கெய்ரோவில் சிவாஜி..
நடிகர் திலகத்தால் மறக்க முடியாத ஒரு எகிப்திய பயணம் :
அப்போ 'வீரபாண்டிய கட்டபொம்மன்' படம் ரிலீஸ் ஆகி பயங்கர ஹிட்டு. ஒருநாள் தயாரிப்பாளர் பி.ஆர். பந்துலு சார்கிட்ட இருந்து சிவாஜி சாருக்கு போன் வருது. போனை எடுத்த உடனே பந்துலு சார், "கட்டபொம்மன் படத்தை டெல்லியில இருந்து கேக்குறாங்க கணேசன், கெய்ரோவுக்கு அனுப்ப வேண்டுமாம், அனுப்பி வைக்கட்டுமா?" அப்படின்னு கேக்குறார். சிவாஜி சாரும் விபரமெல்லாம் கேட்டுட்டு "அனுப்பி வைங்க சார்"னு சொல்லிடுறார்.
இது நடந்த சில நாட்கள்லயே, எகிப்துல இருக்குற கெய்ரோ நகரத்துல நடக்குற ஆசிய-ஆப்பிரிக்க பட விழாவுல கலந்துக்க, படத்துல நடிச்ச சிவாஜி சார், தயாரிப்பாளர் மற்றும் டைரக்டரான பந்துலு சார், அப்புறம் பப்பி, ராகினு அன்பா அழைக்கப்படுற நடிகைகள் பத்மினி, ராகினி எல்லாரையும் இந்திய அரசாங்கமே அதிகாரப்பூர்வமா அழைக்குது.
ஆனா, சிவாஜி சாருக்கு மனசுல மட்டும் கெய்ரோவுக்குப் போகணும்ன்ற எண்ணமே வரலையாம். ஏன்னா, வெளிநாடுகளுக்குப் போயிட்டு வர்ற சில நடிகர்களை அவர் சந்திக்கும்போதெல்லாம், அவங்க தங்களோட பிரயாணத்தைப் பத்தி கதை கதையா சொல்லுவாங்க. அதைக் கேட்கும்போது, 'நாமளும் உடனே பறந்து அங்க போகமாட்டோமா?'னு சிவாஜி சாருக்குத் தோணும். நைட்டு படுக்கையில படுத்தாக்கூட இந்தச் சிந்தனைதான் மனசுல வட்டமிட்டுட்டே இருக்கும்.
இதற்கேற்ப, இதுக்கு முன்னாடியே அமெரிக்காவுக்கு வர்றபடி சிவாஜி சாருக்கு ஒரு அழைப்பு வந்திருக்கு. ஆனா, அவங்க அம்மாவோட உடல்நிலை சரியில்லாததால அவரால அந்த அழைப்பை ஏத்துக்க முடியாம போயிருச்சு. இப்போ கெய்ரோவுக்கு வரும்படி இந்திய சர்க்கார் கூப்பிட்டப்போவும் அவரோட மனசு ஊஞ்சல் ஆடிக்கிட்டுதான் இருந்திருக்கு.
அவங்க அம்மா அப்போ ஹாஸ்பிட்டல்ல படுத்த படுக்கையா இருக்காங்க. அந்த நிலைமையில அம்மாவை விட்டுட்டுப் பிரிஞ்சு போக சிவாஜி சாருக்கு மனசே இல்லை. "நாம வெளிநாடு போற சமயம், ஒன்று கிடக்க ஒன்று ஆகிட்டா என்ன பண்றது?"- இந்த ஒரு காட்சியை அவரால கற்பனையில கூட நினைச்சுப் பார்க்க முடியல.
அதனால, "கெய்ரோவுக்கு நான் வரல," என்று முதல்ல ரொம்ப தீர்மானமா சொல்லிடுறார். ஆனா, சர்க்கார் தரப்புல இருந்து வர்ற இந்த அரிய அழைப்பை நிராகரிக்கக் கூடாதுனு, "உங்க தாயாருக்கு ஒன்னும் ஆகாது, நாங்க இருந்து அவங்களைக் குறையே இல்லாம கவனிச்சுக்கிறோம், நீங்க கவலை இல்லாம போயிட்டு வாங்க," என்று அவரோட நண்பர்களும் உறவினர்களும் சமாதானப்படுத்துறாங்க.
இதற்கிடையில பத்மினியும் ராகினியும் படப்பிடிப்பு காரணமா, "முடிஞ்சா அப்புறமா வர்றோம்"னு சொல்லிடுறாங்க. இதனால, "நீங்க இல்லாம நான் தனியா கிளம்பிப் போக முடியாது"னு பந்துலு சாரும் ரொம்ப பிடிவாதமா சொல்லிடுறார். கடைசியில நம்ம நாட்டோட பிரதிநிதியா விழாவுல கலந்துக்க யாரும் இல்லாம போனா எப்படி இருக்கும்? அதனால நண்பர்கள் கொடுத்த உற்சாகத்துல சிவாஜி சார் கெய்ரோ கிளம்ப முடிவு பண்றார்.
சென்னை ஏர்போர்ட்ல எல்லாரும் வந்து இவங்களை வழியனுப்புறாங்க. அப்போ சிவாஜி சார் மனசுக்குள்ள, "நாம என்ன காரியம் சாதிச்சுட்டோம்னு இப்படி எல்லாரும் சேர்ந்து வழியனுப்புறாங்க! உண்மையிலேயே கெய்ரோவுல என்ன நடக்கப் போகுதோ?"னு நினைச்சு அவரோட உள்ளம் கொஞ்சம் நடுங்கத்தான் செய்யுது.
