1979 -திரிசூலம்

படம்
இன்றைக்கு ஒரு பெரிய நடிகரின் திரைப்படம் வெளியாகிறது என்றால், படம் திரையரங்கில் முதல் காட்சியைக் காணும் முன்பே தொலைக்காட்சி உலகம் விழித்துக்கொண்டு விடுகிறது. அதிகாலை முதலே சிறப்பு நிகழ்ச்சிகள். படத்தின் கதாநாயகனின் பழைய படங்களிலிருந்து காட்சிகள். ரசிகர்களின் கொண்டாட்டங்கள்.  திரையரங்குகளுக்கு முன்பாகக் குவிந்திருக்கும் கூட்டங்கள். “படம் எப்படி இருக்கும்?”, “நடிகரின் முந்தைய சாதனையை முறியடிக்குமா?”, “முதல் நாள் வசூல் எவ்வளவு?”, “ரசிகர்களின் எதிர்பார்ப்பை படம் பூர்த்தி செய்யுமா?” என்று ஒன்றல்ல, இரண்டல்ல, நாள் முழுவதும் விவாதங்கள். ஒரு சேனலில் விமர்சகர்கள். இன்னொரு சேனலில் ரசிகர்கள். மற்றொரு சேனலில் திரையுலகப் பிரமுகர்கள். சமூக ஊடகங்களின் கருத்துகள்கூட நேரடியாக தொலைக்காட்சியில் காட்டப்படும். படத்தின் முதல் காட்சி முடிவதற்குள் “முதல் விமர்சனம்” என்ற பெயரில் விவாதம் தொடங்கிவிடும்.  இன்றைய இந்த ஊடக உலகத்தை ஒரு கணம் 1979-க்குக் கொண்டு போய்ப் பாருங்கள். ஜனவரி 27, 1979. திரையுலகமே ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நாள். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 200வது திரைப்படமான ‘திரிசூலம்’ வெளியாகும் நா...

பாவை விளக்கு சூட்டிங் சம்பவங்கள்

 1960-கள்லே தமிழ் சினிமா பெரும்பாலும் ஏவிஎம், வாகினி மாதிரி பெரிய ஸ்டூடியோக்களுக்குள்ள செட் போட்டு மட்டுமே முடங்கி கிடந்த ஒரு காலத்துல, அந்த எல்லைகளை எல்லாம் உடைச்சுக்கிட்டு வட இந்தியாவுல போய் மிக பிரம்மாண்டமா படப்பிடிப்பு நடத்துன ஒரு காலகட்டம் அது. குறிப்பா, எழுத்தாளர் அகிலனோட புகழ்பெற்ற நாவலான 'பாவை விளக்கு' திரைப்படமா எடுக்கப்பட்டப்போ, அந்தப் படக்குழு டெல்லி, ஆக்ரானு முகாமிட்டு பல சாதனைகளைச் செஞ்சாங்க. இந்த ஷூட்டிங் ஸ்பாட்ல நடந்த பல சிலிர்க்க வைக்கும் சுவாரஸ்யங்கள் தான் பத்திதான் இந்த பதிவு.

​1960-கள்ல சென்னையில இருந்து அத்தனை பெரிய கேமராக்கள், லைட்டிங் உபகரணங்கள், அப்புறம் மொத்த படக்குழுவையும் கூட்டிக்கிட்டு டெல்லிக்கும் ஆக்ராவுக்கும் ரயில்ல போறதே ஒரு பெரிய படையெடுப்பு மாதிரி இருக்கும். பாவை விளக்கு படத்துக்காக அப்படி ஒரு பயணத்தை மேற்கொண்டாங்க. டெல்லியில குதுப்மினார்ல நடந்த ஷூட்டிங் பத்தி கண்டிப்பா சொல்லியே ஆகணும். இன்னைக்கு மாதிரி டிரோன் கேமரா, கிரேன் வசதிலாம் இல்லாத அந்த காலத்துல, பிரம்மாண்டமான குதுப்மினார் உச்சிக்கு போய் ஷூட்டிங் நடத்துறது சாதாரண விஷயமே கிடையாது. அந்த குதுப்மினார் உச்சியில நின்னு, ஒட்டுமொத்த டெல்லி நகரத்தையே பின்னணியா வெச்சு நம்ம சிவாஜியும், நடிகை எம்.என். ராஜமும் நடிக்கிற காட்சிகளை அவ்வளவு மெனக்கெட்டு, ரிஸ்க் எடுத்து படமாக்கினாங்க. படக்குழுவே அந்த உயரத்துல நின்னு ஷூட் பண்ணப்போ, கீழ இருந்த டெல்லி மக்கள் எல்லாம் வாயைப் பிளந்து வேடிக்கை பார்த்தாங்க.


