ஒரு பெரிய டைரக்டர்னா அவர் டைரக்சன் செஞ்ச படங்கள் ஒரு அலைவரிசைலே அமைஞ்சிருக்கும்.
K.பாலச்சந்தர்னா அவரோட படங்கள் ஒரே அலைவரிசையிலே இருந்தது. பாரதிராஜான்னா அது ஒரு அலைவரிசைலே இருக்கும். ஒண்ணு ரெண்டு படங்கள் மாறி எடுத்திருப்பாங்க. ஆனா எடுத்த எல்லா படங்களையும் வேற வேற களங்கள்லே வேற லெவல் படங்களா மாத்தி காட்டுன சிறப்பக்களை செஞ்சு காட்டுன ஒரு டைரக்டர் லிஸ்ட் தமிழ் சினிமாலே இருக்கு.அப்படிப்பட்ட டைரக்டர்கள் பெரும்பாலும் சிவாஜி யூனிட்டை சேர்ந்தவர்கள்தான். அந்த வரிசைலே பந்துலு கட்டபொம்மன் எடுத்திருந்தா அதுக்கு சம்பந்தம் இல்லாமே தங்கமலைரகசியம்,பலே பாண்டியான்னு வெரைட்டியா பண்ணியிருப்பாரு. AP.நாகராஜன்னா புராண பட மேதைன்னு சொன்னாலும் நவராத்திரி ,தில்லானா மோகனாம்பாள்னு அது ஒரு லைன்லே மிரள வெச்சிருப்பார். இப்படி பல டைரக்டர்களை சொல்லலாம். இந்த ஒரு லிஸ்ட்லே சொல்ல வேணடியவர்தான் இயக்குனர் P.மாதவன்.இவர் டைரக்சன் செஞ்ச எல்லா படங்களும் ஒண்ணுக்கொண்ணு சம்பந்தம் இல்லாத கதைக்களம் சார்ந்த படங்கள் தான்.
அன்னை இல்லம்னு படம் எடுத்தா ,வியட்நாம் வீடுன்னு எடுத்து தான் இந்த மாதிரி கதைகள்ல்லே மட்டும் தான் ஸ்பெசல்ங்கறதை சொல்ல முடியாதபடி செஞ்சிருப்பார்.
இவர் சிவாஜியை வெச்சு செஞ்ச வேலைகள் ரொம்ப அதிகம்.அப்படி இவர் செஞ்ச ரெண்டு வேற வேறயான படங்களை பத்திதான் இதுலே நாம பாக்க போறோம்.
பார்த்தசாரதி மாதவன். இந்த பேரை சொன்னா யாருக்கும் தெரியாது. இவரோட இனிசியலை சேத்து P.மாதவன்னு சொன்னா சினிமா பீல்டே சல்யூட் அடிக்கும்.
ஆளை பாத்து எடை போடாதேன்னு சொல்வாங்க. அதுக்கு நல்ல உதாரணம்தான் இந்த P.மாதவன்.
இவர் நடிகர்திலகத்தை வெச்சு 15 படங்கள் டைரக்சன் பண்ணி இருக்கிறார்.அன்னை இல்லம் தான் முதல் படம்.மொதல்லே ஒரு வேற ஒரு நடிகரை வெச்சு ஒரு தோல்வி படம் கொடுத்த பின்னாலேதான் சிவாஜியை வெச்சு அன்னை இல்லம் வெற்றி படத்தை கொடுத்திருக்கார்.ஒரு டைரக்டர் கிட்டே திறமையை நல்லா எடை போட தெரிஞ்சவர் நடிகர்திலகம். மொதல் படம் மணியோசை சரியா போகலேன்னாலும் இவருகிட்டே விஷயம் இருக்குன்னு தெரிஞ்சுதான் சிவாஜி கொடுத்த வாய்ப்புதான் அன்னை இல்லம்.
சிவாஜியை வெச்சு மாதவன் எடுத்த பட்டிக்காடா பட்டணமா தங்கப்பதக்கம் இன்டஸ்ட்ரியை அதிர வெச்ச படங்கள். ஒண்ணு கிராமக்கதை.இன்னொன்னு போலீஸ் கதை.
கதை வசன கர்த்தா பாலமுருகன் மதுரை மாவட்டத்தை சேர்ந்தவர்.அந்த மதுரை மாவட்ட கலாச்சாரத்தை மையமா வெச்சு ஒரு கதையை சிவாஜிக்காக ரெடி பண்ணி வெச்சிருந்தார்.அந்த படந்தான் பட்டிக்காடா பட்டணமா. இந்த படத்தை டைரக்சன் செஞ்சவர் தான் P.மாதவன்.
