அண்ணன் ஒரு கோயில்..
ஏற்கெனவே இது போன்ற மையக் கருவில் பல படங்கள் வந்திருந்தாலும் இது ஸ்பெஷலான திரைப்படம்.
ஒரு த்திரில்லர் மிக்ஸிங்கில் அட்டகாசப் படுத்தப்பட்ட திரைக்கதை.பல வித்தியாச காட்சியமைப்புகளில் நம்மை அசத்திய படம்.
நம் கண்களை திரையில் பதிக்க வைத்து விலக்க முடியாதபடி ஈர்க்க வைத்த ஒளிக்காட்சிகள்.அண்ணன் தங்கை பாசத்தை பேமிலி டிராமாவாகவே எந்தவித திருப்பங்களும் இன்றி இதற்கு முன் எழுதப்பட்ட திரைக்கதைகளில் முரண்பட்டு இதுவே படு வித்தியாசம்.ஆல் கிளாஷை ரசிக்க வைக்கும் விதத்தில் இதன் பட காட்சிகள் அமைந்திருக்கும்.
வெள்ளிவிழாவை தொட்டிருக்க வேண்டியது.சிவாஜி படங்களே அதற்கு பிரேக் ஆகி விட்டது.இது வழக்கமான ஒன்றுதான்.இந்த வழக்கமும் இவருக்கு மட்டுமே.
முதல்நாள் முதல்ஷோ பார்த்தவர்களுக்கு
நிறையவே பிரமிப்பில் ஆழ்த்தியிருக்கும் இதன் ஆரம்ப காட்சிகள்.நவீன தொழில்நுட்ப காமிராக்கள் உபகரணங்கள் இன்றியே அன்று படம் எடுத்திருப்பதை இன்று பார்த்தாலும் அந்த சிரத்தையை யோசிக்கவே வைக்கிறது.
தொடக்கத்தில் ஓடிக் கொண்டே வரும் நடிகர்திலகம் திடீரென்று நின்று திரும்பி லுக் விடுவார்.அத்தனை பேரும் தங்களுக்கு பிடித்த வியப்பு வார்த்தைகளில் அதை இங்கே எழுதித் கொள்ளலாம்.
சிவாஜி ரசிகர்களின் மனம் கவர்ந்த காட்சி அது. பரபரக்க வைத்து விடும்.காட்சி தொடர்கள்.காடுகள் ,புற்கள், மலைகள், காட்டாறு என வனத்தை 360 டிகிரியில் அலசும் காமிரா.மனம் ஜிவ்வாகும்.நடிகர்திலகத்தின் நடிப்பில் தான் எத்தனை ஓட்டம்.இதில் ஓட்டத்திலும் எத்தனை நடிப்பு.
இன்றைக்கெல்லாம் இந்த ட்ரோனில் ஆகாசப்பார்வையில் படம் பிடித்து தள்ளுகிறார்களே! இதே வசதி அந்த நாளில் இல்லாமலேயே அக்காட்சிகள் நம்மை மிரளவல்லவா வைத்தது.மோப்பநாய் சகிதம் போலீஸ் படை நடிகர்திலகத்தை விரட்ட பதைபதைக்க அவர் விரைந்துவரும் காட்சிகள் அதைத் தொடர்ந்து அந்த ரயில் நிலைய காட்சிகள், அமானுஷ்ய உலாவல், சுஜாதாவின் அலறல், ஓட்டை உடைத்துக் கொண்டு அறைக்குள் இறங்கும் நடிகர்திலகம்...
சிகரெட் பிடித்தபடி ,ஓவர்கோட், பெரிய பிரேம் கண்ணாடி சகிதம் நடிகர்திலகத்தின் அந்த போஸ்கள் நம்மை திடீரென ஒன்றை யோசிக்க வைக்கும்.
"'என்ன இது ' அண்ணன் ஒரு கோயில் குடும்பக் கதை என நினைத்து வந்தால் இங்கே ஆங்கிலப் பட பாணியில் காட்சிகள் நகர்ந்து கொண்டிருக்கின்றனவே"..
