"வணக்கம் நண்பர்களே...
1972-ம் ஆண்டு தமிழ் சினிமாவுல ஒரு படம் வெளியாகுது. கருப்பு வெள்ளை படம். பெரிய செட் கிடையாது. பிரம்மாண்டமான காட்சிகள் கிடையாது. ஆனா அந்த படம் பண்ணுன சம்பவம் என்ன தெரியுமா?
அதுவரைக்கும் தமிழ் சினிமாவுல இருந்த வசூல் சாதனைகளையே தூக்கி சாப்பிட்டுச்சு.
கிராமத்துல ஓடுச்சு...
நகரத்துல ஓடுச்சு...
பி சென்டர், சி சென்டர் மட்டுமில்ல, ஏ சென்டர்லயும் பட்டைய கிளப்புச்சு.
எல்லா தியேட்டர்லயும் திருவிழா கூட்டம்தான்.
அந்த படம்தான் 'பட்டிக்காடா பட்டணமா'.
சிவாஜி ஜெயலலிதா காம்போலே வெளியான இந்த படத்துல ஜெயலலிதா நடிச்சது கூட கடைசி நேரத்தில் நடந்த மாற்றம்னு சொன்னா நம்புவீங்களா?
அதுக்கும் மேல, ஜெயலலிதாவுக்கும் சிவாஜிக்கும் அப்போ மனஸ்தாபம் இருந்த நேரத்துலயே இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கு.
அந்த மனஸ்தாபத்தை மறந்து ஜெயலலிதாவை இந்த படத்துல நடிக்க வைக்க சொன்னது யாரு?
முதல்ல இந்த வேஷத்துக்கு தேர்வு செய்யப்பட்ட நடிகை தான் யார்?
அதுக்கும் மேல, இந்த பட்டிக்காடா பட்டணமா படம் உருவாகவே காரணமான ஒரு பழைய சூப்பர் ஹிட் படம் இருக்கு.
அந்த படம் எது?
அதுக்கும் பட்டிக்காடா பட்டணமாவுக்கும் என்ன சம்பந்தம்?
இப்போ இந்த பட்டிக்காடா பட்டணமா படம் எப்படி உருவாச்சு, ஜெயலலிதா எப்படி இந்த படத்துக்குள்ள வந்தாங்கன்னு பார்க்கறதுக்கு முன்னாடி, இந்த படத்தோட உண்மையான விதை எங்கே விழுந்துச்சுன்னு தெரிஞ்சிக்கணும்.
ஏன்னா இந்த கதையோட ஆரம்பம் 1972-ல இல்ல...
அதுக்கு பல வருஷங்களுக்கு முன்னாடியே ஆரம்பிச்சிருச்சு.
அதுவும் தமிழ் சினிமா வரலாற்றுல இன்னைக்கு கூட காவியம்னு சொல்லப்படுற ஒரு படத்துல இருந்து...
அந்த படம் எது தெரியுமா?
கொத்தமங்கலம் சுப்பு...
தமிழ் இலக்கியத்துலயும் சரி, சினிமாவுலயும் சரி, தனக்குன்னு ஒரு அடையாளம் உருவாக்கிய மனிதர்.
ஒரு தடவை தஞ்சாவூர் பக்கம் போயிருந்தாரு.
அங்க நடந்த ஒரு இசை நிகழ்ச்சியை அவர் நேர்ல பார்த்தாரு.
சாதாரண நிகழ்ச்சி கிடையாது.
நாதஸ்வரம் ஒலிக்குது...
மேளதாளம் முழங்குது...
பரதநாட்டியம் ஆடப்படுது...
கலைகள் எல்லாமே ஒன்றாக கலந்து நடந்த ஒரு அற்புதமான நிகழ்ச்சி.
அந்த நிகழ்ச்சியை பார்த்த மக்கள் மெய்மறந்து போய் ரசிச்சாங்க.
கொத்தமங்கலம் சுப்புவும் அப்படித்தான்.
அவர் மனசுக்குள்ள ஏதோ ஓடிக்கிட்டே இருந்துச்சு.
அந்த நிகழ்ச்சியில இருந்த கலை...
அந்த உணர்வு...
அந்த மனிதர்கள்...
அந்த வாழ்க்கை...
