பழைய படங்களை பார்க்கும்போது அதில் வரும் காட்சிகளை பார்க்கும் போது இந்த காட்சி எங்கே எடுக்கப்பட்டு இருக்கும் எவ்வாறு எடுக்கப்பட்டு இருக்கும் என்ற ஒரு ஆவல் பலருக்கும் உண்டாகும். அப்படி பலரும் நினைக்கும் எண்ணத்தை நடிகர்திலகம் நடித்த ஒரு படத்திலிருந்து சொல்கிறேன்.
1959 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் நடிகர் திலகம் பத்மினி நடித்த தங்கப்பதுமை .இந்த படத்தின் படப்பிடிப்பு பாபநாசத்தில் 10 நாட்கள் நடைபெற்றது. படப்பிடிப்பு 1958 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5 ம் தேதி தொடங்கி 10 நாட்கள் ஷூட்டிங் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இப்படத்தில் வைத்தியரின் மகனாக மணிவண்ணன் கேரக்டரில் சிவாஜியும் பெரிய செல்வந்தரின் மகளாக வரும் செல்வி வேடத்தில் பத்மினியும் நடித்தார்கள்.உறையூரை களமாக வைத்து எழுதப்பட்ட கதை .
கதாநாயகன் சிவாஜி நாயகி பத்மினி ஆற்றில் சந்திக்கும் காட்சியை எடுக்க வேண்டும்.. இந்த காட்சியை எந்த இடத்தில் எடுக்கலாம் என்று டைரக்டர் சாமி கதாசிரியர்அரு.ராமநாதன் ,
தயாரிப்பாளர் சோமு ஆகியோர் ஆலோசனை செய்து கொண்டிருக்கும் போது ,அங்கே வந்த NSK..மதுரம் தனக்கு தெரிந்த ஒரு இடத்தை சொன்னார்.குற்றாலத்தில் ஆனந்த விலாஸ் என்று ஒரு இடம் உள்ளது . அது ஒரு பண்ணையாருக்கு சொந்தமான இடம் என்று அவர் சொல்ல அந்த இடத்தை அவர்கள் பார்த்தார்கள். காட்சிக்கு ஏற்ற இடம் அது. அந்த இடத்திலேயே காட்சிகள் எடுக்க முடிவு செய்தார்கள்.
1958 ஜுன் மாதம் 5 ந்தேதி தொடங்கியது முதல் கட்ட படப்பிடிப்பு. மேலே சொன்னஇடத்திலும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் படப்பிடிப்பு நடைபெற்றது. படப்பிடிப்புக்காக சுற்றி சுற்றி வந்ததை கணக்கு போட்டால் சுமார் 6000 மைல்கள் நடிகர் நடிகைகள் படப்பிடிப்பு குழுவினர் பிரயாணம் செய்தார்கள்.
காலை 5 மணிக்கே எல்லோரும் எழுந்து விடுவார்கள் .காலை உணவு முடிந்ததும் படப்பிடிப்பு தொடங்கி மாலை சூரியன் தெரியும் வரை படப்பிடிப்பு நடந்தது.சில நாட்கள் சூரிய ஒளி மங்கலாகும் .மழையும் பெய்தது. அப்போது சூட்டிங்கை நிறுத்தி வைக்க வேண்டி வந்தது.
முதல் நாள் பாபநாசத்தை அடுத்துள்ள கிருஷ்ணாபுரத்தில் படப்பிடிப்பு நடைபெற்றது.படத்தில் சித்தராக நடித்த MR.சாமிநாதன்
சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்பட்டது.கிருஷ்ணாபுரம் கிருஷ்ணர் கோவிலில் ,அவர் பாடி நடித்த விதியென்னும் குழந்தை கையில் என்ற பாடல் படமாக்கப்பட்டது.
அவர் அங்கே பாட ,பக்கத்திலேயே பத்மினி ஆடுப் பாடும் ஒரு நடனக் காட்சி இன்னொரு கேமரா வைத்து படமாக்கப்பட்டது.பத்மினி நடித்த ஆடல் பாடல் காட்சிதான் ,என் வாழ்வில் புதுப்பாதை கண்டடேன் பாடல் காட்சி.
