நடிகர்திலகத்தின் இரண்டு படங்கள் 200 நாட்கள் ஓடிய ஒரே திரையரங்கு என்ற சாதனை தமிழ்நாட்டில் ஓரே ஒரு தியேட்டருக்குத்தான் உள்ளது.
அது என்ன தியேட்டர் , என்ன படங்கள் என்று தெரிந்து கொள்வதற்கு முன்பாக அந்த தியேட்டர் பற்றிய சில சுவையான செய்திகளை தெரிந்து கொள்ளலாம்.
"சிந்தாமணி"-இலக்கியத்திலும், சினிமாவிலும் இந்தப் பெயருக்கு எப்போதும் முக்கியத்துவம் உண்டு. அப்போதைய சினிமா சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதரை புகழ் அரியணையில் அமரவைத்து அழகு பார்த்தது, இந்தச் சிந்தாமணி என்ற பெயர்தான் என்பது வரலாறு.
ஆம்! 1937-ம் ஆண்டு பாகவதர் நடித்த சிந்தாமணி என்ற திரைப்படம், தீபாவளி அன்று வெளியாகி, மறு தீபாவளியையும் கடந்து வெற்றிகரமாக ஓடியது.
மதுரையில், அப்போது இருந்த சில தியேட்டர்களில் ஒன்றான சிட்டி சினிமாவில் அந்தப் படம் ரிலீசாகி ரசிகர்களுக்கு விருந்து படைத்தது.
அப்போது மதுரையை தலைமை இடமாகக்கொண்டு இயங்கிய 'ராயல் டாக்கீஸ்' என்ற நிறுவனம்தான் அந்தப் படத்தை தயாரித்தது.
தமிழகம் முழுவதும் சிந்தாமணி படம் சக்கைப்போடு போட்டது. அவர்கள் எதிர்பார்த்த வசூலைவிட அதிகமாக ஈட்டிக்கொடுத்தது. அந்த லாபத் தொகையை எப்படித் திரைப்படத் தொழிலில் பயன்படுத்துவது என ஆலோசித்தனர். ஏற்கனவே சிட்டி சினிமா தியேட்டரை உரிமையாளர்கள் 4 பேரும் குத்தகைக்கு எடுத்துத்தான் நடத்திவந்தனர். எனவே அந்த லாபத் தொகையில் புதிதாக ஒரு தியேட்டரைக் கட்டுவது என்ற முடிவுக்கு வந்தார்கள்.
1938-ல் கட்டுமான பணியை தொடங்கினார்கள். அதற்கு முன்மாதிரியாக இருந்தது, லண்டனில் உள்ள ஒரு திரையரங்கம்தான்.
1936-ம் ஆண்டில் தியேட்டர் நிர்வாகத்தினர் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தனர். லண்டன் சென்ற அவர்களுக்கு அங்குள்ள 'ஓடியான்' என்ற தியேட்டரில் படம் பார்க்கும் வாய்ப்புக் கிட்டியது.
அந்தத் தியேட்டர், அதில் இருந்த வசதிகள், தொழில்நுட்பங்கள் அவர்களைக் கவர்ந்தன.
புதிய தியேட்டரைக் கட்டுவது என்ற முடிவுக்கு வந்தபோது, அவர்களின் மனதில் தோன்றியது, லண்டன் ஓடியான் தியேட்டர்தான். எனவே மீண்டும் ஒருமுறை அங்கு சென்று அந்த தியேட்டரின் வசதிகளைப் பார்த்துவந்து, மதுரையில் வடிவமைக்கப்பட்டதுதான் சிந்தாமணி என்கிற, புதிய தியேட்டர்.
1939-ம் ஆண்டு மே மாதம் 13-ந்தேதி முதல் மதுரை சினிமா ரசிகர்களுக்கு அது விருந்துபடைக்கத் தொடங்கியது. அதன்பிறகு தமிழ்நாட்டிலும், வெளி மாநிலங்களிலும் பல தியேட்டர்களின் கட்டிட வடிவமைப்புக்கு சிந்தாமணி தியேட்டர் முன்மாதிரியாக இருந்தது என்பது வேறு கதை!
சினிமா ரசிகர்களுக்கு கொஞ்சமும் குறைவு இல்லாமல் விருந்து படைத்துவந்த அத்தியேட்டர், பின்நாட்களில் குத்தகைக்கு விடப்பட்டு ஓடிக்கொண்டு இருந்தது.
2008-ம் ஆண்டு வரை அதாவது கிட்டத்தட்ட 68 ஆண்டுகள் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது.
இப்படிப்பட்ட சிறப்புகள் அமையப்பெற்ற மதுரை சிந்தாமணி திரையரங்கில் நடிகர்திலகத்தின் இரண்டு திரைப்படங்கள் 200 நாட்கள் ஓடி
மேலும் ஒரு சிறப்பை கொண்டுள்ளது.
