மனித உணர்வுகளின் உன்னதத்தையும், உறவுகளின் சிக்கல்களையும் பேசிய உன்னத வங்காளப் படைப்புகள், தமிழ் மண்ணின் கலாச்சாரத்திற்கு ஏற்ப மறுவடிவம் பெற்றபோது அவை வெறும் 'ரீமேக்'குகளாக நிற்கவில்லை; காலத்தை வென்ற காவியங்களாக உருவெடுத்தன. பணத்தை விடப் பாசமே பெரியது என உணர்த்திய 'படிக்காத மேதை', ஷேக்ஸ்பியரின் நாடகக் குரலோடு தேசபக்தியைப் பேசிய 'ரத்தத் திலகம்', குதூகலம் நிறைந்த 'சுமதி என் சுந்தரி', மற்றும் தேசிய விருதுகளை அள்ளிய 'உயர்ந்த மனிதன்' என, இரு பெரும் திரையுலகின் அரிய கலைப் பகிர்வையும், திரைக்குப் பின்னால் நடந்த சுவாரசியமான வரலாற்றுப் பின்னணிகளையும் ஒரு அழுத்தமான ஆவணமாக இதில் நாம் பார்க்கலாம்
'ஜோக் பியோக்' முதல் 'படிக்காத மேதை' வரை:
வங்காள மொழியில் 'ஜோக் பியோக்' என்றால் 'கூட்டல் மற்றும் கழித்தல்' என்று பொருள்.ஆஷாபூர்ண தேவி எழுதிய நாவல் இது.
1950களில் வணிக ரீதியான மசாலா கூறுகள் ஏதுமின்றி, நடுத்தர வர்க்க குடும்ப அமைப்பின் ஏமாற்றங்களையும் யதார்த்தத்தையும் அழுத்தமாகப் பதிவு செய்ய நினைத்த இயக்குநர் பினாகி பூஷன் முகர்ஜி, நாவலான இதை 1953 ஜூலை 10 அன்று கருப்பு-வெள்ளைத் திரைப்படமாக வெளியிட்டார். வங்காள சினிமாவின் மிகச்சிறந்த குணச்சித்திர நடிகரான சபி பிஸ்வாஸ் குடும்பத் தலைவர் 'ஜாமினி மோகன்' பாத்திரத்திலும், மாஸ்டர் பாபுவா நடிகர் கள்ளங்கபாடற்ற வளர்ப்பு மகன் 'கோவிந்தா' பாத்திரத்திலும் நடித்திருந்தனர். இவர்களின் எதார்த்தமான நடிப்பு அன்றைய கல்கத்தா ரசிகர்களிடையே பெரும் அழுகையையும், பாராட்டுகளையும் பெற்றுத் தந்தது.
இந்திய குடும்ப அமைப்பின் முக்கியத்துவத்தைப் பேசிய இந்த அழுத்தமான கதைக்களம், இந்திய அளவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதால், பிற்காலத்தில் இது தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் அஸ்ஸாமி ஆகிய மொழிகளிலும் அதிகாரப்பூர்வமாக மறுஆக்கம் செய்யப்பட்டது. அந்த வரிசையில், இத்திரைப்படம் தமிழில் ஏ. பீம்சிங் இயக்கத்தில், 'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன் நடிப்பில் 'படிக்காத மேதை' (1960) என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு, தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு அழியாத காவியமாக உருவெடுத்தது. அசல் வங்காளப் படத்தில் சபி பிஸ்வாஸ் நடித்த குடும்பத் தலைவர் பாத்திரத்தை, தமிழில் எஸ். வி. ரங்காராவ் மிக கம்பீரமாக ஏற்று நடித்தார். வங்காளத்தில் மாஸ்டர் பாபுவா நடித்த வளர்ப்பு மகன் பாத்திரம்தான், தமிழில் சிவாஜி கணேசன் ஏற்று நடித்த 'ரங்கன்' என்ற மறக்க முடியாத பாத்திரமாகும்.
