1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

சிவாஜியும் நல்லி செட்டியாரும்

​நடிகர் திலகம் சிவாஜியும் நல்லி செட்டியாரும்: சில நினைவுகள்
​17.10.1952 தீபாவளி தினத்தன்று பராசக்தி படம் சென்னை பாரகன் தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கிறது. படம் தொடங்கி சிறிது நேரம் கழித்து சிவாஜி படம் பார்க்க வந்து அமருகிறார். அவருடைய இருக்கைக்கு மூன்றாவதாக அமர்ந்திருந்த 12 வயது சிறுவன் சிவாஜிக்கு வணக்கம் சொல்ல, அவரும் திரும்பிப் பார்த்து வணக்கம் சொல்கிறார். அந்தச் சிறுவன் தான் நல்லி செட்டியார். இதுதான் நல்லியின் முதல் சிவாஜி தரிசனம்.

​பள்ளிப் படிப்பை முடித்த நல்லி செட்டியார் கடையின் வியாபாரத்தை கவனிக்கத் தொடங்கினார். நல்லி கடைக்கு சிவாஜியின் துணைவியார் கமலாம்மாள் அடிக்கடி வந்து புடவைகள் வாங்கிச் செல்வார். கூட்டுக்குடும்பமாக வசித்து வந்த சிவாஜி குடும்பத்தாருக்கு துணிகள், புடவைகள் எடுத்துத் தருபவர் கமலாம்மாள் தானாம். படப்பிடிப்பிலிருந்து திரும்பி வரும் சிவாஜி வீட்டில் கார் இல்லாமல் இருந்தால், நல்லி கடைக்கு புடவை எடுக்க கமலாம்மாள் சென்று விட்டார்களா என்று கேட்பாராம்.

​1966-இல் சிவாஜி, பத்மினி, கே.ஆர். விஜயா நடித்த இருமலர்கள் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்றது. குடும்பத்தோடு கொடைக்கானல் சென்ற நல்லி செட்டியார், படப்பிடிப்புக்கு வந்திருந்த சிவாஜி-கமலாம்மா தங்கியிருந்த அதே ஹோட்டலில் தங்கியிருந்தாராம். அப்போது கமலாம்மாள் நல்லியை சிவாஜிக்கு அறிமுகம் செய்து வைத்தாராம்.
​உடனே சிவாஜி, "ஐயா, உங்களைப் பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். நான் சம்பாதிப்பதில் பாதி பணத்தை உங்கள் கடையில் புடவை வாங்கியே எங்க வீட்டம்மா காலி செய்றாங்க" என்று கிண்டலாகப் பேசினாராம். 

பின்னர் நல்லி குடும்பத்தாரோடு எந்தவிதமான பந்தாவும் இல்லாமல் சிவாஜி அன்பாகப் பழகியது நல்லியின் மனதை வெகுவாகக் கவர்ந்ததாம். அதைத் தொடர்ந்து அடிக்கடி விழாக்கள், திருமண நிகழ்ச்சிகளில் இருவரும் சந்திக்கும் போது பேசிக்கொள்வார்களாம். ஒவ்வொரு முறையும் சிவாஜியுடன் பேசுவது ஒரு இனிய அனுபவமாகவே இருக்கும் என்று நல்லி கூறினார்.