நடிகர்திலகத்தின் அந்த திரைப்படங்கள் என்னென்ன பற்றியும் அது பற்றிய மேலதிக விபரங்களையும் இப்போது பார்க்கலாம்.
1959-ஆம் ஆண்டு தீபாவளிக்கு "பாஞ்சாலி', "கண் திறந்தது', "தெய்வமே துணை', "பாகப்பிரிவினை', "அவள் யார்', "அபலை அஞ்சுகம்' என ஆறு படங்கள் திரைக்கு வந்தன.
இதில் சிவாஜி கணேசன் நடித்த "பாகப்பிரிவினை' மதுரை சிந்தாமணியில் 216 நாட்கள் ஓடி வெள்ளிவிழா கண்ட படமாக முத்திரை பதித்தது. வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்படமும் இந்த ஆண்டில்தான் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படமும் மதுரை நியூசினிமாவில் வெள்ளி விழா ஓடியது மேலும் குறிப்பிடத்கத்த செய்தியாகும்.பாகப்பிரிவினை 200 நாட்கள் ஓடியதை அடுத்து இந்த படத்தின் வெற்றிவிழா மதுரை சிந்தாமணியில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் நடிகர்திலகம் உள்பட படத்தில் பங்காற்றிய கலைஞர்களும் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பு செய்தார்கள்.
பாகப்பிரிவினை தயாரான ஒரு சுவையான வரலாறு இது .
பதிபக்தி படத்தில் தயாரிப்பு நிர்வாகியாக வேலை செய்தவர் GN.வேலுமணி . வேலுமணி பதிபக்தி படத்தில் பணியாற்றி வந்த பொழுது ஒரு காட்சியில் நடிகர் திலகம் துப்பாக்கியால் சுடும் காட்சியில் அவர் காலில் தவறி போய் டம்மி துப்பாக்கி குண்டு வெடித்ததால் அவருக்கு காலில் ரத்தம் வந்தது அவரை ஆஸ்பத்திரியில் சந்தித்த சிவாஜி இனிமே நீங்க தயாரிப்பு நிர்வாகி அல்ல என்னை வச்சு ஒரு படம் எடுங்க உங்களுக்கு நிறைய பைனான்ஸியர்ஸ் உதவி தர வருவாங்க நீங்க பெரிய தயாரிப்பாளர் ஆகிடலாம் என்றார் சிவாஜி. அப்படி வேலுமணியின் சரவணா பிலிம்ஸ் உருவாக்கிய முதல் படம் தான் பாகப்பிரிவினை.
ஜி.என்.வேலுமணி அவர்களை 'சரவணா பிலிம்ஸ்' என்கின்ற படக் கம்பெனியின் முதலாளியாக, திரைப்படத் தயாரிப்பாளராக உயர்த்திய பெருமை சிவாஜியையே சாரும்.
மதுரை சிந்தாமணியில் 216 நாட்கள் ஓடியது பாகப்பிரிவினை .இதற்கு அடுத்து 200 நாள் ஓடிய சிவாஜி படம் திரிசூலம்.
அதிகமான தியேட்டர்களில் வெள்ளிவிழா கண்ட திரிசூலம் திரைப்படம் 200 நாட்கள் ஓடியதும் இந்த சிந்தாமணி திரையரங்கில் தான்.
ஒரு திரைப்படம் அந்த மொழியில் அதற்கு முன்பு வந்த அத்தனை படங்களின் வசூலையும் முறியடித்தால் அது 'இன்டஸ்ட்ரி ஹிட் 'எனப்படும்.அப்படி தமிழில் 1979 வரை வந்த அத்தனை படங்களின் வசூலையும் முறியடித்த திரைப்படம் திரிசூலம்.
திரிசூலம் பட விழாவை மதுரையில் நடத்தினார் நடிகர்திலகம். சென்னையில் இருந்த அத்தனை நடிகர் நடிகைகளையும் மொத்தமாக மதுரை பார்த்தது என்றால் அது திரிசூலம் பட விழாவில்தான்
திரிசூலம் பட வெற்றிவிழா ஒரு மாநாடாகவே நடத்தப்பட்டது.அதுவும் இரண்டு நாள் மாநாடு.இந்த விழாவில் பங்கேற்க நடிகர் நடிகைகள் சென்னையில் இருந்து வர தனி விமானமே ஏற்பாடு செய்யப்பட்டது.
தமிழகத்தில் சென்னை உள்பட பல ஊர்களில் சிவாஜியின் பல படங்கள் வெள்ளிவிழா ஓடியுள்ளது என்றாலும் ,
இரண்டு 200 நாள் படங்களை கொடுத்த ஒரே திரையரங்கு மதுரை சிந்தாமாணி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
கருத்துரையிடுக