இப்படித்தான் நம் மனது சிந்திக்க ஆரம்பித்திருக்கும்.
பார்வையாளனின் நினைப்பை முற்றிலும் தகர்த்திருக்கும்.
ஒரு சிறந்த த்ரில்லரில் பார்வையாளனின் எண்ணங்கள் தவிடுபொடியாக வேண்டும். அதே சமயம் அவை பார்வையாளனை மேலும் ஈர்க்க வைப்பதுடன் அவனுடைய கற்பனையை விட சிறப்பாகவும் அமைந்திருத்தல் அவசியம்.இந்த பாணியில் இந்த காட்சிகள் வெகுவே ரசிக்க வைத்து விடும்.
இதை முதல் அத்தியாயயமாக கொள்ளலாம்.
அடுத்து அவர் ஓட்டத்திற்ககான கதை சொல்லல்.
இதை அடுத்த அத்தியாயமாக கொள்ளலாம்.
இது வழக்கமான தமிழ் சினிமாவின் திரைக்கதை அமைப்புத்தான்.
அண்ணன் தங்கை பாசம்தான்.
பாசமலர், பச்சை விளக்கு ...இன்னும்...
ஆனாலும், இந்த அண்ணனின் நடிப்பு
தனி ராஜபாட்டைதான்.
அன்னை இல்லத்தில் ஓர் அருமையான பாடல்.
பெரும் செலவில் ஓர் செட்டிங்ஸ் போட்டு படமாக்கியிருந்தாலும் இப்படி ஓர் அழகை நாம் பார்த்திருக்க முடியாது என்னும் படி அன்னை இலத்தில் இந்த பாடல் படமாக்கப்பட்டிருக்கும்.
"மாமனென்று சொல்ல ஓர் அண்ணன் இல்லை அங்கே
அந்த அண்ணணுண்டு இங்கே
அள்ளி வழங்க "
முடிவு வரிகள்.
அதற்குள் பாடல் முடிந்து விட்டதா என்ன?
என்னப்பா? இன்னும் மூன்று நான்கு சரணங்களை சேர்த்திருக்கலாமே?
இந்த இரண்டாவது அத்தியாயத்தில் நடிகர்திலகம் சுமித்ரா ஜெய்கணேஷ்தான்.
முக்கியமாக திலகமும் சுமித்ராதான்.குடும்ப காட்சிகள்.
நடிகர்திலகத்தின் அழகான நடிப்பில் அள்ளித் தெளித்த வண்ணச் சிதறல்களாய்
காட்சியமைப்புகள்.
அண்ணன் தங்கை பாசத்தை உருக்கமாக சொல்லாமலும் உள்ளத்தையும் நெகிழச் செய்யாமலும் உண்மையான நிகழ் சந்தோசப் பதிவுகளாய் இதில்.
முதல் அத்தியாயத்தில் பார்த்த பரபரப்பு காட்சிகளை மறக்கடிக்க வைத்தால் தான் இது வெல்லும்.வெல்லவும் வேண்டும்.கதை அப்போதுதான் நன்றாக செல்லும்.இந்த பார்முலா படி இது வெகுவே சுவாராஸ்யமாக இருக்கும்.சொல்லப் போனால்,
இரண்டாவது அத்தியாயம் அழகான கவிதை.
பரபரப்பு, அழகான கவிதை தாண்டி அடுத்து மூன்றாவது இந்த அத்தியாயத்தில் பரபரப்பு +ஆக்ஷன் + திகில் கலப்பில் செல்லும்.
சுமித்ராவை மோகன் பாபு பங்கப்படுத்துவது, சுமித்ராவை காப்பாற்ற நடிகர்திலகம் காரில் விரைவதும் (அந்த கார் விரைவு காட்சிகள் கூட ஸ்டைலிஷ் ஆக்ஷன்களே) கண்ணாடியை உடைத்து பாயும் கார், திலகத்தின் கதைக்கேற்ற சண்டை ,மோகன்பாபு மரணம்,தங்கையின் சித்தப் பிரமை, நடிகர்திலகத்தின் அதிர்ச்சி ....
