போலீஸ் ஸ்டோரி படம்னு எந்த படம் வந்தாலும் SP.சௌத்ரியை நினைச்சுப் பாக்காம இருக்க முடியாது.தங்கபதக்கம் ரொம்ப ஆளுமை செஞ்சிட்டு இருக்கற படம்.எந்த சீன் வந்தாலும் அந்த சீனை சிவாஜி தன் பக்கம் திருப்ப வெச்ச படம்.ஒவ்வொரு சீனை மட்டுமல்ல ஒவ்வொரு ஷாட்டையும் உச்சமா காட்டுன படம்.இந்த பதிவுலே ஓரு சீனை எப்படி க்ரியேட் பண்ணி இருக்காங்க அப்படிங்கறதை பாக்கலாம்.இது ஒரு ரெண்டரை நிமிஷ காட்சி.பெரிய ஆக்ஷனோ ,திருப்பமோ ,
சஸ்பென்சோ இல்லாத ஒரு சாதாரண காட்சி தான்.
இந்த ஒரு சாதாரண காட்சியை கூட நடிகர்திலகம் எப்படி கொண்டு போயிருக்கார்னு பாக்கணும்.
சிவாஜி ஸ்ரீகாந்த் சம்பந்தப்பட்ட காட்சி இது.தனிக்குடித்தனம் போறதா ஸ்ரீகாந்த் சிவாஜிகிட்டே பேசற காட்சி.
ரெண்டரை நிமிஷ காட்சி .மொத்தம் 12 ஷாட்டுகள்.இந்த காட்சிய ஒரே பிரேம்லே ரெண்டு பேரும் ரெண்டு மூணு ஷாட்டுலே பேசி முடிக்கற மாதிரி எடுத்திருக்கலாம்.ரொம்ப ஸிம்பிளான சீன்தான் இது.
சிவாஜி ஸ்ரீகாந்த் பேசறத அவங்க சைட்லே இருந்து காமிக்கற மாதிரி எடுத்திருப்பாங்க.
இந்த காட்சி ஆரம்பிக்கறது எப்போன்னா பிரமீளா சிவாஜிகிட்டே ,மாமா ,
சக்கரைக்கு காபி போதுமான்னு கேட்டுட்டு ,சிவாஜி சிரிக்கற சிரிப்புலே பயந்து மாடிப்படிலே ஓடி போயிடற காட்சிலே இருந்து ஆரம்பிக்கும்.
ஸ்ரீகாந்த் பிரமீளாகிட்டே ,கேள்வி கேக்கற லட்சணமா இதுன்னு சொல்லிட்டு ,படிலே இறங்கி வந்து சிவாஜி கிட்டே ,உங்க கிட்டே பேசணும்னு சொல்வார்.
சீனோட முதல் ஷாட் இது.
டீ கப்பை டேபிள்லே வெச்சுட்டு சிவாஜி திரும்பி ஸ்ரீகாந்த்தை ஆச்சர்யமா பார்ப்பார்.
இந்த ஷாட் 4 செகண்ட்தான்.சிவாஜி சடர்னு திரும்பி ஒரு ஆச்சர்ய ரியாக்சன் கொடுக்கறதுதான்.டயலாக் கூட ஒரே வார்த்தைதான் .
'என்னப்பா'ன்னு கேப்பார்.அவ்வளவுதான்.
சிவாஜியோட அந்த பொசிசன் தான் ,அதுல காட்டுற கம்பீரந்தான் சிவாஜியோட ஆளுமையை சொல்லும்.இந்த சீனோட ரெண்டாவது ஷாட் இது.
இப்போ மூணாவது ஷாட் .
ஸ்ரீகாந்த் படியில கீழே நின்னு பேசுவார்.சிவாஜி அவர் என்ன சொல்ல வர்றார்னு கேக்கற மாதிரி ஷாட்.
கேமிரா ரெண்டு பேரையும் ஒரே பிரேமுல போகஸ் பண்ணியிருக்கும்.
ஸ்ரீகாந்த்தோட டயலாக்ல ஷாட் கன்டினியூட்டிஆகும்.
