடுத்த கதைக்கருதான்.1.1.69 லே வெளியாச்சு இந்த படம்.
5. திருடன்.
அந்த காலத்துல எல்லாம் பெரிய ஹீரோக்கள் மட்டுமில்லே சின்ன ஹீரோக்கள் கூட இந்த மாதிரி டைட்டிலை வெக்க மாட்டாங்க.சிவாஜி நிஜத்துல கடவுள் மேலே பக்தி வெச்சிருக்கறவரா இருந்தாலும்
தொழில் சம்பந்தப்பட்ட விஷயத்துல ரொம்ப சம்பிரதாயம் பார்க்க மாட்டார். அவருக்கு கேரக்டர் நடிப்பு தான் முக்கியம். திருடன் படத்தோட ஆக்சன் காட்சிகள் எல்லாம் அட்டகாசமாக அமைச்சிருப்பாரு திருலோகசந்தர் .படத்தோட க்ளைமாக்ஸ் ரயில் சண்டை காட்சிகள் அப்பவே வேற லெவல். சிவாஜியை வெச்சு விளையாண்டு இருப்பார் திருலோகசந்தர்.திருடன் வெளியான தேதி 10.10.69...
100 நாள் படம் இது.
6. தெய்வமகன்.
இந்தப் படத்த பத்தி புதுசா என்ன சொல்றது. திருலோகச்சந்தர் டைரக்ஷனுக்கு உதாரணம் சொல்லணும்னா இந்தப் படத்துல சிவாஜி இன்ட்ரொடக்சன் ஆகுற சீன் மட்டும் பாத்தா போதும் .பாக்குற ஒவ்வொரு ரசிகனோட மனசையும் அடிச்சு நொறுக்குற மாதிரி சீனுக வச்சிருப்பாரு திருலோகசந்தர் தெய்வமகன் படத்துல .சிவாஜியோட யானைப்பசி நடிப்புக்கு சரியான காட்டுத் தீனி தான் இந்த தெய்வமகன்.
100 நாள் ஓடுன படம் .
7. எங்கிருந்தோ வந்தாள்.
திருடன்னு பேர் வச்சு படமெடுத்தவர் இதுக்கு முன்னாலே வெச்ச பேரு பைத்தியக்காரன்.படத்தோட டைட்டிலை கடைசிலதான் மாத்துனாங்க.படம் ரீமேக் படம் அப்படினாலும் இதுக்கு முன்னால வெளியான திருலோகசந்தர் படங்களுக்கும் இந்த படத்துக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமில்லாமல் படத்தை எடுத்திருப்பார் .
29.10.69 ல வெளியச்சு.இந்த படத்தோடயும் சேந்து சிவாஜியோட இன்னொரு படம் போட்டிக்கு வந்துச்சு. அது சொர்க்கம். ரெண்டுமே ஹிட்டுதான் .100 நாள் படங்கள்
8. எங்க மாமா.
எங்கமாமா பட கதைக்களமானது முழுக்க முழுக்க குழந்தைகள் சம்பந்தப்பட்டது.அநாதை குழந்தைகள் இல்லம் நடத்தி வரும் கேரக்டரில் சிவாஜி நடித்திருப்பார்.ஒவ்வொரு குழந்தைகளுக்கும் தேச தலைவர்களின் பெயர்களை சூட்டியிருப்பார் சிவாஜி.அதிலும் கூட தேசபக்தியை நினைவூட்டுவார்.
இந்த படத்துல எல்லா சிறப்பம்சமும் இருந்துச்சு.
14.1.70 ல வெளியாச்சு இந்த படம்.
9. பாபு
சிவாஜிய வச்சு எடுத்த படங்கள்ல எனக்கு ரொம்ப மன நிறைவு தந்த படம் பாபு அப்படின்னு திருலோக சந்தர் பல முறை சொல்லியிருக்கிறார் .இதுக்கு இந்த படம் ஒரு ரீமேக் படம் தான். திருலோகசந்தரை அப்படி சொல்ல வச்சதுக்கு காரணம் சிவாஜியோட நடிப்பு .