அவங்க ரெண்டு பேருடன், சித்ரா கிருஷ்ணசாமியும் வர்றார். அவரோட வரவு இவங்களுக்குப் பெரும் உதவியா இருந்தது. முதலில் பம்பாய்க்குப் போய், அங்கிருந்து கெய்ரோவுக்கு ஃபிளைட் ஏறுறாங்க. பம்பாய்ல இருந்து ஒரு செக்கோஸ்லோவாக்கியா நாட்டு விமானம் இவங்களைச் சுமந்துட்டுப் போய், வெறும் மூணே மணி நேரத்துல நைல் நதி நாட்டின் தலைநகரமான கெய்ரோவுல கொண்டு போய் விட்டுடுது.
மேற்கு நோக்கிப் பயணம் செய்யச் செய்ய கால நேரம் பின்னோக்கிச் செல்லும்ன்றது உலக நியதி இல்லையா? அதுக்கேற்ப, நம்ம கைக்கடிகாரத்தோட நேரத்தைக் குறைச்சுக்கிட்டே வரணும். இவங்க கெய்ரோவுல இறங்குறதுக்கு முன்னாடியே, அந்த நாட்டோட நேரத்துக்கு ஏத்த மாதிரி கடிகார முட்களை மாத்தி வச்சுக்கிட்டாங்க.
கெய்ரோவுல நடக்கவிருந்த இந்த விழாவுக்காக ஐக்கிய அரபுக் குடியரசு அரசாங்கம் ரொம்ப அருமையா எல்லா ஏற்பாடுகளையும் செஞ்சிருந்தது. விழாவுல கலந்துக்கப் பல நாடுகள்ல இருந்து வந்திருந்த ஒவ்வொருத்தருக்கும் சிறப்பான வசதிகள் செஞ்சு தரப்பட்டிருந்தது.
நம்ம ஆளுங்களுக்குன்னு தனியா ஒரு காரும், கூடவே இருந்து உதவி செய்றதுக்கும், பேசி வழிகாட்டுறதுக்கும் ரெண்டு லேடி செக்ரட்டரிஸை நியமிச்சிருந்தாங்க.
நைல் நதிக்கரையோட ஓரத்துல, ரொம்ப அழகான சூழ்நிலையில அமைஞ்சிருந்தது கெய்ரோவோட புகழ்பெற்ற ஹோட்டலான 'செமிராமிஸ்' .அந்த ஹோட்டல்லதான் இவங்க தங்கியிருந்தாங்க.
இவங்க ஒவ்வொரு நாளும் வெளியே போகும்போதெல்லாம் அந்த செக்ரட்டரியும் கூடவே வருவாங்க. ஆங்காங்கே பார்க்க வேண்டிய முக்கியமான இடங்கள் எவைன்றதை ரொம்ப தெளிவா விளக்குவாங்க. இவங்களைப் போலவே சீனா, ஜப்பான், இந்தோனேசியா, தாஷ்கண்ட்னு பல நாடுகள்ல இருந்து வந்திருந்த எல்லாருக்குமே இதே மாதிரி சிறப்பான வசதிகளை செஞ்சு கொடுத்திருந்தாங்க. எகிப்து நாட்டுல பார்க்க வேண்டிய முக்கிய இடங்கள் எல்லாத்துக்கும் கூட்டிட்டுப் போய் காட்டுறதுக்கும் அவங்களே ஏற்பாடு செஞ்சிருந்தாங்க.
நகரத்தை விட்டு கொஞ்சம் உள்நோக்கிப் பயணம் செஞ்சா... ஒரே பாலைவனம்தான்!
கெய்ரோவுல போய் இறங்குன உடனே, அங்க நம்ம இந்திய தூதரா பணியாற்றி வந்த உயர் திரு. ஆர். கே. நேரு அவர்கள் இவங்களை வசையா பிடிச்சுக்கிறார்.
"நம்ம நாட்டுல இருக்குற உங்களுக்கு தேசாபிமானமே கிடையாது. இங்கே பாருங்க, மற்ற நாட்டுல இருந்து எத்தனை நடிகர்கள் வந்திருக்காங்க. நம்ம நாட்டுல இருந்து நடிகைகள் யாருமே வரல. இதெல்லாம் நமக்கு எப்படிப் பெருமைப்படும் விஷயமா இருக்கும்?" அப்படின்னு சொல்லம்புகளா எறிய ஆரம்பிச்சிட்டார்.
அவர் சொன்னதெல்லாம் கேட்டுட்டு, பத்மினி, ராகினி ரெண்டு பேரும் ஏன் வர முடியலன்ற காரணத்தை சிவாஜி சார் எடுத்துச் சொல்றார். ஆனா திரு. நேரு சமாதானம் ஆகல. அவங்க மேல இருந்த அன்புக் கோபம் அவருக்குக் குறையவே இல்லை. அதனால இதையெல்லாம் விளக்கிச் சொல்லி, அவங்களை உடனே புறப்பட்டு வரும்படி இவங்க மெசேஜ் அனுப்புறாங்க. அவங்களும் எவ்ளோ சீக்கிரம் வர முடியுமோ அவ்ளோ சீக்கிரம் வர்றதா பிராமிஸ் பண்றாங்க. திரு. நேருவும் பர்சனலா இதை அவங்களுக்குக் குறிப்பிட்டிருந்தார்.