இதையெல்லாம் வைச்சு ஒரு கதை உருவாக்க முடியும்னு அவர் யோசிக்க ஆரம்பிச்சாரு.
ஆனா அந்த யோசனை எப்படி ஒரு காவியமா மாறுச்சு தெரியுமா?
அங்கதான் ஒரு சுவாரஸ்யமான திருப்பம் காத்திருந்துச்சு...
அந்த அனுபவத்தை கல்கி அவர்களிடம் சொல்றாரு கொத்தமங்கலம் சுப்பு.
எல்லாத்தையும் பொறுமையா கேட்ட கல்கி ஒரு வார்த்தை சொல்றாரு.
"இவ்வளவு அருமையான விஷயத்தை பார்த்திருக்கீங்க... இதை வைச்சு ஒரு நல்ல கதையை எழுதுங்களே..."
அவ்வளவுதான்.
சில நேரங்களில் ஒரு மனிதன் சொல்ற ஒரு வார்த்தை வரலாற்றையே மாத்திடும்.
அந்த ஒரு வார்த்தைதான் இங்கயும் நடந்துச்சு.
கல்கியோட ஊக்கத்துல கொத்தமங்கலம் சுப்பு எழுத ஆரம்பிச்ச கதை...
பின்னாடி தமிழ் சினிமாவுல பொற்கால காவியம்னு சொல்லப்பட்ட...
தில்லானா மோகனாம்பாள்.
யாருமே மறக்க முடியாத படம்.
இன்னைக்கும் பேசப்படுற படம்.
இந்த தில்லானா மோகனாம்பாள் தான் பின்னாடி பட்டிக்காடா பட்டணமா உருவாக காரணமா இருக்கும் என்று அப்போ யாருக்கும் தெரியாது.
அதுதான் இப்போ வரப்போகும் மிகப்பெரிய ஆச்சரியம்...
1970-கள்ல...
கதாசிரியர் பாலமுருகன் ஒரு நாள் தில்லானா மோகனாம்பாள் படத்தை பார்த்துக்கிட்டு இருந்தாரு.
இது அவர் முதல் தடவையா பார்க்குற படம் கிடையாது.
பல தடவை பார்த்த படம்.
ஆனா சில படங்கள் அப்படித்தான் ..
ஒவ்வொரு தடவை பார்க்கும்போதும் புதுசா ஏதாவது சொல்லும்.
அந்த நாளும் அதுதான் நடந்துச்சு.
படம் ஓடிக்கிட்டு இருக்கு.
சிவாஜி கணேசன்...
பத்மினி...
இரண்டு பேரும் போட்டி போட்டுக்கிட்டு நடிக்கிறாங்க.
அப்போ திடீர்னு பாலமுருகன் மனசுக்குள்ள ஒரு சிந்தனை வந்துச்சு.
தில்லானா மோகனாம்பாள் இசையையும் நாட்டியத்தையும் மையமா வைச்சு வெற்றி அடைஞ்சிருக்கு.
அப்படின்னா...
ஒரு கிராமத்தோட வாழ்க்கை...
ஒரு கிராமத்தோட பண்பாடு...
ஒரு கிராமத்தோட நாகரிகம்...
இதுக்கு எதிரா நகர வாழ்க்கை...
நவீன சிந்தனை...
மேற்கத்திய கலாச்சாரம்...
இரண்டையும் மோத வச்சு ஒரு கதை எழுதினா எப்படி இருக்கும்?
இந்த கேள்விதான் பட்டிக்காடா பட்டணமாவோட முதல் விதை.
அதுக்கப்புறம் பாலமுருகன் வேலை ஆரம்பிச்சாரு.
சும்மா கதை எழுதல.
ஒவ்வொரு காட்சியையும் செதுக்கினார்.
ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் உயிரோட உருவாக்கினார்.
ஒவ்வொரு உரையாடலையும் எடை போட்டார்.
கிராமத்து மண்வாசனை வீசணும்...
நகரத்து நாகரிகத்தோட மோதல் தெரிஞ்சணும்...
உணர்ச்சி இருக்கணும்...
குடும்பம் இருக்கணும்...
காதல் இருக்கணும்...
அகம்பாவம் இருக்கணும்...
எல்லாத்தையும் கலந்த ஒரு கதையை உருவாக்கினார்.