​டெல்லியை முடிச்சுட்டு படக்குழு நேரா ஆக்ரா கோட்டைக்குப் போனாங்க. முகலாயர்கள் கட்டின அந்தப் பிரம்மாண்டமான வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டையில நம்ம தென்னிந்திய சினிமாக்காரர்கள் போய் ஷூட்டிங் நடத்துறாங்க அப்படிங்கிறதே அங்க இருந்த உள்ளூர் மக்களுக்கு ஒரு பெரிய ஆச்சரியமா இருந்துச்சு. கோட்டைக்குள்ள சரித்திர காலத்து உடைகள்ல நம்ம நடிகர்கள் நடிக்கிறதைப் பார்க்கவே ஒரு பெரிய திருவிழா கூட்டம் கூடிருச்சு. அதற்கடுத்து ஷூட்டிங் நடந்த இடம்தான் இந்த படத்தோட உச்சகட்டமே! அதுதான் காதலின் சின்னமான உலக அதிசயம் தாஜ்மஹால். தாஜ்மஹாலுக்கு முன்னாடி அந்தப் பளிங்குத் தரையிலயும், தண்ணீர் குளத்தோட பின்னணியிலயும் காதலும் கலையுமாக பல காட்சிகளை நம்ம கேமரா கண்கள்ல சிறைபிடிச்சாங்க.

​பொதுவா அந்த காலத்துல நடிகர்கள் மாசக்கணக்குல வட இந்தியாவுக்கு ஷூட்டிங் போனா, போக்குவரத்து சிரமத்தால குடும்பத்தைக் கூட்டிட்டுப் போக மாட்டாங்க. ஆனா, ஷூட்டிங் நடக்குறது சாதாரண இடம் இல்லையே, தாஜ்மஹாலாச்சே! உலக அதிசயமான, அந்த காதலின் சின்னத்தை தன் மனைவியும் நேர்ல பார்க்கணும்னு ஆசைப்பட்டு, கமலா அம்மாவையும் அந்த நீண்ட வட இந்திய பயணத்துல தன்னோடவே கூட்டிட்டுப் போனாரு நம்ம நடிகர் திலகம் சிவாஜி கணேசன்.
​அந்த தாஜ்மஹால் ஷூட்டிங் இடைவெளியில எடுக்கப்பட்ட ஒரு வரலாற்றுப் புகைப்படம் ஒண்ணு இருக்குங்க. அதை நீங்க கொஞ்சம் உற்றுப் பாருங்க. பின்னணியில வெள்ளைப் பளிங்கான தாஜ்மஹால் ரொம்ப கம்பீரமா நிக்க, அதுக்கு முன்னாடி அந்தப் பளிங்குத் தரை குளத்து ஓரத்துல எந்த ஒரு சினிமா பந்தாவும், சூப்பர்ஸ்டார் அப்படிங்கிற ஈகோவும் இல்லாம, ஒரு சாதாரண மனிதனா, முகம் முழுக்க பெருமிதமும் புன்னகையுமா ரொம்ப இயல்பா உக்காந்திருக்காரு சிவாஜி. அவருக்குப் பக்கத்துல தமிழ்நாட்டுப் பாரம்பரியம் கொஞ்சமும் மாறாம, நெற்றியில பெரிய பொட்டு வெச்சு, முகத்துல ஒரு தெய்வீக அமைதியோட ரொம்ப மங்களகரமாக கமலா அம்மா உக்காந்திருக்காங்க. சினிமால எத்தனையோ முன்னணி நடிகைகளோட உருகி உருகி காதலிச்சு நடிச்சிருந்தாலும், நிஜ வாழ்க்கையில அவர் ஒரு சாதாரண காதலனாவும், அன்பான கணவனாவும் கமலா அம்மா பக்கத்துல உக்காந்திருக்கற அந்தப் புகைப்படம் ஒரு காலத்தால் அழியாத பொக்கிஷம்! அந்த தாஜ்மஹாலின் தண்ணியில தாஜ்மகாலோட பிம்பம் விழுற மாதிரி, இவங்களோட இந்த நிஜக் காதலும் காலத்தைத் தாண்டி இன்னைக்கும் நம்ம கண்முன்னாடியே நிக்குது.