நான் வீடு பாத்துட்டேன்னு சொல்வார் ஸ்ரீகாந்த் .என்ன விலைன்னு கேப்பாரு சிவாஜி.
விலைக்கு இல்லே வாடகைக்குன்னு பதில் சொல்வார்.
ஸ்ரீகாந்த் சொல்ல சொல்ல சிவாஜி நடந்து வருவார்.
சட்டை கீழ் பாக்கெட்குள்ளே கையை வெச்சுகிட்டு ஒரு சின்ன ஸ்டைல் வாக்லே சிவாஜி செஞ்சிருப்பார்.
என்ன வாடகைம்பார் சிவாஜி.
இன்னும் பேசி முடிவு பண்ணலேம்பார் ஸ்ரீகாந்த்.
போலீஸ் டிரஸ்ல சிவாஜி இருந்தாலும் ,பெல்ட்டை மட்டும் கழட்டி விட்டுருப்பார்.ஆனா அங்க சௌத்ரியா பேசற மானரிசம் இருக்காது.ஒரு அப்பா தன்னோட மகன் கிட்டே அக்கறை எடுத்து அவன் சொல்ற விஷயத்தை கேக்கற மாதிரி ரொம்ப இயல்பா இருக்கும்.
வீடெல்லாம் தாராளமா இருக்கான்னு கேப்பார் சிவாஜி.
ரெண்டு பேருக்கெல்லாம் தாராளமா இருக்குன்னு சொல்வார்.
ஸ்ரீகாந்தை பாத்துட்டே வர்ற சிவாஜி ,மாடிலே ஏறி போக வருவார்.அப்படியே
எப்ப குடித்தனம் போலாம்பார் .
ஏன் இன்னைக்கே கூட போலாம்பார் ,ஸ்ரீகாந்த்.
மூணாவது ஷாட் இதோட முடியும்.
நாலாவது ஷாட்டா..
சிவாஜி படிலே ஏறிப் போவார்.
உங்கம்மா கிட்டே திங்க்ஸ் எல்லாம் பேக் பண்ணச் சொல்லு,நாளைக்கு நானும் உங்கம்மாவும் அந்த வீட்டுக்கு குடித்தனம் போறோம்பார் சிவாஜி.
இந்த ஷாட்டுலே சிவாஜி பேசிட்டே மாடிப்படிலே ஏறி வந்துட்டே இருப்பார்.ஸ்ரீகாந்த் முன் பக்க போசுலேயே நின்னு இதை கேட்டுட்டு இருப்பார்.கேமரா மூவ்மெண்ட் இல்லாமே மேல் படிலே வெச்சு எடுத்திருப்பாங்க.நாங்க போறோம்னு சிவாஜி சொன்னதை கேட்டு ,ஸ்ரீகாந்த் ஒரு அதிர்ச்சியா "அப்பா"ன்னு டக்குன்னு திரும்புவார்.
அந்த இடத்துலே மியூசிக் தடார்னு விழும்.அட இத்தனை நேரம் மியூசிக்கே இல்லாமே தான் சீன் போச்சான்னு யோசிக்க வைக்கும்.அப்ப வந்த படங்கள்லே நடிகர்கள் என்ன பேசறாங்கன்னு தெளிவா கேக்க முடிஞ்சது.
தேவையில்லாத மியூசிக் எல்லாம் இருக்காது.MS.விஸ்வநாதன் பேன்ட் வாத்தியத்துலே டிரம்ஸ்டிக்கை வெச்சுட்டே நின்னுட்டு இருந்திருப்பார் போலே.ஸ்ரீகாந்த்தோட அந்த அதிர்ச்சிக்கு பட்டுன்னு போட்டு தள்ளியிருப்பார்.அந்த மியூசிக் எபெக்ட்டை பாக்கறப்போ இப்படித்தான் யோசிக்க வெச்சது.
ஸ்ரீகாந்தோட அதிர்ச்சியை சிவாஜி தன்னோட முகத்துலே காட்டுவார்.
மாடிப்படிலே அப்படியே நின்னுடுவார்.
Yes ன்னு ஒரு வார்த்தை சிவாஜிகிட்டே இருந்து.
வீடு உங்களுக்கு இல்லே .