படத்துல சிவாஜி இருமி இருமி நடிச்சதை பாக்கறப்போ அது நிஜமாவே கக்குவான் இருமல் பாதிக்கப்பட்ட ஒருத்தரை பாக்கறமாதிரியே இருக்கும்.
18.10.71 ல வெளியான இந்த படம் 100 நாள் ஓடுன படம்.
10. தர்மம் எங்கே.
ரொம்ப அதிகமான
எதிர்பார்ப்பு ளோடு வெளியானது இந்தப் படம்.படத்தோட முதல்பாதிய ரொம்ப மாஸா செஞ்சிருப்பாரு .
அந்த ஸ்கிரீன்பிளேயே ரொம்ப அதகளமா அமைஞ்சுப் போனதுல செகண்ட் ஆப்புக்கு இம்பார்ட்டண்ட் கொடுக்கறதுல கொஞ்சம் கவனம் வைக்காம போயிட்டாரு போல.அதுல மட்டும் கொஞ்சம் கவனம் வெச்சிருந்தார்னா படம் ரொம்ப எகிறி இருக்கும்.க்ளைமாக்ஸ் எல்லாம் அட்டகாசப்படுத்தி இருப்பாங்க . 15.7.72 ல வெளியானது இந்த படம்.
11. பாரத விலாஸ்.
தேச ஓத்துமைய சொல்ல வர்றப்போ பாரத விலாஸ் அப்படின்னு ஒரே வார்த்தைல சொல்லிட்டு போயிடலாம். இந்திய அரசாங்கமே இந்த படத்தோட நெகடிவ் ரைட்ஸை வாங்கி வெச்சிருக்கு அப்படிங்கற சிறப்ப விட வேறென்ன வேணும் .
ஒரு வீட்டை வச்சே ஒரு இந்தியாவை காட்டி அதுல தேசபக்தியை ஊட்டுன ஒரே படம் பாரதவிலாஸ் தான்.
24.3.73 லே வெளியாகி 100 நாள் ஓடுன படம் இது.
12. அவன் தான் மனிதன்.
திருலோகச்சந்தர் வெளிநாட்டில் எடுத்த முதல் படம். நாடு சிங்கப்பூர் .சிவாஜியோட 175வது படம் இது.இதுவும் கன்னட படத்தோட ரீமேக் தான்.
கன்னட நடிகர் ராஜ்குமார் நடிச்ச கஸ்தூரி நிவாசா படத்தோட ரீமேக்தான் இந்த படம்.100 நாளைக்கு மேல ஓடுன படம்.
வெளியான தேதி 11.4.75.
13. அன்பே ஆருயிரே.
திருலோக சந்தர் டைரக்ஷன் பண்ணுன படத்துல கொஞ்சம் சுமாரான படம் அப்படின்னு சொன்னா இந்த படத்தை சொல்லலாம் .ஆனா எல்லா படமும் ஒண்ணுக்கொண்ணு சம்பந்தம் இல்லாம வித்தியாசமான கதைக் களங்களை தான் வெச்சு செஞ்சி இருப்பார் திருலோக சந்தர். 27.9.75 லே வெளியாச்சு இந்த படம்.
14. டாக்டர் சிவா.
தொழு நோயாளிகளை சமூகம் ஒதுக்க கூடாது அப்படிங்கிற நல்ல மெசேஜ் சொன்ன படம் டாக்டர் சிவா. 2.11.75 லே வெளியாச்சு.
15. பைலட் பிரேம்நாத்.
பக்கத்து நாடான இலங்கையிலேயே முழு படமும் எடுத்த ஒரே தமிழ் படம் இதுதான்.வெளிநாட்டு நடிகை சிவாஜிக்கு ஜோடியா நடிச்ச படம் .நடிகை சிங்கள நடிகை மாலினி பொன்சேகா. இந்தப் படம் இலங்கையில ரெண்டு வருஷம் எல்லாம் தொடர்ந்து ஓடி இருக்கு.30.10.78 லே வெளியானது இந்த படம்.
