நடிகர் திலகம் சிவாஜிக்கு ஒரு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கிக் கொடுத்தது அவருடைய காதல் பாடல்களா? அல்லது தத்துவப் பாடல்களா?
இந்த பதிவுலே அவருடைய மிகச்சிறந்த 20 காதல் பாடல்களையும், 20 தத்துவப் பாடல்களையும் பார்த்துட்டு, இந்த இரண்டு பரிமாணங்களில் அவருக்குப் புகழ் சேர்த்தது எதுன்னு கடைசிலே பாக்கலாம்.
பகுதி 1:
நடிகர் திலகத்தின் 20 காலத்தால் அழியாத காதல் பாடல்கள்
1. நான் பேச நினைப்பதெல்லாம் (பாலும் பழமும்)
"ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே, உலகங்கள் நமையன்றி வேறேதும் இல்லை" அப்படிங்கிற ஒரு வரி போதாதா! வார்த்தைகள் எவ்வளவு அழகா அமைஞ்சிருக்கு பாருங்க.
2. மயக்கமென்ன இந்த மௌனமென்ன (வசந்த மாளிகை)
காதலோட உச்சகட்ட போதையை, ஒரு பணக்காரக் காதலனோட மிடுக்குல நம்ம சிவாஜி வெளிப்படுத்திய பாடல் இது. "உன்னையல்லால் ஒரு பெண்ணை இனி நான் உள்ளத்தில் நானும் தொட மாட்டேன்" அப்படின்னு மனசால் கூட தொட மாட்டேன்னு சொல்ற அந்த வரி, உண்மையான காதலை சொல்ல இதைவிட வேற என்ன வேணும்னு கேட்க வைக்குது.
3. முல்லைமலர் போலே மொய்க்கும் வண்டு போலே (உத்தமபுத்திரன்)
இப்போ அரச கதையிலிருந்து ஒரு பாட்டை பார்க்கலாம். காதலுக்கு இப்படி ஒரு உவமையை சொல்ல முடியுமான்னு ஆச்சரியப்பட வைக்கும் வரி, "விந்தை மிகு மகுடி முன்னாலே நாகத்தை போலே, எந்தன் மனம் ஆடக் கண்டேன் இன்பத்தினாலே".
4. மன்னிக்க வேண்டுகிறேன் (இரு மலர்கள்)
காதலோட துடிப்பையும் தவிப்பையும் சிவாஜி - பத்மினி அவங்களோட நடிப்புலயே சொன்ன பாடல்தான் இது. இந்த காதலர்களோட ஒரே எண்ணம் எப்பவும் சேர்ந்தே இருக்கணும் அப்படிங்கறதுதான். அதைத்தான் கவிஞர், "நாம் பிரிவென்னும் ஒரு சொல்லை மறந்தாலென்ன" அப்படின்னு ரொம்ப மென்மையா சொல்லியிருப்பார்.
5. தாழையாம் பூ முடித்து (பாகப்பிரிவினை)
இது ஒரு கிராமத்துத் ஜோடிகளோட கள்ளங்கபடமற்ற, தூய்மையான காதலைக் காட்டும் பாடல். காதல் அப்படிங்கிற வார்த்தையை விட அதுக்கு மேலான 'அன்பு' அப்படின்னு சொன்னா இதுக்கு ரொம்ப பொருத்தமா இருக்கும். "மண் பார்த்து விளைவதில்லை மரம் பாத்து படர்வதில்லை, கன்னியரும் பூங்கொடியும் கன்னைய்யா அவர் கண்ணிலே களங்கமுண்டோ சொல்லய்யா" அப்படின்னு காதல் எப்படி வரும்னு விளக்குற வரி அட்டகாசமா இருக்கும்.