எனக்கும் விமலாவுக்கும்னு சொல்வார் ஸ்ரீகாந்த்
மெல்லிசா சின்ன ஒரு அயர்ச்சி சிவாஜி முகத்துலே வந்து போகும்.
கேமரா போகஸ் மாறாம அப்படியே இருக்கும்.சிவாஜி படிலே நிக்கறதும் ,ஸ்ரீகாந்த் முன்னாலே பாத்தபடி நின்னுட்டு இருக்கறதுமா ஒரே பிரேமுலே இதை எடுத்திருப்பாங்க.
அந்த அயர்ச்சி ஒரு செகண்ட் கூட இல்லே.அந்த முகபாவம், உணர்ச்சி மின்னல் மாதிரி வந்து போயிருக்கும்.
கம்பீரமான அந்த கேரக்டரோட தன்மை எந்த விதத்திலும் குறையாத மாதிரியும் இருக்கும்.
ஓ !தனிக்குடித்தனம்மான்னு ஒரு ஆச்சர்ய வார்த்தையாலே முடிச்சிருவார்.இதோட நாலாவது ஷாட் முடியும்.இந்த ஷாட் 23 செகண்ட் போகும்.
5 வது ஷாட் தொடர்ச்சியா மாடி வளைவுலே ஆரம்பிச்சு இன்னொரு மாடி வளைவுலே சிவாஜி ஏறி வர்ற மாதிரியான ஷாட் ஆரம்பமாகும்.
அதுக்கேப்பா தனிவீடு பாக்கணும்.இது உன்னோட சொத்து ,உங்க பாட்டனார் வீடு,எனக்கப்புறம் உனக்குத்தானே சேரணும்னு பேசிட்டே மாடிப்படிலே ஏறி வந்துட்டே இருப்பார் சிவாஜி.
இந்த ஷாட்டுலே கேமிரா மூவ்மெண்ட்டா இருக்கும்.ஒரு சின்ன ஜெர்க் இல்லாமே கேமிரா பாட்டுக்கு மெதுவா போய்ட்டு இருக்கும்.அப்படியே ஆகாயத்துலே பயணிக்கறமாதிரி காமிரா போகஸ் இருக்கும்.கேமிராவை மேல் படிலே வெச்சு எடுத்திருப்பாங்க அப்படியும் இப்படியுமா அசைஞ்சு ஷாட் போகும்.
சிவாஜி படிலே ஏறி வர்றப்போ அந்த பூட்ஸ் சத்தம் மட்டும் எபெக்டா மியூசிக் போகும்.எக்ஸ்ட்ரா மியூசிக் ஏதும் இருக்காது.
எனக்கு இந்த வீடு தேவையில்லேம்பார் டக்குன்னு ஸ்ரீகாந்த்.
டக்குன்னு நிப்பார் சிவாஜி.
இந்த ஷாட் இதோட முடியும்.
6 வது ஷாட்.
கேமிரா இப்ப படிக்கு கீழ போயிரும்.சிவாஜி மேலே பார்ப்பார்.ஸ்ரீகாந்த் சிவாஜிக்கு முகம் காட்டாமே திரும்பி நிப்பார்.அந்த ரெண்டு பேரையும் போகஸ் பண்ற மாதிரி கீழே காமிரா இருக்கும்.
மேலே படியிலே நின்னு சட்டுன்னு திரும்பி ஒரு போஸ் கொடுப்பார் பாருங்க சிவாஜி .என்ன கம்பீரமான ஒரு நடிகன்யா.
இடது காலை மேல் படிலே வெச்சு வலது காலை கீழ்ப்படிலே வெச்சு அசத்தலா நிப்பார்.
ஏன் இந்த வீடு உங்களுக்கு தாராளமா இல்லையாம்பார் சிவாஜி .
வீடு தாராளமா இருக்கலாம்.ஆனா இங்க இருக்கறவங்க மனசு தாராளமா இல்லையேம்பார் ஸ்ரீகாந்த்.
