தமிழக முன்னேற்ற முண்ணனி கட்சியை சிவாஜி கலைத்தது ஏன்?
ஜனதாதளத்தில் இணைந்தது எப்படி ?
சிவாஜி வீட்டுக்கு விபிசிங் வருகை தந்தது எதனால் ?
ஜனதாதள கட்சிக்கும் சிவாஜி செலவழித்த சொந்த பணம் எவ்வளவு?
ஜனதாதளத்தை விட்டு ஏன் விலகினார்?
மீண்டும் காங்கிரசில் சேர சிவாஜி முடிவெடுத்தாரா?
அரசியலை விட்டு சிவாஜி விலக காரணம் என்ன ?
மேற் சொன்ன விஷயங்களை தெரிஞ்சுக்க இந்த பதிவை பாருங்கள்.
முதல்லே விபி.சிங்.ராஜிவ் அமைச்சரவையிலே அமைச்சரா இருந்தவர் வி.பி. சிங்.
காங்கிரஸ்லே நடந்த ஊழலை தட்டிக் கேக்க அதனாலே நடந்த பிரச்சினையாலே காங்கிரஸை விட்டு விலகிட்டார் விபி. சிங்.
ஜனதாதளம்னு கட்சியை தொடங்கினார்.பாரதீய ஜனதாவோட கூட்டு சேந்து அடுத்து வந்த எலெக்சன்லே ஜெயிச்சு பிரதமர் ஆனார்.
விபி.சிங் ஒரு நல்ல நேர்மையான அரசியல்வாதி.
அவர் ஜெயிச்சது சிவாஜிக்கு சந்தோசம். தன்னோட வாழ்த்துக்களை விபி. சிங்குக்கு சொன்னார் சிவாஜி.
தமிழ்நாட்டுலே ஜனதாதளத்தை வளர்க்க வேண்டி சிவாஜியை ஜனதாளத்துக்கு வரும்படி அழைச்சார் விபி.சிங்.
இந்த சூழல்லே தான் தமுமு செயற்குழு கூட்டம் தஞ்சாவூர்லே நடந்துச்சு.தமுமு கட்சியை ஜனதாதளத்தோட இணைச்சுக்கிட்டா தேசிய அளவுலே இருக்கற கட்சியோட பலம் கிடைக்கும்னு எல்லோரும் கருத்து சொன்னாங்க. தமுமு அது வரைக்கும் சிவாஜியோட சொந்த பணத்துலே தான் நடந்துட்டு வந்துச்சு. இந்த மாதிரி சொந்த பணத்துலே கட்சி நடத்துன தலைவர் யாரும் கிடையாதுங்கறத நெனச்சுப் பாக்கணும்.
சிவாஜிக்கும் தன்னை சேந்தவங்களுக்காக ஜனதா தளத்துலே இணைய முடிவெடுத்தார்.23.3.1989 அன்னைக்கு தமுமு ஜனதாதளத்தில் இணைந்து கொண்டது.
விபி சிங் சிவாஜியை தமிழ்நாடு மாநில ஜனதாதள தலைவரா நியமிச்சார்.
இந்த கட்சியும் சிவாஜி தயவாலே தான் நடந்தது.வடக்கு உஸ்மான் ரோட்டுலே நடந்துட்டு இருந்த தமுமு ஆபீஸ்தான் ஜனதாதளத்துக்கும் மாநில ஆபீசா மாறுச்சு..
சிவாஜியை மட்டுமே தலைவரா நெனச்சுட்டு வந்த ரசிகர் படை ஜனதாதளத்திலேயும் சிவாஜிக்காக வேலை செஞ்சாங்க.
23.6.1989 அன்று மியூசிக் அகாடமியிலே மொரார்ஜிதேசாய்க்கு பிறந்தநாள் நினைவு விழா நடந்துச்சு.சிவாஜி தலைமையிலே நடந்த அந்த விழாவுலே ஜெகவீரபாண்டியனுக்கு பேச வாய்ப்பு கிடைக்கலே.அவரோட ஆதரவாளர்கள் சிவாஜிக்கு எதிரா கோஷம் போட்டாங்க.சிவாஜி ரசிகர்கள் சண்டைக்கு போக,சிவாஜி தன்னோட ரசிகர்களைகூப்பிட்டு ,நாம காமராஜரோட தொண்டர்கள். மத்தவங்களை போலே நாம நடந்துக்க கூடாதுன்னு கண்டிச்சார்.
