நடிகர் திலகம் சிவாஜி கணேசனோட 'திருவிளையாடல்' படத்தைப் பத்திப் பேசணும்னா... சொல்லிக்கிட்டே போலாம், ஆயிரம் விஷயங்களுக்கு மேல கொட்டிக் கிடக்கு! அந்தப் படத்தோட ஒவ்வொரு பிரேம்லயும், ஒவ்வொரு வசனத்துலயும், பாட்டிலயும் அவ்ளோ சுவாரஸ்யங்கள் ஒளிஞ்சிருக்கு.
அந்த ஆயிரம் சுவாரஸ்யங்கள்ல இருந்து '100 சிறப்பான தகவல்கள் :
1.'திருவிளையாடல்' திரைப்படம் 1965 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் தேதி வெளியானது.
2.இப்படத்தை இயக்கி, தயாரித்தவர் புகழ்பெற்ற இயக்குநர் ஏ.பி.நாகராஜன்.
3.பரஞ்சோதி முனிவர் இயற்றிய 'திருவிளையாடல் புராணத்தை' அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டது.
4.இப்படத்தின் கூர்மையான மற்றும் செம்மையான தமிழ் வசனங்களை ஏ.பி.நாகராஜனே எழுதினார்.
5.கே.எஸ்.பிரசாத் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்தார்.
கலை இயக்குநராக கங்கா பணியாற்றி, கைலாயம் மற்றும் மதுரை அரண்மனை அரங்குகளை அமைத்தார்.
6.1965-ஆம் ஆண்டிற்கான இரண்டாவதுசிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருதை இப்படம் வென்றது.
7.சென்னையில் வெளியான மூன்று திரையரங்குகளான சாந்தி கிரவுண் புவனேஸ்வரி மூன்றிலும் வெள்ளி விழா கொண்டாடிய ஒரே புராண படம் திருவிளையாடல்
8.நடிகர் திலகம் சிவபெருமானாக தோன்றும் காட்சிகளில் எல்லாம் கண் இமைக்காமல் நடித்திருப்பார் .
9.இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல்களின் எண்ணிக்கை 11.
10.தமிழ் திரைப்பட புராண திரைப்படங்களிலேயே அதிகமாக வசூல் செய்த திரைப்படம் இந்தப் படம் தான்.
11. சிவனின் 64 திருவிளையாடல்களில் 4 பிரதான கதைகளை மட்டுமே திரைக்கதையாக அமைத்து இப்படம் எடுக்கப்பட்டது.
12. முதல் கதை:ஏழைப் புலவர் தருமி மற்றும் நக்கீரர் இடையேயான நிகழ்வு.
13.இரண்டாவது கதை :
சிவபெருமான் மீனவனாக வந்து பூமியில் சாபம் பெற்று மீனவப் பெண்ணாக வாழ்ந்து வரும் பார்வதி தேவியை மணம் பிடிக்கும் கதை.
14மூன்றாவது . கதை: சிவபெருமானை மதிக்காமல் தட்சன் நடத்தும் யாகத்தால்,
சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் இடையே நடக்கும் பிணக்கு.
15.நாலாவது கதை:கர்வம் கொண்ட ஹேமநாத பாகவதரின் செருக்கை ஒரு விறகு வெட்டியாக சிவபெருமான் வந்து அடக்கும் கதை.
16. சென்னை மயிலாப்பூர் கோவிலில் ஒரு பக்தர் புலம்பித் தள்ளியதை பார்த்து அதன் பாதிப்பில் நாகேஷ் நடித்ததுதான் அந்த தருமி கேரக்டர் .
17. இப்படத்தில் சிவாஜி கணேசன் சிவபெருமான் புலவன் மீனவன் விறகு வெட்டி என மாறுபட்ட நான்கு தோற்றங்களில் தோன்றினார்.
18.அதிக முறை 224 தடவை இலங்கை வானொலியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட திரைப்படம் திருவிளையாடல் .
19.நடைக்காகவே கைதட்டல் வாங்கிய ஒரே நடிகர் என்று நடிகர் திலகத்தின் நடையை சொல்வார்கள். அதற்கான உதாரணங்களில் ஒன்று இந்த திருவிளையாடல் கடற்கரையில் நடந்து வரும் சிவாஜியின் மீனவன் நடை.