வலது கையை நீட்டி ,ஏம்ப்பா ,அந்த பக்கம் திரும்பியே பேசிட்டு இருக்கே.எம் பக்கம் திரும்பிப் பேசும்பார் சிவாஜி .கையை நீட்டற ஸ்டைல் ,படிலே நிக்கற தோரணைலே அழகா ரசிக்க வெப்பார் சிவாஜி.
6 வது ஷாட் முடியும்.
7 வது ஒரு ரொம்ப சின்ன ஷாட்.
ஸ்ரீகாந்தோட டயலாக் மட்டும் .
சிவாஜியோட பின் பக்கம் ,ஸ்ரீகாந்த்தை கவர் பண்ணுன ஒரு பிரேம்.கேமிரா சிவாஜிக்கு பின்னாலே.
நீங்களும் என் பக்கம் திரும்பிட்டா அப்புறம் பிரச்சினைக்கே இடமில்லேம்பார் ஸ்ரீகாந்த்.
ரெண்டே செகண்ட்தான் இந்த ஷாட்.
இந்த ஒரு சின்ன ஷாட்டுக்காக காமிராவை மேல வெச்சு ,அடுத்த ஷாட்டுக்கு கீழே வெச்சு மாத்தி மாத்தி எப்படி மெனக் கெட்டிருக்காங்க.
8 வது ஷாட் ...
இந்த ஷாட் தான் ரொம்ப அட்டகாசமா இருக்கும். அந்த பேமஸ் டயலாக் இந்த ஷாட்டுலே தான்.சிவாஜிக்குன்னே எழுதுன டயலாக்.
'மத்தவங்களை எம் பக்கம் திருப்பித்தான் பழக்கம்.நான் மத்தவங்க பக்கம் திரும்பி பழக்கமில்லே'ம்பார் சிவாஜி.
வலதுகாலை மேல் படிலே வெச்சு இடது காலை கீழ்ப்படிலே வெச்சு நின்னுட்டு,திரும்பிங்கற வார்த்தைக்கு அவர் காட்டற அந்த கையோட சைகை எல்லாம் அட்டகாசமா அமைஞ்சிருக்கும்.
நாலே செகண்ட் தான் இந்த எட்டாவது ஷாட்.மனசுலே எத்தனை வருஷமா ஆழப் பதிஞ்ச ஷாட்.மறக்க முடியுதா?
9 வது ஷாட்.
இப்ப காமிரா மறுபடி மாடிக்கு மேலே.ஸ்ரீகாந்த் பதில் பேசற மாதிரி.சிவாஜியோட முதுகு ,
ஸ்ரீகாந்தை போகஸ் பண்ணி ஒரு பிரேம் கட்டிங்.
அங்க தான் உங்க பலகீனமே இருக்கு.எல்லாரும் உங்க இஷ்டப்படிதான் நடக்கணும்னு நெனக்கறீங்ளே தவிர ,மத்தவங்களோட உணர்ச்சியை நீங்க புரிஞ்சுக்காறதே இல்லேம்பார் ஸ்ரீகாந்த்.இது 6 செகண்ட் ஷாட்.
10 வது ஷாட்..
இப்ப காமிரா கீழே போயி மேல நிக்கற சிவாஜியை காட்டும். சிவாஜி ரெண்டு கையையும் கட்டிட்டே,நான் யாரை புரிஞ்சுக்ககறது இல்லேன்னு கேப்பார் சிவாஜி .அந்த வசனத்துக்கு என்ன உயிர் கொடுக்க முடியுமோ ,அத தன்னோட முகபாவம் ,அந்த உச்சரிப்பு தொனியிலே நம்மளை உணர வெச்சிடுவார் சிவாஜி. ரெண்டு செகண்ட் ஷாட் இது.
11 வது ஷாட்.
இந்த சீனுலே இது வரைக்கும் வந்த ஷாட்டுலே இதுதான் நீளமான ஷாட்.
டயலாக்கும் பெரிசு. சிவாஜி
ஸ்ரீகாந்த் பேசறதை கேட்டுட்டே மாடிப்படிலே ஏறி வர ,
ஸ்ரீ காந்த்தும் பேசிட்டே கூட வர்ற மாதிரி ஷாட் இது.ஸ்ரீகாந்த் பேசிட்டே வர சிவாஜி தன்னோட சட்டை பட்டன்களை கழடிட்டே ,ஸ்ரீகாந்த் பேசறத கேட்டுட்டு வருவார்.
