1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

வேசத்துக்குத்தான் உடையா?

​வேஷத்துக்குத்தான் உடையா? இல்லை ஹீரோயிஸத்துக்கு உடையா? – 
​தமிழ் சினிமாவில் 'கதாநாயகன்' என்றாலே எப்பொழுதும் பளபளப்பான உடைகளுடனும், ஸ்டைலான தோற்றத்துடனும் தான் திரையில் தோன்ற வேண்டும் என்ற எழுதப்படாத விதி ஒன்று இன்றும் இருக்கிறது. தான் ஒரு மாபெரும் உச்ச நட்சத்திரம், அதனால் தன் அந்தஸ்துக்குக் குறைவில்லாத உடைகளைத்தான் உடுத்த வேண்டும் என்று நினைக்கும் எத்தனையோ நடிகர்களுக்கு மத்தியில், "நான் முக்கியமில்லை, கதையின் கதாபாத்திரம்தான் முக்கியம்" என்று வாழ்ந்து காட்டியவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்.
​அவருடைய ஆடை அலங்காரம், ஒப்பனைத் தேர்வுகள் ஒவ்வொன்றும் அவர் ஒரு 'நட்சத்திரமாக' வாழ நினைக்காமல், ஒரு 'உன்னதமான கலைஞனாக' வாழ நினைத்தார் என்பதற்குப் பேரெடுத்துக்காட்டுகள் ஆகும்.
​சிவாஜி கணேசன் அவர்கள் தான் ஒரு மாபெரும் சூப்பர் ஸ்டார் என்பதற்காகத் தேவையற்ற ஆடம்பரங்களை ஒருபோதும் தன் படங்களில் திணித்ததே இல்லை. அந்தத் தம்பிக்கோ, அந்தத் தாத்தாவுக்கோ, அந்தத் தொழிலாளிக்கோ என்ன தேவையோ... அதைத்தான் தன் ஆடையாக மாற்றிக்கொண்டார்.
​'
சிவாஜி அவர்கள் தன்னுடைய உச்சக்கட்ட புகழில் இருந்தபோது நடித்த படம் 'பாபு'. நினைத்திருந்தால் ஒரு டாப் ஹீரோவாக வண்ணமயமான உடைகளில் வந்திருக்கலாம். ஆனால், ஒரு சாதாரண ரிக்ஷாக்காரனின் எதார்த்தத்தை அப்படியே கொண்டு வர, அழுக்கேறிய பனியன், கசங்கிப் போன பழைய உடைகள், வயதான தோற்றம் எனத் தன்னை அப்படியே அந்தப் பாத்திரமாக மாற்றிக்கொண்டார். இப்படி, 'நான் தான் உயர்ந்த கதாநாயகன்' என்பதற்காக எல்லாம் சிவாஜி எப்பொழுதும் அதிகமான ஆடை அணிகலன்களைச் செய்துகொண்டதே இல்லை. அந்தக் கதைக்கும் படத்துக்கும் என்ன தேவையோ, அதை மட்டும்தான் செய்தார்.

​'எங்க ஊர் ராஜா'படத்தில் ஆரம்பத்தில் வரும் ஜமீன்தார் பாத்திரத்திற்கு கம்பீரமான ஜமீன் ஆடைகளை அணிந்த சிவாஜி, கதையின் போக்கில் வறுமை நிலைக்குத் தள்ளப்படும் போது, அதற்குரிய மிக எளிமையான சட்டை, வேட்டியோடு தோன்றி, ஏழ்மையின் வலியைத் தன் ஆடையின் மூலமாகவே பார்வையாளர்களுக்குக் கடத்தினார்.
அதே சமயம், பணக்காரராக நடிக்க வேண்டிய 'வசந்த மாளிகை', 'அவன் தான் மனிதன்' போன்ற படங்களில், அந்த ஜமீன் அல்லது தொழிலதிபரின் அந்தஸ்துக்குக் குறைவில்லாமல் அசாத்தியமான ஆடை அலங்காரங்களோடு தோன்றி மிரட்டியிருப்பார். கேரக்டர் டிமாண்ட் செய்தால் ஆடம்பரம், இல்லையென்றால் எளிமை – இதுதான் சிவாஜி ஃபார்முலா!
​அவருடைய அர்ப்பணிப்புக்குச் சினிமா வட்டாரத்தில் ஒரு புகழ்பெற்ற உண்மை சம்பவம்  ஒன்று உண்டு. ஒரு திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது, சிவாஜி அவர்கள் தெருவில் திரியும் ஒரு பரதேசி வேடத்தில் நடிக்க வேண்டியிருந்தது. "பெரிய நவரச திலகம் நடிக்கிறார்" என்று சொல்லி தயாரிப்பு நிர்வாகம் பார்த்துப் பார்த்து ஒரு உயர்தரமான ஆடையைக் கொண்டு வந்து கொடுத்திருக்கிறது.
​அதைப் பார்த்த சிவாஜி, "இந்த உடையை வைத்துக்கொண்டு இந்த மாதிரி காட்சியில் நடிக்கக் கூடாது, இது ரொம்ப சாதாரணமாக இருக்க வேண்டும்" என்று மறுத்துவிட்டு, அங்கே கிடந்த ஒரு கிழிந்த பழைய சாக்குப்பை போன்ற ஒரு துணியை எடுத்து அப்படியே உடம்பில் போர்த்திக்கொண்டு கேமரா முன்னால் நின்றாராம். காட்சிக்கு எது கச்சிதமோ, அதைத் தேர்ந்தெடுப்பதில் அவரிடம் எந்த ஈகோவும் இருந்ததே இல்லை.