​இந்த நெகிழ்ச்சியான சம்பவத்துக்கு நடுவுல, அந்த ஆக்ரா ஷூட்டிங் ஸ்பாட்ல நடந்த இன்னொரு விஷயத்தைக் கேட்டா நீங்க நிஜமாவே ஷாக் ஆயிடுவீங்க. ஆக்ரா கோட்டை, தாஜ்மஹால்னு ஷூட்டிங் நடந்தப்போ, நம்ம சிவாஜியும் நடிகை MN.ராஜமும் அந்தக்கால ராஜா ராணி கெட்டப்ல, சரித்திர கால உடைகள்ல நடிச்ச பல அருமையான காட்சிகளைப் படமாக்கினாங்க. அப்போ அவங்களை வெச்சு ஏகப்பட்ட ஸ்டில்ஸ் எடுத்தாங்க. பொதுவா ஆக்ரா, டெல்லி ஊர் மக்களுக்கு ஹிந்தி நடிகர்களை மட்டுமே பார்த்துப் பழக்கம். 

அவங்களுக்கு தென்னிந்திய சினிமா பத்தி பெருசா எந்த அறிமுகமும் கிடையாது. ஆனா, ஷூட்டிங் ஸ்பாட்ல நம்ம தென்னாட்டுத் தம்பதிகளோட தோற்றமும், சிவாஜியோட அந்த ராஜ கம்பீரமும்,MN.ராஜமும்  அங்க வேடிக்கை பார்க்க வந்த ஆக்ரா மக்களுக்கு ரொம்பவே பிடிச்சுப் போச்சு. யாரோ முகம் தெரியாத நடிகர்கள்னு அவங்க நினைக்கல, இவ்வளவு தேஜஸா இருக்காங்களேன்னு வியந்து போனாங்க.
​இந்த வடமாநில மக்கள் அதோட நிக்காம என்ன பண்ணாங்க தெரியுமா? படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட நம்ம நடிகர்களோட அந்தப் புகைப்படங்களை எப்படியோ தேடிப் பிடிச்சு சேகரிச்சு, அதை அழகா பிரேம் பண்ணி, அழகான படங்களை மாட்டுற மாதிரி அவங்க வீட்டு வரவேற்பறையில மாட்டி அழகு பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க! இது அப்போ படக்குழுவினருக்கே பெருசா தெரியல. ஆனா, பல வருஷங்கள் கழிச்சு தமிழ்நாட்டிலிருந்து ஆக்ராவுக்குச் சுற்றுலா போன சில தமிழர்கள், அங்க உள்ள வடமாநில மக்களின் வீடுகளுக்குப் போனப்போ அவங்களுக்கு ஒரு மிகப்பெரிய இன்ப அதிர்ச்சி காத்துக்கிட்டு இருந்துச்சு. ஹிந்தி மட்டுமே பேசத் தெரிஞ்ச அந்த மக்களின் வீடுகள்ல, நம்ம தென்னாட்டு சிங்கம் சிவாஜி கணேசனும், MN.ராஜமும்  இருக்கிற அந்த 'பாவை விளக்கு' திரைப்பட புகைப்படங்கள் மாட்டப்பட்டிருந்ததைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போயிட்டாங்க. "இது எப்படி உங்க வீட்டுக்கு வந்துச்சு? இவங்க யாருன்னு உங்களுக்குத் தெரியுமா?" அப்படின்னு கேட்டப்போ, "இவங்க சினிமா சூட்டிங்க்காக வந்தாங்க.  இவங்க ரூபமும் முகக்களையும் எங்களுக்கு ரொம்பப் பிடிச்சுப் போச்சு, அதான் படம் மாதிரி மாட்டி வெச்சிருக்கோம்" அப்படின்னு அந்த மக்கள் நெகிழ்ச்சியா சொல்லியிருக்காங்க. கலைக்கும் கலைஞர்களுக்கும் மொழி ஒரு தடையல்ல அப்படிங்கிறதை தன்னோட கம்பீரத்தால ஆக்ராவிலேயே அப்போதே நிரூபிச்சிருக்காரு நம்ம நடிகர் திலகம்!