இந்த படத்துக்கு முன்னாலயே பல கிராம படங்கள்லே சிவாஜி நடிச்சிருந்தாலும் இது ரொம்பவே ஸ்பெசல்னுதான் சொல்லணும்.இந்த படத்துக்கு முன்னாலேயே சிவாஜி கொண்டையெல்லாம் வெச்சு நடிச்சிருக்கார்.இந்த படத்துக்கு சிவாஜியோட மேக்கப்பை பாத்தா ரொம்ப வித்தியாசம்னு சொல்ல முடியாது. ஆனா எந்த படத்துலயும் செய்யாத அந்த கொண்டை முடி அலங்காரத்தோட மூக்குலே ஒரு மூக்குவாளி போட்டு சிவாஜி வந்து நின்னப்போ அது வேற லெவல் கம்பீரமா இருந்தது.
இந்த படத்தோட சூட்டிங் மதுரை சோழவந்தான் கிராமத்துலே நடந்துச்சு.சிவாஜியோட அந்த கொண்டை மேக்கப்பை முதல் நாள் பார்த்த அந்த பகுதி மக்கள் அடுத்த நாள் சிவாஜி மாதிரியே அதே ஸ்டைல்லே கொண்டையை வெச்சு சூட்டிங் பாக்க வந்தாங்களாம்.
இந்த படத்தோட மூக்கையா சேர்வை கதாபாத்திரம் மதுரை மாவட்டத்திலே முக்குலத்தோர் இனத்துலே ஒரு பிரிவை சார்ந்த சேர்வைன்னு பட்டத்துக்குரிய அகம்படியார் இனத்தை சேர்ந்தவங்ளை பிரதி பலிச்ச பாத்திரம்.இந்த படம் வந்தப்போ இந்த இனத்தை சேந்தவங்க எல்லாம் வண்டிகளை கூட்டம் கூட்டமா கட்டிட்டு வந்து மதுரை சென்ரல் தியேட்டரையே அலற வெச்சிருக்காங்க. அப்படியோரு வண்டிக் கூட்டம் எந்த படத்துக்கும் வந்ததில்லே.
கிராமிய படங்கல்லே இது ஒரு பெரிய மாஸ் மசாலா அதிரடி திரைப்படமா அமைஞ்சது.படத்தோட அலப்பறைகளுக்கு என்னென்ன காட்சிகளை பக்காவா சேக்கணுமோ அதயெல்லாம் கச்சிதமா சேத்திருந்தார் மாதவனும் பாலமுருகனும்.
படம் எந்த ஒரு தியேட்டர்லயும் எந்த ஒரு காட்சிலயும் விசில் சத்தமோ கை தட்டலே விழாமேயே இருக்கக் கூடாதுன்னு நெனச்சு வேலை செஞ்சிருப்பார் மாதவன்.
அதுக்கேத்த மாதிரியே அதிரி புதிரியா பாட்டுகளையும் இசையையும் போட்டிருப்பார் மெல்லிசை மன்னர்.கேட்டுக்கோடி உருமி மேளம், அடி என்னடி ராக்கம்மா ரெண்டு பாட்டுமே கிராமங்கள மட்டுமில்லாமே நகரங்களையும் அலற வைச்சது .மாட்டு வண்டி ரேஸ் ,கம்புச்சண்டை ,சாந்தி தியேட்டர் பத்துன கமெண்ட் ,
சிவாஜியோட அந்த வெஸ்டர்ன் கெட்டப் முகேஷ் கேரக்டர் ,இப்படி இன்னும் பல விஷயங்கள்னு படம் பர பரன்னு போகும்.
மதுரை சென்ட்ரல் தியேட்டர்லே 182 நாட்கள் ஓடுன படம் இது.
தொடர்ந்து 139 காட்சிகள் ஹவுஸ் புல்லா ஓடுன படமும் கூட.
இந்த படம் மதுரைசென்ட்ரல் தியேட்டர்லே மட்டும் கலெச்சன் பண்ணுன தொகை 5,61,000.இந்த வசூல் அதுக்கு முன்னாலே எந்த படமும் செய்யலே. இந்த படம் வந்த பின்னாலயும் ஏழு வருசமா அந்த வசூல் சாதனையை முறியடிக்கலே.1972 ஆம் ஆண்டுக்கான சிறந்த படமா மத்திய அரசு இந்த படத்தை தேர்வு செஞ்சது. பிலிம் பேர் பத்திரிக்கையும் சிறந்த படத்துக்கான விருதை கொடுத்தது.