அதோட நேரு சார் இன்னொரு கண்டிஷனும் போட்டார்: "நீங்க நம்ம தேசிய உடையை அணிய வேண்டும்" அப்படின்னார்.
"அது என்ன சார், எங்களுக்குத் தெரியாதே!" அப்படின்னு இவங்க சொல்ல, "அதாவது நம்ம பிரதமர் நேருஜி அணிகிறாரே, அதேபோல் உடையை அணிந்து கொள்ளுங்கள். அப்போதான் விழாவுக்கு வந்திருக்கோம், நாம இந்தியாவைச் சேர்ந்தவங்கன்னு மத்தவங்களுக்குத் தெரிஞ்சுக்க சுலபமா இருக்கும்"னு சொல்றார். அவரோட அன்புக் கட்டளையை இவங்களால தட்ட முடியல.
இப்போ, அவங்க கலந்துக்கிட்ட அந்த ஆசிய-ஆப்பிரிக்க படவிழாவைப் பத்தி கொஞ்சம் விபரமா பார்ப்போம். கெய்ரோவுல நடந்த இந்த விழா, இரண்டாவது விழா. முதலாவது விழா 1958-ல் ரஷ்யாவுல இருக்குற ஆசியப் பிரதேசமான தாஷ்கண்ட்ல நடந்தது. ரெண்டு வருஷத்துக்கு ஒருமுறை நடக்குற இந்த படவிழாவை, அடுத்தபடியா 1961-ல் நம்ம நாட்டுல, புது டெல்லியில நடத்துறதுன்னு இந்த விழாவோட போதுதான் முடிவு பண்ணாங்க.
இந்தப் போட்டியில முழுநீளப் படங்களுக்கு மொத்தம் நான்கு பரிசுகள் — அதாவது ஆஸ்கர்கள் — ஏற்படுத்தப்பட்டிருந்தன. சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த டைரக்டர். இது தவிர, ஜட்ஜஸால் தேர்ந்தெடுக்கப்படும் ஏதேனும் ஒரு சிறப்பான துறைக்கு (பாட்டு, நடனம், கலைத்துறை மாதிரி) ஒரு பரிசுனு மொத்தம் அஞ்சு பரிசுகள் கொடுக்குறாங்க. டாக்குமெண்டரிக்கு (ஆவணப்படம்) தனியா ஒரு பரிசு உண்டு.
சிறந்த படங்களைத் தேர்ந்தெடுக்க பல நீதிபதிகள் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டிருந்தது. விழாவுல கலந்துக்குற ஒவ்வொரு நாட்டுல இருந்தும் படத்துறைப் பிரமுகர் ஒருத்தர் இதுல ஜட்ஜா இருப்பாங்க. இவங்களால தேர்ந்தெடுக்கப்படுற முழுநீளப் படத்துக்கும், ஆவணப் படத்துக்கும் தங்கத்தால செய்யப்பட்ட, கழுகுச் சின்னம் பொறிக்கப்பட்ட 'ஆஸ்கர்' விருதுகளும்; நடிகர், நடிகை, டைரக்டருக்கு வெள்ளியாலான ஆஸ்கர் விருதுகளும் கொடுக்கப்படுது.
அரபுக் குடியரசோட சின்னமா 'கழுகு' இருக்குறதாலதான் ஆஸ்கர்ல கழுகு பொறிக்கப்பட்டிருக்கு. 1961-ல் நம்ம இந்தியாவுல நடக்கப்போற விழாவுல கொடுக்குற ஆஸ்கர்ல அசோகர் சின்னம் பொறிக்கப்பட்டாலும் படலாம்னு சிவாஜி சார் நினைக்கிறார். அதாவது, எந்தெந்த நாட்டுல விழா நடக்குதோ, அந்தந்த நாட்டோட அரசியல் சின்னத்தையே ஆஸ்கர்ல பதிச்சுத் தர்றாங்க.
நம்ம நாட்டுல இருந்து பிரபல வட இந்திய டைரக்டர் பீமல் ராய் இந்த ஜட்ஜஸ் குழுவுல நியமிக்கப்பட்டிருந்தார். குறிப்பா, அரபு சர்க்கார் (அரசாங்கம்) இந்த விழாவுக்கு ஏற்பாடு செஞ்சிருந்ததால, அவங்க நாட்டைச் சேர்ந்தவங்க இந்தத் தேர்வுக்குழுவுல அதிக எண்ணிக்கையில இருந்தாங்க.
இந்த விழா நடந்த 'ரிவோலி தியேட்டர்' மிகப் பெரியது. சுமார் இரண்டாயிரத்து ஐநூறு (2500) பேர் வசதியா உட்கார்ந்து பார்க்குற அளவுக்குக் கட்டப்பட்டிருக்கு. கெய்ரோவுல இருக்குற தியேட்டர்கள் எல்லாமே ரொம்ப வசதியாத்தான் இருக்கு.
அரபு சர்க்காரோட கலாசார மந்திரியான உயர்திரு சர்விதே ஒகாசா அவர்கள் விழாவை ஆரம்பிச்சு வைக்கிறார். விழாவோட முக்கியத்துவத்தைப் பத்தி பேசும்போது, "திரைப்படங்கள் மூலமா கலாசாரப் பிணைப்பை பலப்படுத்த முடியும்"னு சொல்றார்.