இதே உணர்வுப்பூர்வமான கதைக்களம் தமிழ் மட்டுமின்றி பிற மொழிகளிலும் பெரும் வெற்றியைத் தேடித்தந்தது. தெலுங்கில் 1962 ஆம் ஆண்டு 'ஆத்ம பந்துவு' என்ற பெயரில், என். டி. ராமாராவ் நடிப்பில் இது ரீமேக் செய்யப்பட்டது.
முதன்முதலில் 1967 இல் 'மெஹர்பான்' என்ற பெயரிலும், பிற்காலத்தில் 1990 ஆம் ஆண்டு கோவிந்தா மற்றும் ராஜேஷ் கன்னா நடிப்பில் 'ஸ்வர்க்' என்ற பெயரிலும் வெளியாகிப் புகழ்பெற்றது. இவ்வாறு, ஒரு வங்காள நாவலாகத் தொடங்கி, இந்திய அளவில் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டு, தமிழ் திரையுலகில் 'படிக்காத மேதை' என்ற காவியமாக நிலைத்து நிற்கும் இக்கதை, பணத்தை விடப் பாசமே பெரியது என்பதை உலகுக்கு உணர்த்திய ஒரு உன்னதமான படைப்பாகும்.
சப்தபதி' முதல் 'ரத்தத் திலகம்' வரை:
வங்காளத் திரை உலகில் 1961-ஆம் ஆண்டு வெளியாகி, பெங்காலி சினிமாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க காதல் காவியமாகக் கருதப்படும் திரைப்படம் 'சப்தபதி' .புகழ்பெற்ற எழுத்தாளர் தாராசங்கர் பந்தோபாத்யாயின் நாவலை அடிப்படையாகக் கொண்டு, இயக்குநர் அஜோய் கர் இத்திரைப்படத்தை இயக்கியிருந்தார். இரண்டாம் உலகப் போர் மற்றும் இந்திய சுதந்திரத்திற்கு முந்தைய 1940-களின் முற்பகுதியை பின்னணியாகக் கொண்ட இக்கதையில், கல்கத்தா மருத்துவக் கல்லூரியில் படிக்கும் 'கிருஷ்ணேந்து' என்ற வங்காள இளைஞனுக்கும், 'ரீனா பிரவுன்' என்ற ஆங்கிலோ-இந்தியப் பெண்ணுக்கும் இடையே மலரும் காதலும், மத-கலாச்சார வேறுபாடுகளால் அவர்கள் சந்திக்கும் சோதனைகளுமே மையக்கதை ஆகும். இதில் உத்தம் குமார் (கிருஷ்ணேந்து) மற்றும் சுசித்ரா சென் (ரீனா பிரவுன்) ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் ஜோடியாக நடிக்க, சாபி பிஸ்வாஸ் மற்றும் சாயா தேவி ஆகியோர் பிற முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
1961-ஆம் ஆண்டின் அதிக வசூல் செய்த பெங்காலி திரைப்படமாக அமைந்த இத்திரைப்படம், இன்றும் ஒரு மிகச்சிறந்த கிளாசிக் படமாகப் போற்றப்படுகிறது.
இத்தகைய புகழ்பெற்ற பெங்காலி திரைப்படத்தை நேரடியாகத் தழுவி, சில காட்சிகளின் முக்கிய ஒற்றுமைகளுடன் தமிழில் எடுக்கப்பட்ட திரைப்படம்தான் 'ரத்தத் திலகம்' (1963) ஆகும். இயக்குநர் தாதா மிராசி இயக்கத்தில் உருவான இத்திரைப்படம், இந்திய-சீனப் போரின் பின்னணியில் அமைக்கப்பட்ட ஒரு உன்னதமான தேசபக்தி மற்றும் காதல் காவியமாகும். அசல் பெங்காலி படத்தில் உத்தம் குமார் மற்றும் சுசித்ரா சென் நடித்த அதே பாத்திரங்களை, தமிழில் 'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன் மற்றும் 'நடிகையர் திலகம்' சாவித்திரி ஆகியோர் தங்களின் அசாத்திய நடிப்பால் உயிர்ப்பித்தனர்.