​இப்படி பல வரலாற்றுச் சுவாரஸ்யங்களையும், டெல்லி, ஆக்ரானு பிரம்மாண்டமான பின்னணியையும் கொண்ட இந்த 'பாவை விளக்கு' படம் திரையில எப்படி ஆரம்பிக்குது தெரியுமா? அதுவும் ரொம்ப வித்தியாசமா, அருமையா இருக்கும். ஒரு ஞாயிற்றுக்கிழமை காலையில, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் தன்னோட நெருங்கிய நண்பர்கள் பாலாஜி  விகேஆர்,அசோகன் உள்ளிட்ட பலரை திடீர்னு போன் பண்ணி அவசரமாகத் தன்னோட வீட்டுக்கு வரச் சொல்றாரு. நண்பர்களுக்கெல்லாம் ஒரே திகைப்பு, "என்னடா வெளியில எந்த வேலையும் இல்லையே, திடீர்னு கூப்பிடுறாரே, ஏதோ முக்கியமான விஷயமா இருக்கும்" அப்படின்னு பதற்றத்தோடயும் ஆச்சரியத்தோடயும் அவசர அவசரமாக அவர் வீட்டுக்கு வந்து சேர்றாங்க.
​ஆனா அங்க நடந்ததே வேற! வீட்டின் முன்னாடி இருக்குற புல்வெளியில, தரையில ஒரு பாயைப் போட்டுக்கிட்டு ரொம்ப கேஷுவலா, இயல்பா உக்காந்திருக்காரு சிவாஜி. வந்த நண்பர்கள்கிட்ட, "இன்னைக்கு சண்டே, வெளியில எங்கேயும் போக வேண்டிய வேலை இல்லை. அதான் மிஸ்டர் அகிலன் எழுதின பாவை விளக்கு நாவலைப் படிக்கலாம்னு நினைச்சேன். நீங்களாம் பெரிய ரசிகர்களாச்சே, நான் படிக்கும்போது பக்கத்துல இருந்தா நல்லா ரசிப்பீங்களேன்னு தான் உங்களை வரவழைச்சேன்" அப்படின்னு ரொம்ப அன்பா, சிரிச்சுக்கிட்டே சொல்றாரு. நண்பர்களுக்கும் சந்தோஷம் தாங்கல, ஆவலா அவரை சுத்தி உக்காந்துக்கிறாங்க.
​உடனே கையில் இருக்குற அந்தப் புத்தகத்தைத் திறந்து தன்னோட காந்தக் குரல்ல ரொம்ப கம்பீரமா கதையைப் படிக்க ஆரம்பிக்கிறாரு நம்ம சிவாஜி. "யாருடைய வாழ்க்கையை நான் இங்கு கதையாக எழுதப் போகிறேனோ, அவன் என்னுடைய நெருங்கிய நண்பன்..." அப்படின்னு ஆரம்பிச்சு அந்த நாவலின் முக்கிய காட்சியை விவரிக்கிறாரு.  ஒரு விளக்கொளி சுடர்விடுற மாதிரியும், நான்கு பெண்கள் ஒன்று சேர்ந்து ஒரு அகல் விளக்கை தங்கள் மென்மையான கைகளில் ஏந்தி நிக்கிற மாதிரியும் அவருக்கு ஒரு பிரமை தோன்றுவதாகப் படிக்கிறாரு. அவர் கண்களைக் கசக்கிப் பார்க்கும்போது, அந்த நாலு பெண்களும் ஒருத்தருக்குள் ஒருத்தர் மறைஞ்சு ரெண்டு பேராகி, கடைசியில அந்த ரெண்டு பேரும் ஒண்ணு சேர்ந்து ஒரே உருவமா மாறி 'பாவை விளக்கா' நிக்குதுன்னு அவர் அந்த நாவலை விவரிச்சுப் படிக்கும்போது, நமக்கே அப்படியே மெய்சிலிர்க்கும். அந்த அளவுக்கு ஒரு மாயாஜாலத்தை தன்னோட குரலாலேயே உருவாக்கியிருப்பாரு.
​நிஜ வாழ்க்கையில ஷாஜஹான் போல தன் காதல் மனைவியோடு தாஜ்மஹாலில் அமர்ந்து காதலைக் கொண்டாடியதும், தன் வசீகரத் தோற்றத்தால் வட இந்திய மக்கள் வீடுகளைத் தன் புகைப்படத்தால் அலங்கரித்ததும், தன்னுடைய நண்பர்களுக்குத் தன் காந்தக் குரலால் புல்வெளியில் அமர்ந்து கதையைப் படித்துக் காட்டியதும் என 'பாவை விளக்கு' படத்தோடு இணைந்த இந்தச் சம்பவங்கள் எல்லாமே ஒரு நிஜமான காவியம்தான். 

செந்தில்வேல் சிவராஜ்
9087620800

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கடல் புறா இளையபல்லவனாக சிவாஜி

பொன்னொன்று கண்டேன்

ஆஸ்காருக்கு இந்த ஒரு காட்சி போதும்