20.சிவபெருமான் தோற்றத்தில் வரும் சிவாஜி கணேசனின் தோற்ற புகைப்படம் தான் அதிக அளவில் பகிரப்பட்ட ஒரு நடிகரின் கடவுள் புகைப்படம் ஆகும் .
21.பதிமுன்று தியேட்டர்களில் 100 நாள் ஓடிய ஒரே புராண திரைப்படம் திருவிளையாடல்.
22.டிஜிட்டல் செய்யப்பட்டு வெளிவந்த ஒரே புராண திரைப்படம் திருவிளையாடல்.
23. 'பாட்டும் நானே' பாடலில் சிவாஜி பாடுபவர் புல்லாங்குழல் தவில் வாசிப்பவர் ஐதி சொல்பவர் என ஐந்து விதமான இசைக்கலைஞர் தோற்றத்தில் நடித்திருப்பார்.
24..சிவராத்திரி அன்று தியேட்டர்களில் நள்ளிரவு ஒரு மணி காட்சியாக அதிகமாக ஒளிபரப்பு செய்யப்பட்ட திரைப்படம் திருவிளையாடல் மட்டுமே
25. சிவபெருமான் என்றாலே சிவாஜி கணேசனின் முகமே தமிழக மக்கள் நினைவுக்கு வரும் அளவிற்கு இந்த வேடம் ஆழமாகப் பதிந்தது.
26. பார்வதி தேவியாக நடிகையர் திலகம் சாவித்திரி நடித்தார்.
27. முருகப் பெருமானாக மாஸ்டர் ஸ்ரீதர் நடித்தார்.
28. விநாயகப் பெருமானாக 'மாஸ்டர் பிரபாகர்' நடித்தார்.
29. ஒளவையாராக பிரபல பாடகி மற்றும் பழம்பெரும் நடிகை கே.பி.சுந்தராம்பாள் நடித்தார்.
30. கே.பி.சுந்தராம்பாளுக்கு இப்படத்திற்காக அப்போது ஒரு லட்சம் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டது, இது அந்தக் காலத்தில் மிகப்பெரிய தொகையாகும்.
31. ஏழைப் புலவர் தருமியாக நடிகர் நாகேஷ் தனது வாழ்நாளின் மிகச் சிறந்த நகைச்சுவை நடிப்பை வழங்கினார்.
32. தமிழ் சங்கப் புலவர் நக்கீரராக இயக்குநர் ஏ.பி.நாகராஜனே திரையில் கம்பீரமாக நடித்தார்.
33. பாண்டிய மன்னன் செண்பகப் பாண்டியனாக நடிகர் முத்துராமன் நடித்தார்.
34. செண்பகப் பாண்டியனின் மனைவியாக (ராணியாக) நடிகை தேவிகா நடித்தார்.
35. கர்வம் பிடித்த இசைக்கலைஞர் ஹேமநாத பாகவதராக டி.எஸ்.பாலையா வாழ்ந்து காட்டினார்.
36. சிவபக்தனான பாணபத்திரராக பிரபல பாடகரும் நடிகருமான டி.ஆர்.மகாலிங்கம் நடித்தார்.
37. டி.ஆர்.மகாலிங்கம் பாணபத்திரராக சில காட்சிகளில் மட்டுமே வந்தாலும், தனது சொந்தக்குரலிலேயே பாடல்களைப் பாடி நடித்தார்.
38. இந்த திரைப்படத்தில் மொத்தம் 49 நடிகர் நடிகைகள் நடித்திருந்தார்கள்.
39.டி எம் சௌந்தர்ராஜன் பி பி ஸ்ரீனிவாஸ் பாலமுரளி கிருஷ்ணா டி ஆர் மகாலிங்கம் சீர்காழி கோவிந்தராஜன் என 5 பாடகர்களும் சுசீலா ஜானகி என இரு பாடகிகளும் இந்த படத்தில் பாடி இருப்பார்கள் .
40. ஒன்று முதல் பத்து எண்கள் வரை பயன்படுத்தி பாடல் எழுதப்பட்ட ஒரே பாடல் ,ஒன்றானவன் உருவில் இரண்டானவன்.