​ஒருமுறை புதுடெல்லியிலிருந்து விமானத்தில் நல்லி செட்டியாரும் பயணம் செய்தார். சிவாஜியும் அதே விமானத்தில் இருந்தார். அப்போது டெல்லியிலிருந்து வரும் விமானங்கள் ஹைதராபாத்தில் 15 நிமிடங்கள் நின்ற பின் மீண்டும் புறப்படும்.
​ஆனால், குறிப்பிட்ட நேரத்தில் விமானம் புறப்படவில்லை. விமானத்திலிருந்து கீழே இறங்கிய நல்லி செட்டியாரும் சிவாஜியும் பேசிக்கொண்டிருந்தார்கள். ஒரு மணி நேரமாகியும் விமானம் புறப்படவில்லை. அப்போது அங்கு வந்த விமானப் பணிப்பெண் சுகன்யாவை அழைத்து, "என்னம்மா வண்டி எப்போது புறப்படும்? இப்படி எங்களை இந்த இடத்தில் தவிக்க விட்டுவிட்டீர்களே" என்று கேட்டார்.
​அதற்கு அந்தப் பெண்மணி, "சார், சிறு தொழில்நுட்பச் சிக்கல். விமானத்தின் கதவை மூட முடியவில்லை. சிறிது நேரத்தில் சரி செய்து விடுவார்கள்" என்று கூறி சிவாஜிக்கு நமஸ்காரம் செய்தாராம். உடனே சிவாஜி அந்தப் பெண்மணியின் தலையில் கைவைத்து, "விரைவில் திருமணம் செய்து கொண்டு நன்மக்களைப் பெற்று நல்வாழ்வு வாழ ஆண்டவன் அருள் புரிவாராக" என்று ஆசிர்வாதம் சொன்னாராம். கலைவாணியின் நற்பெரு பெற்ற சிவாஜியின் ஆசிர்வாதம் பெற்ற அந்தப் பெண்மணி இப்போது நல்ல நிலையில் இருக்கிறார் என்று நல்லி கூறினார். இதுதான் சிவாஜியின் மனிதாபிமானம்.

​தியாகராய நகர் கிருஷ்ண கான சபா அருகில் தற்போது அது டாக்டர் நல்லி கான விஹார் ஏசி அரங்கம். சிவாஜி நாடகங்கள் நடைபெறும் போது நாடகத்தன்று பகல் 2 மணிக்கெல்லாம் அரங்கிற்கு வந்து மேடையின் பின்புறம் ஒரு பெட்ஷீட்டை விரித்து தலைணை வைத்து படுத்து விடுவாராம். அப்போது அங்கு அந்த அரங்கு ஆஸ்பெஸ்டாஸ் சீட்டால் கூரை போடப்பட்டு தென்னங்கீற்றால் மறைக்கப்பட்டிருந்தது.
​நல்லி செட்டியார் சிவாஜியைப் பார்த்து, "நாடகம் தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பால் வந்தால் போதுமே, எந்த வசதியும் இல்லாத இந்த இடத்தில் படுத்து ஓய்வு எடுக்கிறீர்களே" என்று கேட்டாராம். அதற்கு சிவாஜி, "எங்கள் குழு நாடகங்களில் நான் நடிக்கும் பாத்திரம் தனித்தன்மை வாய்ந்தது. அந்தப் பாத்திரங்களில் நடிக்க என்னை பக்குவப்படுத்தி அந்தப் பாத்திரமாகவே மாறுவதற்கு குறைந்தது மூன்று மணி நேரம் ஆகும். அதன் பின்பு நான் மேடையில் நடித்தால் தான் எனது நடிப்பு எனக்குத் திருப்திகரமாக அமைந்து அது ரசிகர்களையும் கவர்ந்திழுக்கும். அதற்காக நான் மற்ற சௌகரியங்களைப் பொருட்படுத்துவதில்லை" என்று கூறினாராம்.
​இதைக் கேட்ட நல்லி செட்டியார், நாடகக் கலைத்தாயின் மேல் சிவாஜி கொண்டிருக்கும் பக்தியையும் நாடகத் தாய்க்கு அவர் செலுத்தும் நன்றிக் கடனையும் எண்ணி எண்ணி வியந்து மற்ற நாடகக் குழு நடிகர்களையும் செயல்களையும் எண்ணிப் பார்த்து சிவாஜி மாதிரி ஒரு தொழில் பக்தி உள்ள நடிகரை உலகின் எந்த நாட்டிலும் காண முடியாது என்று வியந்தாராம்.