ஒரு காட்சி கூட பிசிறு தட்டாத மாதிரி பக்காவா கதை ரெடி பண்ணிட்டாரு.
ஆனா கதை ரெடியானதும் அவருக்கு முன்னாடி இருந்த மிகப்பெரிய சவால் இன்னும் ஆரம்பிக்கவே இல்ல.
ஏன்னா இப்போ இந்த கதையை கேட்கப்போறவர் சாதாரண நடிகர் இல்ல...
நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
அவரோட ரியாக்ஷன் என்னவா இருக்கும்?
அதுதான் அடுத்த பெரிய கேள்வி...
கதை முழுசா ரெடியானதும் பாலமுருகன் நேரா சிவாஜி கணேசனை சந்திக்கிறார்.
கதை சொல்ல ஆரம்பிக்கிறார்.
சிவாஜி கதை கேட்பதே ஒரு தனி அனுபவம் தான் .
ஒரு காட்சி சொல்லும்போது அவர் முகம் மாறும்.
ஒரு உணர்ச்சி வரும்போது கண்கள் மாறும்.
ஒரு கோபக்காட்சி வரும்போது உடம்பே அந்த கதாபாத்திரத்துக்குள் போயிடும்.
அப்படித்தான் அந்த நாளும் நடந்துச்சு.
பாலமுருகன் கதை சொல்ல சொல்ல...
சிவாஜியோட முகத்துல மாற்றங்கள் தெரிஞ்சுது.
கதை அவருக்குள்ள வேலை செய்ய ஆரம்பிச்சிருச்சு.
கடைசிவரை அமைதியா கேட்டார்.
கதை முடிஞ்சதும் ரொம்பவே சந்தோஷப்பட்டார்.
இந்த படம் பெரிய அளவுல போகும்னு அப்பவே அவருக்கு புரிஞ்சிருச்சு.
ஆனா உடனே அவர் கேட்ட கேள்வி வேற.
"ஹீரோயின் யாரு?"
இந்த ஒரு கேள்விதான் பின்னாடி தமிழ் சினிமா வரலாற்றுல ஒரு மிகப்பெரிய திருப்பத்துக்கு காரணமா மாறப்போகுது.
ஏன்னா அந்த நேரத்துல பாலமுருகன் மனசுல இருந்த பெயரும்...
சிவாஜி சொல்லப்போற பெயரும்...
ஒண்ணே கிடையாது...
அதுதான் இந்த கதையில அடுத்த மிகப்பெரிய ட்விஸ்ட்...!
"ஹீரோயின் யாரு?"
சிவாஜி கேட்ட அந்த ஒரு கேள்விக்குப் பாலமுருகன் உடனே பதில் சொன்னாரு.
"ஹேமா மாலினி..."
அந்த காலத்துல இந்திய சினிமாவுல வேகமா வளர்ந்துகிட்டு இருந்த நட்சத்திரம்.
அழகு இருக்கு...
நடிப்பு இருக்கு...
மார்க்கெட் இருக்கு...
எல்லாமே சரிதான்.
ஆனா அந்த பதிலைக் கேட்ட உடனே சிவாஜி முகத்துல ஒரு யோசனை தெரிஞ்சதாம்.
அதுக்கப்புறம் மெதுவா கேட்டாரு.
"ஹேமா மாலினியா...?"
அவ்வளவுதான்.
அந்த ஒரு வார்த்தையிலேயே ஏதோ ஒரு சந்தேகம் இருந்துச்சு.
ஏதோ ஒரு கணக்கு ஓடிக்கிட்டு இருந்துச்சு.
பாலமுருகனுக்கும் அது புரிஞ்சிருச்சு.
ஏன்னா சிவாஜி சாதாரணமா எந்த நடிகையையும் குறை சொல்லக்கூடிய மனிதர் கிடையாது.
ஒரு கதாபாத்திரத்துக்கு யார் பொருத்தம்ன்னு எடை போடறதிலே சிவாஜி ஒரு ஜீனியஸ்.
அதனால பாலமுருகன் நேரடியாவே கேட்டாரு.
"அப்போ நீங்களே சொல்லுங்க... இந்த கேரக்டருக்கு யாரு சரியா இருப்பாங்க?"
அதுக்கு சிவாஜி கொடுத்த பதில்...