6. ஒரு ராஜா ராணியிடம் (சிவந்த மண்)
வெளிநாட்டுப் பின்னணியில, மேற்கத்திய இசையில சிவாஜியோட ஸ்டைலான ரொமான்ஸ் இது. "ஆசையுள்ள மேனியிலும் ஒரு பக்கம் அச்சமுள்ள மான் இனமோ, நாடுவிட்டு நாடு வந்தால் பெண்மை நாணமின்றிப் போய் விடுமோ" அப்படிங்கிற வரி நம்ம தமிழ் பண்பாட்டுக்கு ஏத்த மாதிரி அமைஞ்சிருக்கும்.
7. வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி (பாவை விளக்கு)
உடம்புல அத்தனை உறுப்புகள் இருந்தாலும், கண் மட்டுமே காதலை தூண்டுற ஒரு விஷயம். அதை, "விழி வீச்சில் மின்னலினால் நிலை தடுமாறி நின்றேன்" அப்படிங்கிற ஒற்றை வரியில கவிஞர் ரொம்ப அழகா சொல்லியிருப்பார்.
8. முத்துக்களோ கண்கள் (நெஞ்சிருக்கும் வரை)
காதலியோட அழகை ஒவ்வொரு உறுப்பாக வர்ணிக்கும் ஓர் அற்புதமான கவிதை இது. "சந்தித்த வேளையில் சிந்திக்கவேயில்லை தந்து விட்டேன் என்னை" அப்படிங்கிற வரி... மாஸ்டர் பீஸ்..
9. பாவாடை தாவணியில் பார்த்த உருவமா (இருவர் உள்ளம்)
காதல்ல விழுந்துட்டா ஒரு காதலனோட நிலைப்பாடு எப்படி இருக்கும்னு சொல்ற பாட்டு. "எங்கே என் காலமெல்லாம் கடந்து விட்டாலும், ஓர் இரவினிலே முதுமையை நான் அடைந்து விட்டாலும், மங்கை உன்னை தொட்ட உடன் மறைந்து விட்டாலும், நான் மறுபடியும் பிறந்து வந்து மாலை சூடுவேன்" அப்படிங்கிற வரி காதலின் ஆழத்தை சிறப்பா சொல்லுது.
10. கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா (ஆலயமணி)
எதெல்லாம் சிறப்போ, அதையெல்லாம் ஒப்பிட்டு காதலியை வர்ணிச்சு பாடுற ஒரு மிகச் சிறந்த பாடல் இது.
11. நினைவாலே சிலை செய்து உனக்காக வைப்பேன்
இளமை கால உண்மையான காதல், முதுமை அடைஞ்சாலும் மாறாதுன்னு சொல்ற பாட்டு இது. காதல்ல அந்த நினைவுதான் முக்கியம், அந்த நினைவாலே சிலை செஞ்சிருக்கேன்னு ஒரு காதலி கிட்ட மட்டுமே காட்டக் கூடிய உண்மையான உணர்வை இந்த வரிகள் உணர்த்துது.
12. எங்க வீட்டு ராணிக்கிப்போ இளமை திரும்புது (கிரகப்பிரவேசம்)
பெரும்பாலும் காதல் பாட்டுகள் கல்யாணத்துக்கு முன்னாடி வர்றதாத்தான் இருக்கும். ஆனா, இது கல்யாணத்துக்கு பின்னாலேயும் இருக்கிற ஒரு காதலை சொல்ற பாட்டு. இந்த மாதிரி அம்சங்கள்ல சிவாஜி சாருடைய பாட்டுகள் தான் ரொம்ப தனித்துவமானதா இருக்கு.
13. ஆகாய பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா (பொன்னூஞ்சல்)
இந்த பாட்டை இந்த வரிசையில சொல்ல காரணமே அதோட உற்சாகம்தான். கேக்குற நம்மளையும் அப்படியே இழுத்துட்டு போயிடும். நிஜமாவே ஒரு ஊஞ்சல்ல ஆடுற மாதிரி சுகத்தை இந்த பாடல் நமக்கு கொடுக்கும்.
