சிவாஜி கணேசன் நடித்த நூற்றுக்கணக்கான பாத்திரங்களில், ஒரு உடல் குறைபாட்டைத் தனது அசாத்திய நடிப்புத் திறமையால் கலையாக மாற்றிக் காட்டிய ஆகச்சிறந்த காவியம் 'தவப்புதல்வன்'.
இப்படத்தில் நிர்மல் என்ற கதாபாத்திரத்தில் சிவாஜி ஏற்றிருந்த அந்த 'மாலைக்கண் நோய்'என்பது அவருக்கு வெறும் உடல் உபாதை மட்டும் அல்ல; அது ஒரு கலைஞனின் நிம்மதியைச் சிதைக்கும் கொடூரம்.
பகல் வெளிச்சத்தில் சிங்கமென உலவும் அந்தப் பார்வை, மாலை 6 மணி நெருங்கும் வேளையில் மெல்ல மெல்ல மங்குவதைப் பார்க்கும்போது, ரசிகர்களின் நெஞ்சு படபடக்கத் தொடங்கும். சூரியன் மறைய மறைய, அவரது முகத்தில் தோன்றும் அந்தச் சிறு நடுக்கம் மெல்ல மெல்ல ஒரு பெரும் புயலாக மாறும்.
சிவாஜி கணேசன் இந்தப் படத்தில் காட்டிய நடிப்பு நுணுக்கங்கள் சாதாரணமானவை அல்ல. தான் ஒரு பார்வையற்றவன் என்பதை மற்றவர்கள் கண்டுபிடித்துவிடக் கூடாது என்பதற்காக அவர் காட்டும் அந்த 'கம்பீரமான நடிப்பு' இருக்கிறதே, அதுதான் நடிப்பின் உச்சம்.
பார்வை போன பிறகு அவர் தடுமாறும் ஒவ்வொரு அடியும் ஒரு கவிதை. சுவர்கள் எங்கே இருக்கின்றன, கதவு எங்கே இருக்கிறது என்று தெரியாமல், ஒரு கூண்டுக்குள் அடைபட்ட சிங்கத்தைப் போல அவர் அறைக்குள் தவிக்கும் காட்சிகள்... அவை வெறும் நடிப்பு அல்ல, கண்ணில்லா மனிதனின் ஆன்மக் கதறல்!
ஒரு பக்கம் தன் குறையை மறைக்க வேண்டிய கட்டாயம், மறுபக்கம் இருள் சூழும் பயம். இந்த இரண்டிற்கும் இடையே அவர் காட்டும் முகபாவனைகள், ஒரு எரிமலையின் குமுறலைப் போன்றது.
கண்கள் தெரியாத நிலையில், தன் எதிரிகளுடன் அவர் மோதும் அந்தச் சண்டைக் காட்சி... ஆஹா!
எதிரிகளின் காலடிச் சத்தத்தை வைத்து, அவர் திருப்பித் தாக்கும் சண்டைக்காட்சி அன்றைய புதுமை.பல பிற்கால படங்களுக்கும் அன்றே போடப்பட்ட அஸ்திவாரம்.
சண்டையிடும்போது கூட அவரது கண்கள் எதையும் பார்க்காது; ஆனால் அவரது கைகளும் கால்களும் சப்தங்களை வைத்தே இலக்கைத் துல்லியமாகத் தாக்கும்.
ஒரு நோயின் கோரத்தை இவ்வளவு அழகியல் உணர்வோடு திரையில் கொண்டுவர அவரால் மட்டுமே முடிந்தது.
கண்கள் மூடினாலும் வழிகாட்டும் இசை போல, பார்வை இழந்த அந்த நிர்மல் பாத்திரம் இன்றும் திரையுலகிற்கு ஒரு பாடப்புத்தகம்! இருளைத் தனது அசாத்திய நடிப்பால் தோற்கடித்த அந்த 'தவப்புதல்வன்' என்றும் அழியாத காவியம்.
பாடல்கள் :
உலகின் முதல் இசை தமிழிசையே...
நடிப்பின் ஒவ்வொரு அணுவிலும் நுணுக்கத்தைப் புகுத்தும் வித்தைக்காரர் சிவாஜி கணேசன். 'இப்பாடல் வெறும் பாட்டு அல்ல; அது ஒரு கலைஞனின் 'சாம்ராஜ்யம்'.