ஜனதாதளத்திலயும் சிவாஜியோட செல்வாக்கு வளந்தா நமக்கு இடைஞ்சல்னு நெனச்சவங்க இருந்தாங்க.
இந்த கால கட்டத்துலே சிவாஜியோட கலைச் சேவைக்காக சிங்கப்பூர்லே பெரிய பிரமாண்டமான பாராட்டு விழா நடந்துச்சு.10000 பேர் கூடுன அந்த மண்டபத்துலே ,சிவாஜி தனக்கு கிடைச்ச கௌரவத்தை பாத்து உணர்ச்சி வசப்பட்டு மயங்கி விழுந்துட்டார்.
சிவாஜியை மருத்துவமனைக்கு கொண்டு போனாங்க. சிவாஜிக்கு எதுவும் நடந்திடக் கூடாதுன்னு சிங்கப்பூர் தமிழர்கள் பிரார்த்தனை செஞ்சாங்க.ஒரு பெண்மணி சர்ச்சுலே ஆயிரம் மெழுகுவர்த்திகளை ஏத்தி சிவாஜிக்காக கண்ணீர் விட்டு பிரார்த்தனை செஞ்சார்.
சிவாஜி நலமுடன் சென்னை திரும்பினார்.
இங்க சென்னையிலயும் சிவாஜியை வரவேற்கிறதுக்காக பெரிய கூட்டம் கூடுச்சு.அவங்க அன்பை பாத்த சிவாஜி ரொம்ப நெகிழ்ந்து போனார்.
சென்னை வந்து சில வாரங்கள்லே மெடிக்கல் செக்கப்புக்காக சிவாஜி மறுபடியும் சிங்கப்பூர் போனார்.சிவாஜி தன்னோட 64 வது பிறந்த நாளை மிக எளிமையா சிங்கப்பூர்லே கொண்டாடினார்.தனக்காக பிரார்த்தனை செஞ்ச சிங்கப்பூர் மக்களுக்கு நன்றி தெரிவிச்சார்.
சிவாஜி உடல்நலம் இல்லாமே சிகிச்சை எடுத்துகிட்ட செய்தி விபிசிங் அவர்களுக்கு வருத்தமா இருந்துச்சு.டெலிபோன்லே சிவாஜி கிட்ட பேசி உடல்நலம் விசாரிச்சார்.டிசம்பர் 9 ம் நாள் அன்னை இல்லத்துக்கு வந்தார் விபி.சிங்.மதிய உணவை அன்னை இல்லத்தில் சாப்பிட்டார் விபிசிங்.மூணு மணி நேரத்துக்கும் மேலே சிவாஜி வீட்டுலே இருந்தார் விபி.சிங்.
இந்த நிகழ்வை பத்தி இளையதிலகம் பிரபு சொன்னது இது:
1990 ஆம் வருசம் கும்பக்கரை தங்கய்யா சூட்டிங்குக்காக நான் மதுரையிலே இருந்தேன்.வீட்டுலே இருந்து போன் வந்தது.23 ம் தேதி இந்திய பிரதமர் விபி.சிங் வீட்டுக்கு வர்றார் .நீ கட்டாயம் வீட்டுலே இருக்கணும் ,இது அப்பாவோட விருப்பம்னு போன் வந்தது இளையதிலகத்துக்கு.