உங்க மகனை ,அவனோட உணர்ச்சிகள...
சின்ன வயசுலே இருந்தே சுதந்திரம் இல்லாமே போச்சு,நான் வீட்டை விட்டு ஓடிப் போனேன் ,திரும்பி வந்த பின்னாலே கூட என்னை ஒரு குற்றவாளியாவே நெனச்சீங்க.வேலை பாக்கற இடத்துலயாவது நிம்மதியா இருக்கலாம்னு நெனச்சேன்.நீங்க அங்கயும் வந்து என் நிம்மதியை கெடுத்துட்டீங்க.பெத்த தகப்பனே சந்தேகப்பட்ட பின்னாலே மத்தவங்க என்ன நெனப்பாங்க.அதனால தான் உங்ககிட்டேஇருந்து நான் தள்ளியே இருக்கேன்னு ஒரு டயலாக் பேசி முடிப்பார் ஸ்ரீகாந்த் .26 செகண்ட் போகும் இந்த ஷாட்.
ஸ்ரீகாந்த் பேசறத மௌனமா நின்னுட்டே கேட்டுட்டு இருப்பார் சிவாஜி ..ரியாக்சன்னு பாத்தா,கொஞ்சம் தலை குனிஞ்சு ,மூக்கை தடவிட்டே ஸ்ரீகாந்த்தோட அந்த உணர்ச்சிகளை தான் எப்படி கிரகிச்சுகிட்டு இருக்கேன்னு காட்டற மாதிரி இருக்கும். சட்டை பட்டன் எல்லாம் கழட்டி ,பனியன் தெரிய ,வலது கையை பேன்ட் பாக்கெட்டுக்குள்ளே விட்டுட்டு நின்னுட்டு இருப்பார் சிவாஜி.இந்த ஷாட்டோட எபெக்ட் இதுதான்.
11வது ஷாட் இதோட முடியும்.
12 வது ஷாட் ஆரம்பமாகும்.
இந்த ஷாட் , மாடியை கீழே இருந்து பிரேம் பண்ணி இருப்பாங்க.
பிரேமோட இடதுபக்கம் ஸ்ரீகாந்த் வலது பக்கம் சிவாஜி.
சட்டை பனியனுக்குள்ளே கையை விட்டு நெஞ்சை தடவிட்டே வர்ற சிவாஜி மாடி கைப்பிடிலே கையை வெச்சுட்டு பேசற ஷாட் இது.
பேசிட்டியாப்பா ,இனி நான்பேசலாமா ,ஜெகன் ,
உன்னோட ஆழமான பேச்சுலே இருந்து உங்கஅப்பாவை எவ்வளவு தூரம் புரிஞ்சு வெச்சிருக்கிறேன்னு தெரியுது.
ஒரு மகன் தகப்பனை இவ்வளவு தூரம் புரிஞ்சு வெச்சிருக்கும் போது,அந்த தகப்பன் அந்த மகனை எவ்வளவு தூரம் புரிஞ்சு வெச்சிருப்பான்?
இந்த ஷாட்டை கிரேன் ஷாட் வெச்சு எடுத்திருப்பாங்க. ஆரம்பத்துலே கீழ் போகஸ்லே இருக்கற காமிரா மெல்ல மேலே வந்து ரெண்டு பேரையும் ஒரு நேர் போகஸ்லே கேப்சர் பண்ணியிருக்கும்.
மேலே காமிரா வந்த பின்னாலே ,சிவாஜியோட கன்டினியூட்டி டயலாக்கும் வரும்.ஆனா ,ஒண்ணை மட்டும் ஞாபகம் வெச்சுக்கோ ,நான் வேலி போட்டது செடிக்குதாம்ப்பா ,மரத்துக்கு இல்லே ..இன்னும் என்னோட கண்ணுக்கு நீ செடியாத்தான் காட்சியளிக்கிறே ,இன்னும் இந்த வீடு தாராளமா இல்லேன்னா நெனச்சா ,நீ தாராளமா இந்த வீட்டை விட்டு போகலாம்னு சொல்லிட்டு ரூமுக்குள்ளே போக நடப்பார்.அப்படியே சட்டையை கழட்டிக்குவார்.