அந்த அறையில இருந்தவர்களையே ஆச்சரியப்படுத்தியிருக்கும்.
ஏன்னா அவர் சொன்ன பெயர்...
ஜெயலலிதா!
இங்கதான் இந்த கதையோட உண்மையான சுவாரஸ்யம் ஆரம்பிக்குது.
ஏன்னா அந்த நேரத்துல சிவாஜிக்கும் ஜெயலலிதாவுக்கும் எல்லாமே சரியா இருந்த நேரம் கிடையாது.
இரண்டு பேருக்கும் இடையில சில மனஸ்தாபங்கள் ஓடிக்கிட்டு இருந்த நேரம்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில...
தனக்குப் பிடிச்ச நடிகையை சொல்லாம...
கதைக்கு பொருத்தமான நடிகையை சொல்லியிருக்காரு சிவாஜி.
இதுதான் நடிகர் திலகத்தோட மிகப்பெரிய குணம்.
தனிப்பட்ட விருப்பம் வேற...
கலை வேற...
அந்த எல்லையை அவர் எப்போதுமே கலக்கல.
"இந்த கேரக்டருக்கு ஜெயலலிதாதான் சரி."
"அவங்கதான் இந்த வேடத்துக்கு உயிர் கொடுக்க முடியும்."
என்று உறுதியா சொன்னாரு.
அந்த ஒரு முடிவு...
பின்னாடி இந்த படத்தோட வெற்றிக்கு மிகப்பெரிய காரணமா மாறப்போகுது.
ஆனா ஜெயலலிதா இந்த விஷயத்தை கேட்டப்போ என்ன சொன்னாங்க தெரியுமா?
அதுதான் இன்னும் சுவாரஸ்யம்...
அதுக்கப்புறம் தயாரிப்பாளர் மாதவன், பாலமுருகன் இருவரும் ஜெயலலிதாவை சந்திக்க போறாங்க.
படத்தைப் பற்றி சொல்லணும்.
கதையை சொல்லணும்.
தேதிகளை பேசணும்.
எல்லாமே ரெடியா இருக்கு.
ஆனா அவர்கள் கதை சொல்ல ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே...
ஜெயலலிதா ஒரு கேள்வி கேட்டாங்க.
அந்த கேள்வி கேட்டதும் பாலமுருகன் கொஞ்சம் ஆச்சரியப்பட்டாராம்.
ஏன்னா அது சம்பளம் பற்றிய கேள்வி கிடையாது.
தேதி பற்றிய கேள்வி கிடையாது.
கதாபாத்திரம் பற்றிய கேள்வி கிடையாது.
ஜெயலலிதா கேட்ட முதல் கேள்வி...
"இது சிவாஜி சாருக்கு தெரியுமா?"
இதுதான்.
ஒரு நடிகையோட தொழில்முறை அணுகுமுறை எவ்வளவு பெருசு.
அவங்க மனசுல இருந்த முதல் விஷயம் அதுதான்.
உடனே பாலமுருகன் சொல்றாரு.
"உங்களை ரெகமெண்ட் பண்ணுனதே சிவாஜி சார்தான்."
அதை கேட்ட உடனே ஜெயலலிதா சொன்ன வார்த்தை...
இன்னைக்கும் பல பேரு மேற்கோள் காட்டுற வார்த்தை.
"இதுதான் நடிகர் திலகம்."
ஒரே வரி.
ஆனா அந்த ஒரு வரிக்குள்ள சிவாஜி மேல இருந்த மரியாதை முழுசும் அடங்கியிருந்தது.
அப்படித்தான் ஹேமா மாலினிக்காக யோசிக்கப்பட்ட கதாபாத்திரம்...
கடைசி நேரத்துல ஜெயலலிதாவிடம் வந்துச்சு.
ஆனா அந்த முடிவு எவ்வளவு சரியான முடிவுன்னு...
படப்பிடிப்பு ஆரம்பிச்ச சில நாட்களிலேயே எல்லாருக்கும் புரிஞ்சிடுச்சு.
ஏன்னா அடுத்ததாக நடந்த ஒரு
காட்சி...
இன்னைக்கும் ரசிகர்கள் மறக்காத காட்சியா இருக்கு.