இவ்விரு படங்களுக்கும் இடையே உள்ள மிக முக்கிய மற்றும் சுவாரசியமான சிறப்பம்சம் என்னவென்றால், அதில் இடம்பெற்ற புகழ்பெற்ற ஷேக்ஸ்பியரின் 'ஒத்தெல்லோ' நாடகக் காட்சியாகும். பெங்காலி திரைப்படமான 'சப்தபதி'யில் உத்தம் குமாரும் சுசித்ரா சென்னும் ஆங்கிலத்தில் 'ஒத்தெல்லோ' நாடகத்தை மேடையில் நடிப்பார்கள். அந்த நாடகக் காட்சிக்கு அவர்கள் இருவருக்கும் பின்னணியில் ஆங்கில வசனங்களை மிக கம்பீரமாகப் பேசிக் குரல் கொடுத்தவர்கள் புகழ்பெற்ற நடிகர்களான உத்பல் தத் மற்றும் ஜெனிஃபர் கபூர் ஆவர். வியப்பளிக்கும் விதமாக, தமிழில் எடுக்கப்பட்ட 'ரத்தத் திலகம்' படத்திலும் அதே பாணியில் சிவாஜி கணேசனும் சாவித்திரியும் ஆங்கிலத்தில் 'ஒத்தெல்லோ' நாடகத்தை மேடையில் நடிக்கும் காட்சி மிக முக்கியப் பங்காகக் கையாளப்பட்டிருந்தது. மேலும், பெங்காலி படத்தில் பின்னணி குரல் கொடுத்த அதே உத்பல் தத் மற்றும் ஜெனிஃபர் கபூர் ஆகியோரே, தமிழிலும் சிவாஜி மற்றும் சாவித்திரிக்காக ஆங்கில வசனங்களை அதே குரலில் பேசியுள்ளனர் என்பது இத்திரைப்படத்தின் மிக விசேஷமான சிறப்பம்சமாகும்.
நயிகா சங் பாத் முதல் சுமதி என் சுந்தரி வரை :
"நயிகா சங்பாத்" 1967-ஆம் ஆண்டு வெளியான வங்காள மொழித் திரைப்படம், ஒரு பிரபலமான காதல் மற்றும் நகைச்சுவைத் திரைப்படமாகும்.
இயக்கம்: அக்ரடூட்.
நடிகர்கள்: பெங்காலி திரையுலகின் சூப்பர் ஸ்டார் உத்தம் குமார் மற்றும் அஞ்சனா பௌமிக் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கதைக்களம்: ஒரு பிரபலமான நடிகை தனது சினிமா வாழ்க்கையில் ஏற்படும் சலிப்பு மற்றும் தனிமையால், மாறுவேடத்தில் ஒரு கிராமத்திற்குச் செல்கிறார். அங்கு ஒரு எளிய மனிதரைச் சந்தித்து காதலில் விழுவதுதான் இதன் முக்கிய கதையாகும்.
இந்த பெங்காலி திரைப்படம் தமிழில் "சுமதி என் சுந்தரி" என்ற பெயரில் 1971-ஆம் ஆண்டு ரீமேக் செய்யப்பட்டது.
இரண்டு படங்களின் அடிப்படைக் கதையும் ஒன்றுதான் என்றாலும், தமிழ் பதிப்பில் சில சுவாரசியமான மாற்றங்கள் செய்யப்பட்டன:
நகைச்சுவைக்குப் பெயர்பெற்ற சித்ராலயா கோபு அவர்கள் இப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனங்களை எழுதினார்.