41. ஓலைச்சுவடி சுமந்து கொண்டு நாகேஷ் நடக்கும் உடல்மொழி அவரது சொந்தக் கற்பனையில் உருவானது.
42. தருமியாக வரும் நாகேஷுக்கு, சிவாஜி கணேசன் பல இடங்களில் நடிப்பில் அதிக சுதந்திரம் கொடுத்து ஊக்குவித்தார்.
43. டி.எஸ்.பாலையா 'ஒரு நாள் போதுமா' பாடலுக்குத் திரையில் வாய் அசைத்த விதம் திரை இலக்கணமாகப் போற்றப்படுகிறது.
44. மீனவர்களில் ஒருவராக நகைச்சுவை நடிகர் ஏ.கருணாநிதி நடித்தார்.
45. ஒளவையார் பாத்திரம் படம் முழுவதும் நடக்கும் நிகழ்வுகளை இணைக்கும் ஒரு வழிகாட்டியாகப் பயன்படுத்தப்பட்டது.
46. இப்படத்திற்கு 'திரையிசைத் திலகம்' கே.வி.மகாதேவன் இசையமைத்தார்.
47. இப்படத்தின் பெரும்பாலான பாடல்களைக் கவியரசு கண்ணதாசன் எழுதினார்.
48. கே.வி.மகாதேவன் இசையமைத்த இப்படத்தின் அனைத்துப் பாடல்களும் மாபெரும் வெற்றி பெற்றன.
49. முருகனைப் போற்றும் புகழ்பெற்ற 'பழம் நீயப்பா' பாடலை கண்ணதாசன் எழுதினார்.
50. 'பழம் நீயப்பா' பாடலை கே.பி.சுந்தராம்பாள் தனது தனித்துவமான குரலில் பாடினார்.
51. இப்பாடல் தர்பாரி கானடா, சண்முகப்பிரியா, காம்போஜி ஆகிய ராகங்கள் கலந்த ராகமாலிகையாக அமைந்தது.
52. 'ஒரு நாள் போதுமா' பாடலை பிரபல கர்நாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா பாடினார்.
53. கர்நாடக இசையைப் பாமர மக்களுக்கும் எளிமையாகக் கொண்டு சேர்த்த பெருமை 'ஒரு நாள் போதுமா' பாடலுக்கு உண்டு.
54. இப்பாடலும் மாண்ட், தோடி, தர்பார், மோகனம் ஆகிய ராகங்கள் கலந்த சிறப்பான ராகமாலிகையாகும்.
55. சிவபெருமான் பாடுவதாக அமைந்த 'பாட்டும் நானே பாவமும் நானே' பாடலை டி.எம்.சௌந்தரராஜன் பாடினார்.
56. 'பாட்டும் நானே' பாடல் கௌரி மனோகரி ராகத்தில் அமைக்கப்பட்டது.
57. டி.எம்.சௌந்தரராஜனின் கணீரென்ற குரல் சிவபெருமானின் அதிகாரத்தை திரையில் நேர்த்தியாக வெளிப்படுத்தியது.
58. பாணபத்திரர் பாடும் 'இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை' பாடலை டி.ஆர்.மகாலிங்கம் பாடினார்.
59. இப்பாடல் ஆபோகி
ராகத்தில் அமைக்கப்பட்ட பாடலாகும்.
60.ஒரு கதாநாயகன் அறிமுகம் ஆகும் காட்சியை மிக நீளமாகக் கொண்ட திரைப்படம் திருவிளையாடல் .
61. ஒளவையார் பாடும் 'ஞானப்பழத்தைப் பிழிந்து' பாடல் பலராலும் விரும்பிக் கேட்கப்பட்ட தத்துவப் பாடல்.
62. 'ஞானப்பழத்தைப் பிழிந்து' பாடலை கு.மா.பாலசுப்பிரமணியம் எழுதினார்.
63. கே.பி.சுந்தராம்பாள் பாடிய 'வாசிவாசி' என்ற பாடல் சங்கரதாஸ் சுவாமிகளால் எழுதப்பட்டது.
64. ஒரு கோடி வசூல் செய்த புராண திரைப்படம் திருவிளையாடல் மட்டுமே.