படப்பிடிப்பு வேகமா நடந்துகிட்டு இருக்கு.
ஒவ்வொரு காட்சியும் உயிரோட்டமா உருவாகிக்கிட்டு இருக்கு.
அப்போ வருது அந்த இன்டர்வெல் பிளாக்.
படத்தோட மிக முக்கியமான பகுதி.
கணவன் மனைவிக்குள்ள பிரிவு உச்சக்கட்டத்துக்கு போயிருக்கு.
உணர்ச்சிகள் வெடிக்கப்போகுது.
வசனங்கள் நெருப்பா பறக்கப்போகுது.
அந்த காட்சியில ஜெயலலிதா...
சிவாஜியை பார்த்து...
"மிஸ்டர் மூக்கையா..."ன்னு
கூப்பிடுவாங்க.
இப்போ சாதாரணமா கேட்டா பெரிய விஷயமா தெரியாது.
ஆனா அந்த கதாபாத்திர சூழ்நிலையில...
ஒரு மனைவி தன்னோட கணவரை பெயர் சொல்லி கூப்பிடுறது...
அந்த உறவு உடைஞ்சிருச்சு என்பதற்கான அடையாளம்.
அதுதான் அந்த காட்சியோட பலம்.
உடனே சிவாஜி வெடிச்சு பேசுவார்.
"யாரடி பேரைச் சொல்லி கூப்பிடுறே?"
"எங்க ஆயா கூட என் பேரைச் சொல்லி கூப்பிடாது!"
என்று கோபம், வேதனை, அவமானம், ஆதிக்கம் எல்லாம் கலந்து பேசுவார்.
ஷாட் முடிஞ்சது.
எல்லாரும் கைதட்டினாங்க.
பாலமுருகனும் ஜெயலலிதாவை பாராட்டினார்.
அப்போ சிவாஜி அமைதியா ஒரு வார்த்தை சொன்னாராம்.
"அதனாலதான் ஜெயலலிதாவை இந்த கேரக்டருக்கு போட சொன்னேன்."
இந்த காட்சியில தனிப்பட்ட உணர்ச்சிகளை கொண்டு வராம...
கேரக்டரா வாழ்ந்ததாலதான் அந்த காட்சி இவ்வளவு வலிமையா வந்துச்சு.
இதெல்லாம் விட ஆச்சரியப்பட வைக்கிற ஒரு சம்பவம் இன்னும் இருக்கு.
ஒரே ஒரு வரி வசனத்துக்காக...
சிவாஜி கணேசனே 5 டேக் எடுத்த சம்பவம்.
அதுதான் இப்போ வரப்போகுது...
ஒரு நாள் படப்பிடிப்பு.
ரொம்ப சாதாரணமான காட்சி.
பிரிஞ்சு போன மனைவியோட நினைவுகள்ல வாழ்ந்துகிட்டு இருக்குற மூக்கையா வீட்டுக்கு வர்றாரு.
அப்போ ஆயா கேக்குறாங்க.
"ஏம்ப்பா... பஞ்சாயத்துக்கு போனியே... எப்படி நடந்துச்சு?"
சிவாஜி பதில் சொல்றாரு.
"பஞ்சாயத்துல எனக்கு கிடைச்ச வரவேற்பை நீ பார்த்திருந்தா ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பே."
அதுக்கு ஆயா சொல்றாங்க.
"அடடா... நான் வராம போயிட்டேனே..."
அதுக்கப்புறம் வர்ற ஒரு வரிதான்.
ஒரே ஒரு வரி.
"நான் வந்திருக்கிறேனே... உயிரோட..."
அவ்வளவுதான்.
அந்த ஒரு வரிக்குள்ள எவ்வளவு உணர்ச்சி இருக்கணும் தெரியுமா?
முதல் டேக்.
பாலமுருகன் அமைதி.
இரண்டாவது டேக்.
இன்னும் அமைதி.
மூன்றாவது டேக்.
நான்காவது டேக்.
ஐந்தாவது டேக்.
இன்னும் பாலமுருகன் திருப்தி அடையல.
இப்போ சிவாஜிக்கு கொஞ்சம் கோபம் வர ஆரம்பிச்சிருச்சு.
ஏன்னா அவர் எந்த ஷாட் முடிச்சாலும்...