16. விஸ்வரூபம்.
தெலுங்கு நடிகர் கிருஷ்ணா சிவாஜிய வச்சு தயாரிச்ச படம் இது. சிவாஜிய விதவிதமா நடிக்க வச்ச திருலோக சந்தர் இதுல சிவாஜிய தாதாவா நடிக்க வச்சிருப்பார் .100 நாள் ஹிட் அடிச்ச படம் இது .
6.11.80 லே வெளியாச்சு...
17. லாரி டிரைவர் ராஜாக்கண்ணு.
திருடன்ல ரயில் சண்டை காட்சிய எடுத்த திருலோக சந்தர் இந்த படத்துல ஓடற ரயிலுல ஒரு டூயட் பாட்டை எடுத்திருப்பார்.ரொம்ப ஆரவாரமான அமர்க்களமா இந்த படத்தோட ஓப்பனிங் இருந்துச்சு.100 நாள் ஓடலேன்னாலும் நல்லா வசூல் செஞ்ச படம் இது.3.7.81 லே வெளியான படம் இது.
18.. வசந்தத்தில் ஓர் நாள்.
எந்த நடிகரும் இந்தமாதிரி படத்துல நடிக்க தயங்குவாங்க.அப்படிப்பட்ட கதைக் களத்துல சிவாஜிய இறக்கி விட்டுருப்பார் திருலோக்.முழுக்க முழுக்க வெளிநாடான மலேசியாவுல எடுக்கப்பட்ட படம் இது.இந்த படத்தை எடுக்கறதுக்கு ஒரு தைரியம் வேணும்.அப்படிப்பட்ட கதை இது.7.5.82 லே வெளியான படம்.
19. குடும்பம் ஒரு கோயில்.
பாலாஜி சிவாஜிய வச்சு தயாரிச்ச கடைசி படம்.சாதாரண ஒரு குடும்பக்கதை தான் இது.26.1.87 லிலே வெளியாச்சு.
20.. அன்புள்ள அப்பா.
AVM நிறுவன ஆஸ்தான டைரக்டரா இருந்த திருலோக் அந்த நிறுவனத்துக்காக சிவாஜிய வச்சு டைரக்ஷன் பண்ண சான்சு இத்தனை வருஷம் கழிஞ்சுதான் அமைஞ்சுது பாருங்க.சிவாஜிய வச்சு Avm தயாரிச்ச கடைசி படம்.திருலோகசந்தர் சிவாஜி கூட்டணியோட கடைசி படமும் இதுதான்.திருலோக் அவருடைய மகளோட இருந்த அன்னியோன்ய பாசத்தைதான் அன்புள்ளஅப்பா கதைக் களமாக அமைச்சிருந்தாரு .சினிமாலே எதார்த்தை விட மிகையா காட்டறதைத்தான் மக்கள் விரும்புகிறாங்க அப்படீன்னு இந்த படத்தை பத்தி சொல்லி இருந்தாரு திருலோகசந்தர்.
16.5.87 லிலே வெளியாச்சு இந்தபடம்.
திருலோக சந்தர் சிவாஜிய வச்சு 20 படங்கள் டைரக்ஷன் பண்ணி இருக்கிறார் .
ஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு வித்தியாசமா பண்ணி இருப்பார்.
ரெண்டு மூணு படங்களை தவிர மத்த படங்கள் எல்லாமே பிரமாதமா அமஞ்ச படங்கள் .
திருலோக சந்தர் டைரக்ஷன் பண்ணுன தெய்வமகன் திரைப்படம் தான் ஆஸ்காருக்கு அனுப்பப்பட்டுச்சு. மூணு படத்தை வெளிநாட்டில் எடுத்து இருக்கிறார்.
செந்தில்வேல் சிவராஜ்
கருத்துகள்
கருத்துரையிடுக