​ஒருமுறை நல்லி செட்டியாரும் கிருஷ்ண கான சபா செயலாளரும் சிவாஜியை அவர்களுடைய வீட்டில் சந்தித்து, தங்கள் சபா சார்பாக நடைபெறும் பொங்கல் நாடக விழா தொடக்க விழா தைப்பொங்கல் அன்று நடைபெறுகின்றது, அந்த விழாவில் சிவாஜி கலந்து கொண்டு நாடகக் கலைஞர்களுக்கு விருது வழங்கி சிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்களாம்.
​அதற்கு சிவாஜி, "பல ஆண்டுகளாக நான் பொங்கல் தினத்தன்று எனது சிவாஜி பிலிம்ஸ் அலுவலகம் சென்று என்னுடைய நாடகக் குழுவினர்களுக்கும் அலுவலர்களுக்கும் அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கும் பெரிய வெள்ளிப் பாத்திரத்தில் உள்ள ரூபாய் நாணயங்களை இரண்டு கைகளிலும் அள்ளி ஒவ்வொருவருக்கும் தருவேன். பின்னர் வேலூர் சென்று பெருமாள் முதலியார் குடும்பத்துக்கு மரியாதை செலுத்தி அப்படியே சூரைக்கோட்டையில் உள்ள எனது பண்ணைக்குச் சென்று பொங்கல் மாட்டுப் பொங்கல் ஆகிய பண்டிகைகளை எனது விவசாயத் தொழிலாளர்களுடன் கொண்டாடுவேன். உங்கள் விழாவுக்கு வந்தால் வழக்கமான கடமையை நான் செய்ய முடியாதே" என்று சொன்னாராம். உடனே நல்லி செட்டியார் சிவாஜியின் பண்பையும் பாசத்தையும் எண்ணி வியந்து மற்றொரு முறை வேறு விழாவுக்கு உங்களை அழைக்க வருகிறோம் என்று கூறிவிட்டு திரும்பினார்களாம்.

​1995-இல் செவாலியர் விருது பெற்ற சிவாஜிக்கு சென்னையில் பாராட்டு விழா. விழாக் குழுவைச் சேர்ந்த நல்லியின் நல்ல நண்பர் ஏ.வி.எம். சரவணன் அவர்கள் செட்டியாரை அழைத்து சிவாஜியின் ஒரு புகைப்படத்தைக் கொடுத்து பாராட்டு விழாவில் சிவாஜிக்கு போர்த்த கலை நயம் மிக்க ஒரு பொன்னாடையை சிவாஜி படத்துடன் தயாரித்துத் தர கேட்டுக் கொண்டாராம். சிவாஜி சம்பந்தப்பட்ட எந்தப் பணியையும் ஆர்வத்தோடு செய்யும் நல்லி செட்டியார் கலை நயத்துடன் மிகுந்த வேலைப்பாட்டுடன் தயாரித்துத் தந்த அந்தப் பொன்னாடையை விழாக் குழுவினரும் குறிப்பாக சிவாஜியும் வெகுவாகப் பாராட்டினார்களாம்.

​1998-இல் ஒருநாள் வீட்டில் ஓய்வாக இருந்த சிவாஜியை நல்லி செட்டியார் பார்க்கச் சென்றாராம். அவரைப் பண்போடு வரவேற்று காபி கொடுத்து மாடியில் உள்ள தன்னுடைய அறைக்கு அழைத்துச் சென்ற சிவாஜி பல விஷயங்களை மனம் விட்டுப் பேசினாராம். பேச்சோடு பேச்சாக "பொழுது உங்களுக்கு எப்படிப் போகிறது?" என்று கேட்க அதற்கு சிவாஜி, "பொழுது எனக்கு இப்போது போதவில்லை. இப்போது பேரக் குழந்தைகளுடன் கொஞ்சிப் பேசி விளையாடி குடும்ப வாழ்க்கையை நிறைவாக அனுபவித்துக் கொண்டிருக்கும் இந்த வாழ்க்கை தான் சிறந்த வாழ்க்கை" என்றாராம்.

​ஒருமுறை நல்லி செட்டியார் சிவாஜியின் காலில் விழுந்து நமஸ்காரம் செய்தாராம். உடனே பதறிப்போய் சிவாஜி செட்டியாரின் தோலைப் பிடித்து "ஐயா நான் சாதாரண மனிதன், நாம் மகான்களைத்தான் நமஸ்கரிக்க வேண்டும்" என்று சொன்னாராம். அதற்கு செட்டியார் "நீங்கள் வணங்கத்தக்கவர் கலைவாணியின் அருள்பெற்ற மாமனிதர்" என்று சொன்னாராம். ஆம் ..மாமனிதர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்