சோவியத் யூனியன், அரபு நாடு, இந்தியா இந்த மூணு நாட்டோட ஆவணப்படங்கள் முதல் நாள்ல திரையிடப்படுது. இதுக்கப்புறம் ரெண்டு நாள் கேப் விட்டு, சரியாகப் பத்து நாட்கள் வரைக்கும் விழா நடக்குது. ஒவ்வொரு நாளும் நாலு ஷோக்கள் நடக்குது. ஒரு முழுநீளப் படம், ஒரு ஆவணப்படம்னு காட்டுறாங்க. காலையில பத்தரைக்கு ஆரம்பமாகுற காட்சி நள்ளிரவு வரைக்கும் இருக்குது. ஒவ்வொரு நாளும் ஏகப்பட்ட மக்கள் இந்தப் படங்களைப் பார்க்கக் கூடியிருந்தாங்க.
ரெண்டு நாள் கேப்புக்கு அப்புறம் விழா மீண்டும் ஆரம்பிச்ச முதல் நாளே 'கட்டபொம்மன்' படம் திரையிடப்படுது. இது நம்ம ஆளுங்களுக்கு ஒரு சின்ன அதிர்ச்சியைக் கொடுக்குது. ஏன்னா, கட்டபொம்மன் முதல் நாளே திரையிடப்படும்னு அவங்க எதிர்பார்க்கல. விழாவுல காட்டப்பட்ட படங்கள்ல அரபு, பிரெஞ்சு மொழிகள்ல விளக்கம் (சப்டைட்டில்ஸ்) கொடுத்திருந்தாங்க. தவிர, இவங்க எடிட் பண்ணி ,இந்தப் படத்தோட நீளத்தைக் கொஞ்சம் குறைச்சு, விறுவிறுப்பைக் கூட்டியிருந்தார்கள்..
"சினிமான்றது உலகத்தோட பொதுமொழி"னு ஒரு பெரிய ஆங்கில விமர்சகர் சொல்லியிருக்கார். அது எவ்ளோ நிஜம்ன்றதை சிவாஜி சார் இந்த விழாவுல கண்ணாரப் பார்க்கிறார். படத்துல பேசுற மொழி புரியலைனாலும், மக்களோட ரசனை ஒன்னாத்தான் இருக்கு. குறிப்பா, கட்டபொம்மன் படத்துல எந்தெந்த சீன்ல நடிப்புப் பாராட்டப்படும், எந்தெந்த சீன்ல வசனம் பாராட்டப்படும்னு இவங்க நினைச்சு வச்சிருந்தாங்களோ, அதே சீன்களுக்கு அங்கிருந்த மக்கள் கைதட்டி தங்களோட பாராட்டுகளை அள்ளித் தர்றாங்க. படத்துல நடிச்ச சிவாஜி சாருக்கும், படத்தை உருவாக்கின பந்துலு சாருக்கும், சித்ரா கிருஷ்ணசாமிக்கும் இந்த காட்சிகள் ரொம்ப பெருமையைத் தருது.
அன்னைக்கு படம் முடிஞ்சதும் விழாவுக்கு வந்திருந்த பல நாட்டு நடிகர்களும், சினிமா பிரபலங்களும் சிவாஜி சாரை நேர்ல சந்திச்சு, "செமையா நடிச்சிருக்கீங்க"னு பாராட்டுறாங்க. அவங்களோட புகழுரையையெல்லாம் கேட்கும்போது, சிவாஜி சாரோட மனசு தமிழ்நாட்டு ரசிகர்களைத்தான் வாயார வாழ்த்திட்டு இருந்தது. ஏன்னா, அவங்களோட ஆக்கமும் ஊக்கமும்தானே தன்னை இந்த நிலைமையில வச்சிருக்கு!
அன்னைல இருந்து சிவாஜி எப்போ வெளிய கிளம்புனாலும் சரி, எந்தக் கூட்டத்துக்குப் போனாலும் சரி, ஒரு கல்யாண மாப்பிள்ளைக்குப் பெண் வீட்டுக்காரங்க எவ்ளோ மரியாதை கொடுப்பாங்களோ, அந்த முக்கியத்துவத்தை எல்லா மக்களும் இவருக்குக் கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. இது இவருக்கே ஏன்-னு புரியலையாம்!
இது தவிர, இந்த பத்து நாளும் காலையில சினிமாத்துறையைச் சேர்ந்த எல்லாரும் ஒன்னா கூடி, பல விஷயங்களைப் பத்தி டிஸ்கஸ் பண்ணுவாங்க. இந்த மாதிரி சமயத்துலதான் 1961-ல் இந்த படவிழாவை டெல்லியில நடத்துறதுன்னும் முடிவு செஞ்சாங்க. அரபு-இந்திய கூட்டுறவுல படங்களைத் தயாரிக்கலாம்ன்ற ஐடியாவும் சொல்லப்பட்டுச்சு. ரெண்டு நாடுகளுக்கும் இடையில படங்களைப் பரிமாறிக்கிறது பத்தியும் பேசிக்கிட்டாங்க.