இந்த படத்தோட100 நாள் வெற்றி விழா மதுரை சேலம் திருச்சி நகரங்கள்லே அந்த அந்த தியேட்டர்கள்லே நடந்துச்சு. அந்த விழாக்களில் எல்லாம் சிவாஜியும் பட யூனிட்டும் கலந்து கொண்டது.மதுரைலே 182 நாள் வெற்றிவிழாவுலே மறுபடியும் சிவாஜிகலந்துகிட்டார்.மதுரை மக்களோடகூட்டத்தாலே மதுரையே திணறிப்போச்சு. சிவாஜி ஜெயலலிதா ஜீப்புலே வந்து அவங்க வரவேற்பை ஏத்துகிட்டார்.
சென்னைலே நடந்த வெற்றி விழாவில் காமராஜர் கலந்து கொண்டதோட நடிகர் நடிகைகளுக்கு பரிசு கேடயங்களை கொடுத்தார் .சிவாஜி கொஞ்சம் வித்தியாசமா ஒரு ஏர்க்கலப்பையை காமராஜருக்கு பரிசா வழங்கினார்.
சிவாஜியோட கிராமிய படங்கள்லே ஒரு அதிரடி மாஸ் மசாலா படந்தான் பட்டிக்காடா பட்டணமா. இதை டைரக்சன் செஞ்சவர்ங்கற பெருமை P.மாதவனுக்கு இருக்கு.
அடுத்ததா தங்கப்பதக்கம்.
இந்தியா முழுதும் ஒரே நாள்லே ரீலீசான முதல் தமிழ் படம் தங்கப்பதக்கம்.
பட வெளியீட்டுக்கு முன்னாலேயே 20 நாட்களுக்கு முன்பே 103 காட்சிகளுக்கு ரிசர்வேசன் முடிஞ்ச படம் இது. செய்தி பேப்பர்களில் முழுப்பக்கம் விளம்பரங்கள் அதிக அளவுலே செய்யப்பட்ட படம் இது.
திருவனந்தபுரம் பாலக்காடு ஹைதராபாத் நெல்லூர் ஆகிய ஊர்களில் 50 நாட்களுக்கு மேல் ஓடுன படம் இது...
இப்படி இன்னும் நிறைய ரெக்கார்டுகளை சொல்லிட்டேபோகலாம்.
இந்தப் படத்தோட கதை உருவாக்கப்பட்டதே ஒரு ஆச்சர்யமான விஷயம் தான்.சோ நடத்துன துக்ளக் பத்திரிக்கைலே இயக்குனர் மகேந்திரன் வேலை செஞ்சுட்டு இருந்த காலம் .டேபிள்லே ஒரு அமெரிக்க பத்திரிக்கை ஒண்ணு கிடக்குது.அந்த பத்திரிக்கையோட அட்டை படத்தை பார்க்கிறார் மகேந்திரன்.அந்த படத்துலே ஆங்கில நடிகர் ஜான் வெயின் குதிரைலே உக்காந்து சாட்டையை வீசற மாதிரி இருந்துச்சு. ஜான் வெயினோட ஒரு கண்ணு கறுப்புத் துணியாலே கட்டப்பட்டிருக்கு. இதை பார்த்த மகேந்திரனுக்குள்ளே ஏதோ ஓடுது. பொறி தட்டுன மாதிரி இருக்கு.
அப்ப க்ளிக் ஆச்சு ஒருகதை. அந்த பத்திரிக்கைலே பாத்த படத்துக்கும் தன்னோட மனசுக்குள்ள தோணுன கதைக்கும் எந்த சம்பந்தமும் இருக்கற மாதிரி தெரியலே.ஆனாலும் அப்ப மகேந்திரன் மனசுல ஓடுன ஒரு வரிதான் தங்கப்பதக்கதுக்கான மூல விதை. அதைஅப்படியே டெவலப் பண்ணி திரைக்கதை அமைச்சுட்டார்.
சட்டத்துக்கு முன்னாலே யாரா இருந்தாலும் ஒண்ணுதான்ங்கறதுதான் அந்த ஒற்றைக்கண் ஜான்வெய்ன் போட்டோ சொன்ன கரு.
மொதல்லே நாடகமாச்சு. நாடகம் சிவாஜியாலே சினிமாவா மாறுச்சு. போலீஸ் ஸ்டோரின்னா SP.சௌத்ரிதான்னு சொல்ல வெச்ச படம்.