என்று கதையை ஒட்டியே காட்சி நகர்வுகள்.
என்னவென்றே யூகிக்க முடியாத காட்சி படுத்தல்கள்.மூன்றாம் அத்தியாயமும் வேகம்.
எல்லாம் கலந்த நான்காம் அத்தியாயம்.
கூடவே சென்டிமென்ட்.இதுதானே தமிழ்ப்படங்களின் பெரும் வெற்றி பார்முலா.
இதிலும் ஓர் பரபரப்பாய் அந்த ஆபரேசன் தியேட்டர் காட்சிகள்.
போலீஸ் துரத்தல்கள்.
தங்கையின் நிலை குறித்து ஜெய்யிடம் பேசும் காட்சிகளில்,நடிகர்திலகம் உருக வைப்பதுடன் வழக்கமான தன் டிரேட்மார்க் நடிப்பை கதையின் தேவைக்கேற்ப பயன்படுத்தியிருப்பார்.
ப்ளாஷ் பேக்காக சொல்லப்படுபவை கடந்த இரு அத்தியாயங்கள் .
பின், சுஜாதாவுடன் வித்தியாசமான த்ரில்லிங் டூயட்..
பாடலை காட்டிலும் பிண்ணனி இசையில் சுறுசுறுப்பு அதிகம் .காடு, போலீஸ் துரத்தல் என்று விறுவிறுப்பாக செல்லும்.
அந்த திரைக்கதை பயணிப்பது, போலீஸ் ஜீப் துரத்துவதை போலவே செல்லும்.
மோகன்பாபுவை கொன்றார் என்பதற்காக அதே காட்டில் நடிகர்திலகத்தின் கைதுடன் முடியும் இந்த நான்காம் அத்தியாயம்.
சஸ்பென்ஸ் உடையும் இறுதி அத்தியாயம்..
"தங்கை மானபங்கம் செய்யப்பட்டு விட்டாள் .இது தெரிந்தால் அவள் பிற்கால வாழ்வு பாழாகும்.இதை உலகிற்கு மறைத்து அவளின் பிற்கால வாழ்வு நன்றாக அமையவே அந்த அண்ணன் முயற்சி செய்கிறான் ."
அண்ணன் ஒரு கோயிலின் ஒன் லைன்
ட்டீரீட்மென்ட் இது.
கோர்ட்டுக்கு வரும் சுமித்ராவை பார்த்தவுடன், அவள் நல்ல நினைவை அடைந்துவிட்டாள் என்பதை தெரிந்தவுடன், ஒரு பக்கம் சந்தோசம் அடைந்தாலும், மறுபக்கம் உண்மை தெரிந்து வினையாகி விடுமோ எனபதை தன் முக பாவனைகளிலே நடிகர்திலகம் காண்பிப்பார்.அதுவே அந்த இடத்திற்கு போதுமானது.தன் கச்சித நடிப்பை கொடுத்திருப்பார்.
என் கேரியரில் அண்ணன் ஒரு கோயில்
பெரும் பாக்கியம், 'அண்ணன் ஒரு கோவிலே' என்று சுமித்ரா பேட்டி அளித்திருப்பார்.இப்படம் பற்றி..
கோர்ட்டு காட்சிகள் என்றால் நடிகர்திலகம் அமர்க்களப்படுத்துவார். தன் சொந்தப்படமான இதில் சுமித்ராவுக்கு அந்த நல்ல வாய்ப்பை நடிகர்திலகம் கொடுத்திருப்பார்.பெயர் சொல்லும்படியான நடிப்பு.
தேவையில்லாத இழுவை காட்சிகள் இல்லாமல் நறுக்கென்று திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும்.
இறுதியில் ,சஸ்பென்ஸ் உடைந்து முடிவுகள் சுபமே!
செந்தில்வேல் சிவராஜ்
கருத்துகள்
கருத்துரையிடுக