பட விழா, விவாதக் கூட்டங்கள் போக, மீதி டைம்ல கெய்ரோவைச் சுத்தியுள்ள முக்கியமான இடங்களுக்குப் போயிட்டு வர்றாங்க. அப்படிப் பார்த்ததுல சிவாஜி சாரோட நெஞ்சை விட்டு நீங்காம இருக்குறது எகிப்து மியூசியமும், பிரமிடு கல்லறைகளும்தான்.
பிரமிடுன்ற இந்த கல்லறைகள் சதுரமான அடித்தளத்துல ஆரம்பிச்சு, மேலே போகப் போகக் குறுகிக்கொண்டே வந்து, ஊசி முனை மாதிரி முடியுது. இது கட்டப்பட்டிருக்குக் கூடிய விதம் மயிர்க்கூச்செறிய வைக்கிறது. ஆறு அடி நீளம், நாலு அடி அகலம், நாலு அடி உயரம் கொண்ட பெரிய செங்கற்களை வச்சு, எந்தவிதமான சிமெண்ட்டும் இல்லாம கட்டியிருக்காங்க! இந்த மகத்தான சாதனையைப் பார்த்து இன்னைக்கு இருக்குற பெரிய இன்ஜினியர்களே வியக்குறாங்க. இதெல்லாம் சுமார் நாலாயிரம் வருஷங்களுக்கு முன்னாடி கட்டப்பட்டதுன்னு தெரியும்போது, அந்த காலத்துலயே எகிப்து மக்கள் எவ்ளோ நாகரிகமா இருந்திருக்காங்கன்னு புரியுது. நம்ம ஆச்சரியமும் பல மடங்கு அதிகமாகுது.
இதோட பக்கத்துலயே 'ஸ்பிங்ஸ்' எனப்படும் ஒரு பெரிய மனிதனோட தலையும் சிம்ம உடலும் கொண்ட சிலையும் இருக்கு. பாலைவனத்துல வீசுற ஓயாத மண்காத்தால இது தேய்ஞ்சு சிதைஞ்சு காணப்பட்டாலும், அன்றைய கலைத்திறனை நமக்கு எடுத்துக் காட்டுது.
இந்தக் கல்லறைகள் எகிப்து ராஜாக்களோட உடம்பின் மீது கட்டப்படுற சமாதிகள். அவங்க பிணத்தோட, அவங்க பயன்படுத்தின பொருட்கள், நகைகள் எல்லாத்தையும் சேர்த்துப் புதைச்சுடுவாங்க. இப்படிச் செய்றதால அடுத்த பிறவியில இதைவிட இன்னும் சிறப்பா வாழ்வாங்கன்றது அவங்களோட நம்பிக்கையாம்! இந்த மாதிரி கல்லறையில பதப்படுத்தப்பட்ட பிணத்தை 'மம்மிஸ்' என்று கூப்பிடுறாங்க. அதை மியூசியத்துல எடுத்து வச்சிருக்காங்க, அதையும் இவங்க போய் பார்க்குறாங்க.
இவங்களோட இன்னும் பல அற்புதங்களை சிவாஜி சார் தான் தங்கியிருந்த பதினைந்து நாட்களும் பார்க்குறார்.
கெய்ரோவுக்குப் போன இவங்க, பத்மினி, ராகினி ரெண்டு பேரோட வருகையையும் எதிர்பார்த்துட்டு இருந்தாங்க. அவங்க வந்தா ஒன்னா சேர்ந்து ஊரைச் சுத்திப் பார்க்கலாம்னு பிளான் வச்சிருந்தாங்க. அதனால விழா டைம் போக, மத்த நேரத்துல இவங்க அதிகமா வெளிய போகல. ஆனா அதுதான் இவங்களை ஒரு பெரிய ஏமாற்றத்துல கொண்டு போய் விட்டுடுச்சு!
பத்மினியும் ராகினியும் கிளம்பிட்டாங்கன்ற செய்தி வந்த உடனே இவங்க ரொம்ப ஹேப்பி ஆகிட்டாங்க. அவங்க கெய்ரோவுக்கு வந்த அன்னைக்கு, ராகினியும் அவங்க அம்மாவும் மட்டும் இவங்க தங்கியிருந்த இடத்துக்கு வர்றாங்க. பத்மினி 'குவாரன்டைன்'ல வைக்கப்பட்டு இருக்காங்கன்ற நியூஸை அவங்க உடனே சொல்லல. அதனால பத்மினி விளையாட்டுக்காக எங்கேயோ ஒளிஞ்சிருக்காங்கன்னு நினைச்சு சிவாஜி சார் "பப்பி, பப்பி" அப்படின்னு கூப்பிடுறார். "உள்ளே வா!" என்று கத்துறார். உள்ளே வர்றதுக்கு அங்க பத்மினி இருந்தால்தானே?
அப்புறம் விபரம் கேட்ட உடனே இவங்க பதறிப்போயிடுறாங்க. "உடனே போய் பப்பியை ரிலீஸ் பண்றதுக்கு ஏற்பாடு செய்றேன்"னு சிவாஜி எந்திரிக்க, ராகினி தடுத்துட்டாங்க.. "வேண்டாம்! நாங்க எவ்ளோ ட்ரை பண்ண முடியுமோ அவ்ளோ ட்ரை பண்ணிட்டோம். அவங்க சட்டம் இடம் கொடுக்கலைன்னு சொல்லிட்டாங்க" என்றார்.