கும்பக்கரை தங்கய்யா பட டைரக்டர் கங்கை அமரன் தயாரிப்பாளர் சங்கிலி முருகன் ஆகியோரிடம் விபரத்தை சொல்லி பெர்மிசன் வாங்கிட்டு பிரபு சார் அன்னை இல்லத்துக்கு வந்தார்.23 ஆம் தேதி வர்ற விபிசிங்கை வரவேற்க 22 ம் தேதியே அன்னை இல்லம் தயாராச்சு.23 ம் தேதி காலை 8.00 மணிக்கு பிரதமர் விபி சிங் அன்னை இல்லத்துக்கு வந்தார்.அவரை சிவாஜி கமலாம்மா வாசல்லே நின்னு வரவேற்று கூட்டிட்டு போனாங்க.குடும்ப உறுப்பினர்களை அறிமுகம் செஞ்சு வைச்சார் சிவாஜி.குடும்பத்தோடு சேர்ந்து புகைப்படம் எடுக்கப்பட்டது.எல்லோருடனும் சேர்ந்து உணவு சாப்பிட்டார் விபி சிங்.இந்திய நாட்டு பிரதமரே எங்க வீட்டுக்கு வந்து கௌரவம் கொடுத்தது ,விருந்தும் சாப்பிட்டது என்னாலே மறக்க முடியாத நினைவுன்னு இந்த நிகழ்வை பத்தி சொல்லியிருக்கார் இளையதிலகம் பிரபு.
ஆரம்ப காலத்துலே இருந்தே சினிமா சினிமான்னு உழைச்ச சிவாஜி பேரன் பேத்திகளோடு சந்தோசமா பொழுதை போக்க வேண்டிய வயசிலயும் ஜனதா தள கட்சிக்காக வேலை செஞ்சார்.
விபி சிங் என்னும் ஒரு நல்ல மனுசனுக்காகவும் ,கொண்ட கொள்கைக்காகவும் சிவாஜி இதை தொடர்ந்தார்.விபி சிங்குக்காக ஜனதாதளத்துலே தொடர்ந்தார் சிவாஜி.
ஜனதாதளத்துலே இருந்த ஜெகவீர பாண்டியன் ,
குமாரதாஸ்,இரா. செழியன் எல்லாம் சிவாஜிக்கு எதிரா மாறுனாங்க.சிவாஜியாலே இதை ஏத்துக்க முடியலே.
ஸ்ரீபெரும்புதூர்லே ராஜிவ் கொலை சிவாஜிக்கு பெரிய வருத்தத்தை கொடுத்துச்சு.
அரசியல் துரோகம், எதிர்ப்புகள் எல்லாம் பாத்து சிவாஜி ஒரு முடிவெடுக்கவும் , தஞ்சை சூரக்கோட்டை பண்ணைக்கு ஓய்வெடுக்கவும் போனார் .
அப்போ ஜனதாதள ஆபீசுக்கு ஒரு போன் வந்தது. நான் சிவாஜிகணேசன் பேசறேன்.நான் சொல்றதை டைப் பண்ணி எல்லா பத்திரிக்கைகளுக்கும் கொடுத்துடுங்க.ஜனதாதள மாநில தலைவர் பொறுப்பில் இருந்தும்,அடிப்படைத் தொண்டன் பொறுப்பில் இருந்தும் இன்று முதல் விலகிக் கொள்கிறேன்.எனது உடல்நிலை தீவிர அரசியலுக்கு ஒத்துழைக்காததால் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுக் கொள்கிறேன்னு சிவாஜி சொல்லிட்டார்.
சிவாஜி மன்ற பொதுச் செயலாளர் ராஜசேகரன் சிவாஜியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முடிவை கை விடும்படி கூறினார்.ஜனதாதள தலைவர்கள் சிலர் ,சிவாஜியின் நலம் விரும்பிகள் பலரும் சிவாஜியிடம் முடிவை மாற்றிக் கொள்ளும்படி கேட்டார்கள்.
இரண்டாவது முறையாகவும் டெலிபோனில் பேசிய சிவாஜி உறுதியாக தன் முடிவை அறிவித்து விட்டார்.எல்லா பத்திரிக்கைளும் சிவாஜி அரசியலில் இருந்து விலகி விட்டதாக பரபரப்பு செய்திகளை வெளியிட்டன.
உஸ்மான் ரோட்டில் இருந்த ஜனதாதள ஆபீசை கைப்பற்ற அந்த கட்சி பொறுப்பாளர்கள் முயற்சிகள்லே இறங்குனாங்க.அவங்களுக்கு கிடைச்ச செய்தி அதிர்ச்சியா இருந்துச்சு.அந்த ஜனதா தள ஆபீசுக்கு அட்வான்ஸ் பணமும் வாடகையும் கொடுத்துக் கொண்டு வந்தவர் சிவாஜி மட்டும்தான் என்ற விபரம் கூட அவர்கள் அறிந்திருக்கவில்லை.