சுவாரசியமான பின்னணித் தகவல்கள் :
குதிரைச் சவாரி நகைச்சுவை: படப்பிடிப்பின் போது ஒரு முக்கிய காட்சிக்கு இரண்டு குதிரைகள் தேவைப்பட்டன. ஆனால் வந்ததில் ஒரு குதிரை மிகவும் ஒல்லியாகவும், பின்னோக்கி மட்டுமே நடக்கக்கூடியதாகவும் இருந்தது. சிவாஜி கணேசனின் கால்ஷீட் நேரத்தைக் கருத்தில் கொண்டு, இயக்குனர் குதிரையை மாற்றாமல், அந்த ஒல்லியான குதிரையை நாகேஷுக்கும், நல்ல குதிரையை சிவாஜிக்கும் கொடுத்து அந்தக் காட்சியையே ஒரு சிறந்த நகைச்சுவைக் காட்சியாக மாற்றினார்.
உத்தர் புருஷ் (வங்காளத் திரைப்படம் - 1966)
ஏவி.எம் (AVM) நிறுவனத்தின் கொல்கத்தா பங்குதாரரான வி.ஏ.பி. ஐயர் என்பவர், வங்காளத்தில் இந்தத் திரைப்படம் மிகச் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது என்ற தகவலை சென்னைக்குத் தந்தார். அதன் பிறகு ஏவி.எம் குழுவினர் இப்படத்தைப் பார்த்து, இதன் கதைக்களம் தமிழ் ரசிகர்களுக்குப் பிடிக்கும் என உணர்ந்து ரீமேக் செய்ய உரிமையைப் பெற்றனர்.
இந்த ஒரே கதையை அடிப்படையாகக் கொண்டு தமிழில் 'உயர்ந்த மனிதன்' (1968) படமும், பிற்காலத்தில் தெலுங்கில் அக்கினேனி நாகேஸ்வர ராவ் நடிப்பில் 'அனுபந்தம்' (1984) என்ற திரைப்படமும் எடுக்கப்பட்டன.
உயர்ந்த மனிதன் (தமிழ்த்திரைப்படம் - 1968)
மூலக்கதையான உத்தர் புருஷை அப்படியே எடுக்காமல், தமிழ் கலாச்சாரத்திற்கும் ஏவி.எம் நிறுவனத்தின் பாணிக்கும் ஏற்ப பல சுவாரசியமான மாற்றங்களைச் செய்து, புகழ்பெற்ற எழுத்தாளர் ஜாவர் சீதாராமன் இப்படத்தின் திரைக்கதையை அமைத்தார்.
படத்தில் ஒரு முக்கியக் காட்சியில், தன் வீட்டுப் பணிப் பையனாக இருக்கும் சிவகுமாரை (தன் மகன் என்று தெரியாமல்) சிவாஜி கணேசன் பிரம்பால் அடித்து வெளுப்பார். உணர்ச்சிப்பூர்வமான இக்காட்சியை எடுக்கும்போது பிரம்பு முறிந்தால் என்ன செய்வது என்ற முன்னெச்சரிக்கையோடு, படப்பிடிப்புத் தளத்தில் முன்கூட்டியே 10 பிரம்புகள் வாங்கி வைக்கப்பட்டிருந்தன.
நவம்பர் 29, 1968 இல் வெளியான இப்படம் திரையரங்குகளில் 125 நாட்களுக்கு மேல் ஓடி மாபெரும் வணிக ரீதியான வெற்றி பெற்றது. சிறந்த படம் (முதல் பரிசு), சிறந்த இயக்குனர் (கிருஷ்ணன்-பஞ்சு) உட்பட நான்கு தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகளை இப்படம் அள்ளியது.
இப்படத்தில் இடம்பெற்ற "பால் போலவே வான் மீதிலே" என்ற பாடலைப் பாடியதற்காக பி. சுசீலாவுக்கு சிறந்த பெண் பின்னணிப் பாடகருக்கான தேசிய விருது கிடைத்தது. இந்தியத் திரைப்பட வரலாற்றிலேயே சிறந்த பெண் பின்னணிப் பாடகருக்கான தேசிய விருது வழங்கப்பட்ட முதல் ஆண்டிலேயே (16-வது தேசிய விருதுகள்) அதனைப் பெற்று சுசீலா சாதனை படைத்தார்.
செந்தில்வேல் சிவராஜ்
9087620800
கருத்துகள்
கருத்துரையிடுக