நட்புங்கிறது ஒரு அழகான கவிதைன்னா, அதுக்கு இலக்கணமா வாழ்ந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள். திரையில அவர் காட்டாத நவரசங்களே கிடையாது .ஆனா திரைக்குப் பின்னாடி அவர் காட்டின அன்பு இருக்கே... அது ஒரு மகா சமுத்திரம்! ஒருத்தரை அவருக்குப் பிடிச்சுப்போயிட்டா போதும், அந்த உறவை வாழ்நாள் முழுக்க ஒரு பொக்கிஷமா பாதுகாப்பார். அப்படிப்பட்ட ஒரு உன்னதமான, ரத்த பந்தத்தையும் மிஞ்சிய ஒரு நட்பைப் பத்தி இதுலே பாக்கலாம்.
சிவாஜி கணேசன் அவர்களுக்கு 1959-லிருந்து பல நெருங்கிய நண்பர்கள் இருந்தாங்க. சேலம் செல்லமுத்து, வேட்டைக்காரன்புதூர் முத்துமாணிக்கம், ராஜபாளையம் பாப்பராஜான்னு ஒரு பட்டாளமே உண்டு. இவங்க சென்னைக்கு வரும்போதெல்லாம் 'அன்னை இல்லத்துல' சிவாஜியோட உட்கார்ந்து சாப்பிட்டு, மணிக்கணக்கா அரட்டை அடிக்கிறது ஒரு வழக்கமாவே இருந்துச்சு.
அரசியல் ரீதியா பார்த்தா அன்பில் தர்மலிங்கம், மூக்கையாத்தேவர், உசிலம்பட்டி நல்லதம்பி, தஞ்சை கோ. பழனின்னு பெரிய ஜாம்பவான்களே அவரோட நெருக்கமா இருந்தாங்க. ஆனா, இவங்களுக்கெல்லாம் மத்தியில, ஒரு சாதாரண ரசிகனா ஆரம்பிச்சு, பின்னாடி ஒரு தம்பியாவே மாறிப்போனவர்தான் தென்காசி ஆயிரப்பேரியைச் சேர்ந்த சு. இசக்கிப் பாண்டியன் அவர்கள்.
தென்காசி பக்கத்துல இருக்குற ஆயிரப்பேரிங்கிற ஒரு சின்ன கிராமம். அங்க இருந்த இசக்கிப் பாண்டியன் 1954-லேயே சிவாஜியோட தீவிர ரசிகர் ஆயிட்டாரு. இவர் ஒரு சாதாரண ரசிகர் கிடையாது.சிவாஜியை பத்தி யாராவது ஒரு வார்த்தை தப்பாப் பேசினா கூட அவருக்கு ரத்தம் கொதிக்கும். ஒருமுறை அவரோட ஊர்ல ஒருத்தர் சிவாஜியைப் பத்தித் தப்பாப் பேசினதுக்காக, கையில் கம்பை எடுத்து அந்த ஆளை சாத்து சாத்துன்னு சாத்திட்டாராம்! அந்தளவுக்கு சிவாஜி மேல ஒரு தீராத பற்று.
பிற்காலத்துல இசக்கிப் பாண்டியன் சென்னைக்குக் குடிபெயர்ந்து, வீட்டு வசதி வாரியத்துல வேலை பார்த்து, அப்புறம் ஒரு பெரிய கட்டட ஒப்பந்ததாரரா வளர்ந்தாரு.
திரையில நிழலா பார்த்த அந்தச் சிம்மக்குரலோனை, இசக்கிப் பாண்டியன் முதன்முதல்ல நேர்ல பார்த்தது 1964-ல விஜயா ஸ்டுடியோவுலதான். அப்போ 'புதிய பறவை' படத்தோட சூட்டிங் விறுவிறுப்பா நடந்துட்டு இருந்துச்சு. தன் அப்பா சுப்பையாத் தேவரோட எப்படியாவது சிவாஜியை பார்த்திடணும்னு அங்க போனாரு. ஆனா அன்னைக்கு பேச வாய்ப்பு கிடைக்கல.
ஆனா காலம் கனிய ஆரம்பிச்சது. ஒரு சினிமா நண்பர் மூலமா அறிமுகம் கிடைச்சது. 'பரம்பரை காங்கிரஸ்காரர்' அப்படிங்கிற அடையாளம் சிவாஜியோட மனசுல இவருக்கு ஒரு தனி இடத்தையே கொடுத்துடுச்சு. அதுக்கப்புறம் ... சிவாஜியோட வீட்ல ஒரு நிரந்தர உறவாவே மாறிப்போனாரு இசக்கிப் பாண்டியன்.