14. வெள்ளிக் கிண்ணம் தான் (உயர்ந்த மனிதன்)
ஒரு பெரிய குடும்பத்து வாரிசின் கண்ணியமான, ஆனால் ஆழமான காதல் வெளிப்பாடு இது. "சித்திர விழிகளென்ன? மீனோ? மானோ? செவ்விதழ் வடித்ததென்ன? பாலோ? தேனோ? முத்திரைக் கன்னங்கள் என்ன? பூவோ? பொன்னோ?" அப்படின்னு காதலியை பத்தி இன்னும் சொல்லவான்னு ரொம்ப அழகா வர்ணிச்சு போகும்.
15. சிரித்தால் சிரித்து அழுதால் துடித்து (மிருதங்க சக்கரவர்த்தி)
கஷ்டத்துல இருக்கிறப்போ கூட அந்த உண்மையான காதல் எப்படிப்பட்டதுன்னு சொல்ற பாட்டு இது. "வாழ்ந்திடும் சொந்தங்கள் நாம் அடைந்தோம், அடி வண்ணக்கிளியே இங்கு என்னை தன்னந்தனியே விட்டு போக சம்மதமோ" அப்படின்னு மனசை உருக்குற மாதிரி அமைஞ்சிருக்கும்.
16. இனியவளே என்று பாடி வந்தேன் (சிவகாமியின் செல்வன்)
'இனியவளே' அப்படின்னு ஆரம்பிச்ச காதலன், இனி அவள்தான்னு தன்னோட முடிவை சொல்ற காதல் பாட்டு இது. "இனியவளே என்று பாடி வந்தேன், இனி அவள்தான் என்று ஆகி விட்டேன்" அப்படிங்கிற வரிகள் ரொம்பவே ரசிக்க வைக்கும்.
17. இரவும் நிலவும் வளரட்டுமே (கர்ணன்)
சமூகப் படங்கள்ல மட்டும்தானா சிவாஜிக்கு காதல் பாட்டுகள் இருக்குன்னு கேட்டா, இல்லை. காவிய காலத்துலயும் காதலை சிறப்பா சொன்ன பாடல் இது. கேட்கும்போதே ஒரு இதமான உணர்வை கொடுக்கும்.
18. இரவுக்கும் பகலுக்கும் இனி என்ன வேலை (எங்கள் தங்க ராஜா)
காதல் வந்துட்டா இனி அந்த காதலர்களோட நிலைப்பாடு எப்படி இருக்கும் அப்படிங்கிற கேள்விக்கு, மிகச் சிறப்பான பதிலா அமைஞ்சதுதான் இந்த பாடல்.
19. மலரே குறிஞ்சி மலரே (டாக்டர் சிவா)
பெண்மைக்கு சிறப்பு சேர்க்கிற ரொம்ப மென்மையான காதல் பாட்டு இது. "தலைவன் சூட நீ மலர்ந்தாய், பிறந்த பயனை நீ அடைந்தாய்" அப்படின்னு வரிகள் மனசை தொடுற மாதிரி அமைஞ்சிருக்கும்.
20. நதி எங்கே போகிறது கடலை தேடி (இருவர் உள்ளம்)
ஒரு கேள்வி, அதுக்கு ஒரு பதில். இந்த பாணியில அமைஞ்ச ஒரு அட்டகாசமான பாட்டு. சிவாஜி கணேசன் - சரோஜாதேவி நடிப்புல உருவான இந்த பாடல் எப்ப கேட்டாலும் ஒரு புது உற்சாகத்தை கொடுக்கும்.
பகுதி 2: நடிகர் திலகத்தின் 20 சிந்திக்க வைக்கும் தத்துவப் பாடல்கள்
காதல்ல உருக வச்ச நம்ம நடிகர் திலகம், தத்துவத்துல நம்ம வாழ்க்கைக்கு தேவையான பல பாடங்களை சொல்லியிருக்கார். அதையும் பார்க்கலாம்!
1. ஆறு மனமே ஆறு (ஆண்டவன் கட்டளை)
மனித மனம் எப்படி அமைதி பெற வேண்டும் என்பதற்கான வாழ்க்கை சூத்திரம் இது. "நிலை உயரும் போது பணிவு கொண்டால் உலகம் உன்னை வணங்கும்" ..இது மிகச் சிறந்த வரி..
