இளையதிலகம் பிரபு...
பெரியதம்பி பட சூட்டிங் பொள்ளாச்சியில் நடந்தது. 1996 ஆம் வருசம். அன்னைக்கு கடைசிநாள் சூட்டிங். பொள்ளாச்சி வந்தார்னா போய் பாக்கறது வழக்கம். நான் பொள்ளாச்சிதான். கடைசி நாள் சூட்டிங்காச்சே ..போய் பாத்துட்டு வந்திடலாம்னு நாங்க போனோம்.போக லேட் ஆயிடுச்சு. பிரபு சாருக்கு சூட்டிங் முடிஞ்சு பிளைட்டுக்கு போயாகணும். அந்த அவசரத்திலயும் ,சூட்டிங்லே இருந்த அத்தனை தொழிலாளிகளுக்கும் புதுத்துணி அன்பளிப்பை தன் கையாலேயே கொடுக்கறார்.
படத்துலே வேலை செஞ்ச ஒரு தொழிலாளி சொன்னார்:அவுட்டோர் சூட்டிங் வந்தாலே பிரபு சார் இப்படித்தான். எல்லாருக்கும் ஏதோ ஒண்ணு செஞ்சுதான் அனுப்பி வைப்பார்.நான் பல சூட்டிங்லே பாத்திருக்கேன்னு சொன்னார்.தயாரிப்பாளர் பண்றத இவர் செய்யறாறேன்னு நாங்க யோசிச்சோம்.இந்த மாதிரி தெரியாத விஷயத்தை தான் அம்மா கிரியேசன் சிவா ரெண்டு மூணு வருசத்துக்கு முன்னாலே ஒரு யூடியூப் சேனல்லே சொன்னார்.பிரபுவுக்கு தயாரிப்பாளர் சொன்ன சம்பளத்துலே பாதிதான் சூட்டிங் முடிஞ்சதும் கிடைக்கும். பாதி சம்பளம் இப்படிப்பட்ட செலவுகள்லே போயிடும்.
இன்னொரு சம்பவம்.ராஜகுமாரன் சூட்டிங் .ஆடி வரட்டும் மயிலைக்காளை பாட்டு சூட்டிங் பொள்ளாச்சி சேத்துமடைலே நடக்குது. அந்த பாட்டு ஆயிரக்கணக்கான கிராமத்து ஆளுகளை வெச்சு சூட்டிங் நடந்தது. அந்த கிராமத்து ஆட்களுக்கு கூலி, மத்தியான சாப்பாடு இருக்கு. மத்தியானம் போட்ட சாப்பாடு கெட்டுப் போன சாப்பாடா இருந்துச்சு. கிராமத்து ஆட்கள்னா சொல்லவே வேணாம் .பெரிய ரகளை .சூட்டிங் ஆளுகளை அடிக்க போயிட்டாங்க. ஒரு ஓலை குடிசை போட்டு ,அதுக்குள்ளே மீனா ,நதியா ,பிரபு முக்கிய நடிக நடிகையர் லஞ்ச்லே இருக்காங்க. கிராம ஆளுக குடிசையோட ஓலைகளையெல்லாம் பிச்சு எறியறாங்க. ஒரே கூச்சல் .குழப்பம்.பிரபு என்னன்னு கேக்க வெளியலே வர்றார். அந்த மாதிரி நேரத்துலே வர்றது ஒரு ஆபத்தும் கூட. பிரபு வந்து நிக்க ,ஏக கூச்சல்லே கத்தறாங்க. யாரு முன்னாலே நின்னு கத்தறாங்களோ அப்படியே அவங்க கைய பிடிச்சு அன்பா இழுக்கறார் பிரபு. அந்த கை இழுப்புலேயே எல்லாரும் அடங்கி போறாங்க. எவ்வளவு பெரிய ஆளு..நம்மளை சகஜமா கை இழுத்து ஆதரவா பேசறாரேன்னு ஒரு சந்தோசம் வந்துச்சு. அவங்களுக்குன்னு சாப்பாடு போடற வேலையை பொள்ளாச்சிலே ஒரு கேட்டரிங் சர்வீசுக்கு விட்டுருந்தாங்க. அவங்க தயாரிப்பு நிர்வாகி கிட்டே அதிக பணம் வாங்கிட்டு குறையான சாப்பாடு போட்ட விஷயம் தெரிஞ்சு அதையும் கண்டிச்சார்.பிரபு மட்டும் அப்ப வரலேன்னா குடிசைலே இருந்த நடிகை மீனா நதியா கூட இருந்த நடிகை நடிகர்களுக்கு ஏதாவது அசம்பாவிதம் நடந்திருக்கலாம்.அது ஒரு வன்முறை சூழல் .தைரியமா வந்து இந்த பிரச்சினையை சமயோசிதமா முடிச்சு வெச்சார் இளையதிலகம்.இது மாலைமுரசுலே பெட்டிச் செய்தியா வந்துச்சு. பிரபுவுக்கு பக்கத்துலே இருந்து நான் பாத்த சம்பவம்.
ஊட்டி சூட்டிங்.. ஒரு தடவை பிரபு போயிருந்தப்போ அங்க இருந்த மலை வாழ் மக்களுக்கு சரியான சாலை வசதி இல்லாமே சிரமத்துலே இருந்ததை பிரபு கிட்டே அந்த மக்கள் சொல்லி இருக்காங்க.பிரபு சென்னை வந்ததும் அப்ப இருந்த மினிஷ்டர் கிட்டே இது பத்தி சொல்ல அடுத்த வாரமே ரோடு போட்டாச்சு. இதுவும் பத்திரிக்கைலே செய்தியா வந்திருக்கு. ஏன் இதை சொல்றேன்னா இதெல்லாம் ஆதார பூர்வமான சம்பவங்கள் தான்.இது மாதிரி இளையதிலகத்தை பத்தி சொல்ல நிறையவே விஷயங்கள் இருக்கு.