அன்று மதியம் ,அங்கே பக்கத்தில் இருந்த பாழும் மண்டபத்தில் ,
வி.ஆர் .ராஜகோபால் ,
முத்துலட்சுமி ,புளிமூட்டை ராமசாமி மூவரும் நடித்த காமெடி காட்சியை படமாக்கினார் டைரக்டர் சாமி.
ராஜகோபால் படத்தில் சிவாஜியின் நண்பனாக வருவார்.
இரண்டாவது நாள் ஆனந்தவிலாஸ் மாளிகையின் பின்புறம் சிவாஜி பத்மினி சந்திக்கும் காட்சிகள் எடுக்கப்பட்டன.அங்கு செல்வந்தர் மகளான செல்வி குளிக்க போவதாகவும் மணிவண்ணனை (சிவாஜியை ) அங்கு போக வேண்டாம் என செல்வியின் பணிப்பெண் சொல்ல ,மணிவண்ணன் நழுவி குளிக்க போவார். செல்வியும் மணிவண்ணனும் ஒரே இடத்தில் நீராடுவது போலே காட்சிகள் எடுக்கப்பட்டன. இருவரும் நேருக்கு நேர் பார்க்கும் போது காதல் வயப்படுவது போல காட்சிகள் எடுக்கப்பட்டன.அதை தொடர்ந்து பல காட்சிகள் படமாக்கப்பட்டன.
அடுத்த நாள் இதே இடத்தில் கதையின் பிற்பகுதிக்கு தேவையான சில காட்சிகள் எடுக்கப்பட்டன.
8 ம் தேதி போதிய சூரிய வெளிச்சம் இல்லை. அதனால் ஷுட்டிங் நடத்த முடியாமல் போனது.
மறுநாள் 9 ம் தேதி மலைப்பகுதிகளில் சிவாஜியும் பத்மினியும் நடந்து செல்வது போலவும்,அவர்கள் இரட்டை மாட்டு வண்டியில் சவாரி செய்வது போலவும் அந்த இடத்தில் காட்சிகள் எடுக்கப்பட்டது.
மணிவண்ணனும் செல்வியும் ஊரை விட்டு போவது போல் காட்சிகள்.
இந்த காட்சியை தொடர்ந்து ,முண்டந்துறையில் நடு வழியில் மரத்தடியில் இருவரும் மரத்தடியில் சமைத்து சாப்பிடுவது போல் காட்சிகள் எடுக்கப்பட்டது.இந்த காட்சியை படமெடுக்கும் போது மழை வந்து தடை செய்தது. அந்த இடம் ரம்மியமான சூழ்நிலையில் இருந்ததால் மழை வந்தாலும் அந்த இடத்தில் சூட்டிங் கண்டிப்பாக எடுத்தேயாகவேண்டும் என்று டைரக்டர் சாமி முடிவெடுத்தார். மழை நிற்க இரண்டு நாட்கள் ஆனது .இரண்டு நாட்கள் காத்திருந்து அங்கு அந்த காட்சிகளை எடுத்து முடித்தார்.
18 ஆம் தேதியன்றும் இந்த காட்சி தொடர்பாக மேலும் சில காட்சிகளை எடுத்தார் .
11 ஆம் தேதி பிரம்மதேசம் என்ற ஊரில் இருக்கும் பிரம்மதீஸ்வரர் என்ற கோவிலில் இரண்டு முக்கியமான காட்சிகளை எடுத்தார் .
பாபநாசத்தில் இருந்து வரும்போது மன்னார்குடி என்ற இடத்தில் தற்செயலாக இந்த கோயிலை கண்டார்கள்.இந்தக் கோவில் அமைப்பு உறையூர் காலத்து பாணியில் இருந்ததால் அங்கே காட்சிகள் எடுக்கப்பட்டன.
செல்வியின் தந்தையும் சித்தரும் அந்த கோவிலில் சந்தித்து செல்வியின் திருமண விஷயத்தைப் பேசுவதாக காட்சிகள் எடுக்கப்பட்டன.