பகல் வெளிச்சத்தில், தன் பார்வைத் திறன் உச்சத்தில் இருக்கும்போது,
ஒவ்வொரு அசைவிலும் ஒரு கணக்கீடு, ஒவ்வொரு புன்னகையிலும் ஒரு காந்தசக்தி.
டி.எம்.எஸ் அவர்களின் குரல் ஒரு பக்கம் கர்ஜிக்க, அதற்கு ஈடுகொடுத்து சிவாஜி காட்டும் அந்த முகபாவனைகள் இருக்கிறதே... அதுதான் நடிப்பின் கோட்பாடு.
கடினமான சங்கதிகளைப் பாடும்போது, அவர் கொடுக்கும் அந்த 'எக்ஸ்பிரஷன்ஸ்' - ஒரு தேர்ந்த இசைக்கலைஞன் கூட தோற்றுவிடுவான்.
கைகளை காற்றில் அசைத்து அவர் தாளம் போடும்போது, அந்தத் தாளம் நம் இதயத் துடிப்போடு தாளம் போடும்
துல்லியமான நடிப்பு!
டி.எம்.எஸ் அவர்களின் கார்மேகக் குரலில் உருவான "இசை கேட்டால் புவி அசைந்தாடும்" பாடலும் இசையும் , வெறும் இன்னிசை மட்டும் அன்று.அது ஒரு நாத உபாசனை.
கண்ணதாசனின் வரிகள், இசையை அண்டசராசரங்களை இயக்கும் ஆதிசக்தியாகவும், ஐம்பூதங்களை அடக்கியாளும் மகா மந்திரமாகவும் உருவகிக்கின்றன. மெல்லிசை மன்னரின் இசைக்கோர்ப்பு, ஒரு வேள்வியின் புனிதத்தை இப்பாடலுக்கு நல்குகிறது.
திரையில், நடிகர் திலகத்தின் அசாத்தியமான அங்க அசைவுகளும், ராக ஆலாபனைக்கேற்பத் துடிக்கும் நரம்புகளும், ஒரு கலைஞனின் ஆத்மார்த்தமான அர்ப்பணிப்பை மெய்ப்பிக்கின்றன. சுருக்கமாகச் சொன்னால், இது கலையும் கடவுளும் சங்கமிக்கும் ஓர் அதீத கலைப் பிழம்பு.
கிண் கிணி என வரும் மாதா கோயில் மணியோசை...
இப்பாடலின் சிறப்பை மிகச் சுருக்கமாக மூன்று புள்ளிகளில் அடக்கலாம்:
சமத்துவம்:
மதம், இனம் கடந்து மேரி, மோகன், நூர்ஜகான் என அனைத்துக் குழந்தைகளையும் ஒன்றிணைத்துச் சமத்துவத்தைப் போற்றுகிறது.
அறநெறிப் போதனை: "பிறர் துன்பம் கண்டு சிரிக்காதே" மற்றும் "முதியோரை மதிக்க வேண்டும்" போன்ற வாழ்வியல் ஒழுக்கங்களைக் குழந்தைகளுக்கு கடத்துகிறது.
மானுட நேயம்: உடல் ஊனம் மற்றும் வறுமை மீதான கருணையையும், எவ்விதப் பிரதிபலனும் பாராத "அன்னை உள்ளம்" கொண்ட அன்பையுமே மிக உயரிய பண்பாக முன்வைக்கிறது.
சுருக்கமாகச் சொன்னால், இது சிறுவர்களுக்கானப் பாடல் வடிவில் அமைந்த ஒரு மனிதாபிமானப் பேரறிக்கை.
லவ் இஸ் ஃபைன் டார்லிங்" ..
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி. அவர்களின் மேற்கத்திய இசைச் சாரலில், தமிழும் ஆங்கிலமும் கைகோர்த்து ஆடிய ஒரு நவீனத் திரையிசைப் புரட்சி இது. எல்.ஆர். ஈஸ்வரி - அஜித் சிங் ஜோடியின் துள்ளலான குரல்கள் பாடலுக்கு உலகத்தரம் வாய்ந்த மெருகூட்டலை தந்திருக்கும்.
திரையில் சிவாஜி கணேசன் மேலை நாகரீக உடற்பாட்டியலில் வழக்கமான தன் கம்பீரமான உடல்மொழியையும் சேர்த்திருப்பார்.
செந்தில்வேல் சிவராஜ்
9087620800
கருத்துகள்
கருத்துரையிடுக