சிவாஜி சாருக்கும் பந்துலு சாருக்கும் இதைக் கேட்க உண்மையிலேயே ரொம்ப வருத்தமாவும் வேதனையாவும் இருந்தது.
இவங்க மட்டும் இல்ல, கெய்ரோவோட முதன்மை அதிகாரிகள், இந்திய தூதரகத்தைச் சேர்ந்தவங்க எல்லாரும் இந்த இன்சிடென்ட்டைக் கேட்டு பத்மினியை நேர்ல போய் விசாரிச்சு, பூங்கொத்துகளைக் கொடுத்து தங்களோட வருத்தத்தைத் தெரிவிச்சுக்கிட்டாங்க.
சிவாஜி சாரும் பப்பியை நேர்ல போய் நலம் விசாரிக்கிறார். அவங்க கண்ணுல தண்ணியே வந்துடுச்சு. விடைபெற்று கிளம்பும்போது பத்மினி சிவாஜி சாரைக் கூப்பிடுறாங்க. பக்கத்துல இருந்த ஒரு ரோஜாச் செடியில இருந்து ஒரு பெரிய பூவைப் பறிச்சு, சிவாஜி சாரோட கோட்ல செருகி விடுறாங்க. "இதோட நீங்க விழாவுக்குப் போங்க. அழகா இருக்கு"னு சொல்றாங்க. அவங்க சொன்னபடியே செய்றார். அன்னைல இருந்து சிவாஜி சார் எங்கு சென்றாலும் கோட்ல ஒரு பூவைச் செருகுற வழக்கம் வந்துடுச்சு.
ஒவ்வொரு முறையும் சிவாஜி சார் அவங்களைப் பார்க்கப் போயிட்டு, விடைபெறும்போது அவங்க அந்த முள்வேலிக்கு அப்பால இருந்து "போயிட்டு வாங்க"னு புன்னகையோட விடை கொடுக்கும்போது, இவங்க மனசை ஏதோ பிழிந்தெடுக்கிற மாதிரி இருக்குமாம்.
ராகினினு சொன்ன உடனே பல விஷயங்கள் நினைவுக்கு வருது. பப்பியும் ராகினியும் பார்க்குறதுக்கு சற்றேறக்குறைய ஒரே மாதிரி இருந்ததுனால, அங்க இருக்குற அதிகாரிகளுக்கு இவங்க ரெண்டு பேர்ல 'யார் குவாரன்டைன்ல' இருக்குறதுனு கண்டுபிடிக்க சில நிமிஷங்கள் ஆகுமாம்! நல்லா உத்துப் பார்த்துட்டுதான் வெளியே போக அலோவ் பண்ணுவாங்க. ஆனா இதுக்கும் அவங்க ஒரு வழியைக் கண்டுபிடிச்சிருந்தாங்க. பப்பியை விட ராகினி கொஞ்சம் ஹைட்டானவங்க. அதனால "உயரமான பெண்தானே! வெளியே விட்டுடலாம்"னு சொல்லிடுவாங்க.
"நமக்குள்ள இருக்குற இந்த உருவ ஒற்றுமையைப் பயன்படுத்திக்கிட்டு, நான் இங்கே இருக்கேன், நீ வேணும்னா ஒரு நாள் என் டிரஸ்ஸைப் போட்டுட்டு வெளியே போயிட்டு வாயேன்?" அப்படின்னு ராகினி பத்மினிக்கு ஐடியா கொடுத்தாங்க
அதுக்கு பத்மினி , "ஏன், குவாரன்டைன்ல இருக்குறது போதாதா? கெய்ரோவுல ஜெயில் தண்டனையையும் அனுபவிக்கச் சொல்றியா?"னு கேக்குறாங்க. செம பதில்ல!
கெய்ரோவுக்கு வந்த முதல் நாள் ராகினி சிவாஜியோட பார்ட்டிக்கு வந்தாங்க.. 'மகாதா' என்ற எகிப்தோட பாப்புலர் நடிகை இவங்களுக்கு இந்த விருந்தைக் கொடுத்தாங்க. அவங்க இந்த விழாவுல கலந்துக்கிட்ட ‘லைலா மஜ்னு’ன்ற அரபிப் படத்துல லைலாவா நடிச்சிருந்தாங்க. தவிர, இந்தியாவுல தயாராகப்போற பீமல் ராயோட ‘உமர் கய்யாம்’ படத்துல ஹிந்தி நடிகர் பாரத் பூஷனோட அவங்க நடிக்கப்போறாங்க.
கெய்ரோவுல இருந்து இருபது மைலுக்கு அப்பால இருக்குற 'சஹாரா ஸிடி'ன்ற இடத்துல இந்த விருந்து நடந்துச்சு.
மகாதாவோட விருந்துல இவங்க கெய்ரோ டான்ஸ்களைப் பார்க்குறாங்க. விருந்து நடக்கும்போதே டான்ஸ் ஆடுறவங்க ஒவ்வொருத்தரோட டேபிளுக்கு முன்னாடியும் வந்து ஆடுறாங்க. சிவாஜி சார் பக்கத்துல அவங்க வந்து ஆடியப்போ இவர் கண்ணை மூடிக்குவாராம்! ஆடைப் பஞ்சம் அதுல இருந்ததுதான் காரணம்!
இதுக்கு அடுத்த நாள் கெய்ரோவோட படத்தயாரிப்பாளரும் நடிகையுமான 'பதீம் ஹமாமா' கொடுத்த விருந்துல கலந்துக்குறார்.