பாலமுருகன் முகத்தைப் பார்த்துதான் அடுத்த முடிவு எடுப்பாராம்.
அவரோட முகத்துல திருப்தி தெரிஞ்சா ஓகே.
இல்லன்னா ஏதோ குறை இருக்கு.
அந்த நாளோ...
ஐந்து டேக் ஆகியும் அந்த திருப்தி முகத்துல தெரியல.
கடைசில சிவாஜி நேரா கேட்டாரு.
"என்னடா உனக்கு வேணும்?"
அப்போதான் பாலமுருகன் அவர் எதிர்பார்த்த உணர்ச்சியை முழுசா விளக்கினார்.
அதை கேட்ட சிவாஜி...
"இத ஏண்டா முதல்லயே சொல்லல?"
என்று கேட்டுட்டு மீண்டும் கேமரா முன்னாடி போய் நின்னாரு.
ஒரே ஒரு டேக்.
அந்த ஒரு டேக்.
பர்ஃபெக்ட்.
அப்படியே ஓகே.
இதுதான் நடிகர் திலகம்.
நடிப்பு மட்டும் இல்ல.
ஒரு உணர்ச்சியை சரியான அளவுல கொடுக்க வேண்டிய அர்ப்பணிப்பு.
அதனால்தான் இன்று வரைக்கும் பட்டிக்காடா பட்டணமா படத்துல இருக்குற ஒவ்வொரு காட்சியும்...
ஒவ்வொரு வசனமும்...
ஒவ்வொரு பார்வையும்...
உயிரோட இருக்குது.
இந்த படம் வெளியான பிறகு நடந்த வசூல் புரட்சி...
அந்த காலத்து ரசிகர்கள் கொடுத்த வரவேற்பு..
இதுல கூட தனி பெரிய வெற்றி கதைகள் இருக்கு.
ஒரு படம் வெற்றி அடையனும்னா ..
அதை மக்கள் மனசுக்குள்ள கொண்டு போய் சேர்க்கணும்.
அதுதான் பட்டிக்காடா பட்டணமா விஷயத்துல நடந்துச்சு.
படம் வெளியான முதல் சில நாட்களிலேயே ஒரு விஷயம் எல்லாருக்கும் புரிஞ்சிருச்சு.
இது சாதாரண ஹிட் படம் இல்லே.
ஒரு பக்கம் கிராமத்து பண்பாடு.
மற்றொரு பக்கம் நகரத்து நாகரிகம்.
யாரையும் முழுசா நல்லவங்கன்னு சொல்லல.
யாரையும் முழுசா கெட்டவங்கன்னு சொல்லல.
ஆனா வாழ்க்கைல நடக்குற மோதலை உண்மையா காட்டுச்சு.
அதனால மக்கள் இந்த படத்தோட இணைஞ்சுட்டாங்க.
பல ரசிகர்கள் பேசுன விஷயம் இதுதான்.
"இந்த படத்துல ஜெயலலிதா இல்லாம வேற யாராவது நடித்திருந்தா இதே தாக்கம் வந்திருக்குமா?"
இந்த கேள்வி இன்னைக்கும் சில பழைய ரசிகர்கள் மத்தியில் பேசப்படுது.
ஏன்னா கல்பனா கதாபாத்திரத்துல இருந்த திமிர்...
நாகரிக நம்பிக்கை...
உணர்ச்சி...
உடைந்த உறவு...
பின்னாடி வர்ற மாற்றம்...
இவைகளை எல்லாம் அவங்க மிக இயல்பா கொண்டு வந்திருந்தாங்க.
அந்த காரணத்தாலதான் சிவாஜி ஆரம்பத்திலேயே அந்த பெயரை சொன்னாரோன்னு பலர் பின்னாடி பேச ஆரம்பிச்சாங்க.
நடிகர் திலகம் ஒரு நடிகர் மட்டும் இல்ல.
ஒரு கதாபாத்திரத்துக்கு சரியான நடிகரை தேர்வு செய்யக்கூடிய ஜீனியஸ்.
(இந்த தகவல்கள் திரு பாலமுருகன் அவர்களின் மகன் பூபதிராஜா சொன்ன தகவல்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது)
செந்தில்வேல் சிவராஜ்
9087620800
கருத்துகள்
கருத்துரையிடுக