1971-ல பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் விழாவுல ஆரம்பிச்ச அந்தப் பயணம், இசக்கிப் பாண்டியன் குடும்பத்தோட ஒவ்வொரு அணுவுலயும் கலந்துடுச்சு. 1972-ல இசக்கிப் பாண்டியன் கட்டின புது வீட்டுல சிவாஜி தான் குத்துவிளக்கேத்தி வச்சாரு.
அதுக்கப்புறம் இசக்கிப் பாண்டியன் இல்லன்னா அவரோட தம்பி மூக்கையாத் தேவர் வீட்டு விசேஷம் எதுன்னாலும், அங்க சிவாஜி கணேசன் இல்லாம எந்த மங்கல நிகழ்ச்சியும் நடக்காது.
1975 ஆகஸ்ட் 12... அந்த நாளை சென்னை தாஜ் கோரமண்டல் ஹோட்டல் அவ்வளவு சீக்கிரம் மறக்காது. 'அவன் தான் மனிதன்' படம் 100 நாள் ஓடி சாதனை படைச்ச நேரம். ஒரு ரசிகன் நினைச்சா ஒரு சாதாரண மண்டபத்துல விழா வச்சிருக்கலாம். ஆனா, இசக்கிப் பாண்டியன் சிவாஜிக்கு தரமான கௌரவம் கொடுக்கணும்னு அந்த காலத்துலயே தாஜ் ஹோட்டல்ல பிரம்மாண்ட விருந்துக்கு ஏற்பாடு பண்ணியிருந்தாரு.எல்லாம் சொந்த செலவு..
மேடையில நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் அவர்களும், சின்னப்ப தேவர் அவர்களும் உட்கார்ந்திருக்க... இசைக்கிப் பாண்டியன் ஒரு பெரிய 'வெள்ளிக் கேடயத்தை' சிவாஜிக்குப் பரிசா கொடுத்தாரு. அந்தத் தருணத்துல நடிகர் திலகம் கண்ணுல ஒரு சின்ன ஈரம் தெரிஞ்சது. 'என் தம்பி எனக்காக இதைச் செஞ்சிருக்கான்'னு அவர் மேடையிலயே உருகிப் பேசினாரு. அந்த விழாவுல போடப்பட்ட சாப்பாடும் சரி, அங்க இருந்த அன்பும் சரி... ஒரு ரசிகனுக்கும் தலைவனுக்கும் இருக்குற உறவைத் தாண்டி, ஒரு அண்ணன்-தம்பி உறவா அங்க தெரிஞ்சது!
1984-ல நடந்த ஒரு சம்பவம் .. இசைக்கிப் பாண்டியன் வீட்ல ஒரு கல்யாணம் சில காரணங்களால அவசரமா நடந்து முடியுது. ஒரு மாசம் கழிச்சு சிவாஜியைச் சந்திக்கும்போது இந்த விஷயத்தை மெதுவாச் சொல்றாரு இசக்கி.
அதைக்கேட்ட சிவாஜி 15 நிமிஷம் எதுவுமே பேசாம இசக்கியையே உத்துப் பார்த்துட்டு இருந்தாராம். அப்போ அங்க வந்த மேஜர் சுந்தரராஜன்கிட்ட இசக்கியைக் காட்டி, "மேஜர், இவன் என் தம்பி. இவன் வீட்டுல நிச்சயதார்த்தம் முதற்கொண்டு மறுவிருந்து வரை எல்லாமே நான்தான் முன்னாடி நிப்பேன். ஆனா இப்போ ஒரு கல்யாணத்தை முடிச்சுட்டு என்கிட்ட ஒரு மாசம் கழிச்சு வந்து சொல்றானே" அப்படின்னு ஆதங்கப்பட்டாராம். அந்த வார்த்தையில இருந்த உரிமையும் பாசமும் இசக்கிப் பாண்டியனை அப்படியே அழ வச்சுடுச்சு.
சிவாஜியோட வாழ்க்கையிலே நிம்மதியான நாட்கள்ல்லே ஒண்ணு , அது இசக்கிப் பாண்டியன் ஏற்பாடு செஞ்ச அந்த 10 நாள் குற்றாலப் பயணம்தான். தன் குடும்பத்தோட சிவாஜி அங்க நிம்மதியா ஓய்வெடுத்தாரு. ஐந்தருவியில அதிகாலைக் குளியல், விதவிதமான சாப்பாடு, சாயங்கால நேரத்துல நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகள்னு இசக்கிப் பாண்டியன் அமர்க்களப்படுத்திட்டாரு.
நாட்டுப்புறப் பாடகர்கள் விஜயலட்சுமி நவநீதகிருஷ்ணன் குழுவை கூட்டிட்டு வந்து கலை நிகழ்ச்சிகள் நடத்தி சந்தோசப்படுத்தினார்.