மாதவன் டைரக்சன்லே தங்கப்பதக்கம் ஆயிரம் சர வெடி பட்டாஸா இருந்துச்சு. ஒவ்வொரு காட்சி மட்டுமல்ல. ஒவ்வொரு ஷாட்டையும் அவ்வளவு கச்சிதமா பண்ணி இருப்பார்.எந்த ஆங்கிள்லே சௌத்ரியை காட்டுனாலும் மிரட்டற மாதிரி சிவாஜி பண்ணி இருப்பார்.
சௌத்ரிக்கு பின்னாலே எத்தனையோ போலீஸ் கேரக்டர்கள் வந்தாச்சு.பின்னாலே வந்த அந்த போலீஸ் கேரக்டர்கள் எல்லாம் மாறி மாறி சௌத்ரிக்கு பக்கத்துலே கூட வர முடியாமே அடுத்தடுத்த இடங்கள்லே நிக்குது. சௌத்ரி எப்ப வந்தாரோ அப்ப இருந்து அந்த பொசிசன்லே இருந்து மாறவே இல்லே.
தங்க பதக்கம் நாடகமா நடந்தப்போ ஒரு ஆச்சர்யமான விஷயம் இருக்கு.அந்த நாடகத்துலே தான் நடிக்கலாம்னு சிவாஜி முடிவெடுத்த பின்னாலே ,மூணு நாள் தொடர்ந்து சாயந்தர நேரம் மட்டும் வசனங்களை மகேந்திரன் சிவாஜிக்கு வாசிச்சு காட்டி இருக்கிறார்.நாலாவது நாள் ஒத்திகை நடக்குது. சௌத்ரி வேஷத்துலே வேற ஒரு சிவாஜி மன்ற நடிகர் நடிக்கிறார். சிவாஜிஅந்த நாடகத்தை பார்க்கிறார் .எல்லோரும் நடிக்கறத கவனமா பார்க்கிறார் சிவாஜி.
அஞ்சாவது நாள் நாடகம் நடக்குது.சிவாஜி எந்த வித ஒத்திகையும் செய்யலே. அன்னைக்கு மத்தியானம் நாடக அரங்கத்துக்கு வர்றார்.சாப்பிட்டு விட்டு ,கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு அவர் ஒருத்தரே தனியா நடிச்சு பாத்துக்கிறார்.கூட இருந்தவங்களுக்கு கொஞ்சம் பயம் ,அதிர்ச்சி. இடையிலே வசனம் ஏதாவது விட்டுப் போனா எப்படின்னு ? சாயந்தரம் நாடகம் மியூசிக் அகாடமி ஹால்லே நடக்குது. உக்கார இடம் இல்லாமே கூட்டம் .நாடகம் ஆரம்பிக்குது. முடியுது. எந்த இடமும் ஒரு பிசிறில்லாமே வவசனங்களை பேசி அசத்தினாராம் நடிகர்திலகம்.ஒரு தடவை கூட ரிகர்சல் பாக்காமே சிவாஜி செஞ்சதை பாத்து எல்லாரும் ஆச்சர்யப்பட்டாங்களாம்.
இன்னைக்கு வரைக்கும் ஒரு பிரமிப்பை கொடுத்துட்டு இருக்கிற படம் தங்கப்பதக்கம்.
மாதவனோட உழைப்புக்கும் ஒரு கௌரவம் கொடுத்த படம் இது.
மொத்தத்தில, ஒருபுறம் மண் சார்ந்த கிராமிய உணர்வுகளின் ஆரவாரம், மறுபுறம் சட்டத்தின் ஒழுங்கு மற்றும் தீவிரமான எதார்த்தம் என, 'பட்டிக்காடா பட்டணமா' மற்றும் 'தங்கப் பதக்கம்' இரண்டும் தமிழ் சினிமாவின் இரண்டு துருவங்களாக அமைந்தன. இந்த இரு வேறுபட்ட களங்களிலும், வெற்றிக் காவியங்களைப் படைத்ததன் மூலம், இயக்குனர் P. மாதவன் ஒரு ஃபார்மேட்டுக்குள் அடங்காத, எல்லா விதமான கதைக்களங்களுக்கும் உயிரூட்டத் தெரிந்த ஒரு தலைசிறந்த படைப்பாளி என்பதை நிரூபித்தார்.
இவரது திறமைக்குச் சான்றாக விளங்கும் இந்தப் படங்கள், தமிழ் சினிமாவின் கல்வெட்டுகளாக இன்றும் நிலைத்திருக்கின்றன.
செந்தில்வேல் சிவராஜ்
கருத்துகள்
கருத்துரையிடுக