2. போனால் போகட்டும் போடா (பாலும் பழமும்)
வாழ்க்கையில ஒரு இழப்பைக் கண்டு துவளாமல், 'எல்லாம் கடந்து போகும்' அப்படிங்கிற மனப்பக்குவத்தை தர ஒரு மருந்து மாதிரி இந்த பாட்டு இருக்கும். "வந்தவர் எல்லாம் தங்கிவிட்டால் இந்த பூமியில் நமக்கே இடம் எது" அப்படிங்கிற ஒரு வரி எவ்வளவு பெரிய விஷயத்தை அசால்ட்டா சொல்லுது பாருங்க!
3. எங்கே நிம்மதி (புதிய பறவை)
நீங்க கோடீஸ்வரனாகவே இருந்தாலும், மனசாட்சி உறுத்தினால் கண்டிப்பா தூக்கம் வராது அப்படிங்கிற உளவியல் தத்துவத்தை சொல்ற பாட்டு. கஷ்டத்துல இருக்கிறப்போ ஒரு மனுஷன் நினைக்கிற விஷயத்தை, "என்ன நினைத்து என்னை படைத்தான் இறைவன் என்பவனே" அப்படின்னு ரொம்ப ஆழமா சொல்லியிருப்பாங்க.
4. மனிதன் நினைப்பதுண்டு (அவன்தான் மனிதன்)
மனிதனோட அகங்காரத்தை அடித்து நொறுக்கி, விதியின் கைகளை சுட்டிக்காட்டும் பாடல் இது. "மனிதன் நினைப்பதுண்டு வாழ்வு நிலைக்குமென்று, இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதன் என்று" அப்படிங்கிற முதல் வரியே பெரிய தத்துவத்தை சொல்லும்.
5. சோதனை மேல் சோதனை (தங்கப் பதக்கம்)
ஒரு நேர்மையான மனிதனுக்கு வரும் கஷ்டங்களை எண்ணி வருந்தும் ஆழமான வரிகள் கொண்ட பாடல். "வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி" அப்படிங்கிற வரி மனசை ரொம்பவே பாரமாக்கக் கூடியது.
6. அண்ணன் என்னடா தம்பி என்னடா (பழனி)
ரத்த சொந்தங்கள் பணத்துக்காக எப்படி மாறிப் போகும் அப்படிங்கிற கசப்பான உண்மையை சொல்ற பாட்டு. "பதைக்கும் நெஞ்சினை அணைக்கும் யாவரும் அண்ணன் தம்பிகள் தானடா" அப்படிங்கிற வரி உலக நடப்பை உள்ளபடி சொல்லும்.
7. உள்ளம் என்பது ஆமை (பார்த்தால் பசி தீரும்)
நம்பிக்கையை பத்தி இந்த பாட்டுல ஒரு வரி வரும் பாருங்க... "தெய்வம் என்றால் அது தெய்வம், சிலை என்றால் வெறும் சிலை தான்". நம்ம பார்வையிலதான் எல்லாமே இருக்குங்கிறத ரொம்ப எளிமையா சொல்லிட்டார் கவிஞர்.
8. கல்லாய் வந்தவன் கடவுளம்மா (மகாகவி காளிதாஸ்)
மனுஷனுக்கு சொல் எவ்வளவு முக்கியம்னு அழகா சொல்ற பாட்டு. "காக்காய் உண்டு நரியுண்டு, வரிக்கழுதைகள் உண்டு புலியுண்டு, மனிதரில் இத்தனை வகையுண்டு, அவர் வாக்கினில் தெரியும் யாரென்று" அப்படின்னு மனுஷங்களோட குணங்களை மிருகங்களோட ஒப்பிட்டு ரொம்ப சிறப்பா சொல்லியிருப்பார்.
9. நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு (தியாகம்)
இது ஒரு சூப்பர் ஹிட் பாட்டு. இந்தப் பாட்டுல ஒரு அழகான வரி, "தவறுக்குத் துணிந்த மனிதன் அழுவதில்லையே, தவறியும் வானம் மண்ணில் விழுவதில்லையே" .
10. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்தது (உயர்ந்த மனிதன்)
நம்ம கடந்த கால நினைவுகளை அப்படியே கண்முன்னாடி கொண்டு வர்றதோட மட்டுமில்லாம, சில நல்ல அருமையான கேள்விகளை தத்துவமா நம்மளோட மனசுல விதைச்ச பாடல் இது.
11. நான் பட்ட கடன் எத்தனையோ (விஸ்வரூபம்)
நாம இந்த வாழ்க்கையில எவ்வளவு கடன்களை அடைக்க முடியாம இருக்கிறோம் அப்படிங்கறத ஒரு பட்டியல் போட்டு, விலாவாரியா சொன்ன ஒரு தத்துவப் பாட்டு இது.
12. இதோ எந்தன் தெய்வம் முன்னாலே
தெய்வம் அப்படிங்கறது நாம கும்பிடுகிற சிலைகள்ல மட்டுமில்ல, அந்த தெய்வம் எந்தெந்த விஷயங்கள்ல இருக்கு அப்படிங்கறத ரொம்ப அருமையா சொன்ன பாட்டுதான் இது.
13. வந்த நாள் முதல் இந்த நாள் வரை (பாவமன்னிப்பு)
ஒரு மிகச்சிறந்த தத்துவ பாட்டு. "எதனைக் கண்டான் மதங்களை படைத்தான்" அப்படின்னு ஒரு சிறப்பான வரி இதுல இருக்கும். இந்த படத்துக்காக கவிஞர் முதல்ல எழுதினப்போ இந்த வார்த்தைதான் இருந்துச்சு, அப்புறம் சென்சார் போர்டு பிரச்சனை காரணமா 'மதங்களுக்கு' பதிலா 'பணம்' அப்படின்னு மாத்தினார் கவிஞர் அப்படிங்கறது ஒரு சுவாரஸ்யமான தகவல்.
14. உலகம் ஆயிரம் சொல்லட்டுமே (அருணோதயம்)
உனக்கு நீ தான் நீதிபதி! இந்த பாட்டோட வரிகள் எல்லாமே ஒவ்வொரு மனுஷனுக்கும் தேவையான ஒரு தத்துவார்த்தமா, தன்னம்பிக்கை கொடுக்குற மாதிரி அமைஞ்சிருக்கும்.
15. சட்டி சுட்டதடா கை விட்டதடா (ஆலயமணி)
உறவுகள் எல்லாம் சுயநலமானவை, மரணம் மட்டுமே நிஜம் அப்படிங்கிற வெட்ட வெளிச்சமான உண்மையை சொல்ற பாட்டு. "பாதி மனதில் தெய்வம் இருந்து பார்த்துக் கொண்டதடா, மீதி மனதில் மிருகம் இருந்து ஆட்டி வைத்ததடா" அப்படிங்கிற வரி மனுஷ மனசின் ரெண்டு பக்கத்தை தோலுரித்துக் காட்டும்.
16. யாரடா மனிதன் இங்கே (லட்சுமி கல்யாணம்)
மனுசனோட நல்லது சொல்றதுக்கும் மிருகத்தோட குணம் தேவைப்படுது, அவனோட கெட்டதை சொல்றதுக்கும் அதே மிருகங்களோட குணம் தான் தேவைப்படுது அப்படிங்கிற வித்தியாசமான கோணத்துல அமைஞ்ச ஒரு அருமையான பாடல் இது.
17. ஒண்ணா இருக்க கத்துக்கணும் (அன்பு கரங்கள்)
"இந்த உண்மையை சொன்னா ஒத்துக்கணும், காக்கா கூட்டத்தை பாருங்க அதுக்கு கத்துக் கொடுத்தது யாருங்க". ஒற்றுமையா இருக்கிறத பத்தி ரொம்ப எளிமையான உதாரணத்தோட சொன்ன அழகான பாட்டு இது.