அதனாலே தான் நடிகனில் ஓர் அவன் தான் மனிதன்னு சொல்றேன்.
அவரோட தனிப்பட்ட குணங்கள் இவ்வளவு இருந்தாலும் சினிமா கேரியர்லே பிரபு என்ன பண்ணி இருக்கிறார் .அதையும் சொல்லணும்.
பெரிய டைரக்டர்களோட ஒத்துழைப்புலே பிரபு வளரலே.75 க்கும் மேலே புதிய அறிமுக இயக்குனர்களோட வாழ்க்கைக்கு திருப்பு முனையா இருந்திருக்கிறார்.இத்தனை டைரக்டர்களை அறிமுகம் செஞ்சதுலே பிரபு தான் நெம்பர் ஒண்ணா இருக்கிறார்.
ஒரு வருசத்துலே 12 படம் நூறு நாள் ஓடுன சாதனையையும் பிரபுதான் செஞ்சிருக்கிறார்.மாசத்துக்கு ஒரு படம் கணக்கு வருது.
1991 லே வந்த சின்னதம்பி படம்தான் அதுக்கு முன்னாலே வெளியான எல்லா பட சாதனையும் முறியடிச்ச வரலாறை முதன் முதலா செஞ்சிருக்கு.46 தியேட்டர்லே 100 நாள் ஓடுன முதல் படம் சின்னதம்பிதான்.
நடிகர்திலகம் எப்படி ஒரே நாள்லே ரெண்டு படம் வெளியிட்டு ரெண்டு படத்தையும் 100 நாள் சாதனை படமா ஆச்சோ அது மாதிரி பிரபுவும் ஒரே நாள்லே ரெண்டு படம் ரிலீஸ் பண்ணி ரெண்டு படங்களும் 100 நாள் ஓடி சாதனை செஞ்சிருக்கு.இதையும் ரெண்டு தடவை செஞ்சிருக்கிறார்.
கலியுகம் பூவிழிராஜா
அறுவடைநாள் பாலைவன ரோஜாக்கள்.
இளையதிலகம் பிரபுவோட சேந்து நடிக்காத நடிகர்களே இல்லைன்னு சொல்லலாம். பிரபு அளவுக்கு மத்த நடிகர்களோட சேந்து நடிச்ச நடிகர்கள் யாரும் இல்லே.
பிரபு கிட்டே எந்த ஈகோவும் கிடையாது . எங்க அவரை பாத்தாலும் பொதுமக்கள் அவர்கிட்டே சகஜமா பேசி பாக்கறத பாக்கலாம். விமான நிலையத்துலே இருந்து வெளிய வர்றப்போ நடிகர்கள் எவ்வளவு ஸ்பீடா வெளியலே போக முடியணுமோ அவ்வளவு ஸ்பீடா போயிடுவாங்க. பிரபு கிட்டே இதெல்லாம் கிடையாது. யாராவது சில பேர் அவர் கிட்டே நின்னு பேசி போவதைத்தான் நாம பாக்க முடியும்.
பிரபு நடிக்க வர்றதுக்கு முன்னாலே ,சிவாஜி புரொடொக்சன் தயாரிச்ச படங்களுக்கு போனா ,பிரபுவை சும்மா உக்கார விட மாட்டார் சிவாஜி. யூனிட் காரங்க செய்யற வேலையை எல்லாம் பிரபுவும் செய்வார்.
1982 லே நடிக்க வந்தார்.43 வருசமாச்சு. நடிக்க வந்து முதல் 12 வருசத்துலே 100 படத்துலே நடிச்சு முடிச்சார். 130 படத்துலே ஹீரோவா நடிச்சார் .அதுக்கு பின்னாலே சின்னதும் பெரிசுமான கேரக்டர்கள்லே நடிச்சு இப்போ 250 படங்களை தாண்டிட்டார்.
நடிக்க வந்த புதுசுலே 83 ,84 கால கட்டத்துலே 30,40 படத்துலே பிரபுவை புக் செஞ்சாங்க தயாரிப்பாளர்கள் .இதெல்லாம் சிவாஜி மகன் காரணத்தை வெச்சு. யாருக்கும் படம் பண்ண முடியாதுன்னு சொல்லவே இல்லே. நம்மை நம்பி வந்திருக்காங்க. அவங்களுக்கு முடியாதுன்னு எப்படிச் சொல்றது ?அந்த ஒரு காரணமும் இருக்கு. 85 லே ஒரு சின்ன Gap விழுந்துச்சு. சுதாரிச்சு எந்திருச்சார் பிரபு. 86 லே இருந்து தன்னோட திரை வாழ்க்கையை நல்லா கொண்டு போனார்.
யாராவது ஒருத்தர் கிறுக்குத் தனமா ,கோபமா கேள்வி கேட்டாலும் பிரபு கிட்டே இருந்து அவங்க எதிர்பார்க்கிற ரியாக்சன் கிடைக்காது. அப்படியே பண்பான ஒரு பதிலை சொல்லி அவங்கள அப்படியே மாத்திருவார்.
மொத்தத்துலே இளைய திலகம் பிரபு ஒரு நடிகர்னா ,அந்த நடிகன்லே ஒரு அவன் தான் மனிதன் தான் பிரபு.
செந்தில்வேல் சிவராஜ்.
கருத்துகள்
கருத்துரையிடுக