அன்று மாலை கோவிலின் வெளியே யானை மீது அமர்ந்து இளம்பெண்கள் கட்டியம் கூறுவதாக காட்சிகள் எடுக்கப்பட்டன. இந்தக் காட்சிக்காக மூன்று யானைகள் வரவழைக்கப்பட்டன.மூன்று யானைகளில் இரண்டு யானைகளை அரிராம் சேட் கொடுத்து உதவினார்.
இதுதான் தங்கப்பதுமை படத்தின் ஆரம்ப காட்சி.
படப்பிடிப்பு ஆரம்பமான முதல் மூன்று நாட்களில் திருநெல்வேலியில் கட்டபொம்மன் நாடகங்களை நடத்தினார் சிவாஜி கணேசன். நாடகங்கள் இரவு 9 மணிக்கு ஆரம்பமாகும். நாடகம் நடக்கும் இடத்துக்கும் ஆனந்தவிலாஸ் இடத்துக்கும் 36 மைல்கள் தூரம் .சிவாஜி அவர்கள் மாலை வரை சினிமா படப்பிடிப்பபில் கலந்து விட்டு ,அது முடிந்ததும் காரில் திருநெல்வேலியில் இரவு நாடகங்களை நடத்தி விட்டு அதிகாலை 3 மணிக்கு ஆனந்த விலாஸ் வந்து ,காலை 7 மணிக்கு அலுப்போ சோர்வோ இல்லாமல் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.
நாடகம் இல்லாத நாட்களில் சிறு விளையாட்டுகளை நடத்துவார் சிவாஜி. முண்டந்துறையில் படப்பிடிப்பு நடைபெற்ற போது அங்கிருந்த கூழாங்கற்களை எடுத்து யார் அதிக தூரம் வீசுகிறார்கள் என்று சிறு போட்டி வைத்தார். போட்டியில் அதிக தூரம் கல்லை எறிந்து ஜெயித்தவர் யார் தெரியுமா. சிவாஜிதான்.17 அடி தூரம் வீசி எறிந்தார். குறைந்த தூரம் 5 அடி வீசியவர் கதாசரியர் அரு. ராமநாதன்.
இது போலே சோமுவின் மகன் காசியை பந்துபோன்ற சிறிய கற்களை வீசச் சொல்லி அங்கு இருந்த மட்டையை வைத்து கிரிக்கெட் விளையாடினார்.
சிவாஜி அவர்கள் வேட்டை பிரியர் என்பது பலருக்கும் தெரியும். அங்கு இருந்த போது இரண்டொரு நாட்கள் நீண்ட துப்பாக்கியை தோளில் போட்டுக் கொண்டு வேட்டைக்கும் போனார். அவருக்கு சூட்டிங் இல்லாத போது பகல் நேர உணவுக்கு பின்பு இப்படி வேட்டைக்கு போனார். அவருடைய குண்டுக்கு இலக்கானவை சில நீர்க்காகங்கள் தான்.
இந்த படப்பிடிப்புக் குழுவில் 65 பேர் இருந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் தங்க இடமளித்து ,தேவையான வசதிகளை செய்து கொடுத்தவர் ஆனந்தவிலாஸ் பண்ணையார் சிவனுப் பாண்டிய தேவர்.
இவருக்கு அடுத்து பீடிச் சக்கரவர்த்தி முக்கூடல் அரிராம் சேட் ,படப்பிடிப்புக்கு இரண்டு யானைகளை கொடுத்து மேலும் பல வசதிகளை செய்து தந்தார்.
அடுத்து எஸ்.கே. பிக்சர்ஸ் கல்யாண சுந்தரம் ,கணபதி ஆகியோர்.படப்பிடிப்பு நடைபெற்ற போது சுமார் 5000 க்கும் அதிகமான மக்கள் கூடி விட்டார்கள். தயாரிப்பாளரும் டைரக்டரும் தயங்கிய போது இவர்கள் தான் கூட்டத்தை ஒழுங்குபடுத்தி படப்பிடிப்பை நடத்த உதவி செய்தார்கள் .
1958 ஆம் ஆண்டு நடைபெற்ற தங்க பதுமை படப்பிடிப்பு செய்திகள் இவை.
செந்தில்வேல் சிவராஜ்.
கருத்துகள்
கருத்துரையிடுக