டெல்லியில் பணம் வாங்கி மாநிலத்திலே கட்சி நடத்தறதுதான் நடைமுறை விஷயம்.சிவாஜியோ டெல்லி கட்சிகளுக்கு கூட தன்னோட சொந்த பணத்தை தான் செலவழிச்சு வந்தார்.
ஜனதாதளத்தை விட்டு விலகுன சிவாஜி மேலே இரா. செழியன் ஒரு குற்றச்சாட்டு வெச்சார்.சிவாஜி எந்த வித கணக்கையும் ஒப்படைக்காமே திடீர்னு விலகிட்டார்.கட்சியோட வரவு செலவுகளை சிவாஜி ஒப்படைக்கணும்னு அவர் சொன்னார்.
இது பத்தி சிவாஜியோட உதவியாளரா இருந்த சந்திரசேகர் தினத்தந்தி பத்திரிக்கைக்கு ஒரு அதிரடியான விபரங்களை சொன்னார்.
1989 டிசம்பர் மாசம் தமிழக ஜனதாதள தலைவரா பொறுப்பு ஏத்துகிட்ட சிவாஜி ஜனதாதளத்தை வளர்க்க ரொம்ப பாடு பட்டிருக்கிறார்.கட்சி வளர்ச்சிக்குன்னு மேலிடத்திலே இருந்து எந்த பணமும் வரலே.ஆபீசுக்கு அட்வான்ஸ் பணம் ஒண்ணரை லட்சம் கொடுத்தது சிவாஜி.மாச வாடகை 5000 ரூபாய் கொடுத்துட்டு வந்தவரும் சிவாஜி.மேலிட தலைவர்கள் சென்னை வரும் போதெல்லாம் விமான பயண சீட்டு ,லாட்ஜ் வாடகை செலவுகள் எல்லாம் செலவழிச்சது சிவாஜியோட சொந்த பணத்துலே இருந்துதான்.ஒரு கோடிக்கும் மேலே ஜனதாதள கட்சிக்காக சிவாஜி செலவு செஞ்சிருக்கிறார்.1992 ஆம் வருஷம் விபி சிங் சென்னை வந்தப்போ கட்சி நிதியா நாலரை லட்சம் நிதியும் வசூல் செஞ்சு கொடுத்தவரும் சிவாஜிதான்.ஜனதாதள ஆபீசில் ஒரு குண்டூசி கூட அந்த கட்சிக்கு சொந்தம் கிடையாதுன்னு டீடெய்லா உண்மை விபரத்தை சொல்லி இருந்தார் .
சிவாஜி அரசியலை விட்டு விலகி சிறிது காலம் ஆன பின்பு ஒரு நிகழ்ச்சியில் சிவாஜியை பற்றி இரா. செழியன் கிட்டே கேட்ட போது ,ஜனதாதளத்துக்கு கிடைத்த கர்ணன் சிவாஜி.அவசரத்தில் கட்சிக்குள்ளே சிலர் எடுத்த முடிவு காமராஜர் தொண்டர்களை சிதைச்சிருச்சு.அதுக்கு நானும் உடந்தை என்று கூறினார்.
இதற்கு பின் சில காலம் கழித்து சிவாஜி பற்றி ஒரு பொய்பிரச்சாரம் வந்தது. சிவாஜி காங்கிரசில் மீண்டும் சேரப் போகிறார் என்று. யார் போனாலும் சரி, போகிறவர்களை தடுக்க மாட்டேன் ,என்னுடன் இருக்கும் ரசிகப் பிள்ளைகள் கடைசிவரை என்னுடன் இருப்பார்கள் என்று சொல்லி விட்டார்.அப்படியும் நடிகர்திலகத்துடன் கடைசிவரை லட்சக்கணக்கான ரசிகர்கள் இருந்தார்கள்.அதில் நானும் ஒருவன்.
செந்தில்வேல் சிவராஜ்
கருத்துகள்
கருத்துரையிடுக