65. புகழ்பெற்ற 'பொதிகை மலை உச்சியிலே' பாடலை பி.பி.ஸ்ரீனிவாஸ் மற்றும் எஸ்.ஜானகி பாடினர்.
66. 'பொதிகை மலை உச்சியிலே' பாடலில் முத்துராமனும், தேவிகாவும் நடித்தனர்.
67..இப்படத்தில் மிகவும் புகழ்வாய்ந்த நக்கீரர் தருமி காட்சிகள் ஏற்கனவே சிவாஜி நடித்த நான் பெற்ற செல்வம் படத்தில் இடம் பெற்ற ஒன்றே.நக்கீரன் புலவன் இரண்டு கேரக்டரிலும் சிவாஜி நடித்திருப்பார்
68. ஹேமநாத பாகவதரின் ஆணவத்தைக் காட்டும் விதமாகவே 'ஒரு நாள் போதுமா' பாடலின் மெட்டு வேகமாகவும் கம்பீரமாகவும் அமைக்கப்பட்டிருக்கும்.
69. படப்பிடிப்பிற்கு முன்பே பாடல்கள் அனைத்தும் முழுமையாக ஒலிப்பதிவு செய்யப்பட்டுவிட்டன.
70. இப்படத்தின் இசைத்தட்டுகள் அன்றைய காலகட்டத்தில் மிக அதிக அளவில் விற்பனையாகிச் சாதனை படைத்தன.
வசனங்கள் மற்றும் காட்சிகள்
71. தருமிக்கும் சிவனுக்கும் நடக்கும் உரையாடல் காட்சி தமிழ்த் திரையுலகின் மிகச் சிறந்த நகைச்சுவை மற்றும் அறிவுப்பூர்வமான காட்சியாளக் கருதப்படுகிறது.
72. சிவபெருமானாக ருத்ர தாண்டவம் ஆடும் சிவாஜி நடிப்பு மற்றும் ஆட்டம் காண்போர் வியக்கும் வகையில் எடுக்கப்பட்ட ஒன்று
73. சிவபெருமானாக விஸ்வரூபம் காட்டும் சிவாஜியின் நடிப்பும் பின்னணியில் ஒலிக்கும் அந்த எக்கோ இசையும் அருமையாக படம் பிடிக்கப்பட்டு இருக்கும்.
74. நக்கீரரும் சிவனும் வாதிடும் காட்சியின் வசனங்கள் தமிழின் செழுமையையும், இலக்கணத்தையும் காட்டுவதாக அமைந்தன.
75. 'நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே' என்ற நக்கீரரின் வசனம் இன்றும் தமிழ் மக்களால் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
76. ஏ.பி.நாகராஜனின் வசனங்கள் இலக்கியத் தரத்துடனும், அதேசமயம் பாமரருக்கும் புரியும் வகையிலும் எளிமையாக இருந்தன.
77. ஹேமநாத பாகவதர் விறகுவெட்டியின் பாட்டைக் கேட்டு வியந்து இரவோடு இரவாக ஊரை விட்டு ஓடும் காட்சி சுவாரஸ்யமாகப் படமாக்கப்பட்டது.
78. பார்த்தா பசுமரம் பாட்டை எழுதியவர் கண்ணதாசன் அல்ல என்ற ஒரு தகவல் உண்டு. ஆனால் டைட்டில் கண்ணதாசன் பெயரே இடம் பெறும்.
79. "பக்திக்கும் கலைக்கும் எல்லையில்லை" என்பதை உணர்த்தும் வகையிலேயே பாணபத்திரரின் முழு கதையும் அமைந்தது.
80. ஒவ்வொரு காட்சியிலும் சிவாஜி மற்றும் சாவித்திரி இடையேயான உரையாடல்கள் தெய்வீகத் தன்மையுடன் படமாக்கப்பட்டிருந்தன.
வரவேற்பு மற்றும் வசூல் சாதனைகள்
81. வெளியீட்டிற்குப் பின் இப்படம் வசூலில் மாபெரும் சாதனை படைத்து திரையரங்குகளில் வெள்ளி விழா (25 வாரங்கள்) கொண்டாடியது.