​பாசமலர் திரைப்படத்தை யாராவது மறக்க முடியுமா? ஆரம்பத்தில் ஒரு சாதாரண ஆலைத் தொழிலாளியாக இருக்கும் போது மிகச் சாதாரண உடைகள். அப்புறம் உழைப்பால் உயர்ந்து முதலாளியாகும் போது கோட் சூட் எனப் பணக்காரத் தோற்றம். ஆனால், படத்தின் இறுதிக்காட்சிகளில் எல்லாவற்றையும் இழந்து, தங்கையைத் தேடி அலையும் வறுமையின் உச்சத்தில், அவர் அணிந்திருந்த கந்தல் துணிகளும், கிழிந்த சட்டையும் பார்ப்பவர் நெஞ்சை அப்படியே கலங்கடித்திருக்கும். கதையின் வளர்ச்சிக்கு ஏற்ப ஆடையும் மாறும் என்பதைச் சொல்லிக் கொடுத்த படம் அது.

​ஒரு படத்தின் கதாபாத்திரத்திற்கும் அந்த கதைக்கும் தேவை என்றால், சட்டை கூட அணியாமல் நடிப்பார் சிவாஜி. உதாரணத்திற்கு 'காவல் தெய்வம்' படத்தைப் பாருங்கள்... ஒரு மரமேறி எப்படி இருக்க வேண்டுமோ, அதற்காக அவர் வெறும் மேலுடம்போடு, மேலே சட்டை அணியாமல் ரொம்ப இயல்பாக ஒரு இடுப்பு வேட்டியோடு மட்டும் நடித்திருப்பார்.
சிவாஜி அவர்கள் ஏழை பாத்திரங்களுக்குக் கந்தல் துணி கட்டினார் என்றால், அதே நேரத்தில் ஒரு உலகத்தரம் வாய்ந்த பணக்கார பாத்திரத்திற்கு எப்படி ஆடை அணிய வேண்டும் என்று இலக்கணம் வகுத்ததும் அவர்தான். 'புதிய பறவை' படத்தில் கோபால் என்ற கதாபாத்திரத்தில் வெளிநாட்டில் படித்துவிட்டு வந்த ஒரு பெரிய பணக்கார இளைஞனாக வருவார். அந்தப் படத்தில் அவர் போட்டிருந்த கோட், சூட், டை மற்றும் அந்த ஓவர் கோட் எல்லாமே அன்றைக்கு இருந்த ஹாலிவுட் நடிகர்களுக்கு இணையான ஒரு ஸ்டைலை தமிழ் சினிமாவுக்குக் கொண்டு வந்தது.
​'
அதேபோல, 'வியட்நாம் வீடு' படத்தில் பிரஸ்டீஜ் பத்மநாபன் . ஒரு நிறுவனத்தில் மேலாளராக இருக்கும் போது கோட் ,சூட்டிலும் ,
அலுவலகம் தாண்டி விட்டால் ஒரு சாதாரண  வேட்டி, சட்டை. அந்தப் பாத்திரத்தின் நடுத்தர வர்க்கத்து நியாயங்களையும், கௌரவத்தையும் அந்த உடைகள் அப்படியே பிரதிபலித்தன.
சிவாஜியின் ஆடை அலங்காரப் புரட்சிக்கு ஆகச்சிறந்த உதாரணம் 'நவராத்திரி' படம். ஒரே படத்தில் ஒன்பது கதாபாத்திரங்கள்! ஒரு நபரையே ஒன்பது விதமாகக் காட்ட வேண்டும் என்றால் உடை அலங்காரமும், ஒப்பனையும் எவ்வளவு முக்கியம்? அதில் வரும் குடிகாரன் கதாபாத்திரத்திற்குச் கசங்கிய சட்டை, கிராமத்துக்காரனுக்குக் கொண்டை முடியுடன் வேட்டி-சட்டை, டாக்டர் பாத்திரத்திற்குச் கண்ணாடி மாட்டி ஒரு  தோற்றம், நாடகம் போடும் கலைஞனுக்குப் பளபளப்பான உடை என ஒன்பது பாத்திரங்களுக்கும் ஒன்பது விதமான உடைகளைத் தேர்ந்தெடுத்து, தான் ஒரு நடிப்பு அசுரன் என்று நிரூபித்திருப்பார்.