18. படைத்தானே படைத்தானே மனிதனை (நிச்சயதாம்பூலம்)
மனிதனின் வாழ்க்கை, அன்பு, மற்றும் கடவுளின் படைப்பு தத்துவத்தை உணர்த்தும் வகையில கவிஞர் கண்ணதாசன் வரிகள்ல அமைஞ்ச ஒரு அருமையான பாடல் இது.
19. ஓஹோ மனிதர்களே ஓடுவதெங்கே (படித்தால் மட்டும் போதுமா)
இந்த பாட்டுல எல்லா வரியும் சிறப்பாய் இருந்தாலும், உதாரணத்திற்காக இந்த வரியை பாருங்க... "உரித்துப் பார்த்தால் வெங்காயத்தில் ஒன்றும் இருக்காது, உளறித் திரிபவன் வார்த்தையிலே ஒரு உருப்படி தேறாது". எவ்வளவு பெரிய உண்மையை சாதாரண வெங்காயத்தோட ஒப்பிட்டு சொல்லிட்டார்!
20. யாரை நம்பி நான் பொறந்தேன் (எங்க ஊர் ராஜா)
ஒரு தன்னம்பிக்கையோட தத்துவத்தையும் சொன்ன பாட்டு இது. "பானையிலே சோறு இருந்தா பூனைகளும் சொந்தமடா, சோதனையை பங்கு வச்சா சொந்தமில்லை பந்தமில்லை" அப்படின்னு உறவுகளோட நிஜ முகத்தை ரொம்ப சிறப்பா சொன்ன வரி இது.
இப்போ நம்ம மெயின் கேள்விக்கு வருவோம்... சிவாஜி கணேசனுக்கு அதிக புகழைத் தேடித் தந்தது காதல் பாட்டா? இல்ல தத்துவப் பாட்டா?
உண்மைய சொல்லணும்னா, காதல் பாட்டுங்க சிவாஜியை ரசிகர்களோட நாயகனா, ஒரு ரொமான்டிக் ஹீரோவா மக்கள்ட்ட கொண்டு போய் சேர்த்துச்சு. அவரோட வசீகரமும் அழகும் காதல் பாட்டுலதான் முழுசா வெளிய தெரிஞ்சுது.
ஆனா, அவரை தமிழ் சினிமாவுல ஒரு வரலாற்றுப் பொக்கிஷமா, காலத்தைக் கடந்தும் வாழுற ஒரு காவிய நாயகனா நிலைநிறுத்துனது அவரோட தத்துவப் பாட்டுங்கதான்! மனுஷங்களுக்கு வாழ்க்கையில எப்போதெல்லாம் கஷ்டம் வருதோ, தோல்வி வருதோ, நிம்மதியத் தொலைக்கிறாங்களோ, அப்போதெல்லாம் அவங்களுக்கு ஒரு பெரிய மருந்தா அமைஞ்சது சிவாஜி ஸ்கிரீன்ல பாடுன தத்துவப் பாட்டுங்கதான். 'காதல்'ங்கறது ஒரு பருவம், ஆனா 'தத்துவம்'ங்கறது ஒரு முழு வாழ்க்கை. அந்த வாழ்க்கைய தத்துவப் பாட்டுங்க மூலமா ஸ்கிரீன்ல வாழ்ந்து காட்டுனதாலதான், இன்னைக்கும் அவரை நம்ம 'நடிகர் திலகம்'னு கொண்டாடுறோம்.
அதனால, காதல் பாட்டுங்க அவருக்குப் புகழைக் கொடுத்துச்சு; ஆனா தத்துவப் பாட்டுங்கதான் அவருக்கு அழியாத ஒரு சரித்திரத்தை எழுதிக் கொடுத்துச்சு!
செந்தில்வேல் சிவராஜ்
கருத்துகள்
கருத்துரையிடுக