82. கிராபிக்ஸ் வசதிகள் இல்லாத அந்தக் காலத்திலேயே இந்தப் படத்தின் காட்சி அமைப்புகள் பிரம்மாண்டமாகவும் வியப்பாகவும் படமாக்கப்பட்டு இருக்கும்.
83. மதுரை சிந்தாமணி திரையரங்கில் இத்திரைப்படம் மிக அதிக நாட்கள் ஓடிச் சாதனை படைத்தது.
84. 'திருவிளையாடல்' திரைப்படம் தமிழ்த் திரையுலகில் புராணப் படங்களுக்கு ஒரு மிகப்பெரிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது.
85. இத்திரைப்படத்தின் மாபெரும் வெற்றி, சரஸ்வதி சபதம், திருவருட்செல்வர், திருமலை தென்குமரி போன்ற பல பக்திப் படங்கள் தொடர்ந்து வெளிவரக் காரணமாக அமைந்தது.
86. நகைச்சுவை, பக்தி, இசை, இலக்கிய வசனம் என அனைத்தும் கலந்த ஒரு முழுமையான கமர்ஷியல் திரைப்படமாக இது வெற்றி பெற்றது.
87. திரைப்படத்தின் வெற்றிக்குப் பின் பல நாடகக் குழுக்கள் இந்தத் திரைப்படத்தின் காட்சிகளை (குறிப்பாக தருமி காட்சி) நாடகமாக மேடையேற்றினர்.
88. ஏ.பி.நாகராஜன் - சிவாஜி கணேசன் கூட்டணியில் அமைந்த வெற்றிப் படங்களில் இதுவே முதன்மையான மைல்கல்லாகும்.
89. இப்படத்தின் சாயலில் பின்னர் பல படங்கள் வந்தாலும், இதன் திரைக்கதை அமைப்பை எதனாலும் மிஞ்ச முடியவில்லை.
90. எந்தக் காலத்திற்கும் பொருந்தும் வகையில் இதன் திரைக்கதை வேகம் தொய்வில்லாமல் அமைக்கப்பட்டிருக்கும்.
91.கதாநாயகராக சிவாஜிகணேசன் நடித்து இருந்தாலும் நான்காவது கதையான அந்த விறகுவெட்டி கேரக்டருக்கு தான் கதையில் சிவாஜி கணேசனுக்கு இரண்டு பாடல்கள் இருக்கும் .
92. இந்தபடத்தின் டிஜிட்டல் வெளியீட்டின் போது 7.1 ஒலியமைப்புடன் இத்திரைப்படம் மேம்படுத்தப்பட்டது.
93.இந்தப் படம் தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது
94. டிஜிட்டல் வெளியீட்டின் போது பழைய ரசிகர்கள் மட்டுமின்றி, புதிய தலைமுறை இளைஞர்களும் திரையரங்கிற்குச் சென்று ரசித்தனர்.
95. சிவாஜி கணேசன் மற்றும் நாகேஷ் ஆகியோரின் பிறந்தநாளின் போது இன்றும் பல தொலைக்காட்சிகளில் தருமி காட்சி பிரத்தியேகமாக ஒளிபரப்பப்படுகிறது.
96. தமிழின் பெருமையைப் பேசும் திரைப்படங்களின் பட்டியலில் இப்படம் எப்போதும் முதல் 10 இடங்களுக்குள் இருக்கும்.
97. இணையம் மற்றும் யூடியூப் தளங்களில் இப்படத்தின் காட்சிகளும் பாடல்களும் பல மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளன.
98. இப்படத்தின் பாடல்கள் இன்றும் தமிழகத்தின் பல கோயில்களிலும், சுபநிகழ்ச்சிகளிலும் தொடர்ந்து ஒலிக்கப்படுகின்றன.
99. ஒவ்வொரு கதையின் முடிவிலும் உணர்த்தப்படும் நீதி, தனிமனித அகங்காரத்தை அழிப்பதன் அவசியத்தை வலியுறுத்தியது.
100. அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழ் சினிமா வரலாற்றில் 'திருவிளையாடல்' ஒரு எக்காலத்திற்கும் அழியாத காவியமாக நிலைத்து நிற்கிறது.
செந்தில்வேல் சிவராஜ்
கருத்துகள்
கருத்துரையிடுக