மறுநாள் வியட்நாம் தேசத்தார்டுகள் கொடுத்த விருந்துல கலந்துக்குறாங்க. விருந்து முடிஞ்சு வீட்டுக்குத் திரும்பும்போது, எல்லாருடைய மனசுலயும் மறுநாள் எப்போ விடியும்னுதான் இருந்தது. ஏன்னா, அன்னைக்குத்தான் பத்மினிக்கு குவாரன்டைன்ல இருந்து 'விடுதலை' கிடைக்கப்போகுது!
காலையில ஏழு மணிக்கு, குவாரன்டைன்ல இருந்து வெளிய வந்து கதவை இழுத்து மூடிட்டு, ஒரு கும்பிடு போட்டு, "இனிமேல் இங்க வரமாட்டோம் அப்பனே!"னு சொல்லிட்டு கார்ல ஏறிக்குறாங்க பத்மினி. இத்தனை நாளா அடக்கி வச்சிருந்த ஆசை, அவங்க ஓடிவந்து கார்ல பாய்ந்தபோதே தெரிஞ்சது. நேரா ஹோட்டலுக்குப் போகலாம்னு இவங்க சொல்ல, பத்மினி ஊரைப் பார்க்கணும்னு ஆசைப்பட்டதால நகரத்தை ஒரு வலம் வர்றாங்க.
அன்னைக்கு எவ்ளோ பார்க்க முடியுமோ அவ்ளோ பார்த்துட்டாங்க. பிரமிடு கோபுரம், மம்மிஸ் எல்லாத்தையும் பப்பியும் பார்க்குறாங்க. முன்னாள் எகிப்து ராஜாக்கள் போட்டிருந்த தங்கக் கால் சோடுகள் (செருப்புகள்), ராணிகள் நகங்களுக்குப் போட்டிருந்த தங்கத் தொப்பிகள், விதவிதமான நகைகள் எல்லாத்தையும் பார்க்குறாங்க. அந்த நகைகள் எல்லாம் ரொம்ப பெருசாவும், பயங்கர வெயிட்டாவும் இருந்தது.
அங்க ஒட்டகச் சவாரியும் செஞ்சு பார்க்குறாங்க. அது உடம்பை அப்படியே குலுக்கி எடுத்துடுது! பப்பியும் ஒரு ஒட்டகத்து மேல ஏறி சவாரி செஞ்சுட்டு, பயந்து போய் வெளிறின முகத்தோட திரும்பி வந்து, "நான் பயப்படவே இல்லையே" அப்படின்னு சொல்றாங்க. ஆனா இவங்க யாரும் அதை நம்பல!
அன்னைக்கு சாயங்காலம் சோவியத் கோஷ்டியினர் கொடுத்த விருந்துக்கு இவங்க போறாங்க. பப்பி முதன்முதலா கலந்துகிட்ட விருந்தும் இதுதான். விருந்துல பத்மினி, ராகினி ரெண்டு பேரையும் ஒரே நேரத்துல பார்த்த பல பேருக்கு ஆச்சரியம் தாங்கல. ஒரே மாதிரி டிரஸ், ஒரே மாதிரி நகைகள் போட்டிருந்த அவங்களைத் தனித்தனியா பார்த்துட்டு, அப்புறம் ஒன்னா பார்க்கும்போது எல்லாரும் கன்பியூஸ் ஆகிட்டாங்க. "உங்களுக்கு எப்படி ஒரே மாதிரி புடவையும் நகையும் கிடைக்குது?"னு எல்லாரும் அவங்ககிட்ட கேட்டாங்க. அவங்க ரெண்டு பேரும் ஒரே மாதிரிதான் நகை போடுவாங்கன்னு தெரிஞ்ச அவங்களோட கைடுகள் (வழிகாட்டிகள்) பரீதா, அமீனா ரெண்டு பேரும், கெய்ரோ முழுக்க சுத்தி ஒரே மாதிரியான ரெண்டு கம்மல்களை வாங்கி அவங்களுக்குப் பரிசா கொடுத்தாங்க!
கெய்ரோவுல தங்கியிருந்த காலத்துல அங்க இருக்குற சினிமா ஸ்டூடியோக்களுக்கும் போயிருந்தாங்க. ஸ்டூடியோக்கள் ரொம்ப சுத்தமா வச்சிருக்காங்க. மாடர்ன் கேமராக்கள், கருவிகள் அங்க பயன்படுத்துறாங்க. விழாவுல கலந்துக்கிட்ட "லைலா மஜ்னு" என்ற அரபிப் படத்தையும், இன்னும் சில படங்களையும் இவங்க பார்த்தாங்க. இந்தியாவும் அரபு நாடும் ஒன்னா சேர்ந்து கூட்டு முறையில படம் தயாரிக்கலாம்னு பல பேர் ஐடியா கொடுத்தாங்க.