'தில்லானா மோகனாம்பாள்' படத்தில் அவர் ஒரு நாதஸ்வரக் கலைஞர். ஒரு கலைஞர் கச்சேரிக்கு வரும்போது எப்படி வர வேண்டும்? பட்டு வேட்டி, பட்டுச் சட்டை, தோளில் ஒரு துண்டு, விரல்களில் மோதிரம் என அந்தப் பாத்திரத்தின் கம்பீரத்தை ஆடைகளில் காட்டியிருப்பார். 
ஆடைகளை  கூட கதையின் சூழ்நிலைக்கு ஏற்ற  மாதிரி பேச வைத்த பெருமை சிவாஜிக்கே உரியது.
அவருடைய திரைப்பயணத்தின் இறுதிக்காலத்தில் வந்த படம்  'தேவர் மகன்'. அதில் பெரியதேவர் பாத்திரத்தில் வரும் சிவாஜி, அந்த ஊரின் பெரிய மனிதர். அதற்காக அவர் பட்டுத் துணி  கட்டவில்லை. ஒரு கிராமத்து பெரியவருக்கான கம்பீரத்தோடு, வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை  போட்டிருப்பார். ஆனால், அந்த எளிமையான வெள்ளை உடைக்குள்ளும், அந்தப் பெரிய மீசைக்குள்ளும் அவர் காட்டிய கம்பீரம் அசாத்தியமானது.

​இவ்வளவு தூரம் உடை அலங்காரத்திலும், உடல் ஒப்பனையிலும் எதார்த்தத்தைக் கடைப்பிடித்த சிவாஜி அவர்கள் மீதும் சில விமர்சனங்கள் வராமல் இல்லை. 'லாரி டிரைவர் ராஜாக்கண்ணு' திரைப்படத்தில் லாரி டிரைவராக நடித்த சிவாஜி, கோட் சூட் அணிந்து நடித்தார் என்று அன்றைக்குப் பலர் விமர்சனம் செய்தார்கள். "ஒரு லாரி டிரைவர் போய் கோட் சூட் போட்டுக் கொண்டா நடிப்பார்?" என்பதுதான் அவர்களின் கேள்வியாக இருந்தது.

அதே சிவாஜி கணேசன் 'வா கண்ணா வா', 'துணை', 'புண்ணிய பூமி' இப்படி இன்னும் பல படங்களில் மிகச் சாதாரணமாக உடை அணிந்துதான் நடித்தார் – அந்த கேரக்டருக்கும் கதைக்கும் தகுந்த மாதிரி!
​குறிப்பாக 'துணை' போன்ற படங்கள் எல்லாம் மிக அருமையான கதைக்களத்தைக் கொண்ட திரைப்படங்கள் ஆகும். அப்போதெல்லாம் இந்த மாதிரி விமர்சனம் செய்பவர்கள் பலர், அவர் அப்படி சாதாரண உடை அலங்காரம் செய்து நடித்தபோது, அந்த உடையலங்காரத்தைப் பற்றிப் பெரிதாகப் பாராட்டவே இல்லையே! அந்த வயதுக்கும், கதைக்கும், கேரக்டருக்கும் தகுந்த மாதிரிதான் உடை அணிந்து மிகப்பொருத்தமாக நடித்திருப்பார். அதுதான் சிவாஜி!
​சுருக்கமாகச் சொன்னால், சிவாஜி கணேசன் ஆடை அணிந்தது ரசிகர்களின் கைத்தட்டலுக்காகவோ, தான் ஒரு 'அழகு ராஜா' என்று காட்டிக்கொள்வதற்காகவோ கிடையாது. கதாபாத்திரத்தின் ஆன்மாவை பார்வையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான ஒரு கருவியாகத்தான் அவர் ஆடையைப் பார்த்தார்.
​அவர் சாக்குத் துணியைப் போர்த்தினாலும் சரி, சூட் கோட் அணிந்தாலும் சரி... அந்தத் துணிக்கு பின்னால் நின்றது தமிழ் சினிமாவின் ஆகச்சிறந்த நடிப்பு அசுரன்! ஆடையைப் பார்த்து விமர்சிப்பவர்கள், அதற்குள் இருந்த அவருடைய அசுரத்தனமான உழைப்பையும், அர்ப்பணிப்பையும் பார்க்கத் தவறிவிடுகிறார்கள் என்பதுதான் கசப்பான உண்மை.

செந்தில்வேல் சிவராஜ்
9087620800

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்