சிவாஜி சொன்னதை கேட்டு ,'அப்பா'ம்பார் ஸ்ரீகாந்த்.என்ன என்பார் சிவாஜி .நான்கேட்டதுக்கு பதில் சொல்லவே இல்லியேன்னு கேப்பார் ஸ்ரீகாந்த்.
வேகமா போன சிவாஜி ,டக்குனு திரும்பி ,நான் இவ்வளவு தூரம் சொல்லியுமா உனக்கு புரியலேம்பார் சிவாஜி.
இல்லேன்னு ஸ்ரீகாந்த் சொல்ல , கழட்டுன சட்டையை கையிலே வெச்சுட்டு,நீ தனிக்குடித்தனம் போறது எனக்கு பிடிக்கலப்பான்னு கொஞ்சம் சத்தமா சொல்லுவார் சிவாஜி.
காரணம் கேப்பார் ஸ்ரீகாந்த்.
இவ்வளவு சொல்லியும் இவன் புரிஞ்சுக்கலையாங்கற மாதிரி சிவாஜி பக்கத்துல வருவார்.இப்ப இந்த சீனோட க்ளைமேக்ஸ் வசனம் சிவாஜி பேசியாகணும்.
இடையிலே மியூசிக் இல்லாமயே ஷாட்டுக போய்ட்டு இருந்துச்சு.
சிவாஜி டயலாக் பேசறதுக்கு முன்னாலே,அந்த இடத்துலே 5 செகண்ட் கேப் இருக்கும். அந்த கேப்புலே MSVயோட ஆட்டம் இருக்கும். டோட்டலா சொல்ல வந்த மெசேஜை அந்த மியூசிக்காலே உணர்ச்சிகரமா ஆக்கணும்.அதை அசர வெச்சு காட்டியிருப்பார் MSV.
தடார்னு அதிர வெச்சு மனசெல்லாம் ஒரு அதிர்வா இருக்கும்.
என் மகனை பிரிஞ்சு வாழற சக்தி என் கிட்டே இல்லேப்பான்னு சொல்லிட்டு உள்ளே போயிடுவார் சிவாஜி.சிவாஜி பேசறப்போ சைலண்ட் ஆகற மியூசிக் பேசி முடிச்சதும் ஒரு உணர்வுபூர்வமா ,
கன்ட்னியூட்டியா போகும்.ஒரு பாச உணர்வை அந்த மியூசிக் இன்ஸ்ட்ரூமென்ட்லே வெச்சு உருக வெச்சிருப்பார் MSV.இந்த பேக்ரவுண்ட் இசைக்கு ட்விங்கிள் ட்விங்கள் லிட்டில் ஸ்டார் பாட்டு மெட்டை மெலடிலே மயக்க வெச்சிருப்பார்.
ஸ்ரீகாந்த் கீழே இறங்கி போக எதுக்க கே ஆர் விஜயா வருவாங்க. ஒரு டயலாக் இல்ல..க்ளோசப் இல்லே.
ரெண்டு பேரும் பேசறதை
கீழே நின்னு கேட்டுருப்பாங்களோங்கற மாதிரி நம்மளை நினைக்க வைக்கற ஷாட் . ஒரு ரியாக்ட் கொடுத்திருப்பாங்களேயப்பா ..
அந்த ரெண்டு செகண்ட் ஷாட்டுலே அவங்களோட ரியாக்சனை பாத்து ஆச்சர்யப்படாம இருக்க முடியாது.
இது ஒரு சாதாரண உரையாடல் காட்சியா இருந்தாலும் ,அதுலே இருக்கற உணர்வு ,கேமிராமேன் உழைப்பு, மெனக்கெடல் ,தேவையான கச்சிதமான மியூசிக் எல்லாம் இந்த சீனை ரொம்பவே ரசிச்சு பாக்க வெக்கற ஒண்ணு.
செந்தில்வேல் சிவராஜ்
கருத்துகள்
கருத்துரையிடுக