திரும்பி வரும்போது சிவாஜி சொன்னாராம்: "என் வாழ்நாள்ல இவ்வளவு நிம்மதியா நான் இருந்ததே இல்லை இசக்கி". இதைக் கேட்டு இசைக்கி பாண்டியன் ரொம்பவே நெகிழ்ந்து போயிட்டாரு.
சிவாஜி கணேசன் அவர்களோட வீடான 'அன்னை இல்லத்துல' எத்தனையோ விருதுகளும், பாராட்டுப் பத்திரங்களும் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். ஆனா, அங்க இருந்த ஒரு பொருள் மட்டும் பார்க்கிற யாரையும் ஒரு நிமிஷம் அப்படியே கட்டிப்போட்டிடும். அதுதான் அந்தத் தஞ்சாவூர் கலைத்தட்டு! இது சாதாரணத் தட்டு இல்லை, கலை நுணுக்கத்தோட உச்சம்!
சுத்தமான வெள்ளியிலயும், தங்க முலாம் பூசப்பட்ட பித்தளையிலயும் செஞ்ச அந்தத் தட்டோட நடுவுல, விநாயகர் உருவம் ரொம்ப நேர்த்தியா இருக்கும். அந்த விநாயகரைச் சுத்தி, ஒரு மாபெரும் சாம்ராஜ்யமே அணிவகுத்து நிக்கிற மாதிரி, நடிகர் திலகம் திரையில நடிச்ச கட்டபொம்மன், கர்ணன், வ.உ.சி-ன்னு அவரோட வரலாற்று நாயகர் உருவங்கள் குட்டி குட்டி டாலர்களா பதிக்கப்பட்டிருக்கும்.
இப்படிப்பட்ட விலைமதிப்பற்ற ஒரு பொருளை சிவாஜி எல்லாருக்கும் கொடுத்துடல. தன் வாழ்நாள்ல அவர் இந்தத் தட்டை நேர்ல கொடுத்தது ரெண்டே பேருக்குத்தான். ஒருத்தர், நாட்டு எல்லையைக் காத்த ராணுவ கர்னல் லலித் ராய். இன்னொருத்தர், தன் இதயத்தின் எல்லையைக் காத்த தம்பி இசக்கிப் பாண்டியன்!
குற்றாலப் பயணத்துல இசக்கிப் பாண்டியன் காட்டின அந்த அன்பைப் பார்த்துட்டு, 'இதுக்கு நான் என்ன கைமாறு செய்யப்போறேன்?'னு உருகிப்போய், கௌரவமா நினைச்ச அந்தத் தட்டை அவருக்குப் பரிசளிச்சாரு. இது வெறும் பரிசு இல்லை... ஒரு தலைவன் தன் தம்பிக்குக் கொடுத்த 'அன்பின் அங்கீகாரம்'!
காலம் ஓடுச்சு... 2000-வது வருஷத்துல ஒரு நாள் சிவாஜி ரொம்ப உருக்கமா இசக்கிக்கிட்ட ஒரு விஷயம் சொன்னாரு: "இசக்கி, நான் இறந்ததுக்கு அப்புறம் என் உடலைச் சுமந்து போறவங்கள்ள நீயும் ஒருத்தனா இருக்கணும்". இதைக்கேட்டதும் இசக்கி கதறி அழுதுட்டாரு. "அண்ணே, நீங்க இன்னும் நூறு வருஷம் வாழ்ந்து எங்களை வழிநடத்தணும்"னு வேண்டிக்கிட்டாரு.
மகன் பிரபுகிட்ட கூட சிவாஜி அடிக்கடி சொல்வாராம், "ஒரு கூட்டுக்குடும்பமா எப்படி வாழணும்னு இசக்கிப் பாண்டியன் குடும்பத்தைப் பார்த்து கத்துக்கோ"ன்னு. அந்தளவுக்கு அந்தத் தம்பி குடும்பத்து மேல நடிகர் திலகத்துக்கு பெரிய மரியாதை இருந்துச்சு.
பாசத்துக்கு முன்னாடி பதவியோ, புகழோ எதுவுமே பெருசில்லைங்கிறதை இந்த நட்பு நமக்கு உணர்த்துது. ஒரு மகா கலைஞனுக்கும், ஒரு நேர்மையான ரசிகனுக்கும் நடுவுல இருந்த இந்த உறவு ஒரு காவியம். திரையில நாம பார்த்த நடிகர் திலகத்தை விட, நிஜ வாழ்க்கையில அவர் காட்டின இந்த மனிதாபிமானமும் பாசமும்தான் அவரை இன்னைக்கும் மக்கள் மனசுல ஒரு 'உன்னத மனிதனா' வாழ வைக்குது.
தகவல்கள் சேகரிப்பு:
சிவாஜி தரிசனம் புத்தகத்தில் இருந்து..
கருத்துகள்
கருத்துரையிடுக