கெய்ரோவுக்குப் போன சிவாஜி சார், ஐக்கிய அரபுக் குடியரசோட தலைவரான திரு. நாசர் அவர்களை நேர்ல சந்திச்சு, தான் கொண்டு போயிருந்த 'திருக்குறளை' அவருக்குப் பரிசா கொடுக்கணும்னு மனக்கோட்டை கட்டியிருந்தார். ஆனா இவங்க போன சமயம் திரு. நாசர் அவர்கள் கெய்ரோவுல இல்லை. அதனால அவர் நினைச்சது நடக்காம போயிடுச்சு. ஆனா அதுவும் ஒரு வகையில நல்லதுக்குத்தான்னு சிவாஜி சார் சொல்றார்! ஏன்னா, அதுக்கப்புறம் திரு. நாசர் இந்தியாவுக்கு வந்திருந்தப்போ, நம்ம கலைஞர்கள் எல்லாரையும் கூப்பிட்டு, அவங்க முன்னிலையில நம்ம தமிழ்மறையான திருக்குறளை அவருக்குக் கொடுக்குற பாக்கியம் கிடைச்சது இல்லையா!
சிவாஜி சார் கெய்ரோவுல இருந்து கிளம்புற அன்னைக்குதான் ஆசிய-ஆப்பிரிக்க பட விழாவோட கடைசி நாள். அன்னைக்குத்தான் சிறந்த படம், டைரக்டர், நடிகர், நடிகைக்கான அவார்டு கொடுக்குற நாள். விழா நடந்த ரிவோலி தியேட்டரோட ஸ்டேஜ்ல விழாவுக்காக வந்திருந்த எல்லா நாட்டுப் பிரதிநிதிகளையும், கலைஞர்களையும் உட்கார வச்சிருக்காங்க.
முதல்ல சிறந்த செய்திப் படம்னு நம்ம நாட்டுல இருந்து போன 'தாஜ்மஹால்' படத்தை அனௌன்ஸ் பண்றாங்க. அடுத்து சிறந்த முழுநீளப் படம்னு சோவியத் குடியரசோட "சாமர்கண்டு இளவரசன்" படத்தை அறிவிக்கிறாங்க. மூணாவதா 'தங்கமலர்' என்ற சீனப் படத்துல நடிச்ச மெயின் நடிகையைச் சொல்றாங்க. நாலாவதா, "சிறந்த நடிகர் - சிவாஜி கணேசன்" அப்படின்னு அனௌன்ஸ் பண்றாங்க!
சிவாஜி சாருக்கு முதல்ல இதை நம்பவே முடியலையாம். பக்கத்துல இருந்த பத்மினி இவங்க கையை நல்லா கிள்ளி, "உங்களைத்தான் கூப்பிடுறாங்க. போய் பரிசை வாங்கிட்டு வாங்க"னு சொன்னதுக்கு அப்புறம்தான் அவருக்கு சுயநினைவே வருது! அப்புறம் மேடைக்குப் போய் அந்தப் பெருமைக்குரிய ஆஸ்கர் பரிசை வாங்கிட்டு வர்றார்.
அவரைத் தவிர, கட்டபொம்மன் படத்துல நடிச்ச பத்மினி, ராகினி ரெண்டு பேருக்கும் பாராட்டுப் பத்திரம் கொடுக்கப்பட்டது. இது தவிர, விழாவுல இருக்குற ஜட்ஜஸ் எதை ஸ்பெஷலா நினைக்கிறாங்களோ அதுக்கு ஒரு ஆஸ்கர் அவார்டு உண்டு. அந்த அடிப்படையில கட்டபொம்மன் படத்தோட மியூசிக் சூப்பரா இருக்குன்னு பாராட்டி, அதோட மியூசிக் டைரக்டர் ஜி. ராமநாதன் சாருக்கு ஆஸ்கர் விருது கொடுத்தாங்க! அவர் சார்பா பத்மினி அதை வாங்கிக்கிட்டாங்க.
அன்னைக்கு நைட் இவங்களுக்கு இந்திய தூதரகத்துல ஒரு பார்ட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து 'மீனா ஹவுஸ்' ஹோட்டல்ல ஒரு டான்ஸ் புரோகிராமும் இருந்தது. சிவாஜி சார் அதுக்குமேல அங்க தங்க முடியாத சூழ்நிலை இருந்ததுனால, அன்னைக்கு நைட்டே இந்தியா திரும்ப அவரும் பந்துலு சாரும் முடிவு பண்ணியிருந்தாங்க.
மீனா விடுதியில பத்மினி, ராகினி ரெண்டு பேரோட நடனம் நடந்துட்டு இருந்தது. பாதி டான்ஸ் நடந்துட்டு இருக்கும்போதே சிவாஜி சாரும் பந்துலு சாரும் அவங்ககிட்ட விடை பெற்று கிளம்பிட்டாங்க.. அவங்களும் டான்ஸ் ஆடிக்கிட்டே, அதே நாட்டிய பாஷையிலயே இவங்களுக்கு 'பை-பை' சொல்றாங்க.
அன்னைக்கு நைட் இவங்க ஃபிளைட் கெய்ரோவுல இருந்து கிளம்பி இந்தியாவை நோக்கிப் பறக்க ஆரம்பிச்சப்போ, சிவாஜி சாரோட மனசு முழுக்க ஒரு பெரிய திருப்தி இருந்தது. இதற்கெல்லாம் காரணமா இருந்த எல்லாரையும் அவரோட உள்ளம் வாழ்த்த ஆரம்பிச்சது.
குறிப்பு :நீங்கள் வாசித்தது நடிகர் திலகம் சொன்னவையே ..
ஆதாரம் :பேசும்படம் இதழ்..
தொகுப்பு :
செந்தில்வேல் சிவராஜ்
கருத்துகள்
கருத்துரையிடுக